பாட்டாளி வர்க்கத்தின் வல்லமையே மார்க்சியம் தான்!

– இரா.சிந்தன்

பரி மதிப்பை உருவாக்குவது யார்? உடமையாக்குவது யார்? முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? பாட்டாளிகள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்? வேலையற்றோர் பட்டாளம் எங்கிருந்து உருவாகிறது? – இப்படி, பல அடிப்படையான கேள்விகளை ஆராய்ந்து அளித்த ‘மூலதனம்’ (தாஸ் கேப்பிட்டல் – Das Kapital) நூலை, ‘பாட்டாளி வர்க்கத்தின் பைபிள்’ என்று சிலர் சொல்லுவதுண்டு. ஆனால், எந்தவொரு புனித நூலுக்குமான சடங்காச்சாரங்களை பாட்டாளி வர்க்கம் மார்க்சின் நூல்களின் மீது கடைப்பிடிப்பதில்லை. வர்க்கப் போராட்டத்தை புரிந்துகொள்ளவும், உற்பத்தி முறைகளில் ஏற்படும் மாற்றம் சமுதாயத்தின் மீது செலுத்தும் தாக்கத்தை புரிந்துகொள்ளவும் பாட்டாளி வர்க்கம் தமது சிந்தனையை காலத்திற்கேற்ப செழுமையாக்குகிறது. மார்க்சின் சிந்தனை முறையை தமதாக்கிக் கொண்டதால்தான் லெனின் ஒரு தனித்துவமான புரட்சித் தலைவரானார்.

உலகின் முதல் சோசலிச நாடாக அமைந்த சோவியத் ஒன்றியம் தனது வரலாற்றுச் சாதனைகளால் இப்போதும் மார்க்சிய-லெனினியத்திற்கு சாட்சியமாக உள்ளது. பாசிச அபாயத்தில் இருந்து உலகைக் காப்பதற்காக ஒப்பற்ற தியாகம் செய்த செஞ்சேனைக்கும் அதுதான் உள்ளூக்கம் கொடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வெற்றியிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் உலகின் சோசலிச இயக்கங்கள் தமக்கான பாடங்களை பெற்றுக் கொண்டன. சீனா, தனக்கே உரித்தான பண்புகளுடன் கூடிய சோசலிசத்திற்கான கட்டமைப்பை இப்போதும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறது. கடும் வறுமையை முற்றாக ஒழித்த அதன் சாதனையின் மூலம் இப்போது ஒரு புதிய சகாப்தத்திற்குள் மக்கள் சீனம் நுழைந்திருக்கிறது.  

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எச்சரிக்கை முக்கியமானது:

“இன்றைய சீனாவில், மக்களின் வளர்ந்து வரும் அழகிய வாழ்க்கைக்கான தேவைகளுக்கும், சமமற்ற, ஒருங்கிணைக்கப்படாத வளர்ச்சிக்கும் இடையே உள்ள முரண்பாடு நமது சமூகத்தின் முக்கிய முரண்பாடாக மாறியுள்ளது. இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான திறவுகோல் சமநிலையான, ஒருங்கிணைந்த, நிலையான மேம்பாட்டைக் கடைப்பிடிப்பதாகும்.”

என்று சீன ஜனாதிபதி கூறினார். அதாவது இயற்கையை பாதுகாத்தபடியே, வளர்ச்சியை சாதிப்பது; அதற்கேற்ற வகையில் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது என்பதே மக்கள் சீனத்தின் திசைவழி. இப்போது உலகமெங்கும், சீனாவின் பங்களிப்பின் மூலம் வளர்ந்துவரும் சூரிய மின்சார உற்பத்தி திட்டங்க ளும், மின்சார வாகனங்களும் உலகச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. செயற்கை சூரியன், குவாண்டம் கணனி, உற்பத்தி ஆலைக்கான இணையதள வசதி, டிஜிட்டல் செலாவணி, டீப்சீக் மேனஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு துறையிலான பல புதிய ஆராய்ச்சிகள் உற்பத்தி முறையில் பாய்ச்சல் வேக மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

டிஜிட்டல் உலகமும், மார்க்சியத்தின் பரிமாணமும்!

ஆனால் நாம் சோசலிசக் கட்டமைப்பில் வாழவில்லை. ஓர் எளிய புரிதலில் இந்த யுகத்தை நாம் டிஜிட்டல் யுகமாக பார்த்தோமென்றால், இந்த யுகத்தின் சவால்களை முதலாளித்துவம் எப்படி எதிர்கொள்கிறது என்பது முக்கியமான கேள்வி. அவர்கள் நவீன தாராளமய கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இணையதள வேகத்தின் அதிகரிப்பு, ஸ்மார்ட் அலைபேசிகள் வருகை காரணமாக நாம் உணவு விநியோக துறையிலும், பொதுப் போக்குவரத்திலும், வீட்டுக்கு தேவையான எடுபிடி வேலைகளிலும், இன்னும் சில நாடுகளில் பொது மருத்துவ துறையிலும் கூட பல மாற்றங்களை பார்க்கிறோம். இவையெல்லாம் தொழிலாளர்களின் வேலை சுமையைக் குறைக்காமல், அத்துக் கூலியாக்குகின்றன.

“முதலாளித்துவம் உற்பத்தி சாதனங்களை தொடர்ந்து புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாக்காமல் நீடிக்க முடியாது” என்று மார்க்ஸ் கூறியது உண்மை. அதே வேளை அது இதன் மூலம் உபரி மதிப்பை மேலும் உறிஞ்சிக் கொள்ளத்தான் எத்தனிக்கிறது. எனவே, முதலாளித்துவ கட்டமைப்பு எல்லா கருவிகளையும் தன்னுடைய சுரண்டலை தீவிரப்படுத்தும் ஆயுதமாக மாற்றிக் கொள்கிறது. எனவே தொழிலாளர்களும் தம்மை அமைப்பாக ஒருங்கிணைத்து அந்த ஆயுதத்தை எதிர்க்க நேர்கிறது. புதிய ஒழுங்கு முறைகளுக்கும், அடிப்படை மாற்றத்திற்கும் மார்க்சியம் வழிகாட்டுகிறது.

காலநிலை நெருக்கடி!

முதலாளித்துவ உலகமும், சோசலிச உலகமும் இணைந்து எதிர்கொள்ளக் கூடிய மிக முக்கியமான பிரச்சனையாக எழுந்து வருவது காலநிலை நெருக்கடி ஆகும். பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்வதன் காரணமாக வெப்ப அலைகளும், மிதமிஞ்சிய மழைப்பொழிவும், பருவநிலை மாற்றங்களையும் எளிய மக்களை நெருக்கடியில் தள்ளுகின்றன. முதலாளித்துவம் மக்களை மட்டும் சுரண்டுவதில்லை. அது இயற்கையைச் சுரண்டுகிறது. அதன் விளைவாகவே நாம் ஒரு முடிவற்ற விஷச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஏங்கெல்ஸ் தனது ‘இயற்கையின் இயக்கவியல்’ நூலில் இவ்வாறு கூறினார்: “இயற்கையின் மீது நாம் வெற்றி பெறுவதால் நம்மை மிகவும் பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த விளைவுகளை உண்மையில் முதலில் கொண்டுவருகிறது, ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளில் முற்றிலும் வேறுபட்ட, எதிர்பாராத விளைவுகள் உள்ளன, அவை பெரும்பாலும் முதல் விளைவுகளை இரத்து செய்கின்றன.”

இந்த எச்சரிக்கையை மக்கள் அனுபவத்தில் உணர்கிறார்கள். பொலிவியாவில், பழங்குடி இயக்கங்கள் கனிமவளச் சுரண்டலுக்கு எதிராக ஒன்று பட்ட எதிர்ப்பை உருவாக்கியுள்ளன. அரசியலில் ஏற்பட்ட இடதுசாரி திருப்பம் அதை சாத்தியமாக்கியுள்ளது. ஆனால், காலநிலை நெருக்கடியை உதாசீனப்படுத்தும் பாதையில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் வேகமெடுக்கிறார்கள். பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதை அறிவிக்கும் டிரம்ப்பினை உலகப் பணக்காரர்கள் ஆராதித்துக் கொண்டுள்ளார்கள்.

Tags: