பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அறிவியலின் அடுத்த நகர்வு என்ன?
-திருஞானம்

சுழன்று கொண்டிருந்த விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா சுகித்திருந்தது எப்படி..? உலக மக்களின் பெரும் எதிர்பார்ப்பு நிறைவேறியதற்கு அடிப்படையான விண்வெளி ஆய்வு மையம் குறித்த சுவாரஷ்யமான தகவல்களை பார்ப்போமா..? பூமிக்கு வெளியே புதிய கோளில் குடியேறுமா வருங்கால மனித சமூகம்..? ஒரு அலசல்;
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், 3 சக வீரர்களுடன் பத்திரமாக பூமிக்குத் திரும்பி விட்டார்.
பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர்களைச் சுமந்து வந்த SpaceX Dragon விண்கலம் பூமியை நோக்கி பயணித்தது. பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, அமெரிக்காவின் புளோரிடா அருகே கடலில் இறங்கி மிதந்தது.
காத்திருந்த மீட்புக் கப்பல், டிராகன் விண்கலத்தை மீட்டு, விண்வெளி வீரர்களை வெளியே அழைத்து வந்தது. பெரும் உற்சாகத்துடன் கை அசைத்தபடி வந்தார், சுனிதா வில்லியம்ஸ்.
இது விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் அறிவியலில் கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வந்த கூட்டு ஆய்வுகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியில் இந்தியாவில் மதத்தையும், அரசியலையும் நுழைக்கும் சங்கிகள் குறித்தும் pseudo scientists குறித்தும் எச்சரிக்கை தேவை.

இதற்காகவே விண்வெளி ஆய்வுகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) என்பது என்ன?
சர்வதேச விண்வெளி நிலையம் ( International Space Station- ISS) என்பது பூமியைச் சுற்றி வரும் பறக்கும் ஆய்வு நிலையம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கனடா உட்பட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. சர்வதேச விண்வெளி நிலையம் அதிபயங்கர வேகத்தில் பயணிக்கிறது. மணிக்கு 28,000 கிலோ மீட்டர் வேகம் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். அங்கிருப்பவர்கள் தினம்தோறும் 16 சூரிய உதயத்தைப் பார்க்கிறார்கள். தெளிவான நாளில், வானத்தில் மூன்றாவது பிரகாசமான பொருளான சர்வதேச விண்வெளி நிலையம் பறந்து செல்வதை வெறும் கண்ணால் பார்க்க முடியும்
சர்வதேச விண்வெளி நிலையம் எவ்வளவு பெரியது? முக்கிய கூறுகள் யாவை?
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தோராயமாக ஒரு கால்பந்து மைதானத்தின் அளவைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய பகுதிகள் : அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் அறைகள், அவற்றை இணைக்கும் தாழ்வாரப்பகுதி, சூரிய ஒளி மின்தகடுகள், விண்வெளி வீரர்கள் நிலையத்துக்கு வெளியே விண்நடை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான ரோபோட் கை ஆகியவை. பூமிக்கு வெளியில் இருந்து பூமியை பார்த்து இரசிப்பதற்காகவே அங்கு சிறப்பு கண்ணாடி அறை ஒன்றும் உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்?
சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமான தொடக்கம் முதல் அமெரிக்காவின் ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle) விண்கலன்களும் ரஷ்யாவின் சோயுஸ் (Soyuz) விண்கலன்களும் சரக்குகளையும், மனிதர்களையும் ஏற்றி அங்கு சென்று வந்தன. 2011 ஆம் ஆண்டு ஸ்பேஸ் ஷட்டில் ஓய்வுக்குப் பின் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை சுமந்து சென்று, திரும்பி அழைத்துவந்தது. கடந்த 4 ஆண்டுகளாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனமும் அந்தப் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது சுனிதா வில்லியம்ஸ் குழுவை பத்திரமாக திரும்ப அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், வணிக ரீதியில் தனது போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டது.
இது வரை எத்தனை பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர்?
2000 மாம் ஆண்டு முதல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்கள் சென்று தங்கி இருந்து திரும்பி வருகிறார்கள். இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 280 நபர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்டுள்ளனர். இந்த பார்வையாளர்கள் 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா 165 முறை வருகை தந்து, அதிக விண்வெளி வீரர்களை ISS க்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா 59 விண்வெளி வீரர்களையும், ஜப்பான் 11 பேரையும் அனுப்பியுள்ளது.
விண்வெளி வீரர்கள் அல்லாத தனி நபர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா சென்று வந்திருக்கிறார்களா?
2001 ஆம் ஆண்டு டென்னிஸ் டிட்டோ என்ற அமெரிக்க தொழிலதிபர், சுற்றுலா பயணியாக அங்கு சென்று 7 நாட்கள் தங்கி இருந்துவிட்டு வந்தார். அவருக்கு ஆன டிக்கெட் செலவு 150 கோடி ரூபாய். அவருக்குப்பின் 5 பணக்காரர்கள் அதே போன்று செலவு செய்து அங்கு சுற்றுலா சென்று வந்தனர். 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க ஸ்பேஸ் ஷட்டில்கள் ரிட்டயர்டு ஆக்கப்பட்டதால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா அபூர்வமாகி விட்டது. பயணக் கட்டணமும் அதிகரித்து விட்டது.
விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

விண்வெளியில் வாழ்வது என்பது பூமியில் வாழ்வது போன்றதல்ல. விண்வெளி நிலையத்திற்குள் புவி ஈர்ப்பு விசை இருப்பதில்லை என்பதால், விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குள் கால் தரையில் ஊன்ற முடியாமல் மிதக்கிறார்கள் அல்லது பறக்கிறார்கள். விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிக மோசமான வெப்பநிலை உள்ள போதும், உள்ளே அவர்களுக்கு குளிரூட்டப்பட்ட இதமான வெப்ப நிலை உள்ளது. விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஒட்சிசன் இல்லை என்ற போதும், உள்ளே அவர்களுக்கு நமது பூமியில் இருப்பதைப் போன்ற ஆக்சிஜன் நிறைந்த காற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் தங்கள் உடல்கள் மிதக்கும் போது எப்படி தூங்க முடியும்?
மிதந்துகொண்டே தூங்கினால், சுவரில் முட்டிக் கொள்வார்கள். எனவே விண்வெளி வீரர்கள் சிறிய தூக்கப் பெட்டிகள் மற்றும் தூக்கப் பைகளைப் பயன்படுத்தித் தான் தூங்குகிறார்கள். அவர்கள் தங்கள் உடலை தளர்வாகக் கட்டிக் கொண்டுதான் தூங்குவார்கள். ஏர் கண்டிஷனிங் மற்றும் பிற இயந்திரங்களின் சத்தத்தால் தூக்கம் சிரமமாக இருப்பது உண்மைதான். அதற்காகவே விண்வெளி வீரர்களுக்கு கண் முகமூடிகள் மற்றும் காது செருகிகளும் கிடைக்கின்றன.
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சாப்பிடுகிறார்கள்?

பூமியில் நாம் சாப்பிடுவது போலவே அவர்களும் உணவை உண்ணலாம். திட உணவுகள் மெல்ல பறக்கும் என்பதால், லாவகமாக கையில் பிடித்து உண்ண வேண்டும். அவர்களுக்காக சுமார் 150 வகையான பார்சல் உணவுகள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்போது அடுப்பில் சூடாக்கி உண்கிறார்கள். தண்ணீர் போன்ற திரவங்கள் மேல்நோக்கி பறந்துவிடும் என்பதால், சீல் செய்யப்பட்ட பொட்டலத்திலிருந்து திரவங்களை ஸ்ட்ரா மூலமாக உறிஞ்சி குடிக்கிறார்கள்.
விண்வெளி வீரர்கள் அணிய சிறப்பு ஆடைகள் தேவையா? அவர்கள் தங்கள் துணிகளை எப்படி துவைக்கிறார்கள்?
விண்வெளி விண்கலத்தின் உள்ளே, காற்றழுத்தம் பூமியில் உள்ள அதே மட்டத்தில் உள்ளது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் விண்வெளி வீரர்கள் டிஷர்ட் பேண்ட் போன்ற வழக்கமான உடை அணிகிறார்கள். அங்கு தண்ணீர் மிகவும் அபூர்வமானது. எனவே, விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும் போது தங்கள் துணிகளை துவைக்கவோ, அல்லது உலர்த்தவோ மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் பல நாட்கள் அதே ஆடைகளை அணிந்து கொண்டு, உடையை தூர வைத்துவிட்டு புதிய ஆடையை மாற்றுகிறார்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை புதிய உள்ளாடை அணிவது, வாரம் ஒருமுறை புதிய டி-சர்ட், பேண்ட் மற்றும் சாக்ஸ் அணிவது என்பது அங்குள்ள நடைமுறை.

விண்வெளி விண்கலத்திற்கு வெளியே செல்லும் போது அவர்கள் என்ன அணிவார்கள்?
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வேலை செய்ய விண்கலத்திற்கு வெளியே செல்லும் போது, அவர்கள் விண்வெளி பாதுகாப்பு உடைகளை அணிவார்கள். இவை, விண்வெளி கதிர்வீச்சு, அதீத வெப்பம், ஒட்சிசன் இன்மை போன்ற அபாயகரமான சூழலில் இருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் உடைகள் ஆகும்.
விண்வெளியில் கழிப்பறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? அவர்கள் எப்படி குளிக்கிறார்கள்?
கழிப்பறை பூமியில் நாம் பயன்படுத்தும் மேற்கத்திய பாணி கழிப்பறையைப் போலவே தோற்றமளிக்கிறது. இருப்பினும், ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் கழிவுகளை உறிஞ்சுவதற்கு ஒரு குழாய் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
பூச்சிய ஈர்ப்பு விசை சூழல் இருப்பதால், பூமியில் இருப்பது போல் விண்வெளி வீரர்கள் தங்கள் கைகளை குழாயின் கீழ் கழுவ முடியாது. எனவே, விண்வெளி விண்கலத்திற்குள் ஷவர் அல்லது குளியல் தொட்டிகள் இல்லை. விண்வெளி வீரர்கள் உடலை சுத்தம் செய்ய விரும்பும் போது, உடல் ஷாம்பூவில் நனைத்த ஈரமான துண்டைப் பயன்படுத்தி தங்கள் உடலைத் துடைத்துக் கொள்கிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இணையும் நிகழ்வை பொறியியல் அற்புதம் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள்?
பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில், மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது கற்கள் மோதினால் கூட, பெரும் ஆபத்து நிகழும். இங்கிருந்து அனுப்பப்படும் டிராகன் போன்ற 8,000 கிலோ எடைகொண்ட ஒரு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிச் சென்று இணைவது என்பது ஆபத்து நிறைந்தது. இதற்காகவே விண்ணில் செலுத்தப்படும் டிராகன் விண்கலம் பூமியைச் சுற்றியபடியே சர்வதேச விண்வெளி நிலையத்தை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று துல்லியமாக இணைகிறது. எனவே தான் இந்த நிகழ்வை பொறியியல் அற்புதம் என்று குறிப்பிடுகிறோம்.
சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்க செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு?

மனிதன் உருவாக்கிய மிக விலை உயர்ந்த பொருள் சர்வதேச விண்வெளி நிலையம் தான். அமெரிக்கா, ரஷ்யா,ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இதனை உருவாக்க இதுவரை 13 இலட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. (முகேஷ் அம்பானி குரூப்பின் மொத்த சொத்து மதிப்பு 8.5 இலட்சம் கோடி ரூபாய் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்)
இவ்வளவு அதிக பொருள் செலவில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது ஏன்?
13 இலட்சம் கோடி ரூபாய் செலவில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது என்று சொன்னோம். இதைவிடப் பெரும் பொருள் செலவில் இன்னும் 10 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் அமைக்கும் முயற்சியில் எலான் மஸ்க்கும் மற்றவர்களும் தீவிரமாக இருக்கிறார்கள். விண்வெளி ஆய்வுக்கு இவ்வளவு பெரும் தொகை செலவிடப்படுவதற்கான காரணம் மிகவும் தொலைநோக்கில் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்பதே ஆகும்.

நமது சூரியன் ஒரு நடுத்தர வயதுள்ள நட்சத்திரம். அதே போன்றது தான் நமது பூமிக் கோளம். எல்லா நட்சத்திரங்களுக்கும் அவற்றைச் சுற்றி வரும் கோள்களுக்கும் பிறப்பு, நடுத்தர வயது, முதுமை, இறப்பு என்ற காலகட்டங்கள் உண்டு.
460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சூரியன் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குள் ரெட் ஜெயண்ட் (Red Giant) ஆக மாறி, அதன்பின் சிதறி அழிந்து விடும். ரெட் ஜெயண்ட் ஆக மாறுவதற்கு முன், பூமி உள்ளிட்ட கோள்களை சூரியன் எரித்து சாம்பலாக்கி விடும்.
இது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி.
எனவே, இன்னும் 200 கோடி ஆண்டுகளுக்குள், இளமையான ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் பூமி போன்ற, காற்றும் தண்ணீரும் நிறைந்த ஒரு இளமையான கோளைக் கண்டு பிடித்து, மனித குலத்தை அங்கே குடியேற்றிவிட வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் பெரும் கனவு…! உச்சபட்ச இலட்சியம்…!
Spacefaring Civilization ஆக மனிதகுலத்தை மாற்ற வேண்டும் என்கிறார் Elon Musk. நதிக்கரை நாகரிகங்கள் உருவானது பற்றி அறிந்திருக்கிறோம். இளமையான கோள்களுக்குச் செல்லும் மனித நாகரிகம் இனி வர வேண்டும் என்பது தான் அறிவியல் ஆர்வலர்களின் இலக்கு.
இத்தனை பெரிய இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் Sunita Williams team பத்திரமாகத் திரும்பி வந்தது என்பது ஒரு முக்கிய மைல்கல்.
‘செல்ல வேண்டிய தூரம் மிக நீண்டது’ என்ற அறிவியல் பார்வையுடன் இந்த அறிவியல் நிகழ்வைப் போற்றுவோம்.