ஜெர்மனியின் வருங்காலம் இடது மாற்றே!

-கணேஷ்

2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்ற ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் பெருமளவில் இடதுசாரிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஐரோப்பியக் கண்டத்தில் மிகப் பெரும் நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் ஆட்சி திடீரென்று கவிழ்ந்ததால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளும் வெளியாகின. எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.  கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU/CSU), ஜெர்மனிக்கான மாற்று, சமூக ஜனநாயக் கட்சி (AfD), பசுமைக்கட்சி (Green), இடது (Die Linke – The Left) என்ற வரிசையில் வாக்குகள் கிடைத்துள்ளன. இவற்றில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, மைய-வலதுசாரிக் கட்சியாகவும், ஜெர்மனிக்கான மாற்று வலதுசாரியாகவும், சமூக ஜனநாயகக் கட்சி மைய-இடதுசாரிக் கட்சியாகவும், பசுமைக்கட்சியானது சுற்றுச்சூழலை மையமாகவும், இடது கட்சி  சோசலிசத்தை அடிப்படையாகவும் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த ஐந்து கட்சிகளுக்கு மட்டுமே விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் கிடைக்கப் போகிறது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக்கட்சி ஆகியவை கைகோர்க்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  ஆட்சியில் இருந்து சமூக ஜனநாயகக் கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதும், வலதுசாரிக் கட்சியான “ஜெர்மனிக்கான மாற்று” (Alternative for Ger many) என்ற கட்சி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதும்தான் மேற்கத்திய ஊடகங்களில் பெரிதாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. பல ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகள் வலுப்பட்டு வருகிறார்கள் என்பதைத்தான் ஜெர்மனி முடிவுகளும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தில் தற்போது வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியிலும் அது பிரதிபலித்துள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இளைஞர்கள் இடதுசாரிகள் பக்கம்

இந்நிலையில் வயதுவாரியான வாக்கு விபரங்கள் வெளியாகி வருகின்றன. அதில் இளம் வாக்காளர்கள் வாக்குகள் குறித்த விபரத்தின்படி, அவர்களில் 31 விழுக்காட்டினர் இடதுசாரிகளுக்கு வாக்களித்துள்ளனர்.  இளம் வாக்காளர்கள் என்பது 18 முதல் 24 வயது வரையிலானவர்களைக் குறிக்கிறது. வருங்கால அரசியலைத் தீர்மானிக்கப் போகும் இவர்களின் வாக்குகள் இடதுசாரிகளுக்கு விழுந்திருப்பது முதலாளித்துவ – வலதுசாரி சக்திகளிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வலதுசாரி ஊடகங்கள் இதைப் பொருட்படுத்தாமல் நகர விரும்பியுள்ளன. “தி லெஃப்ட்” (இடது) என்ற கட்சி, சோசலிசக் கொள்கைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இந்தக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என்று பிரச்சாரம் நடந்தது.

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் 5 விழுக்காடு வாக்குகளைப் பெற வேண்டும். இதை இடதுசாரிக் கட்சிகள் தாண்ட முடியாது என்று ‘கருத்துக் கணிப்புகள்’ மூலமாகத் திணிப்புகள் நடந்தன. அவற்றைத் தாண்டி சுமார் 9 விழுக்காடு வாக்குகளை இடதுசாரிகள் தொட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் சுமார் 64 இடங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளவு

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக ‘இடது’ கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செஹ்ரா வாகென்னெஹ்ட் (Sahra Wagenknecht) என்பவர் வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கினார். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த அவரின் விலகலால் இடதுசாரிக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஜூன் 2024 இல் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 2.4 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றனர். ஆனால் தற்போது, இடது கட்சி ஐந்து விழுக்காடு என்ற அளவுகோலைத் தாண்டியுள்ளது. வெளியேறிய செஹ்ராவின் கட்சி 4.97 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 0.03 விழுக்காடு வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளதால் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போயுள்ளது. பிளவுபடாமல் ஒன்றிணைந்து நின்றிருந்தால், மூன்றாவது இடத்தையே பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 எப்படிக் கவர்ந்தார்கள்?

இளம் வாக்காளர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு எப்படி ஆதரவு கிடைத்தது என்பது பற்றிய விபரங்களும் வெளியாகி வருகின்றன. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக்கட்சி ஆகியவை கூட தொலைக்காட்சி விவாதங்களில் பிரதிநிதித்துவம் பெற்றன. இடதுசாரிகள் இந்த விவாதங்களுக்கு அழைக்கப்படவில்லை. 2024 ஆம் ஆண்டில் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. புதிதாகக் கட்சியில் இணைந்திருந்த உறுப்பினர்கள் யார் பக்கம் நிற்பார்கள் என்ற வினாவும் எழும்பி நின்றது.  பிளவு ஏற்பட்டு விட்டது என்பது யதார்த்தம்  தான் என்பதை ஒப்புக்கொண்ட இரண்டு பகுதியினரும் அவரவர் பாணியில் களத்தில் இறங்கினர். தொலைக்காட்சிகளில் வாய்ப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், வீதிகளில் இறங்கி, நேரடியாக மக்களைச் சந்திக்கும் வழக்கமான உத்தியைக் கையில் எடுத்தார்கள்.

இடது கட்சியின்  மாநாடு ஜனவரி 2025 இல் நடைபெற்றது. இதன் பிறகு அவர்களின் பிரச்சாரம் வேகம் பிடித்தது. இந்நிலையில், மக்களிடம் அவநம்பிக்கை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் வெற்றி  பெற்றதாகத் தோற்றம் கிடைத்தது. எனவே, தெருக்களோடு நின்றுவிடக்கூடாது என்று முடிவெடுத்து, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என்று அதற்கான இலக்கையும் இடதுசாரிகள் நிர்ணயித்தார்கள். இன்ஸ்டாகிராம் மூலமாக அவர்களால் 40 இலட்சம்  பேரை அணுக முடிந்தது.  டிக்-டாக் (TikTok) செயலி மூலமாக 90 இலட்சம் பேரைச் சென்றடைந்தார்கள். இதில் இளம் வாக்காளர்களை கவர்வதில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு மாதகாலத்தில் “இடது” கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. 2023 இல் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. இந்த உறுப்பினர்கள் 6 இலட்சம் குடும்பங்களை நேரடியாகச் சந்தித்தனர். பிற கட்சிகள் நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தன.

பெரும் பகுதி மக்களின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக எழுந்து நின்ற வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இடதுசாரிகள் கருத்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.  வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றவர்களாக இருந்ததும் முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த இளம் வாக்காளர்களிலும், இடதுசாரிகளுக்கு வாக்களித்ததில் இளம் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. விலைவாசி, போர் மீதான அச்சம், வீட்டு வசதி பற்றாக்குறை, வாழ்க்கைத் தரத்தில் சரிவு உள்ளிட்ட பிரச்சனைகள் இவர்களின் கருத்தை இடதுசாரிகளுக்கு ஆதரவாக மாற்றியதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பால் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு என்ற அம்சத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று இளம் வாக்காளர்கள் கருதுவதால் இடதுசாரிகளுக்கு வாக்களித்துள்ளனர்.

முன்னேற்றத்திற்குத் தடை

இடதுசாரிகள் மத்தியில் பிளவு இல்லாமல் இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டியிருக்க முடியும். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது கூட்டணிக்கு ஆதரவு கேட்டுப் பேசிய செஹ்ரா வாகென்னெஹ்ட், தேர்தலில் தோல்வியடைந்தால் அரசியலில் தொடரப் போவதில்லை என்று குறிப்பிட்டார். தற்போது அவரது அணி நாடாளுமன்றத்தில் நுழையும் அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அரசியலில் இருந்து விலகுவாரா அல்லது இடது கட்சியுடன் இணைந்து செயல்படும் வகையில் தனது போக்கை மாற்றிக் கொள்வாரா என்ற வினாக்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இரு அமைப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து சில நாட்களே ஆன நிலையில், ஹம்பர்க் (Humburg) மாகாணத் தேர்தல் மார்ச் 2  ஆம் திகதியன்று நடந்துள்ளது. அதில் முதன்முறையாக இரட்டை இலக்கத்தில், அதாவது 11 விழுக்காடு வாக்குகளை இடது கட்சி பெற்றிருக்கிறது. இங்கும் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் இக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஜெர்மனியின் இளம் வாக்காளர்கள் ஒரு செய்தியைத் தந்துள்ளனர். இடதுசாரிக் கட்சிகள்தான் நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகளைத் தர முடியும் என்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

Tags: