கனிமவள ஒப்பந்தமும் டிரம்ப் – ஷெலன்ஸ்கி சந்திப்பில் கிளம்பிய சூடும்!
-Stefan Wolff, Tetyana Malyarenko

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஷெலன்ஸ்கியின் வெள்ளை மாளிகை வருகை திட்டமிட்டபடி நடக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது திட்டத்தின்படி நடக்கவில்லை. கடந்த 28.02.2025, வெள்ளிக்கிழமை இரவு ஷெலன்ஸ்கிக்கும் டிரம்புக்கும் இடையே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அசாதாரணமான காட்சிகள் அரங்கேறின. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஷெலன்ஸ்கியை “மூன்றாம் உலகப் போருடன் விபரீதமாக” விளையாடுவதாக உரத்த குரலில் கண்டித்தார்.
“நீங்கள் ஒரு ஒப்பந்தத்துக்கு வாருங்கள், இல்லையேல் நாங்கள் வெளியேறிவிடுவோம்” என்று டிரம்ப் ஷெலன்ஸ்கியிடம் கூறினார். உக்ரைன் அதிபரின் அணுகுமுறை “அவமரியாதைக்குரியது” என்று அவரது அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறினார். ஒரு கட்டத்தில் அவர் ஷெலன்ஸ்கியிடம் கேட்டார், “நீங்கள் ஒரு முறையாவது நன்றி சொன்னீர்களா?”
டிரம்பும் வான்ஸும் எழுப்பிய உரத்த குரல்களால் நிலவரம் சூடாகியதாக அங்கிருந்த நிருபர்கள் கூறினார்கள். இந்தக் காட்சி “ஓவல் அலுவலகத்தில் பகிரங்கமாக நடந்த மிகவும் வியப்புக்குரிய தருணங்களில் ஒன்று. டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தீவிரமான பிளவையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியது.
ஷெலன்ஸ்கி கையெழுத்திடத் திட்டமிடப்பட்டிருந்த கனிம ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் உக்ரைன் அரசாங்கத்திற்கும் இடையே இருந்த வேறுபாடுகள்தான் இந்தக் கோபமான உரையாடல்களுக்குக் காரணம். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கு ஏன் உற்சாகம் இல்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதுதான். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அதன் தற்போதைய வடிவத்தில் முழுமையற்றதாகவே தோன்றுகிறது. முக்கியமான பல சிக்கல்களைப் பின்னர் தீர்க்க வேண்டியதாக அது கருதுவதாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தப்படி அமெரிக்காவும் உக்ரைனும் கூட்டாக நிர்வகிக்கக்கூடிய “புனரமைப்பு முதலீட்டு நிதி” என்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கப்படும்.

தனியார் உள்கட்டமைப்பு – அதில் பெரும்பகுதி உக்ரைனின் பெரும் செல்வந்தர்களுக்குச் சொந்தமானது – இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இது ஷெலென்ஸ்கிக்கும் மிகவும் சக்திவாய்ந்த உக்ரேனியப் பணக்காரர்களுக்கும் இடையிலான மோதலை அதிகரிக்கக்கூடியது.
அமெரிக்காவின் பங்களிப்பு!
மறுபுறம், ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் பங்களிப்புகள் குறைவாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தின் முன்னுரை, உக்ரைன் ஏற்கனவே அமெரிக்காவிற்கு கடன்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. “பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவில் படையெடுத்ததிலிருந்து அமெரிக்கா உக்ரைனுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் நிதி மற்றும் பொருள் ஆதரவை வழங்கியுள்ளது” என்று முதல் பத்தியே குறிப்பிடுகிறது.
டிரம்பின் கூற்றுப்படி, இதன் மதிப்பு 350 பில்லியன் டொலர்கள். கீல் இன்ஸ்டிடியூட் ஃபார் தி வேர்ல்ட் எகானமியின் உக்ரைன் சப்போர்ட் டிராக்கரின் (Ukraine Support Tracker of the Kiel Institute for the World Economy) கூற்றுப்படி, அதில் பாதிதான் உண்மையான தொகை.
மேற்கத்திய உக்ரேனிய ஆய்வாளர்கள், உக்ரைனில் தற்போது மதிப்பிடப்படுவதைவிடவும் குறைவாகவே கனிம வளங்களும் மண்ணில் புதைந்துள்ள அரிய வளங்களும் இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். மதிப்பீடுகள் பெரும்பாலும் சோவியத் ஒன்றியத்தின் காலத்திய தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
வளங்களின் உரிமை, நிர்வாகம், செயல்பாடுகள் குறித்த விவரங்கள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவிருக்கும் நிதி ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஒப்பந்தத்தின் தற்போதைய வரைவு கூறுகிறது. இந்நிலையில் டிரம்பின் மிகப் பெரிய ஒப்பந்தத்தைப் பெரியதொரு செயல்பாட்டின் முதல் படி என்றுதான் கூற வேண்டும்.
அமெரிக்காவின் நோக்கம்
உக்ரைனின் பார்வையில், இந்த ஒப்பந்தம் அதிக இலாபத்தைத் தரக்கூடும். வருங்காலத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் திருப்திகரமான விதிமுறைகளை அடைவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. ஆனால், இதில் சில சிக்கல்களும் உள்ளன.
பாதுகாப்பு உத்தரவாதங்களின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வரைவு ஒப்பந்தம் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவியை எந்த விதத்திலும் உத்தரவாதமளிக்கவில்லை. ஆனால் “நீடித்த அமைதியை நிலைநாட்டத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கான உக்ரைனின் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது” என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. மேலும் “பங்கேற்பாளர்கள் பரஸ்பர முதலீடுகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் அடையாளம் காண முயற்சிப்பார்கள்” என்றும் அது கூறுகிறது.
இதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தக் கூடாது. பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கத் தவறுவதில் இது அமெரிக்காவின் நோக்கதை வெளிப்படுத்துகிறது. அதே சமயம், உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக நீடிப்பதில் அமெரிக்காவிற்கும் நன்மை உள்ளது என்பதையும் உணர்த்துகிறது.
அமெரிக்கா உக்ரைனுக்கு “மிகவும் அதிகமாக” பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கும் என்று டிரம்ப் கருதவில்லை. இந்த உத்தரவாதங்களை ஐரோப்பியத் துருப்புக்களால் வழங்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.
அமெரிக்காவின் உறுதிப்பாடு மிகவும் தெளிவற்றதாக இருப்பதால், இது டிரம்பிற்கு எல்லா விதங்களிலும் சாதகமாகிறது.
மறுகட்டமைப்பு முதலீட்டு நிதியிலிருந்து அமெரிக்க வருமானத்திற்கு மிகவும் சாதகமான விதிமுறைகளைப் பெறப் பாதுகாப்பு உத்தரவாதத்தை டிரம்ப் பயன்படுத்தலாம். ஐரோப்பிய அமைதி காக்கும் படையினருக்கான எந்தவொரு அமெரிக்க பாதுகாப்பையும் நேட்டோவில் சமமான அளவு சுமையைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கான இன்னும் திட்டவட்டமான நடவடிக்கையை எடுக்குமாறு ஐரோப்பாவுக்கு அழுத்தம் தரவும் இதைப் பயன்படுத்தலாம்.

மேலும், உக்ரைனுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது என்பதை ரஷ்யாவுக்கு உணர்த்தும் நோக்கமும் இதில் இருக்கலாம். உக்ரைனில் அமெரிக்கா பொருளாதார நலன்களைப் பெறக்கூடிய நிலையில், எதிர்காலத்தில் ரஷ்யா சமாதான ஒப்பந்தத்தைக் கைவிட்டு மீண்டும் மோதல் போக்கைத் தொடங்கினால், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு அந்தப் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கவும் இந்த ஒப்பந்தம் பயன்படக்கூடும்.
இந்தக் கணக்கீடுகள் எல்லாம் ஒப்பந்தம் முன்வைக்கும் “சுதந்திரமான, இறையாண்மை கொண்ட உக்ரைனுக்கு” வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் ஒப்பந்தம் குறித்த தனது அதிருப்தியை ஊடகங்களின் எதிரில் வெளிப்படையாகத் தெரிவிப்பதில் உக்ரைன் அதிபர் தயங்கவில்லை என்பதுதான் அமெரிக்க அதிபர் – உக்ரைன் அதிபர் சந்திப்பைச் சூடான சர்ச்சைக்குள் தள்ளியிருக்கிறது.