கானகத்தின் குரல் எல்லா திசைகளிலும் ஒலிக்கட்டும்…
–ஓசை காளிதாசன்

காடுகள் நம் அனைவருக்குமான ஆதி வாழ்விடம். நீரையும், உயிர்க் காற்றையும் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் வாழ்வாதாரம்.
நாம் உமிழும் கரிக் காற்றால் (CO2) உயர்ந்து வரும் வெப்பநிலை, நமது புவிக்கோளத்தின் உயிர்ப்பை அச்சுறுத்தும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதில் காடுகள் பெரும் பங்காற்றுகின்றன. பல்வேறு வகையான காட்டுயிர்களுக்கும் பல இலட்சம் பழங்குடிகளுக்கும் காடுகளே வாழ்வைத் தருகின்றன.
இப்போது புவியின் நிலப்பரப்பில் 31% காடுகள் உள்ளன. இவற்றில் பாதிக்கு மேற்பட்டவை ரஷ்யா, பிரேசில், கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளில் உள்ளன.
அச்சுறுத்தும் காட்டுத் தீ!
கடந்த 1990 முதல் 2020 வரையிலான 30 ஆண்டுகளில் 420 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும் 1990 முதல் 2002 வரை 15.8% ஆக இருந்த காடழிப்பு 2015-2020 ஆண்டுகளில் 10.2% ஆகக் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

நேரடியாக காடழிப்பு விழுக்காடு குறைந்திருந்தாலும், அண்மை ஆண்டுகளில் காட்டுத்தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 350 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு உள்ள காடுகள் தீயால் பாதிக்கப்படுகின்றன. இது ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் பாதி அளவுக்குச் சமமாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு காட்டுத்தீயின் விளைவாக 687 மெகா தொன் கரிக்காற்று உற்பத்தியாகி உள்ளது. இது புதைப்படிம எரிபொருட்களால் ஐரோப்பிய நாடுகளில் உமிழப்பட்ட கரிக்காற்றைவிட இரு மடங்கு ஆகும்.
பூச்சிகளின் பெருக்கத்தாலும் உலக அளவில் காடுகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து போவதாலும் பூச்சிகள் அதிகரிக்கின்றன.

இந்தியாவில் காடுகளின் நிலை!
“இந்திய காடுகளின் நிலை அறிக்கை – 2023” கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியாவின் நிலப்பரப்பில் 25.17% காடுகள் உள்ளன. இவற்றில் 21.76% காடு (Forest) என்ற வரையறைக்கு உட்பட்டவை. மீதமுள்ள 3.41% காடுகளுக்கு வெளியே உள்ள பசுமை பரப்பு (மரங்கள்) .
இந்தியாவுக்கு ஒரு வனக் கொள்கை உள்ளது. அதன்படி மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (33.3%) காடுகளாக இருக்க வேண்டும்.
இந்த அளவு காடு போதும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. சில அறிஞர்கள் புவிப்பரப்பில் பாதி அளவு காடாக இருந்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறை நலமுடன் வாழ முடியும் என்பதை வலியுறுத்துகின்றனர்.
எனினும் இந்தியாவில் 33.3% காடுகள் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளன. லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றிலும் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் அவற்றின் நிலப்பரப்பில் 75% க்கும் மேல் காடுகள் உள்ளன.

துண்டாடப்படும் காடுகள்!
கடந்த 2013 – 2022 வரையிலான பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 16, 631 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ஓரளவு மகிழ்ச்சியைத் தந்தாலும் கடந்த 2020 ஆம் ஆண்டு “லேண்ட் யூஸ் பாலிசி” (Land use policy) எனும் அறிவியல் பருவ இதழில் இடம் பெற்ற, ரஜத்நாயக், உல்லாஸ் கரந்த் உள்ளிட்ட அறிவியலாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் உள்ள 7,83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் 3,52,674 துண்டுகளாகப் பிளவுண்டு உள்ளன. காடுகளின் ஊடே அமைக்கப்பட்ட 59,500 கி.மீ சாலைகள், 46,700 கி.மீ உயர் மின் அழுத்த கம்பி பாதைகள், 7400 கி.மீ ரயில் பாதைகள், 6100 கி.மீ வாய்க்கால்கள் ஆகியவை இவ்வாறு பிளவு படுத்தி உள்ளன.
காடு என்பது மரங்கள் மட்டுமல்ல. பறவைகள், விலங்குகள், ஊர்வன உயிர்கள், பூச்சிகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் எனக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவில் இருந்து ஆலமரம் போன்ற பெரும் மரங்கள் வரை கொண்ட உயரிய உயிர் சூழல் அமைப்பு. ஒவ்வொரு காட்டுக்கும் தனித்துவமான உயிர்ச்சூழல் உள்ளது. அந்த உயிர்ச் சூழலுக்கு அங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் பங்களிப்பை வழங்கி வருகின்றன. காடுகள் பிளவுபடுகிற போது அச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பெருஞ் சாலைகள் காடுகளை எவ்வாறு பிளவுபடுத்தி உள்ளன என்பதை நாம் அறிவோம். கம்பத்தில் இருந்து தேக்கடி போகும் போதும், கோயம்புத்தூரில் இருந்து மஞ்சூர் போகும் போதும் புனல் மின் நிலையங்களுக்காக அமைக்கப்பட்ட பெரும் குழாய்களைப் பார்க்கலாம். அவை காடுகளை இரண்டாகப் பிளந்துள்ளன. ஒரு முயல் கூட ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் கடக்க இயலாது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள சமமட்டக் கால்வாயும் ( Contour canal ) அப்படித்தான்.
இவையெல்லாம் காடுகளின் முக்கியத்துவம் பற்றி அறிவதற்கு முன்பாகவே அமைக்கப்பட்டவை. அப்போது இத்தகு வளர்ச்சிப் பணிகள்தான் முதன்மைப்படுத்தப்பட்டன. ஆனால் இன்றும் காடுகளைக் கிழித்து சாலைகள், ரயில் பாதைகள் அமைக்க திட்டமிடுவது அறிவான செயல் ஆகுமா? பழங்குடி மக்கள் மட்டுமே வாழும் நிக்கோபார் தீவுகளில் காடுகளை அழித்துச் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மோசமான விளைவுகளை அல்லவா ஏற்படுத்தும்..?

களைச் செடிகளால் குறையும் காட்டு நிலபரப்பு!
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 26,450.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இவை மொத்த நிலப்பரப்பில் 20.33 % ஆகும். கடந்த 2013 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் 16,631 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பசுமைப் பரப்பு அதிகரித்துள்ளது. காடுகளுக்கு வெளியே உள்ள பசுமைப் பரப்பு அதிகரித்து இருந்தாலும் காட்டின் பரப்பு சற்றே குறைந்து இருப்பதாகவே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இப்போது தமிழ்நாட்டில் பரப்பளவில் 2.76% மட்டுமே அடர்ந்த காடுகள் உள்ளன. மிதமான அடர்த்தியுள்ள காடுகள் 8.48% ஆகும். மீதமுள்ள 9.07% திறந்த வெளிக் காடுகளாகும்.
தர மதிப்பீட்டில் 2% காடுகள் மோசமாகவும், 25% மிதமாகவும் 55% குறைந்த அளவும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காணப்படுகின்றன.
இவ்வகையான பாதிப்பிற்குப் பெருமளவு காரணமாக இருப்பவை காடுகளில் பற்றிப் படரும் களைச் செடிகளாகும்.
களைச்செடிகளை அகற்றி, காட்டின் உயிர்ச்சூழலை மேம்படுத்தும் கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
அதேபோல் பசுமைத் தமிழகம் இயக்கம் மூலமாக பத்து ஆண்டுகளில் 260 கோடி மரங்களை வளர்த்து பசுமைப் பரப்பை 33% ஆகப் பெருக்குவது எனத் திட்டமிட்டு அரசு இயங்கி வருவது பாராட்டுக்குரியது.
பசுமைப் பரப்பை அதிகரிக்க எடுத்து வரும் முயற்சிகள் போலவே காடுகளின் தரத்தை மேம்படுத்தவும், உயிர்ச்சூழலை மீள் உருவாக்கம் செய்யவும் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கும், மலைப்பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கும் காடுகளாக இருக்க வேண்டும் என்பதே நாட்டின் வனக் கொள்கையாகும். எனவே மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றில் இனிமேல் சிறிதளவு கூட காட்டின் பரப்பு குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
நீலகிரி, வால்பாறை போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான இடங்களில் குத்தகை காலம் முடியப்போகிறது. அவ்வாறு முடியும்போது குத்தகையை நீடிக்காமல் அந்த இடங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். அவற்றை காடாக மாற்றுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அந்தத் தோட்டங்களில் பணியாற்றும் மக்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தலாம். அதேபோல் நீலகிரியில் 1969ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய ஜென்ம பூமி இடங்களில் இன்னும் தீர்வு காணாமல் இருக்கும் சுமார் 25,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை குத்தகைதாரர்களிடம் இருந்து கைப்பற்றி அங்கு வாழும் சுமார் 5000-க்கு மேலான குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கியது போக மீதமுள்ளவற்றை வனப் பரப்பாக மாற்றுவதற்கான முயற்சியை அரசு விரைந்து செய்ய வேண்டும். இத்தகைய செயல்பாடுகளின் மூலமே மலைப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க இயலும்.
நீலகிரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சில்லஹல்லா புனல் மின் நிலையத் திட்டம் அம்மலையின் உயிர் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசு அத்திட்டத்தை கைவிட வேண்டும்.
சில பணிகளுக்காக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் கையகப்படுத்தும் போது அவற்றுக்கு ஈடாக வேறு இடத்தில் இரு மடங்கு நிலம் ஒதுக்கப்படுவது உண்டு. மேலோட்டமாக இவை சரியாக இருந்தாலும் உயிர்ச்சூழலை மதிப்பிடும்போது இத்தகைய செயல்பாடுகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நீலகிரி மருத்துவமனை மலையில் தான் வேண்டுமா?
தமிழகத்தின் மருத்துவக் கல்வியை உயர்த்தும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வரும் முயற்சி சிறப்புக்குரியது. அவ்வாறு நீலகிரியிலும் ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் இருமடங்கு நிலம் கொடுக்கப்பட்டது. சேலத்தில் பசுமைப் பரப்பை உருவாக்கலாம். ஆனால் நீலகிரியில் உள்ள உயிர்ச் சூழலை எவ்வாறு கொண்டுவர முடியும் என ஆய்வு செய்யும் போதுதான் அதன் பாதிப்புகளை உணர முடியும். நீலகிரிக்கு ஒரு தரமான மருத்துவமனை வேண்டும். ஆனால் அங்கு கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க நீலகிரி மாணவர்கள் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும்? அங்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களும் சிரமத்தையே உணர்வர் அல்லவா..? நீலகிரியில் உருவாக்கியதற்குப் பதிலாக அந்த மருத்துவக் கல்லூரியைச் சமவெளி பகுதியில் உருவாக்கி இருக்கலாம்.
காடுகளை அழித்து இனி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செயல்படுத்த மாட்டோம் என்கிற கொள்கை முடிவை மாநில, ஒன்றிய அரசுகள் எடுக்க வேண்டும்.
கானகம் காக்கப்பட வேண்டும்!
நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு தனித்துவமான வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் என இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்புக்கு உரியது.
ஆங்கிலேயர்களால் 1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு வனச்சட்டம் 1856 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டு விட்டது. அச்சட்டங்கள் பல்வேறு மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டன. புதிய சட்டங்களும் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் காடுகளை மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டவை. வருமானத்திற்காக அரசே மரங்களை வெட்டி விற்கலாம், காட்டின் தன்மையை மாற்றலாம் என்கிற நிலை தான் இருந்தது.
ஆனால் 1980 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வனப் பாதுகாப்பு சட்டம் தான் காட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. காடு சாராத எந்த காரணத்திற்காகவும் காட்டு நிலம் மாற்றப்படக்கூடாது என்பதை அச்சட்டம் வலியுறுத்தியது. இன்று இந்தியாவில் காடுகள் மீதமிருப்பதற்கு அச்சட்டமே காரணமாகும்.
எனவே அரசியல் காரணங்களை விடுத்து அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். தற்போது அச்சட்டத்தைப் பலவீனப்படுத்த முயற்சிகள் நடைபெறுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உலக வன நாளான இன்று கானகம் காக்கப்பட வேண்டும் என்பது வெறும் குரலாக இருந்துவிடாமல் உயிரோட்டமான செயலாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்!
கட்டுரையாளர்: ஓசை காளிதாசன்
ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் சேர்ந்து `ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை 2000 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். கனரா வங்கியில் பணிபுரிந்த காளிதாசன் சுற்றுச்சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு வன உயிரின வாரியம், தமிழகக் கடலோர மேலாண்மைக் குழுமம், ஆனைமலை புலிகள் காப்பக ஆளுமைக்குழு உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
(நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம் நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. நவீனமயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதால், வனப்பகுதிகளோடு அவ்வனத்தில் வசித்து வந்த உயிரினங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் சங்கிலியில் மாறுபாடுகள் ஏற்பட்டு இயற்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு பருவநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைகின்றது.
உலக காடுகள் நாள் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய விவசாய கூட்டமைப்பின் 23வது பொதுச் சபையில் நிறுவப்பட்டது. மேலும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் மார்ச் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உலக வன நாள் ( International Day of Forests ), ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளைப் பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றன. பருவ கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் நாளில் காடுகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகின்றன.
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை (CO2) உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாகவும் விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள். வெப்ப மண்டலக் காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 விழுக்காடு உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 விழுக்காடு அளவுக் காடுகளில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனிதர்களுக்கு பல வழிகளிலும் நன்மை தரும் தாவரங்கள் மற்றும் காடுகள் தற்போது பல வழிகளில் அழிக்கப்படுகின்றன.)