விண்வெளியை ஆராயும் உலகம்…  கல்லறையைத் தோண்டும் இந்தியா

திபங்கர் பட்டாச்சார்யா (Dipankar Bhattacharya), CPI (ML)

மிக முக்கியமான வரவு-செலவுத் திட்டம் பற்றிய விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் டிரம்ப் அரசாங்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்தியாவிற்கு நாள் தோறும் அவமானத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார். எலோன் மஸ்க்கும் (Elon Musk) அவரது பொருளாதாரப் பேரரசும் அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, மோடி அரசாங்கமோ இந்தியாவில் மஸ்க்கின் தொழில் முயற்சிக்குக் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தை பெருமளவிலான இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களோ வேறு நாடுகளில் நிலையானதும் இலாபகரமானதுமான சந்தைகளுக்குப் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றியும் முதுகெலும்பில்லாத வகையில் மோடி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து வருவது பற்றியும் கோடி ஊடகமும் போலிவுட்டும் தருகின்ற எரிசக்தியைக் கொண்டு சங் பரிவாரம் முஸ்லிம்கள் மீதான பகைமை, வன்முறை ஆகியவற்றுக்குள் ஆழமாகச் சென்றுகொண்டிருப்பதைப் பற்றியும் அற்ப அளவிலான விவாதங்களே நடக்கின்றன.

வெறுப்புக்கு நெருப்பூட்டிய ’சாவா’ 

மகாராஷ்ட்டிராவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மோசடித்தனமான வெற்றியை அடைந்த நாளிலிருந்து சங் பரிவாரம் அந்த மாநிலத்தை வெறுப்புக்கான பரிசோதனைக் கூடமாக மாற்றுவதற்கு கூடுதலான நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்துவந்த ஆறாவது முகலாய மாமன்னர் ஒளரங்கசீப்பை இழிபுபடுத்துவதன் மூலம் முஸ்லிம் விரோத வெறியைத் திட்டமிட்டுத் தூண்டிக்கொண்டிருக்கிறது. 

அண்மையில் வெளிவந்து, பெரும் வசூல் சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம் சிவாஜியின் மகனும் இரண்டாவது மராத்தா அரசருமான ஷாம்பாஜியை ஒளரங்கசீப் மிகக் கொடூரமாகக் கொலை செய்த காட்சியை விரிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதன் மூலம் சங் பரிவாரம் பற்றி வைத்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியுள்ளது.

வரலாறு சொல்வது என்ன? 

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பல பாஜக அமைச்சர்கள் ஒளரங்கசீப்பைக் கண்டனம் செய்து வெளியிட்டுள்ள அறிக்கைகளும் கூட ஒளரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தந்து இந்த வெறித்தனமான வெறுப்பை ஊக்குவித்துள்ளது. இது மகாராஷ்ட்டிர முதலமைச்சரின் தொகுதியான நாக்பூரில் நடைபெறும் முதல் மதவாத வன்முறைக்குக் கொண்டு சென்றுள்ளது.

கடந்த காலத்தில் சிவாஜியின் வழித் தோன்றல்களுக்கு ஒளரங்கசீப்பின் சமாதி பற்றியோ, இதர முகலாயச் சின்னங்கள் குறித்தோ எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஷாம்பாஜி மகராஜின் மகனும் மராத்தாப் பேரரசின் ஐந்தாவது சத்ரபதியுமான (மாமன்னர்) முதலாம் ஷாஹு, ஒளரங்கசீப்பின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தி வந்ததையும், ஔரங்கசீப்பீன் மகள் ஸிடான் உன் –நிஸ்ஸாவின் (சத்தாரா மசூதி பேகம்[ Zinat-un-Nissa, Begum Masjid of Satara] ) நினைவின் பொருட்டு ஒரு மசூதியைக் கட்ட ஏற்பாடு செய்தார் என்பதையும் பற்றிய வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

மராத்தாப் பேரரசுக்கும் முகலாயப் பேரரசுகளுக்கும் இடையே இருந்த உறவு என்பது கண்மூடித்தனமானதும் தணிக்க முடியாதுமான மோதலாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக, மோதல்களுடன் கூடவே ஒத்துழைப்புகளும் இருந்த நுட்பமான உறவாகவே இருந்தது. எனவே இரு தரப்பினருக்கும் நடந்த போர் ராஜதந்திர உறவுகளை நிரந்தரமாக சீர்குலைக்கவில்லை. முகலாயச் சின்னங்கள் மராத்தா ஆட்சியாளர்களால் நாசப்படுத்தப்பட்டதுமில்லை. ஆனால் சங் பரிவாரம் மராத்தா வரலாற்றைத் திருத்தி எழுதுவதிலும், சமகாலத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி உருவாக்கப்படும் பீதியின் அடிப்படையில் மராத்தா மரபையும் அடையாளத்தையும் மறுவரையறை செய்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 

ஓளரங்கசீப்பின் சமாதியையும் முகலாயர்களின் மரபு முழுவதையும் குறிவைத்து நடத்தப்படும்  வலுவான வெறுப்பு இயக்கம் – மாணவர்களின் பாடத்திட்டத்திலுள்ள வரலாற்றுப் பாடத்திலிருந்து முகலாய ஆட்சியாளர்களின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது – முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் குறிவைத்து அதிகரித்து வரும் அளவில் திட்டமிட்டு சங் பரிவாரம் நடத்தி வரும் முஸ்லிம் விரோத செயல்திட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது.

மூடப்பட்ட மசூதிகள்… சவத்தின் மீது கூட வெறுப்பு!

உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிவைதான் வெறுப்பு அரசியலின் முக்கிய பரிசோதனைக் கூடங்கள். அங்கு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு ஏதோவொரு காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஒடுக்குமுறைக்கான புதுப் புதுக் கருவிகள் வளர்தெடுக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் வன்முறைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சாம்பாலில் பதட்டநிலை இன்னும் கொந்தளித்துக் கொண்டிருக்கிற நிலமையில், நாடு முழுவதிலும் உள்ள இன்னும் அதிகமான மசூதிகள், கல்லறைகள் அல்லது தர்காக்கள் ஆகியவற்றின் மீது குறிவைத்து இடைவிடாத வெறுப்பு இயக்கம் நடந்து வருகின்றது. 

இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டம்கூட, முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமைத் தொழுகைகளுக்கு எதிரானதாக வைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரசார இயக்கமாக மாற்றப்பட்டது. ஹோலிப் பண்டிகை அமைதியாக நடப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, சாம்பால் பகுதி மாவட்டக் காவல் துறை அதிகாரி அனுஜ் செளதரி முஸ்லிம்களை வீட்டுக்குளேயே இருக்கும்படி கூறினார். இதை உடனடியாக ஆதரித்த யோகி ஆதித்யநாத், வட இந்தியா முழுவதிலும் முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டக்கூடிய வெறுப்பு பேச்சுகள் நடப்பதற்கான மனோநிலையை உருவாக்கினார். சாம்பால் பகுதியில் இருந்த மசூதிகள் அனைத்தும் தார்பாலின்களைக் கொண்டு மூடப்பட்டன. தார்பாலின் ஆடைகளை அணிந்து கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி முஸ்லிம்களை பா.ஜ.க தலைவர்கள் கிண்டல் செய்தனர். காவல் துறையினர் தங்கள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டிருக்க, ஹோலிப் பண்டிகைக் களியாட்டக்கரார்களுக்கு, முஸ்லிம் சவ ஊர்வலத்தின் மீது கூட சேற்றை வாரி இறைப்பதற்கும் தைரியம் வந்தது.  

வெறுப்பு நிறைந்த இந்த சுற்றுச்சூழலில் இந்து, முஸ்லிம் சமுதாயங்கள் இரண்டுக்குமே விவேகத்துடனும் நல்லிணக்கத்துடனும் நடந்துகொள்ள பெரும் தைரியம் தேவைபட்டது. ஹோலிப் பண்டிகையின் பெயரால் நிலப்பிரபுத்துவ வன்முறைக்கு தலித்துகளும்கூட உட்படுத்தப்பட்டனர். பிகார் மாநிலத்திலிலுள்ள ஒளரங்காபாத் மாவட்டத்தில், ஹோலிப் பண்டிகையின் போது தடவப்படும் வண்ணப் பொடிகளை ஏற்றுக் கொள்ள மறுத்ததற்காக, கோமல் பஸ்வான் என்ற வயதுவராத தலித் இளம் பெண் நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன.

சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்! 

மோடி அரசாங்கம் சட்டங்களை உருவாக்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெறுப்பை உமிழ்கின்ற, தெருக்களில் வன்முறையை நடத்துகிற பிரசார இயக்கத்தினை நியாயப்படுத்துவதற்குத்தான். இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:  

ஒன்று, பொது சிவில் சட்டம். இது ஏற்கெனவே உத்தரகாண்டில் சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது; இன்னொன்று வக்ஃப் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதா. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்குக் காத்திருக்கும் இந்த மசோதா முஸ்லிம்களை அச்சம், பாதுகாப்பின்மை, துன்புறுத்தப்படுதல் ஆகியவை நிறைந்த சூழலால் நிரந்தரமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்கியுள்ளது, பொது சிவில் சட்டத்தின் உத்தரகாண்ட் முன்மாதிரி, வயதுக்கு வந்த இரு தனிநபர்கள் வேறு மதத்தைத் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கும் கலப்பு மணம் செய்து கொள்வதற்கும் அல்லது தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட உறவுடன் வாழ்வதற்கும் தனிநபர்களுக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்திற்கும்கூட அச்சுறுத்தலாகியுள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்படுமானால் அது முஸ்லிம் அறக்கட்டளைச் சொத்துகள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றின் மீது வக்ஃப் வாரியத்துக்குள்ள அதிகார வரம்புகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படக்கூடியதாக ஆக்கும். 

பேரழிவுக்கான உபாயம்?

வரலாற்று முரண்நகை என்னவென்றால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்லிமோரெ ஆகிய விண்வெளி வீரர்கள் விரிவுபடுத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியிலிருந்து பூமிக்குத் திரும்பி வந்து கொண்டிருப்பதை உலகம் கண்டு களித்துக் கொண்டிருக்கும்போது, சங் பரிவாரமோ வெறுப்பு நிறைந்த அகழ்வாராய்ச்சி அரசியலுக்குள் இந்தியாவைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. முன்னூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோன ஒரு பேரரசரின் கல்லறைக் கட்டடம் 2025 ஆம் ஆண்டில் உலகில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள ஒரு நாட்டுக்கான மையப்புள்ளியாகியுள்ளது; சமுதாய முன்னேற்றம், மக்களின் நலன் ஆகியவற்றில் முக்கியமானவை ஒவ்வொன்றினதும் தொடர்பாக உலகளவில் தெரிவிக்கப்படும் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை எல்லா நாடுகளுக்கும் கீழான நிலையில் தளர்ந்து போயுள்ள நாடுதான் இந்தியா. 

இந்தியாவை நாட்டுப் பிரிவினை என்ற பேரதிர்ச்சியில் ஆழ்த்துவதற்கு முன் இரு நூற்றாண்டுகள் அதனை அடிமைப்படுத்தி வந்ததற்கு காலனியாதிக்கம் பயன்படுத்திய மிகப் பெரும் ஆயுதம்தான் வகுப்புவாத (மதவாத) மோதல் என்பதை நாம் மறக்கக்கூடாது. ’பிரித்தாளுதல்’ என்ற காலனியாதிக்கக் கால சூழ்ச்சியை திரும்பவும் செய்வது பேரழிவுக்கான உபாயம்தான். எல்லா வழிமுறைகளையும் கொண்டு இந்தியா இந்த அபாயகரமான கண்ணிப்பொறியில் சிக்காமல் விலகியிருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு: எஸ்.வி.ராஜதுரை

கட்டுரையாளர் குறிப்பு:

திபங்கர் பட்டாச்சார்யா  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் தேசிய பொதுச் செயலாளர். அஸ்ஸாமில் பிறந்த இவர்  கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் படித்தார். மேற்கு வங்க உயர்நிலைப் பள்ளித் தேர்வில் 1979 ஆம் ஆண்டு மாநில முதலிடம் பிடித்தார்.  புள்ளியியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டு  1982 ஆம் ஆண்டு புள்ளியியல் இளங்கலை (B.Stat.) பட்டம் பெற்றார்.  1984 ஆம் ஆண்டு புள்ளியியல் முதுகலைப் பட்டப்படிப்பை (M.Stat.) முடித்தார்.

அரசியல் அதிகாரம் நாட்டின் மிகப்பெருமளவிலான மக்களுக்கு கிடைக்காமல், ஒரு சிறு தரப்பினர் மட்டுமே அரசியல் அதிகாரத்தை சுவைப்பதை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசியல் களத்துக்கு வந்தார் திபங்கர். பல்வேறு கட்ட போராட்ட அரசியல் பயணத்தில் 1998 இல் இருந்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Tags: