எங்கு கொண்டுபோய் நிறுத்தும் இந்த இணையதள வணிகப்போட்டி?- பகுதி 2
–பாஸ்கர் செல்வராஜ்

டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் எல்லோரின் மீதும் வரிவிதிப்பேன் என்று மிரட்டி அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவது தினசரி செய்தி ஆகியிருக்கிறது. அவரைப்போய் நமது தலைமை அமைச்சர் மோடி சந்தித்து வந்தபிறகு இருநாடுகளுக்கு இடையிலான வணிகப் பேச்சுவார்த்தைக் குறித்த செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கிறது.
அதில் முக்கியமானது,
1. மஸ்கின் செயற்கைக்கோள்வழி இணையத்தை இந்தியாவில் சந்தைப்படுத்த அனுமதிப்பது
2. அமெரிக்க அமேசான், வால்மார்ட் இணையதள வணிக நிறுவனங்கள் மொத்தமாகச் சரக்கை வாங்கி வைத்து விற்க அனுமதிப்பது
3. இந்தியாவில் இறக்குமதியாகும் அமெரிக்க விவசாயப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரியைக் குறைக்க அல்லது நீக்கக் கோருவது. இணையதள வணிகத்துடன் தொடர்புடைய இம்மூன்றும் நேரடியாக நம்மைப் பெரிதும் பாதிக்கக்கூடியது.
இணையதள வணிக மாற்றம்
முன்பு பொருளை உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்கள் விளம்பரம் செய்து நமக்கு அறிமுகம் செய்து மொத்த விற்பனையாளர் வழியாகச் சிறு கடைகளுக்குப் பொருளை விற்று அவர்களிடம் நாம் சென்று பணத்தைக் கொடுத்து வாங்கி வந்த நடைமுறையைப் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கோரோனாவைப் பயன்படுத்தி மாற்றி அமைக்கப்பட்டது.
பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் மொத்தமாகக் குறைந்த விலையில் வாங்கும் இந்த இணையதளப் பெருநிறுவனங்கள் மெய்நிகர் இணையவெளியில் கடையைத் திறந்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து ஆளில்லா பணப்பரிவர்த்தனை, மொத்த சரக்கு சேமிப்பகங்கள், சரக்குப் போக்குவரத்து, குறைகூலி பொருள் சேர்ப்பாளர்கள் மூலம் செலவைக் குறைத்து நம்மிடம் அதிக விலையில் பொருளை விற்று பெருலாபம் பார்க்கின்றன.

இவர்கள் மொத்தமாக வாங்கி வைப்பதன் மூலமும் மொத்தமாக ஓரிருவரே விற்பதன் மூலமும் விலையை வேகமாக ஏற்றி இறக்கி இலாபத்தைக் கூட்டுவதால் நாட்டில் விலைவாசி தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. இவர்களிடம் சிறுகுறு உற்பத்தியாளர்களும் வணிகர்களும் தொழிலையும் சந்தையையும் இழந்து ஒருசில கோடிகளில் இருந்து ஒருசில இலட்சம் பேர் என்பதாகச் சுருங்கி வருகிறார்கள்.
முன்பு வெறும் கையுடன் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் இப்போது இணையம், திறன்பேசி, இருசக்கர வண்டி ஆகியவற்றை வாங்கிக்கொண்டு இவர்களிடம் வேலைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. வாடிக்கையாளர் மாதம்தோறும் இணையச் செலவு, விலையுயர்ந்த திறன்பேசிக்குச் செலவுசெய்ய வேண்டி வருகிறது. அதேசமயம் குறைகூலி மற்றும் விலைவாசி உயர்வினால் மக்களின் உண்மையான வருமானம் குறைந்துகொண்டே வருகிறது.
மூன்று இணையதள மாதிரிகள்
இப்படி உற்பத்தியாளர்கள் தொழிலையும் தொழிலாளர்கள் வருமானத்தையும் இழந்து செலவுகூடி வேகமாக சேமிப்பை இழந்து கடனில் வீழ்கின்றனர். இவர்களின் இழப்பில் வயிறு வளர்க்கும் பெருநிறுவனங்களின் இலாபம் பெருகி அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்தி அந்நிறுவன உரிமையாளர்களை உலகப் பணக்காரர்கள் ஆக்குகிறது. இது இணையதள வணிகம் தோன்றி செழித்த அமெரிக்காவின் இன்றைய நிலையாக இருக்கிறது.
அமெரிக்கர்களைப் போலவே இணையதள வணிகத்தை அறிமுகம் செய்த சீனாவிலோ உற்பத்தியாளர்கள் பெருகி போட்டி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைகிறது. இரண்டு மாதிரிகளுக்கும் இடையிலான வேறுபாடு இணையதள பெருநிறுவனங்கள் வாங்கி வைத்துக்கொண்டு விற்க அமெரிக்க மாதிரியில் அனுமதி உண்டு; சீனாவில் அனுமதி இல்லை.
அங்கே இணையதளப் பெருநிறுவனங்கள் பொருள் உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தவும் பணபரிவர்த்தனை செய்யவும் சரக்கைக் கொண்டு சென்று வாடிக்கையாளரிடம் சேர்க்கவுமான சேவையை வழங்கி அதற்கான கட்டணத்தை அளவிட மட்டுமே அனுமதி. அது உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தும் செலவைக் குறைத்து சந்தைப்படுத்தும் பரப்பை அதிகரித்து உற்பத்தியாளர்களுக்கு இடையில் போட்டியை அதிகமாக்கி உற்பத்தித் திறனைப் பெருக்கி பொருள்களின் விலையை அங்கே விழவைத்திருக்கிறது.
அந்தத் தரவுகளைக் கைக்கொண்டு செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை வளர்த்தெடுத்த அலிபாபாவின் நிறுவனம் வாங்கும் வாய்ப்புள்ள வாடிக்கையாளருக்கும் திறன்வாய்ந்த உற்பத்தியாளருக்கும் கடன் கொடுத்து இருவரையும் தனது காலடியில் விழவைக்கும் திசையில் நகர்ந்த போது கடைசி நிமிடத்தில் அதனைத் தடுத்து அந்தத் தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் சனநாயகமாக்கி சீனா தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது.

இந்த இருவரில் இருந்தும் வேறுபட்டு உள்ளூர் இணையதள நிறுவனங்களான ஜியோ, டாட்டா நிறுவனங்கள் வாங்கி வைத்துக்கொண்டு விற்க அனுமதி வெளிநாட்டு நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு என்று ஒன்றியம் இரண்டும் கலந்த கலவை மாதிரியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவரின் நிறுவனம் கொழிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
தெருவில் நிறுத்துவதுவதில்தான் முடியும்!
சொந்த ஜியோ இணையம், இணையதள வணிகம், அந்தத் தரவுகள் வழியாக அதிகம் விற்கும் பொருள்களைக் கண்டறிந்து தானே உற்பத்தி செய்து விற்பது என ஜியோ பெருலாபம் ஈட்டிக் கொழுக்கிறது. அமேசான் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு அதற்கு ஆதரவாக நடந்ததாக அதன்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மறைமுகமான சட்ட விதிகளை மீறி போட்டியில் நின்று இலாபத்தைப் பெருக்கும் முயற்சி அது.
இப்போது சட்டப்பூர்வமாக எங்களின் சொந்த இணையம், சொந்த உற்பத்திப் பொருள்கள், இணையதள வணிகம் அதன் வழியாகப் பெருகும் தரவுகளைக் கைக்கொள்ள ஜியோவுக்கு இணையாக எங்களுக்கும் அனுமதி கொடு என்று அவர்களின் அரசின் வழியாக நெருக்குகிறார்கள்.
இது இந்தியாவில் ஒன்றியத்தின் மேற்பார்வையோ கட்டுப்பாடோ இன்றி அமெரிக்கர்களின் பொருளாதார நடவடிக்கைக்கும் அதற்கான அரசியலைச் செய்வதற்குமான வழியைத் திறந்துவிடும் என்பதால் உங்களின் இணையத்தை எங்களின் தகவல்தொடர்பு நிறுவனங்கள் வழியாகச் சந்தைப்படுத்த அனுமதிக்கிறோம் என்று அந்தத் தரவுகளை இருவருக்கும் பொதுவாகச் சனநாயகப்படுத்தி கட்டுப்பாடற்ற அரசியலுக்கான கருத்தியலைக் கட்டமைக்கும் வாய்ப்பை மட்டுப்படுத்த எண்ணுகிறது ஒன்றியம்.
இந்த முயற்சியில் எவ்வளவு தூரம் வெற்றிபெறுவார்கள் என்று நம்மால் சொல்லமுடியாது. ஆனால் இந்தப் போட்டி ஜியோவின் இணையம், இணையதள வணிக ஏகபோகத்தில் நிச்சயம் உடைப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் அரசியல் கருத்தைக் கட்டமைப்பதில் அமெரிக்கர்களின் வலிமை அதிகரிக்கும். மாற்று அரசியல் செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது கூடுதல் முக்கியத்துவமும் பேரவலிமையைக் கூட்டும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தலாம்.

ஆனால் அப்படி கிடைக்கும் அரசியல் வெளியை அவர்களுக்குச் சாதகமான பொருளாதார முடிவுகளை எடுக்கவே அனுமதிப்பார்கள். அது இந்த இணையதள வணிகத்தினால் ஏற்பட்டு இருக்கும் அடிப்படையான பொருளாதார நெருக்கடியை இன்னும் கூட்டவே செய்யும். இயந்திரமயமாக்கப்பட்ட அமெரிக்க வேளாண் பொருள்களின் வரவு இன்னும் திறன்குறைந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தும் இந்திய விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்து சந்தையில் இருந்து வெளியேற்றும். இப்போது குற்றுயிரும் குலையுயிருமாக வாழும் அவர்களைத் தூக்கில் தொங்க வைக்கும்.
தற்போது காதிலும் கழுத்திலும் உள்ளதை அடமானம் வைத்து வாழும் மக்களை அடுத்து நிலத்தை அடமானம் வைப்பது அல்லது விற்று வாழ்வதை நோக்கி நகர்த்தும். அது ஒருசிலரிடம் நிலம் குவிவதிலும் சொந்த நிலத்தில் விவசாயக் கூலிகளாக சிறுகுறு விவசாயிகள் மாறுவதிலும்தான் முடியும். அது இப்போது பாதி பாட்டாளிகள் பாதி விவசாயிகள், விவசாயக் கூலிகள் என்று இருக்கும் சூழலை மாற்றி பெரும்பாலான மக்களை இழக்க ஏதுமற்ற பாட்டாளிகளாக மாற்றி தெருவில்தான் கொண்டுபோய் நிறுத்தும்.
தமிழகத்தின் நிலை வேறுபட்டதா?
தமிழ்நாடு இப்போதைய இந்தியப் பொருளாதாரச் சூழலிலும் எதிர்கால ஏதுமற்ற ஏதிலிகளாக மாறும் சூழலிலும் மாறுபட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. மொத்த வருமானத்தை மக்கட்தொகையால் வகுக்கக் கிடைக்கும் சராசரி தனிநபர் வருமானத்திலும், சாதி வேறுபாடு இன்றி எல்லா மட்டத்திலும் உள்ள தனிநபர்களின் நுகர்விலும் உயர்ந்து நிற்பதாகத் தமிழ்நாடு மார்தட்டிக் கொள்கிறது.
ஆனால் எதாவது ஒரு ஒடுக்கப்பட்ட அல்லது ஆதிக்கசாதியினர் வசிக்கும் தெரு, ஊர், சேரி, கிராம, நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டி கடன் இருக்கிறதா என்று கேட்டால் எத்தனைக் குடும்பங்கள் கடன் இல்லை என்று சொல்லும் நிலை இருக்கிறது. அதனை மறுக்கும் தரவு ஏதேனும் இருக்கிறதா?
இப்படி வருங்கலாத்தில் சம்பாதிக்கப் போகும் வருவாயை இப்போதே கடனாகப் பெற்று நுகரும் தமிழர்களில் எத்தனை பேருக்கு இந்தக் கடனைத் திரும்ப செலுத்தும் வாய்ப்புள்ள உறுதியான வருமானம் இருக்கிறது. அப்படியான உறுதியற்ற வருமான இழப்பினால்தானே நகையை அடகுவைக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள். நாட்டில் இருபதாயிரத்துக்கும் மேலாக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் வெறும் பத்து இருபது விழுக்காடு. இதைவிட அதிகமான விழுக்காடு அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா?

இந்தியச் சராசரியைவிட தமிழகக் கிராமப்புற தொழிலாளரின் சம்பளம் நூறு ரூபாய் அதிகம்தான். ஆனால் கேரளாவில் அது இருமடங்காக இருக்கிறதே! மற்ற நாட்டில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் இருபது விழுக்காடு கேரளத்துக்கும் பத்து விழுக்காடு தமிழகத்துக்கும் வருகிறது என்கிறது இந்து நாளிதழ் செய்தி.
எனில் இங்கு ஏற்பட்டு இருக்கும் நுகர்வு முழுவதும் இங்கே தொழிலாளரின் வருமானம் கூடியதால் ஏற்பட்ட நுகர்வு என்று சொல்ல முடியுமா? வேகமாக மாறிகொண்டிருக்கும் உலகில் இந்த நுகர்வும் நீடித்து நிலைத்திருக்கும் அடிப்படையைக் கொண்டதா? நிச்சயமாக இல்லை. ஆகவே இந்திய மக்கள் எதிர்கொள்ளும் அதே நிலையைத்தான் தமிழர்களும் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
தமிழர்களுக்கு இது புதிதா?
இப்படி உற்பத்தியும் சந்தையும் ஒருசிலரிடம் குவிவதும் விலைவாசியால் மக்கள் அல்லலுறுவதும் தமிழகம் எதிர்கொள்ளாத நிலையா என்று கேட்டால் அதுவும் நிச்சயமாக இல்லை. எழுபதுகளுக்கு முன்பு நிலம் ஒரு சில நிலவுடைமையாளர்களிடமும் அதற்கான சந்தை ஒருசிலரிடமும் குவிந்து ஏற்பட்ட விலைவாசி உயர்வும் பஞ்சமும் கொந்தளிப்பான சூழலும் எல்லோரும் அறிந்த வரலாறு.
தமிழ்நாட்டில் அதனை “ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம் ரூபாய்க்கு ஒரு படி அரிசி நிச்சயம்” என்று தேர்தல் அரசியலாக அண்ணாவின் தலைமையிலான திமுக எதிர்கொண்டு ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. அன்றைய இருதுருவ உலகப் போட்டியில் சோவியத்தின் பக்கம் சாய்ந்த பார்ப்பனிய முதலாளிகள் நிலவுடைமைகளைப் பலிகொடுத்து தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவினார்கள். மாநில உரிமைகளைப் பறித்தார்கள்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கலைஞரின் தலைமையிலான அரசு எதிர்த்து நின்றது. விவசாயிகள் பக்கம் நின்று அன்றைய சூழலை மிகக் சரியாகப் பயன்படுத்திக் நிலச் சீர்த்திருத்தத்தைச் சட்டபூர்வ வழிகளில் செயல்படுத்தி நிலவுடைமைகளின் ஆதிக்கத்தை உடைத்தது. அத்தோடு நில்லாமல் உணவுக் கழகத்தை நிறுவி அரசே மொத்தக் கொள்முதலாளராகவும் நியாய விலைக்கடைகளை நிறுவி மொத்த விற்பனையாளராகவும் மாறி மிகச்சரியான தீர்வை முன்னெடுத்து அந்தச் சூழலை மாற்றியது.
இதனுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட பசுமை புரட்சி உற்பத்தியைப் பெருக்கி பஞ்சத்தைப் போக்கி காலம் கடந்தாலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற முழக்கத்தை எட்ட உதவியது. இது ஒடுக்கபட்ட மக்களையும் விவசாயக் கூலிகளையும் தன்னுடன் பிணைத்து வைத்திருந்த கிராமச் சாதியப் பொருளாதாரத்தில் இருந்து விடுவித்து தொழிற்துறைக்கான தொழிலாளர்களாக மாற்றியது.
இதன் நிறைகுறைகள் பாதிக்கப்பட்ட நிலவுடைமைகள் நடிகரின் கவர்ச்சியின் பின்னால் நின்று திமுகவின் காலைவாரி முற்போக்கு அரசியலைப் பின்னோக்கி இழுத்ததை எல்லாம் தாண்டி தொழிற்துறை வளர்ச்சிக்கு ஊன்றப்பட்ட அந்த விதை தொண்ணூறுகளில் பார்ப்பனிய முதலாளிகளின் ஆதிக்கம் ஏகாதிபத்தியத்தால் உடைக்கப்பட்ட போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்து மரமானது.
இப்போதைய பண்பு மாற்றம்
அந்த வளர்ச்சியில் மயங்கி தனது மாநில சுயாட்சி முழக்கத்தை மறந்ததைப் போலவே ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியத்தையும் மறந்தது திராவிட அரசியல். விவசாய உற்பத்தித்திறனைப் பெருக்கி தானிய உற்பத்தி, எண்ணெய் வித்துக்கள், மாமிச உற்பத்தியாய் ஊக்குவித்து உணவு உற்பத்தியில் தற்சார்பை எட்டுவதை நோக்கிச் செலுத்தாமல் பணம் கொழிக்கும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியில் தமிழ்நாடு முழுகவனம் செலுத்தியது.
இப்போது அவர்கள் மீண்டும் ஏகாதிபத்தியத்துடன் ஒன்றுசேர்ந்து கொண்டு ஒட்டுமொத்த உற்பத்தியையும் இப்போது தங்களிடம் குவித்துக் கொண்டு விட்டார்கள். கொஞ்சநஞ்சம் இருந்த மாநில உரிமைகளையும் பிடுங்கி ஒருசிலருக்கான சந்தையாக இந்தியாவை மாற்றி அவர்களுக்கு மட்டுமான சனநாயகமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு திராவிட இயக்கம் போராடி உருவாக்கிய சிறுகுறு விவசாயிகள், வணிகர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என அத்தனை பேரையும் சுரண்டி கடனாளியாக்கி அதன் ஒட்டுமொத்த அடித்தளத்தையும் உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கட்டமைத்த திராவிட அரசியலின் அடித்தளத்தை அது இழந்து கொண்டிருக்கிறது. இவர்களைக் காப்பதன் மூலமே இந்த அரசியல் நிலைத்திருக்க முடியும் என்ற நிலையை நோக்கி நகர்கிறது.

இன்றைய சூழலும் அன்று போலவே உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து கிடக்கிறது. அன்று இருதுருவமாகப் பிரிந்திருந்த உலகம் இன்று பலதுருவமாக உடைந்து கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் செல்வது என்று பார்ப்பனியம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் அதனை எங்கும் நகரவிடாமல் தனது பெட்டிக்குள் வைத்து முடக்கிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் எழுபதுகளுக்கு முந்தைய சூழலை எட்டிக் கொண்டிருக்கிறோம். அன்றைக்கும் இன்றைக்குமான வேறுபாடு அன்று சொந்த தேவைக்கும் சந்தை தேவைக்கும் நடந்த உற்பத்தி இன்று முற்றுமுழுதான சந்தைக்கான சரக்கு உற்பத்தியாக பண்பு மாற்றம் அடைந்திருக்கிறது. அதற்கு ஏற்ப பொருளாதாரம் பெருநிலவுடைமைகளின் ஆதிக்கத்தில் இருந்து பெருமுதலாளிகளின் கைகளுக்கு மாறி இருக்கிறது.
எப்படி எதிர்கொள்வது?
அதன் அடக்குமுறையைத் திமுகவும் தமிழ்நாடும் அன்று போலவே மீண்டும் சுயாட்சி முழக்கத்தை முன்வைத்து சரியாக எதிர்கொள்கிறது. ஆனால் விலைவாசி வேலைவாய்ப்புப் பிரச்சனைக்குத் தீர்வு? அன்று போலவே அரசு மொத்தக் கொள்முதலாளராகவும் விற்பனையாளராகவும் மாறுவதுதான் தீர்வு. அப்போது குவிந்து கிடந்த நிலத்தைப் பிரிக்க வேண்டி இருந்தது. இன்று சிறு தூண்டுகள்கச் சிதறிக் கிடக்கும் நிலத்தை ஒருங்கிணைத்து விவசாய உற்பத்தியை இயந்திரமயமாக்க வேண்டி இருக்கிறது.
ஊருக்கு ஊர் திறந்த நியாயவிலைக் கடைகளை சிறுகுறு உற்பத்தியாளர்களின் சரக்கை சேமித்து கொண்டுசென்று சந்தைப்படுத்தும் கூடங்களாக வேகமாக மாற்றவேண்டி இருக்கிறது. இவற்றை எல்லாம் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கண்காணித்து இணைத்து இயக்கும் இணைய இணையதள சேவையை அரசு செய்துகொடுக்க வேண்டி இருக்கிறது.
தற்போது அரசு அறிவித்து செய்து கொண்டிருக்கும் இணையதள சேவை, பொது விவசாய இயந்திர திட்டங்கள் எல்லாம் சடங்குத்தனமானமாக இருக்கிறது. இதனால் எந்தப் பலனும் இல்லை. மாறாக சூரிய மின்னாற்றல், தாவர விலங்கு கழிவுகளில் இருந்து எரிவாயு, எத்தனால், எண்ணெய் வித்துக்கள், பால், பால்பொருட்கள், இறைச்சி, காய்கறி உள்ளிட்டவற்றை உருவாக்கும் பண்ணைகளை அரசு ஆங்காங்கே நிறுவி அதனுடன் விவசாயிகளை இணைத்துக் கூட்டுப் பண்ணைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவைகளாக இவை இருக்க வேண்டும். அதற்கான மூலதனம், தொழில்நுட்பம், வங்கிகள், பணப்பரிமாற்று அமைப்புகள், தரவு சேகரிப்பு மையங்கள், சரக்குப் போக்குவரத்து, வானிலை, நீர்நிலை கண்காணிப்பு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கான கம்பிவழி மற்றும் செயற்கைக்கோள்வழி இணைய இணைப்பு இன்றியமையாதது.

அமெரிக்கர்களின் குறைவான எடைகொண்ட அதிக எண்ணிக்கையில் வேகமான இணைய இணைப்பைத் தரவல்ல தாழ்நிலை விண்வெளியில் இயங்கும் செயற்கைக்கோள் கட்டமைப்புக்குப் பதிலாக சீனர்கள் அளவில் பெரிய எண்ணிக்கையில் குறைவான நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும் உயர்மட்ட செயற்கைக்கோள் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேகமாக செயற்கைக்கோள்கள் மற்றும் எறிகணைகளை உற்பத்தி செய்து ஏவுதளத்தை வேகமாகத் தயார்செய்து மாதம் இரண்டுமுறை ஐந்து ஆறு செயற்கைக்கோள்களை ஏவும் சீனர்களைப் போல நம்மால் செய்யமுடியாது. அவர்களைப்போல உலகக் கட்டமைப்பை ஏற்படுத்தி வேகமான இணைய இணைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையும் வலிமையும் நமக்கு இல்லை.
குறைவான எண்ணிக்கையில் தமிழகத்துக்கு மட்டுமான நீடித்து நிற்கும் மிதமான தங்குதடையற்ற இணையத்தை வழங்கும் கட்டமைப்பு போதுமானது. செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இந்திய, ரசிய விண்வெளி மையங்களின் உதவியை நாடுவது, மற்ற தொழில்நுட்ப தேவைகளுக்குத் தனியாரைப் பங்களிக்க வைப்பது, கூட்டு உற்பத்திக்கு விவசாயிகளை பங்களிக்க வைப்பது என அரசு நகர வேண்டும்.
இருமட்டத்துக்கும் இடையில் அமர்ந்து கொண்டு இதன்வழியாக உருவாகும் செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் அரசின் உண்மையான பணியை ஏற்க வேண்டும். இப்போது இப்படி ஊன்றும் விதைதான் தற்போதைய சூழலை எதிர்கொண்டு மாற்றி எதிர்காலத்தில் நாம் தற்சார்புடனும் தன்னாட்சியுடனும் சுயமரியாதையுடனும் வாழ வழிவகுக்கும்.
இல்லையில்லை இது ஆகாத காரியம்; போகாத ஊருக்கு வழி என்று புறக்கணித்து விட்டு எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றிய பாசிச பா.ஜ.க என்று ஒரே பல்லவியை இந்தத் தி.மு.க அரசு பாடிக் கொண்டிருக்குமேயானால் இதைப்பாட நீங்கள் எதற்கு என்று இந்த அரசைப் புறக்கணித்து விட்டு மக்கள் இன்னொருவரை தேடிச் செல்வது தவிர்க்க முடியாதது.