அடங்க மறுக்கும் இஸ்ரேல்! 

ச.அருணாசலம்

ண்மையில் டிரம்ப் யார்? உலகில் போர் கூடாது என உக்ரைனையும், இஸ்ரேலையும் பார்த்து எச்சரிக்கை செய்து ‘அமைதியின் நாயகன்’ என பெயர் பெற்றவரா? அல்லது  ”கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன்” என்றவரா? யேமன் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து, அப்பாவி மக்களைக் கொன்றொழித்த அடாவடிப் பேர் வழியா?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற நாளான ஜனவரி 20 இல் டிரம்ப் விரும்பிய படியே- ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

மீண்டும் அமெரிக்காவை உன்னதமாக்குவோம் (Make America Great Again) என முழங்கி ஆட்சியை பிடித்த டிரம்ப், அமெரிக்கா தேவையற்ற போர்களில் சிக்கி பலமிழப்பதை தவிர்த்து, அமெரிக்க பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அமெரிக்காவின் கையாளாக (‘ப்ராக்சியாக’ – proxy) உக்ரைன் இருந்தாலும் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திலிருந்து அமெரிக்காவை கழட்டிக் கொள்ள டிரம்ப் எடுத்த முயற்சிகள் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், அதே அளவு அக்கறையை காசாவில் இஸ்ரேல் நடத்தும் மனிதப் படுகொலையை (genocide) நிறுத்துவதிலும் காட்டினார். இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவின் எதிர்ப்பை புறந்தள்ளி போர் நிறுத்தத்தை கொண்டு வந்தார்.

ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்ததும், தான் சிறைபிடித்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிப்பதும், உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க இடமுமின்றி குண்டுமழையால் அல்லலுற்ற மக்களுக்கு “சர்வதேச மனிதாபிமான உதவிகள்” கிடைப்பதும் சாத்தியமாயிற்று.

அமைதியின் நாயகனாக டிரம்ப்பை முன்னிறுத்த அவரது ஆதரவாளர்கள் முயன்ற வேளையில், டிரம்ப்பின் இத்தகைய நகர்வுகளுக்கு எதிராக ஐரோப்பியர்களும், அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களும் , அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் ஆதரவு ஜியோனிச கூட்டமும் , பெண்டகன், சி.ஐ.ஏ போன்றவற்றிலுள்ள போர் விரும்பிகளும் தங்களது “வேலைகளை” காட்ட தொடங்கினர்.

போர் நிறுத்தம் ஏற்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஒருநாள் கூட அதனுடைய சரத்துகளை மதிக்காமல் காசாவிலும் லெபனான் எல்லை பகுதியிலும் ஏன் சிரியாவிலும் இஸ்ரேல் துப்பாக்கி சூடு நடத்தியது, தினமும் உயிர்பலி வாங்கியது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள நெத்தன்யாகு பெரு முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் முதன் முதலாக பயங்கரவாதிகள் என அமெரிக்காவால் அறிவுறுத்தப்பட்ட ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரதிநிதி ஆடம் போலர் (Adam Boehler) பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இஸ்ரேல் நெத்தன்யாகுவின்  எதிர்ப்பையும் மீறி, இந்த சந்திப்பும் பேச்சு வார்த்தைகளும் நடந்தன. இதனை எதிர்த்து இஸ்ரேல் கூச்சலிட்ட போது ஆடம் போலர், “அமெரிக்கா ஒன்றும் இஸ்ரேலின் ஏஜெண்ட் அல்ல” என காட்டமாக பதிலளித்தார்.

இந்த சமயத்தில் (மார்ச் 02, 2025) காசா பகுதிக்கு ஐ.நாவும் சர்வதேச அமைப்புகளும் அளித்த உதவிகளை – அதை கொணர்ந்த டிரக்குகளை – காசாவிற்குள் நுழையவிடாமல், இஸ்ரேல் இராணுவம் தடை போட்டது. மருந்து மாத்திரை மற்றும் சுகாதார வசதிகள், குடியிருக்க கூடாரங்கள், உணவு பொருட்கள் ஆகிய அனைத்து உதவிகளுக்கும் தடை போட்ட இஸ்ரேல், இறுதியில் தண்ணீரையும், மின் வினியோகத்தையும் தடை செய்தது. காசா மக்களை முற்றுகை மூலம் பட்டினி போட்டு கொன்றது.

இஸ்ரேலின் இத்தகைய கொடுஞ்செயலை உலக நாடுகளும் மக்களும் கண்டித்தனர், யேமன் ஆட்சியாளர்களான ஹூதி  (Houthis) அமைப்பு (அன்சார் அல்லா, Ansar Allah), பலஸ்தீன மக்களை பட்டினி போட்டுக் கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்ததோடன்றி, மார்ச் 07 அன்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. அந்த எச்சரிக்கையில் அடுத்த நான்கு நாட்களுக்குள் இஸ்ரேல் இந்த தடையை நீக்காவிட்டால், மனிதநேயத்தை முன்னிட்டு இஸ்ரேல் வர்த்தக கப்பல்களை யேமன் தாக்கும் என அறிவித்தது. ஆனால், நெத்தன்யாகு காசா பகுதி மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறார்.

இஸ்ரேலின் அடாவடிதனத்திற்கு டிரம்ப் முடிவு கட்டுவார் என அவரது ஆதரவாளர்களும், டிரம்பின் புதிய அபிமானிகளும் எதிர்பார்த்து இருக்கையில் , டிரம்ப் யாரும் எதிர்பாராத செயலை செய்தார். மார்ச் 15 மற்றும் 16 இல் அமெரிக்க விமானங்கள் யேமன் நாட்டின் மீது குண்டுவீசி தாக்குதலை நடத்தியது. இதில் 53 பேர் மரணமடைந்தனர் , அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்களும் பெண்டிரும் தான் என தகவல்கள் கூறுகின்றன.

யேமன், அமெரிக்க கூட்டாளியான இஸ்ரேலின் கப்பல்களை தாக்குவதை தடுக்கவே, இந்த குண்டுகள் வீசப்பட்டன, ஹூதி அமைப்புகளின் தாக்குந்திறனை ஒழிக்கும் வரையில் இத்தகைய தாக்குதல் தொடரும்’ என டிரம்ப்பும், அவரது வெளியுறவு செயலர் பீற் ஹெக்சத் (Pete Hegseth) மற்றும் உள்துறை செயலர்  மார்க்கோ  ரூபியோவும் (Marco Rubio) கூறினர்.

யேமன் ஆட்சியாளர்களான ஹூதி அமைப்பு இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவ் மீதும் செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள யு. எஸ். எஸ் ஹாரி ட்ரூமன் என்ற அமெரிக்க விமானந்தாக்கி கப்பல் படை மீதும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

டிரம்ப் அரசின் நடவடிக்கைகளில் ஏன் இந்த தடுமாற்றம் ஏற்பட்டது? போர் நிறுத்தத்தை இரண்டாம் கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியை அமெரிக்கா கைவிட்டது ஏன்?

காசா மீது இஸ்ரேல் ஏற்படுத்திய முற்றுகைப்போரை விலக்க நெத்தன்யாகுவை வற்புறுத்தாமல், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவேன் என்ற தனது நோக்கத்தை மறந்துவிட்டாரா? அல்லது எங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ள ஜியோனிச லொபியைக் (Zionist lobby) கண்டு அஞ்சி விட்டாரா? இஸ்ரேல் காசாவில் ‘இனப்படுகொலையை’ நிறுத்த வேண்டும் என எச்சரித்த யேமன் நாட்டின் மீது  டிரம்ப் குண்டுவீச உத்தரவிட்டதேன்?

ஹூதியை அமெரிக்காவால் அழித்தொழிக்க முடியுமா? இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? ஈரான் அரசிற்கு ‘ கடிதங்கள்’ எழுதி அனுப்பிவிட்டு, ஈரான் பதில் கூறுமுன்பாகவே அவர்கள் மீது பழி போட டிரம்ப முயற்சிப்பதேன்? என பல கேள்விகள் எழுகின்றன.

இஸ்ரேலின் இன்றைய நிலை

காலங்காலமாக அவதியுற்று வந்த யூதர்களுக்கான சொர்க்க பூமியாக ( Safe haven for the long suffering Jews) வருணிக்கப்பட்டு 1948 இல் பலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் மேற்கத்திய வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இன்று யூதர்களின் சொர்க்க பூமியாக உள்ளதா? அல்லது சதா காலமும் சைரன் சத்தத்தில் ஒளிந்து கொள்ளும் பதுங்கு குழியாக உள்ளதா?

இஸ்ரேலிய யூதர்களுக்கு பலஸ்தீனர்களை கண்டால் ஆகாது, (ஆனால் அவர்களது நிலம் மட்டும் வேண்டும்) அண்டை நாடுகளான எகிப்து, சிரியா , ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளுடன் பகை (அவர்கள் பலம்வாய்ந்த நாடாக மாறக்கூடாது) இதற்கும் மேலாக பலஸ்தீனர்களை ஆடுமாடுகள் போல் அடித்துவிரட்டி, காசா பகுதியில் அடைத்து முற்றுகையிட்டுள்ளது. மேற்கு கரையில் உள்ள பலஸ்தீனர்களை நாய்களைவிட கேவலமாக நடத்துவது, உரிமைகளை மறுப்பது, உடமைகளை அழிப்பது எதிர்த்து பார்த்தாலே சுடுவது போன்ற இனபேதத்தை (apartheid state) கொள்கைவழியாக இஸ்ரேல் நாடு கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜியோனிசம் என்ற யூதமத பேரினவாதத்தில் ஊறியுள்ள இஸ்ரேலின் ஆட்சியாளர்கள் மீது யூத மக்களுக்கே வெறுப்பும், ஆயாசமும், சலிப்பும் ஏற்பட்டுள்ளது.

நெதன்யாகுவை எதிர்த்து போராடும் இஸ்ரேலிய மக்கள்

இஸ்ரேல் குடிமக்களில் 90% அதிகமானோர் இரட்டை குடியுரிமை உடையவர்கள், அவர்களிடம் இரண்டு கடவுச் சீட்டுக்கள் (passport) இருக்கும். ஒன்று இஸ்ரேல் அரசு வழங்கிய பாஸ்போர்ட், மற்றொன்று அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டின் பாஸ்போர்ட்.

சதாசர்வகாலமும் சண்டை போடும் இஸ்ரேல் நாட்டில், யூத இன மக்களுக்கு கூட நிம்மதியும், அமைதியும் எட்டாக்கனியாக இன்றுள்ளது! கொள்கைகளின் ஏற்பட்ட வெறுப்பை மீறி, ஆட்சியாளர்கள் இஸ்ரேல் சமுதாயத்தில் எழுத்துரிமை, பேச்சுரிமையை மறுத்து கட்டுப்பாடுகள் பல விதிப்பதாலும் , கட்டாய இராணுவ பணிச் சுமையாலும் மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். நெத்தன்யாகுவின் ஊழலும், ஊதாரி தனமும், ஒருபுறமிருக்க இஸ்ரேலிய நீதித்துறை (சுதந்திரத்தின் ) மீது அவர் தொடுத்த தாக்குதல்களும் மக்களிடையே  மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதல்கள் ஏற்படுகின்றன, பணயக் கைதிகளை போரின் மூலம் விடுவிக்க முடியாமல் இறுதியில் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தையின் மூலமே பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் பிடித்து வைத்திருந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பரிமாற்றத்திற்கு நாங்கள் தயார் என ஹமாஸ் 2023 ஒக்ரோபர் மாத்த்திலேயே அறிவித்த போது, அதற்கு உடன்படாமல் போரை நடத்தி இனப்படுகொலை நடத்தி 70,000 அப்பாவி மக்களை பலிகடாவாக்கிய இஸ்ரேலின்- நெத்தன்யாகுவின்- செயல் இஸ்ரேல் மக்களை நெத்தன்யாகுவிற்கெதிராக திருப்பி உள்ளது. இதனால் இஸ்ரேலிய பொருளாதாரமே மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ளவே நெத்தன்யாகு  சண்டையை தொடர்கிறார் என மக்களுடன் சேர்ந்து அதிகார வர்க்கமும் எண்ணத் தொடங்கியுள்ளது.

இதன்வெளிப்பாடாகவே, இஸ்ரேல் பாதுகாப்பு காவல் அமைப்பான ஷின் பெட்டின் தலைவர் ரொனேன் பார் (Chief of Shin Bet Mr. Ronen Bar) என்பவரை நெத்தன்யாகு பதவி விலக உத்தரவிட்ட து நடந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை இரத்து செய்துள்ளது. தன் பதவியை காப்பாற்ற ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க, போர் தொடர்ந்து நடத்த வேண்டிய நிலையில் நெத்தன்யாகு ‘புலிவால் பிடித்த நாயர்‘ கதையாக வலம் வருகிறார் .

அமெரிக்க ஜியோனிச லொபியும், ஆயுத முதலாளிகளும் தங்களது செல்வாக்கின் மூலமாக , டிரம்ப்பை எச்சரித்து அழுத்தங்கொடுத்து தங்கள் வழிக்கு இழுத்துள்ளதாக தெரிகிறது.

அரசியல் செல்வாக்கு போய்விடும் என்ற அச்சத்திலோ அல்லது உயிர் பயத்தாலோ அல்லது தனது டீல் மேக்கிங் திறமையில் அதிக நம்பிக்கை வைத்ததாலோ டிரம்ப் அமைதி நாயகன் என்ற தொப்பியை கழற்றிவிட்டு இஸ்ரேலின் நண்பன் என தொப்பியை மாற்றி யேமன் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.

யேமனின் ஹூதி போராளிகள்

யேமனின் ஹூதி அமைப்பு ஆப்கானிஸ்தான் தாலிபான்களை போன்றவர்களல்ல, அவர்களைவிட புத்திக் கூர்மையும், முற்போக்கு எண்ணமும், மனிதாபிமானமும், வளமும் தொழில் நுட்பமும் நிறைந்தவர்கள். அமெரிக்கா, சவூதி அரேபியா, யு.ஏ.இ, எகிப்து இஸ்ரேல் ஆகிய அனைத்து நாட்டினரின் ஒருமித்த தாக்குதலை 2015 முதல் எதிர்கொண்டு வெற்றியும் அடைந்துள்ள அமைப்பு அது. அவர்களை அமெரிக்க இராணுவமும் கடற்படையும் ஒன்றும் செய்ய இயலாது, ஒருபோதும் வெல்ல முடியாது. மாறாக மத்திய தரைக்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்க கப்பல்கள் யேமன் நாட்டின் ஏவுகணைகளின் தாக்குதல் ரேஞ்சிற்கு அப்பால் நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அவர்களால் இஸ்ரேலையோ அல்லது செங்கடல் வழித்தடத்தையோ காப்பாற்றுவது கடினமான பணியாகும். தப்பி தவறி யேமன் ஏவுகணையால் அமெரிக்க கப்பல் தாக்கப்பட்டால் விமானந்தாக்கி கப்பலின் ஓடுதளம் பழுதடைந்தால் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் தலைக்குனிவாக அது மாறும். அதற்குப்பின் யுத்தம் மூளுவதை யாராலும் தடுக்க முடியாது.

அமைதி மேற்காசியாவில் நிலவ வேண்டுமெனில் இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் சமாதானமாக செல்லவேண்டும். உள்நாட்டில் சக மனிதர்களான, சக குடிகளான பலஸ்தீனர்களுக்கு உரிமைகளை மறுத்தால் குழப்பமும் பதட்டமும் மேலோங்கும் நான்கு திசைகளிலும் அது பரவும் .

ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது போரல்ல, பேச்சுவார்த்தையும் விட்டுக்கொடுத்தலுமே! அது இரட்டை ஆட்சி முறையோ அல்லது ஒற்றை ஆட்சிமுறையோ (Two State Solution or One State Solution) அதற்கான முதல்படி பலஸ்தீனர்களின் உரிமைகளை மதிப்பதும் அங்கீகரிப்பதும்தான். வந்தேறிகளான யூதர்களை போலவே பலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலை உள்ளடக்கிய பலஸ்தீனத்தில் முழு உரிமை உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உலக நாடுகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு!

Tags: