பனிப்போருக்கான வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID
– அ.பாக்கியம்

தேசப் பாதுகாப்பு பாரதிய ஜனதாக்கட்சியின் அரசியல் சித்து விளையாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப், எலன் மாஸ்க் இருவரும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID – United States Agency for International Development) மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பற்றி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டவுடன் பா.ஜ.க திக்குமுக்காடியது.
முதலில் இந்த பணத்தை நாங்கள் வாங்கவில்லை. 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் என்று காங்கிரஸின் மீது பழி சுமத்தியது. பா.ஜ.க அரசின் நிதித்துறையோ உள்துறையோ வெளியுறவுத்துறையோ வாயை மூடிக்கொண்டு காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கைகள் பா.ஜ.கவின் பங்கை அம்பலப்படுத்திய பொழுது இப்பொழுது வெளியுறவுத்துறையும் நிதித்துறையும் வாய்திறந்து பேசி இருக்கிறார்கள். 2023-24 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்காக 750 மில்லியன் டொலர் அமெரிக்காவிடம் உதவி பெறப்பட்டது என்பதை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இந்தியாவின் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்பை கொண்டு வருவதற்காக உதவி செய்யப்பட்டது என்பதை அழுத்தம் திருத்தமாக பேசி வருகிறார்.
இந்தியாவின் முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் குரோஷி அவர்கள் இதை மறுத்துவிட்டார். இப்பொழுது காங்கிரசின் தலைவர் ஜெயராம்ரமேஷ் அவர்கள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை அல்ல அந்த 21 மில்லியன் டொலர் பங்களாதேஷினுடைய தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடியோ இந்தியாவின் வெளியுறவுதுறை அமைச்சரோ இது பற்றி ஆரம்பத்திலேயே மறுப்பை தெரிவிக்காமல் காங்கிரஸின் மீது பழி சுமத்தி இந்தியாவின் மரியாதையை குறைத்தார்கள்.
அமெரிக்கா சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனம் (USAID – United States Agency for International Development) என்ற பெயரில் ஆரம்பித்தது ஏதோ உலக மக்களை முன்னேற்றுவதற்காக என்று எண்ணிவிடக்கூடாது. அமெரிக்க உதவி என்றாலே நமக்கெல்லாம் முன்னேற்றத்திற்கான வழி என்று நினைக்கக்கூடிய அமெரிக்க அடிமை விசுவாசிகள் இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
1961 ஆம் ஆண்டு ஜோன் எஃப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனின் செல்வாக்குகள் உலகம் முழுவதும் பரவுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் நிதி உதவியின் மூலமாக சோவியத் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை விதைத்து வளர்ப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது
ஜோன் எஃப் கென்னடி மற்றும் ஜோன்சன் போன்றவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது பல மேலை நாடுகளிலும், ஆசிய, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பொருளாதார சீர்திருத்தங்களில் தலையிடுவதற்கும் பொது நிர்வாகத்தில் தலையிடுவதற்கும் சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்தினார்கள். பனிப்போர் காலத்தில் வளரும் நாடுகளில் மூலதன பற்றாக்குறை ஏற்பட்ட பொழுது அந்த நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனம் உள்ளே புகுந்து ஒப்புதலை வாங்கி இந்த திட்டங்கள் முலமாக தங்கள் கருத்துக்களை விதைத்தார்கள்.
நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது வியட்நாம் நாட்டில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக இந்த நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தினார்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்த நாட்டில் உருவாகக்கூடிய ஜனநாயக முற்போக்கு அரசுகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவதற்கும், பொது மக்களை அரசுக்கு எதிராக கொண்டு வருவதற்கும் இந்த நிறுவனம் நிதி உதவி செய்து கலவரத்தை உருவாக்கியது.
அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டு நிதிகளில் ஐந்தில் மூன்று பாகம் இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் என்ற அமைப்பின் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றால் இது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா தன்னை வெளிநாட்டு ஏழை மக்களுக்காக அதிக நன்கொடை வழங்கும் நாடு என்று கூறிக் கொள்கிறது.
உண்மையில் எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அமெரிக்காவின் உதவித்தொகை அறிக்கையில் இருந்து சில விவரங்கள் வெளிவந்து உள்ளது. அவர்கள் 71 பில்லியன் டொலர்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறியிருப்பது தெளிவற்றதாக உள்ளது. குறிப்பாக வளர்ச்சிக்கான பொருளாதார அடிப்படைகளை உருவாக்குவது என்ற திட்டத்தின் கீழ் 15.9 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டதில் 14.4 பில்லியன் டொலர்கள் உக்ரைன் அரசாங்கத்திற்கு நேரடி பண உதவியாக கொடுத்ததாகும். அதாவது இவை அனைத்தும் ஆயுதங்களுக்காக பயன்படுத்தி பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த அமெரிக்க நிறுவனத்தின் உதவிகள் வெற்றுவாக்குறுதிகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துள்ளது என்பதை பல திட்டங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை பெறும் நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முதலாவதாக 2013 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற பொழுது பவர் ஆப்பிரிக்கா என்ற மிகப் பெரும் மின்சக்தி திட்டத்தை இந்த நிறுவனத்தின் (USAID – United States Agency for International Development) மூலம் நடத்தப் போவதாக அறிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்குள் 20000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமெரிக்க நிதி நிறுவனம் முதலீடு செய்து தலைமை ஏற்று நடத்தும் என்று பேசினார். ஆனால் 2020 ஆம் ஆண்டு இறுதியில் இது பற்றி ஆய்வு செய்த பொழுது அவர் ஆப்பிரிக்காவின் உண்மையான மின் உற்பத்தி திறன் 4194 மெகாவாட் மட்டுமே ஆகும். இதை அமெரிக்க நிறுவனமே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் கால்பங்கைவிட குறைவான அளவிற்கு தான் மின் உற்பத்தி நடந்துள்ளது.
இரண்டாவதாக, மத்திய கிழக்கு நாடுகளிலும் குறிப்பாக ஆப்கானிஸ் தானத்திற்கு செய்த உதவிகள் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படவில்லை.வேறு எதற்கு பயன்பட்டது என்று பலருக்கும் தெரியும். உதாரணமாக 2008 ஜூலை மாதம் முதல் 2015 ஜூன் மாதம் வரை சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிதி நிறுவனத்தின் (USAID – United States Agency for International Development) மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சுகாதாரத்திற்கான திட்டம் தோல்வியடைந்தது. எந்தவித தரத்திலும் அது இல்லை என்பதை மறுசீரமைப்புக்கான அறிக்கையே தெரிவித்து இருக்கிறது. அனைத்து திட்டத்தின் கீழ் கட்டப்படும் சுகாதார வசதிகளும் மின்சாரம் மற்றும் குழாய் நீர் திட்டங்களும் மக்கள் பெறக்கூடிய அளவுக்கு இல்லை என்பதை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முன்றாவதாக 2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அருகில் இருக்கக்கூடிய ஹைட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது. இதன் பிறகு அங்கு ஒரு மின் உற்பத்தி நிலையத்தையும் ஒரு புதிய துறைமுகத்தையும் ஒரு பெரிய தொழிற் பூங்காவையும் கட்டுவதற்காக மேற்கண்ட அமெரிக்க நிறுவனம் உறுதி அளித்தது. எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ‘தி கார்டியன்’ என்ற பத்திரிகை ஹைட்டி அமெரிக்க உதவியின் தோல்வியுற்ற வாக்குறுதி என்ற மிகப்பெரிய ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.
மேற்கண்ட நிறுவனம் மூலமாக அமெரிக்கா அந்நிய நாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அமெரிக்க மக்களிடம் கடுமையான அதிருப்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்து வந்துள்ளது. ஆனால் பனிப் போருக்காகவும் மக்கள் சோசலிச சிந்தனைகளுக்கும் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக திரும்பி விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து மக்கள் எதிர்ப்பையும்மீறி இந்த USAID திட்டத்தை அமுல்படுத்தினார்கள்.
நிக்சன் காலத்தில் வியட்நாம் மீது படையெடுத்து வெற்றி பெறுவதற்காக இந்த நிதியை பயன்படுத்திய பொழுது அமெரிக்க மக்கள் மிகப் பெரும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனால் அமெரிக்க காங்கிரஸில் புதிய திசைகள் என்ற முறையில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியது இதன் மூலம் இந்த அமைப்பின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் இதை நிரந்தரமாக ஒழித்து விடலாம் என்ற முறையிலும் அந்த சட்டத்தில் பேசினார்கள். காரணம் அமெரிக்க மக்களின் கடுமையான எதிர்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ரீகன் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டுக்கான உதவி பட்ஜெட்டில் வியத்தகு முறையில் அதிகரித்திருக்கிறது. இதனால் உள்நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்ற கருத்து பரவலாக மேலோங்கியது. ஆனால் இதன் நோக்கம் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக மற்ற நாடுகள் சென்று விடக்கூடாது என்பதால், அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்காக வேறு வழியில் இதை அமுல்படுத்தினார்கள். சுகாதாரத்தில் மிகப்பெரும் முதலீடுகளை செய்து உலக அளவில் குழந்தைகளின் மரணத்தை குறைத்து குழந்தைகளை வாழ வைப்பது என்ற திட்டங்கள் மூலமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்கள்
1993 ஆம் ஆண்டு பனிப்போர் முடிந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பில் கிளிண்டன் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு உதவியை பட்ஜெட்டில் கணிசமாக குறைக்க முயற்சி செய்தார்கள், உள்நாட்டில் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் முழுமையாக அமுலாகவில்லை.
1997 இல் இந்நிறுவனத்தை தீவிரமாக மறுசீரமைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸில் மிகக் கடுமையான விமர்சனம் வெளிப்பட்டது பில் கிளிண்டன் நிர்வாகம் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு சில மாற்றங்களை மட்டும் செய்தார்கள். இந்த நிறுவனம் ஆயுதப் பரிமாற்றங்கள் உட்பட அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அமெரிக்க எம்பிக்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள்.
பில் கிளிண்டன் ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுத குறைப்பு நிறுவனம், அமெரிக்க தகவல் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை வெளியுறவுத்துறைக்குள் கொண்டு வருவது என்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID -United States Agency for International Development) தனி அமைப்பாக தனி சட்டத்தின் கீழ் செயல்படும் என்றும் முடிவெடுத்தது. இருந்த போதிலும் இந்த நிறுவனம் தனி சட்டத்தை கொண்டு இருந்தாலும் வெளியுறவுச் செயலாளரின் நேரடி அதிகாரம் மற்றும் வெளியுறவு கொள்கை வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். பனிப்போர் முடிந்த பிறகும் உலகில் தங்களது செல்வாக்கு நீடிக்க அமெரிக்கா இந்த நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்தியது.

இந்த நிறுவனம் தனது திட்டங்களை செயல்படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. அமெரிக்க அரசின் அறிக்கையில், செர்பியாவில் செயல்படக்கூடிய LGBTQ குழுவிற்கு 1.5 மில்லியன் டொலர்களும், வியட்நாமில் மின்சார வாகனங்கள் பெருக்குவதற்கு 2.5 மில்லியன் டொலர்களும், எகிப்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆறு மில்லியன் டொலர்களும் மானியமாக வழங்கியதில் அனைத்தும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட உதவிகளாகவே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்கள். வரி செலுத்துவோருக்கு கணக்கு கொடுக்காமல் இந்த நிறுவனம் செயல்பட்டு உள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பதற்கான மிகப்பெரும் தொகையை செலவு செய்திருக்கிறார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கையே வெளிப்படுத்துகிறது.
2023 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தில் பத்தாயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை உள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. 60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பிரத்தியேகமான அலுவலகங்களை அமைத்து செயல்படுகிறது.
இந்த நிறுவனம் எவ்வாறு அமெரிக்க உதவியின்றி வளர்ந்திருக்க முடியும். மனிதாபிமானம் மற்றும் வளர்ச்சி உதவி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறும் இந்த நிறுவனத்தின் உண்மையான நோக்கமும் நடைமுறையும் பணிப்போர் காலத்தில் சோவியத்துக்கு எதிராகவும், அதன் பிறகு தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது அதாவது சித்தாந் ஊடுருவல் செய்வதற்கு ஜனநாயக சீர்திருத்தம் என்ற பெயரால் இது அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்தது.
இன்று ட்ரம்ப், எலன் மாஸ்க்கும் ஏன் இந்த உதவியை நிறுத்துகிறார்கள் என்று கேள்வி எழத்தான் செய்யும். இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நீண்ட காலம் செயல்பட்ட ஜேம்ஸ் குந்தர் தனது அறிக்கையில் கீழ்கண்ட விஷயத்தை சுட்டி காட்டி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட கடினமான பாடம் என்னவென்றால் வளர்ச்சி திட்டங்கள் ஒரு பயனுள்ள ராஜதந்திர மற்றும் ராணுவ உத்திக்கு நல்ல மாற்றாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த இராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக இந்த அமைப்பின் செயல்பாடு உதவி செய்ய வில்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே இந்த வழிமுறைகள் மூலம் தொடர்ந்து இதை நடத்த முடியாது என்ற முடிவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வந்தது மட்டுமல்ல அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களின் மூச்சை திணறடிக்கிறது எனவே இந்த தடாலடி அறிவிப்புகள் வந்தது. இவை திடீரென்று வந்ததல்ல படிப்படியாக சில நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள்.
1995 மற்றும் 2000 இற்கும் இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பணியாளர்களில் 29 சதவீதம் பெயர்களை குறைத்தார்கள். நேரடி பணியமறுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதற்கு மாறாக ஊழியர்களை அவுட்கோசிங் என்ற முறையில் அதிகம் பேரை பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்பொழுது டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற உடன் இந்த நிறுவனத்தின் ஏராளமான ஊழியர்களை ஊதிய விடுப்பு எடுக்குமாறு உத்தரவிட்டார். பெப்ரவரி 7ஆம் திகதி அன்று அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி ஊதிய விடுப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் பெப்ரவரி 13 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிப்புக் கொடுக்கப்பட்டது.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் நோக்கம் முழுமையாக இன்று பயனளிக்கிறதா இல்லையா என்பதை கேள்விக்குள்ளாக்கி அது பயனளிக்கவில்லை என்ற முடிவிலிருந்து அவர் விரும்பாத நாடுகளை அல்லது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிற நாடுகளுக்கான உதவிகளை தடாலடியாக நிறுத்துகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றப்படும் சுகாதாரத் திட்டங்கள் ,குழந்தைகள் வளர்ச்சி, மனிதாபிமான செயல்பாடுகள், குடிநீர் போன்ற திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுகிறது. அவர்களின் சார்பில் இத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் இதனால் பயனடைந்த மக்கள் மிகப்பெரிய ஆபத்திற்கு உள்ளாவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்.
ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அல்லது மூலதனத்திற்கோ மனிதாபிமானம் முக்கியமல்ல. கோர்ப்பரேட் முதலாளிகளின் மேலாதிக்க சுரண்டல், உலக முதலாளித்துவத்தின் இருத்தல், ஆகியவை தான் முக்கியம். அதற்கு எதையும் செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்தான் இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் செயல்பாடுகளும் அதன் இன்றைய நெருக்கடிகளும் ஆகும்.