இருந்த இடத்திலிருந்தே இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீற முடியுமா?

பாஸ்கர் செல்வராஜ்

ரு வாரத்திற்கு முன்பு மணிப்பூர் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் உலகப் பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்ஸ் செயற்கைக்கோள் இணையதள (Satellite Internet) சேவையைப் பயன்படுத்த தேவையான கருவிகளை வைத்திருந்ததைக் கண்டறிந்து கைப்பற்றியது இந்திய இராணுவமும் காவல்துறையும்.

உடனே, ‘இது பொய்ச்செய்தி என்று மறுத்த அவர் இந்தியப் பகுதியில் உள்ள இணையதள செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் இல்லை’ என்றார்.

அவர் சொல்வது உண்மையா என பகுத்தாய்ந்து கட்டுரை வெளியிட்டு இருக்கும் இந்து நாளிதழ் செயற்கைக்கோள் இணையதள சேவையை நாடுகளின் எல்லைகளுக்குள் செயல்படுமாறு கட்டுப்படுத்தும் சாத்தியமில்லை என்றும் உள்நாட்டுப்போர் நடைபெறும் அண்டைநாடான மியான்மரில் மஸ்கின் இணையதள சேவை குறித்து அவரின் நிறுவனம் தெளிவான தகவலைத் தெரிவிக்காமல் (unknown) இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. சரி! இந்தச் செயற்கைக்கோள் இணையதள சேவைக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் என்ன தொடர்பு?

வானில் சுற்றும் செயற்கைக்கோளுக்கும் வானத்திலும் பூமியிலும் இயங்கும் விமானம், ஏவுகணை, அலை அல்லது திரண்பேசிகள், வண்டிகள், உணறிகள் (Sensor) ஆகியவற்றுக்குமான இணைப்பை ஏற்படுத்தி இந்தப் பொருட்களைக் கண்காணிப்பதற்கும் இயக்குவதற்கும் பயன்படும் இந்தச் செயற்கைக்கோள் இணையத் தொழில்நுட்பம் இராணுவம், பணப்பரிவர்த்தனை, வணிகம், போக்குவரத்து ஆகிய பல பயன்பாடுகளைக் கொண்டது. இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பகுத்தாயும்போது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் அவற்றுக்கான சந்தை தேவைகளைக் கண்டறிந்து அதன் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி இயக்கும் வாய்ப்பையும் வல்லமையையும் கொடுக்கிறது.

சுருக்கமாக தற்போதைய கம்பியில்லா தரைதள இணையத்தின் வழியாகச் செய்யும் பொருளாதார செயல்பாடுகளோடு இராணுவப் பயன்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அந்த இராணுவ செயல்பாடுகளின் வழியாக ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தரைதள இணையத்தைப் பதிலீடு செய்து தனது சந்தைப் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது.

ஸ்டார்லிங்க்ஸின் இராணுவ ஈடுபாடும் அரசியல் மாற்றமும்…

உலகின் பல நாடுகளுக்கும் ஸ்டார்லிங்க்ஸ் தனது இணையதள சேவையை வழங்குவதன் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தில் தன்னைப் பிரிக்க முடியாத அங்கமாக மாற்றிக் கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ற அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளிலும் ஸ்டார்லிங்க்ஸ் ஈடுபட்டு வருகிறது.

உதாரணமாக உக்ரைன் இராணுவ ஒருங்கிணைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் ஏவுகணைகளைக் குறித்த இலக்கை நோக்கி செலுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனாலேயே இந்தச் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்துவோம் என்று ரஷ்யா மிரட்டியது.

மேலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, இந்திய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டு பூகோள அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கும் மியான்மாரில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில் அரசுக்கு எதிராகப் போராடும் எதிர்த்தரப்பு ஸ்டார்லிங்க்ஸ் இணைய சேவைக் கருவிகளை வைத்திருப்பதையும் அந்நாட்டில் தனது இணைய செயல்பாடு குறித்து தெளிவாக ஸ்டார்லிங்க்ஸ் தெரிவிக்காததையும் வைத்துப் பார்க்கும்போது அங்கே அரசியல் மாற்ற நடவடிக்கையில் இதன் பங்கு இருப்பதாக எண்ண இடமுண்டு. சமீபத்தில் அரசியல் மாற்றம் நடந்த மியான்மரின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க்ஸ் இணைய சேவை விரைவில் வரவிருப்பதாக இந்து நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

இவை செயற்கைக்கோள் வழியான இணையதள சேவை மற்ற நாட்டின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் பொருளாதாரத்தைக் கைப்பற்றுவதற்கான நோக்கத்தையும் வாய்ப்பையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இப்படியான அரசியல் பொருளாதார தலையீடு ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் அல்லவா?

இந்தியாவிலும் இந்த இணைய சேவையைத் தர மஸ்க் தொடர்ந்து முயன்று வருகிறார். ஒன்றியம் அதற்கு அனுமதி மறுத்து வருகிறது. செயற்கைக்கோள்களை ஏவும் வலிமை நம்மிடம் இருக்கும் நிலையில் இணையம் வழங்கும் செயற்கைக்கோள்களை உருவாக்க இந்திய நிறுவனங்களை அழைத்து ஒன்றியம் பேசி இருக்கிறது. டாட்டா உள்ளிட்ட முப்பது நிறுவனங்கள் அதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். இதன்மூலம் மற்ற நாடுகள் இறையாண்மையை இழந்து கொண்டிருப்பதாகவும் இந்திய இறையாண்மையைக் காக்க ஒன்றியம் இப்படியான முடிவை எடுத்ததாகவும் கருதலாமா? அதற்கு முதலில் இறையாண்மை என்றால் என்ன? என்பது குறித்த வரையறுப்பும் புரிதலும் வேண்டும்.

உண்மையில் இறையாண்மைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையான வரையறுப்பு இல்லை. அது பலராலும் பல வகையினதாக வரையறுத்து விளக்கப்படுகிறது. இறையாண்மை என்றால் ஒரு நாட்டை அந்நாட்டின் அரசை ஆளும் அதிகாரம் என்று அகராதி பொருள் பகர்கிறது. அரசு அல்லது நாட்டை ஆள்வது என்றால் அந்நாட்டு மக்களை ஆள்வது என்று பொதுவாக நடைமுறையில் புரிந்து கொள்ளப்படுகிறது.

பொருட்களில் ஒன்றாக மனிதனை அடிமைப்படுத்திய காலத்தில் வேண்டுமானால் அவர்களின் ஆண்டான் அந்த அடிமைப்பட்ட மக்களை மற்ற பொருட்களைப்போல பாவித்து அவன் விருப்பத்திற்கு ஏற்ப ஆள்வது சாத்தியம். ஆகையால் அந்த காலத்திற்கு இந்தப் புரிதல் பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் மக்களால் மக்களுக்காக மக்களே ஆள்வதாகச் சொல்லப்படும் இந்தக் கால ஜனநாயக முறையில் இந்தப் புரிதல் சற்றும் பொருத்தமற்றது. மேலே அமர்ந்திருப்பவன் கீழே இருக்கும் மக்களை ஆள்வது நிலப்பிரபுத்துவத்தில்தான் சாத்தியம். ஏற்றத்தாழ்வு இல்லாமல் சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் வாழையடி வாழையாக செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த அரசனே ஆட்சியாளன் என்ற நிலை மறைந்துவிட்ட நிலையில் ஒருவன் மற்றவர்களை எப்படி ஆளமுடியும்? அப்படி ஆள மக்கள் அவனுக்கு கீழ்பணிந்த அடிமைகளா? இல்லையே! அவர்கள் விடுதலை பெற்றவர்கள் அல்லவா!

அப்படியே மக்களை ஆள்வது என்று பொருள் கொண்டால் அவர்களால் அவர்களை ஆள அவர்களே ஒருவனைத் தேர்ந்தெடுப்பது என்பதாகப் பொருள் தரும் இந்தப் புரிதல் அடிப்படையில் அபத்தமானது இல்லையா! இது அடிமைகள் ஒன்று சேர்ந்து ஆண்டவனைத் தேர்ந்தெடுப்பதைப் போன்று விந்தையானதாகாதா? மாறாக இங்கு ஆளப்படுவது உற்பத்தியும் அதன்மூலம் உருவாகும் பொருள் செல்வமும் என்று பொருள் கொள்வோம். இப்போது பகுதிவாரியாக மக்களால் மக்களே அந்தப் பொருள் செல்வத்தை உற்பத்தி செய்து பகிர்ந்து நிர்வகிக்க தனது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பொருள் வருகிறது.

இறையாண்மையை மீறும் ரஷ்யாவின் செயல்

அவர் அந்த உற்பத்தி  தடையின்றி நடக்கவும் பொருட்செல்வம் பெருகவும் சரியான முறையில் செல்வம் எல்லோர்க்கும் பகிர்ந்து அளிக்கவுமான சட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையிலான சமூக ஒழுங்கை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வரி விதித்து ஆட்சி செய்யும் அரச அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இறையாண்மை பொருள் உற்பத்தியை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கும் அரச அதிகாரம். இந்த அரச அதிகாரம் அந்நாட்டின் இறையாண்மை எனப் பொருள் கொண்டால் அதனைக் கேள்விக்குட்படுத்தும் மற்ற நாட்டின் தலையீடு அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இந்த வகையில் ஸ்டார்லிங்க்ஸ் ரஷ்ய, மியான்மர் அரசியல் மாற்றத்தில் ஈடுபடுவது ஐயத்திற்கு இடமின்றி அந்நாடுகளின் இறையாண்மையை மீறும் செயல்.

முந்தைய நிலப்பிரபுத்துவ மன்னர்களின் காலத்தில் நடந்த விவசாய உற்பத்திக்கு நிலமும் அதில் உழைக்க மனிதர்களும் தேவைப்பட்டார்கள். நிலத்தைக் கைப்பற்றி மனிதர்களை அடக்கி விவசாய உற்பத்தி தங்கு தடையின்றி நடப்பதற்கான சட்ட ஒழுங்கை உருவாக்கி வரி விதிக்கும் அதிகாரம் பெற்று நிர்வகித்த மன்னன் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றான். அவனே அந்நாட்டின் இறையாண்மையின் உருவமாகத் திகழ்ந்தான். அவனுக்கும் அவனது ஆட்சிக்கும் எதிரான செயல்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவை ஆயின. தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டது.

இன்னொரு நாட்டினன் இந்த நாட்டின்மீது படையெடுத்து விவசாய உற்பத்திக்கான நிலத்தைக் கைப்பற்றி மனிதர்களை அடிமைப்படுத்துவது அல்லது அந்நாட்டின் இறையாண்மையின் உருவமான மன்னனை மண்டியிட வைத்து உற்பத்தியைத் தனதாக்கி அவனைத் தனது நிர்வாகத்தின் அங்கமாக்கி வரிவிதிக்கும் அதிகாரத்தைப் பெற்று அப்பகுதியில் தனது  இறையாண்மையை நிலைநாட்டினான்.

கொரோனாவின் பின்னரான மின்னணு பொருளாதாரமும் டொலர் ஆதிக்கமும்

தற்போதைய முதலாளித்துவ காலத்தில் நிலத்தின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உற்பத்தியில் மூலதனமும் தொழில்நுட்பமும் முதன்மை பாத்திரம் பெற்றன. ஒரு நாட்டின் முதலாளி தனது மூலதன பொருளையும் (Capital goods) அதன் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனப் பணத்தையும் மற்றொரு நாட்டை ஏற்க வைத்து அங்கே நடப்பில் இருக்கும் மூலதனப் பொருளையும் பணத்தையும் பதிலீடு செய்யும்போது அந்த நாட்டின் உற்பத்தி அவரின் ஆதிக்கத்திற்குள் வந்துவிடுகிறது. கொரோனாவின் பின்னரான மின்னணு பொருளாதாரமும் டொலர் ஆதிக்கமும் இந்தியப் பொருளாதார மாற்றங்களும் ரூபாயின் வீழ்ச்சியும் இதைத்தான் காட்டுகின்றன.  

இதனுடன் சந்தையின் தேவையையும் அளிப்பையும் அறிந்து அதற்கு ஏற்ப உற்பத்தி செய்து பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள அடிப்படையான தரவுகளையும் கைகொள்ளும்போது அந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தையும் கைப்பற்றி ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கும் ஆற்றலை மற்ற நாட்டின் முதலாளிகள் பெறுகிறார்கள். அதன்பிறகு அந்த நாட்டின் அரசியல் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப இயங்கத் தொடங்கிவிடுகிறது.

முந்தைய காலத்தில் நேரடியாகப் படையெடுத்துச் சென்று மற்ற நாட்டைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக இங்கே மறைமுகமாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் இறையாண்மையைக் கைப்பற்றுகிறது. அதேசமயம் வெளிப்பார்வைக்கு அந்நாடு பெயரளவில் இறையாண்மை கொண்டதாகத் தெரிகிறது. இந்த மறைமுக ஆதிக்கத்திற்கு குந்தகமோ, எதிர்ப்போ ஏற்பட்டால் பங்குச்சந்தை தாக்குதல், பரிவர்த்தனை நாணயத்தை மதிப்பற்றதாக ஆக்கி உற்பத்தி ஒழுங்கைச் சீர்குலைத்து உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் சிக்க வைக்கப்படுகிறது.

முந்தைய காலத்தில் ஒரு நாடு மற்ற நாட்டிற்குள் உளவாளிகளை அனுப்பி வேவு பார்த்து தக்க சமயத்தில் படையெடுத்தோ அல்லது உள்நாட்டுக் குழுவைத் தூண்டியோ அந்நாட்டின் அரசியல் ஒழுங்கை உடைத்து உற்பத்தியைக் கைப்பற்றி அந்நாட்டின் மீதான தனது அரச அதிகாரத்தை அல்லது இறையாண்மையை நிலைநிறுத்தினார்கள்.

இப்போது இணையம் வழியாக ஊடுருவி தகவல்களைச் சேகரித்து அங்கிருக்கும் உள்ளூர் குழுக்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து தாக்குதல் இலக்குகள் மற்றும் செயல்படும் உத்திகளை வகுத்துக் கொடுத்து இருந்த இடத்தில் இருந்தே அவர்களை ஒருங்கிணைத்து கண்காணித்து இயக்கி ஆயுதங்கள் குறித்த இலக்கைத் தாக்குவதை உறுதிசெய்து அந்த நாட்டின் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் உற்பத்தியைக் கைப்பற்றி தனது ஆதரவு குழுவின் அரசாட்சியை ஏற்படுத்தி மறைமுகமாக தனது ஆட்சியை ஆதிக்கத்தை இறையாண்மையை நிறுவ இந்த இணையம் வழிகோலியிருக்கிறது.  இப்படி இந்தச் செயற்கைக்கோள் இணையம் மற்ற நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தும் இராணுவ நடவடிக்கைக்கும் அதன்வழியாக அந்நாட்டின் அரசாட்சியைக் கைப்பற்றி மறைமுக இறையாண்மையைப் பெறுவதற்குமான கருவியாக வளர்ந்து வருகிறது. அதனாலேயே எல்லா நாடுகளும் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த நிறுவனம் ஒரு நாட்டில் உள்ளே நுழைய வேண்டும். அதன்மூலம் திரட்டப்படும் தரவுகளைத் தங்களது நாட்டில் சேமிக்க வேண்டும் என்கின்றன. அப்படி அனுமதி பெற்று நுழைந்து தரவுகளைப் பாதுகாத்து விட்டால் மட்டும் அந்நாடு இறையாண்மை கொண்டதாக இருக்குமா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, தமிழ்நாட்டில் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் சட்டமன்ற பிரதிநிதிகள் தொழிற்துறை உற்பத்தியைப் பெருக்கி சட்டம் இயற்றி வரி விதிக்கும் அதிகாரமற்று நிற்கும் நிலையில் நமது தன்னாட்சி தற்சார்புக்கான முயற்சிகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி.

Tags: