சாதி ஆதிக்க வெறியில் சாதனை படைக்கும் தமிழ்நாடு!

சாவித்திரி கண்ணன்

ஸ்ரீ வைகுண்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவனை  சகித்துக் கொள்ள முடியாமல் அரிவாளால் வெட்டி சிதைத்துள்ளனர், சாதி ஆதிக்க சக்திகள்!  நாங்குநேரி சம்பவத்திற்கு பிறகு நடக்கும் கணக்கற்ற சாதிவெறி சம்பவங்களில் இதுவும் ஒன்று..! கவனம் பெற முடியாத பல நூறு சாதி அநீதிகளுக்கு என்ன தான் தீர்வு..?

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம்  அருகிலுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ்-1 மாணவன் பள்ளிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் பைக்கில் பின் தொடர்ந்து வந்து பேருந்தை  வழி மறித்து நிறுத்தி, அதிரடியாக பேருந்தில் நுழைந்து மாணவனை இழுத்துச் சென்று சாலையில் சரமாறியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். 17 வயதேயான மாணவன் தேவேந்திரனின் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட 12 இடங்களில் வெட்டுக்கள் விழுந்திருக்கின்றன. அரிவாள் வீச்சால் வலது கைகள் சிதைந்த நிலையில், அவனின்  நான்கு கை விரல்கள் துண்டாகியிருக்கிறது. அதில் ஒன்றை காண முடியவில்லை. பயணிகள் கத்தி களேபரம் செய்து அரிவாளால் வெட்டியவர்களை திட்டவும், அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அரசு மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பப்பட்டு, தீவிரமாகச் செயல்பட்ட மருத்துவக் குழுவினர் மாணவருக்கு 5 யூனிட் இரத்தம் செலுத்தி, ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி தீவிரக் கண்காணிப்பு சிகிச்சையை மேற் கொண்டு வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் படிப்பிலும், கபடி விளையாட்டிலும் தலை சிறந்த மாணவனாகத் திகழ்ந்துள்ளான். இவனுடைய பெற்றோர்கள் செங்கற் சூளையில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளிகள்! தங்களுக்கு யாருடனும், பகையோ, சண்டையோ இல்லை என மாணவனின் அப்பா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி கட்டாரி மங்களம் என்ற ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் அரிய நாயகிபுரம் தலித் மாணவர்கள் கெட்டியாள்புரத்தின் மாணவர்களை தோற்கடித்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிக் கோப்பையை அவர்கள் கோலாகலமாக கொண்டு சென்று, கொண்டாடியதையும் சாதி ஆதிக்க மனோபாவமுள்ளவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் செய்த தூண்டுதலாலேயே 17 வயதுடைய மூன்று மாணவர்கள் இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி உள்ளனர் எனத் தெரிய வருகிறது.

தமிழகத்தின் சிற்றூர்களும், கிராமங்களும் இன்னும் சாதியின் ஆதிக்கத் தளையில் உள்ளன என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாகிறது!  நாங்குனேரியில் நடந்த சாதி ஆதிக்க கொடூர தாக்குதல் சம்பவம் மிகுந்த கவனம் பெற்றதால் இந்த சம்பவத்தை பெருபாலான ஊடகங்கள் மறைத்துவிட்டன.

விளையாட்டு என்றால், வெற்றி, தோல்வி சகஜம் என்று எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இவர்கள் மனநிலை இருண்டும், இறுகியும் போயுள்ளது. கடந்த சில வருடங்களாக தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி தளத்திலும், அறிவுத் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும் அடைந்து கொண்டிருக்கும் முன்னேற்றங்களை மூர்க்கத்தனத்துடன் முட்டி மோதி எதிர்க்கும் பல சம்பவங்களை தொடர்ந்து கேள்விப்படுகிறோம்.

நல்ல பைக் ஒன்றில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் தங்கள் கிராமத்தில் வளைய வருவது பொறுக்காமல் கைகளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்தது.

சாதி ஆதிக்க உணர்வை கற்பிக்கும் பள்ளிக் கூடங்கள்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவன் சின்னதுரையும், அவன் தங்கையான சிறுமியும் உடன்படிக்கும் மாணவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாதன் பின்னணியில் சாதி ஆதிக்க உணர்வு  இருந்த நிகழ்வில் இருந்து நாம் எந்த பாடத்தையும் கற்கவில்லை.  சாதீய அமைப்புகள் பள்ளிகளுக்குள் தொடர்ந்து ஊடுருவி , தடையின்றி ஆதிக்கம் செய்கின்றன.

# பட்டியலின மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கும் ஆசிரியர்கள்,

# தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களை தனியாக உட்கார வைக்கும் ஆசிரியர்கள்,

# ’உங்களுக்கெல்லாம் படிப்பே வராதுடா’’ என சாதியைக் குறிப்பிட்டு திட்டும் ஆசிரியர்கள்,

# மாற்று சாதி மாணவர்களுக்கு மதிப்பெண்ணை குறைக்கும் ஆசிரியர்கள்

இப்போதும் எந்த குற்றவுணர்வுமின்றி நடமாடுகின்ற சூழலில், எப்படி ஆரோக்கியமான மாற்றங்கள் சாத்தியமாகும்.

குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மாணவர்கள் ஓரணியில் சேர்ந்து  தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களை அச்சுறுத்துவது, தாக்குவது, இழிவுபடுத்துவது, பணிய மறுத்தால் கடுமையாக தண்டிப்பது ஒரு தொடர்கதையாக உள்ளது.

சமரசமின்றி சாத்தியமாகிக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்கங்கள்!

இன்னும் தமிழக கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் தேநீர் கடைகளில் சர்வ சாதாரணமாக இரட்டை குவளை முறை வழக்கத்தில் உள்ளது, சில குறிப்பிட்ட தெருக்களில் அவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஊர் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ, பைக்கிலோ செல்ல முடியாத நிலை உள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் காலில் செருப்பு போட்டு நடந்தாலோ, தோளில் துண்டுடன் நடந்தாலோ கடும் தாக்குதல் தொடுப்பதும், அதை காவல் துறையே கேள்வி கேட்க முடியாத நிலையும் உள்ளது.

இன்னும் ஏராளமான கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.  ஊர் சலூன்களில் தாழ்த்தப்பட்டவர்கள் முடி வெட்ட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நகர்புறம் பயணித்து முடிவெட்டிச் செல்லும் அவல நிலை உள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களின் இறுதி ஊர்வலம் மற்ற சாதி இந்துக்களின் தெரு வழியாக செல்ல முடியாது. செத்தால் அனைவரும் பிணம் தான் என்றாலும், பொது மயானத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பிணத்திற்கு கூட இடம் கிடைக்காது.

இவ்வளவு தீண்டாமைகள் நிலவும் நாட்டில் பாட புத்தகத்தில் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்ற சொற்றொடர் தவறாமல் இடம் பெறுகிறது.

சமூகநீதி, முற்போக்கு சக்திகளின் பாசாங்குத்தனம்!

சாதி  இழிவுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார் பெயரைச்  சொல்லும் திராவிட ஆட்சிகள் 58 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்யும் நிலையில், இந்த சாதி ஆதிக்க மனநிலைகளில் ஏன் மாற்றம் வரவில்லை….?

இடதுசாரி இயக்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் தொடர்ந்து களமாடும் சமூகத்தில் இப்படியான சாதி மனநிலை இன்னும் தொடர்கிறதென்றால், கல்வி, விழிப்புணர்வு அதிகம் உள்ள சமூகத்தில் அடியாளம் வரை சாதி ஆதிக்க வேர்கள் ஊடுருவி நிற்கிறது என்றால், நம்மில் பலர் முற்போக்கு என்ற முக முடி அணிந்து பாசாங்கு செய்கிறோமா? என்ற சுய பரிசோதனைக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வியாளர்கள் பலர் மனங்களிலும் சாதி என்ற களங்கம் இருப்பதை உயர் கல்வித் துறைகளிலேயே காண முடிகிறது.  அரசு அலுவலகங்கள் தொடங்கி, தனியார் நிறுவனங்கள் வரை சாதி அடையாளத்தை சாதுரியமாக செயல்படுத்துவர்கள் இன்னும் நிறைந்திருக்கிறார்களே…!

தங்கள் தேர்தல் வெற்றிக்கு வேறெதையும் விட சாதியை நம்பும் அரசியல்வாதிகள் நிறைந்துள்ள நாட்டில், சாதியைக் கடந்த நீதி நிலை நாட்டப்படும் என நம்புவதே கானல் நீரோ…?  என எண்ணத்தக்க வகையில் தான் பல சம்பவங்கள் நடக்கின்றன.

உள்ளார்ந்த முறையில் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, சாதி பாகுபாடற்ற மன நிலையை கற்பித்து வளர்த்தெடுக்க தீவிர முன்னெடுப்புகள் தேவை! இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சாதி ஆதிக்க சக்திகள் கடும் தண்டனையில் இருந்து தொடர்ந்து தப்புவிக்கப்படுகின்றனர்! இதனால் தான் மீண்டும், மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன..!

சாதி கட்டமைப்பில் கிடைக்கும் பலாபலன்களை துறக்க துணிந்தால் மட்டுமே, சாதி கடந்த சமத்துவ மனநிலை சாத்தியமாகும். மதவெறியை விட சாதி வெறி பல மடங்கு ஆபத்தானது!  தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சாதி ஆதிக்க மனோபாவமே அடித்தளமாக உள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வர மனசாட்சியுள்ளவர்கள் மனித நேயத்தோடு களம் காண வேண்டும்.

Tags: