பாசிசத்தை மறைத்தல்!

நளினி தனேஜா (Nalini Taneja)

சி.பி.ஐ (எம்) கட்சியும் அவர்களைப் போல சிந்திக்கும் மற்றவர்களும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பெருநிறுவன முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளால் ஆதரிக்கப்படும் மோடி ஆட்சியின் பாசிச அடித்தளங்களை உணர்ந்து தமது கண்களைத் திறப்பதற்கு முன்பு இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று காத்திருக்கின்றனர்? 

2014 முதல் சங்கப் பரிவாரங்கள் என்ன செய்திருக்கின்றன என்பது நம் கண்முன்னே தெளிவாகத் தெரிகிறது. 1980கள் மற்றும் 1990களை நாம் மறந்துவிடவில்லை; ஆனால் சி.பி.ஐ (எம்) போன்றதொரு கம்யூனிஸ்ட் கட்சி இதனால் துளியும் பாதிக்கப்படவில்லை. பாசிசக் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு சங்கப் பரிவாரங்கள் பாய்ந்து முன்னேறி வருவதை ஒப்புக்கொள்ளத் தயாராகவும் இல்லை.

மாறாக, இந்தச் செயல்களையும் கொள்கைகளையும் அவற்றின் உள்ளடக்கம் என்னவென்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வெறுமனே இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளென்றும்; உழைக்கும் மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிற, சமத்துவமின்மையை நோக்கித் தள்ளுகிற செயலென்றும்; அதிகபட்சமாக, இந்துத்துவத்தோடு உறவுகொண்ட “கோர்ப்பரேட் அதிகாரத்துவம்” என்றும் அடையாளப்படுத்துகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “தடுக்கப்படாவிட்டால்” ‘நவ-பாசிசத்திற்கு’ வழிவகுக்கக் கூடிய ஒரு நிலைமை: அதாவது, பாசிசத்திற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை உருவாக்குவதற்கு முன்பு இன்னும் நிறைய நடக்க வேண்டும் என்று அர்த்தம்.

பாசிசத் தாக்குதல்களை காண முடியவில்லையா? 

இந்த நாட்டில் பாசிச சக்திகள் பயன்படுத்தும் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் அளவு எத்தகையது என்பதைக் கோடிக் கணக்கான மக்கள் அடையாளம் கண்டு ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், அந்தக் கோடிக் கணக்கான மக்களுக்கும், பாசிச ஆட்சியை ஆதரிக்கும் இன்னும் பல கோடி மக்களுக்கும் இடையே அரசியல் களம் அணிபிரிந்து நிற்கும் சூழலில், முழுமையாக அதை மறுக்கும் நிலையை சி.பி.ஐ (எம்) மேற்கொள்கிறது. அக்கட்சியின் மத்தியக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதன் சமீபத்திய வரைவு அரசியல் தீர்மானத்தில் இந்துத்துவம், சங் பரிவாரம் மற்றும் பாசிசத்திற்கு இடையிலான தர்க்கரீதியான தொடர்பை அடையாளம் காண்பதை அது தவிர்க்கிறது.

ஒருவர் இதனால் அதிர்ச்சியடைந்ததாகவோ அல்லது ஏமாற்றமடைந்ததாகவோ கூற முடியாது, ஏனெனில் இந்த விஷயத்தில் சி.பி.ஐ (எம்) இன் திசையும் அதன் நிலைப்பாடும் சில காலமாகவே தெளிவாகத்தான் உள்ளது. நமக்கு அதிர்ச்சியூட்டுகிற, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால், அதன் கடந்த காங்கிரஸுக்கும் இப்போது வரையிலான காலகட்டத்துக்கும் இடையிலான காலத்தை அது விவரிக்கும்போது வேண்டுமென்றே காட்டியிருக்கும் அலட்சியமும் அக்கறையின்மையும்தான். ஒரு ஆவணம் சொற்பொழிவாக மாற முடியாது, அது நிலைப்பாடுகளின் அறிக்கையாக மட்டுமே இருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான், ஆனால் இந்த ஆவணத்தில் எந்த இடத்திலும் இந்த ஆட்சியின் செயல்களால் மக்கள் படும் துன்பத்தின் அளவு, முஸ்லிம்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் அவலங்கள், தாக்குதல்கள் மற்றும் கும்பல் படுகொலைகள், அவர்களுக்கிருக்கும் அச்சுறுத்தல்கள், என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை மறுப்பு ஆபத்து, தடுப்பு முகாம்கள், அல்லது பழங்குடியினர் மற்றும் சிறிய தேசிய இனங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர், சுருக்கமாகச் சொன்னால், நாட்டின் சில பகுதிகளில் நிலவும் பாசிசச் சூழலைப் பற்றியோ, சில சமூகக் குழுக்கள் எதிர்கொண்டிருக்கும் பாசிசத் தாக்குதல்களைப் பற்றியோ இந்த ஆவணத்தில் நாம் எங்குமே பார்க்க முடியவில்லை.

வரலாற்றின் மிக இருண்ட காலம்! 

அரசியல் அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும், நீதித்துறையும், பொது சேவை நிறுவனங்களும் ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து போக வைக்கப்பட்டுள்ளன.

சமத்துவமின்மையைப் பற்றியும், வேலையின்மை பற்றிய புள்ளிவிவரங்களையும் பெருநிறுவன முதலாளித்துவமானது தனது நலனுக்காகப் பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதை சி.பி.ஐ (எம்) ஆவணம் குறிப்பிடுகிறது. ஆனால், சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகான காலகட்டத்தில் நமது வரலாற்றின் மிக இருண்ட காலம் இது என்ற முடிவை சி.பி.ஐ (எம்) ஆவணம் எட்டத் தவறிவிட்டது. மிகவும் பிற்போக்குத்தனமான, கொடூரமானதொரு அரசியல் அமைப்பால் வழிநடத்தப்படுகிற ஒரு தீய அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை சி.பி.ஐ (எம்) ஆவணம் ஒப்புக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதைத் சி.பி.ஐ (எம்) தீர்மானம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஏனெனில் பொருளாதாரக் கொள்கைகளில், பா.ஜ.கவிலிருந்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வேறுபட்டதல்ல என்றும், அது வகுப்புவாத அழுத்தத்துக்குப் பணிந்துபோகக்கூடியது என்றும் சி.பி.ஐ (எம்) தீர்மானம் கூறுகிறது.

ஆளும் ஆட்சியைப் பாசிசம் என சித்திரித்தால் சில கட்சிகளோடு கட்டாயம் கூட்டணி வைத்தாக வேண்டும். அதைத் தவிர்க்கும் மனப்பான்மையை நியாயப்படுத்துவதற்காகவே, தற்போதைய ஆட்சியைப் பாசிசமாக சித்திரிக்காமல் இருக்க முடிவு செய்திருக்கிறது.

அபத்தமான தத்துவ விளக்கங்கள்! 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற பா.ஜ.கவைவிட அதிகம் தீண்டத்தகாதவை என்ற செய்தியை சி.பி.ஐ (எம்) ஆவணம் தருகிறது. அதன் பொருள் , இந்துத்துவ சக்திகளை தனிமைப்படுத்துவதற்கு இன்னும் நேரம் வரவில்லை என்பதே ஆகும்.

தற்போதைய சூழல் என்ன, தேவை என்ன என்பதை அடிப்படையாகக்கொண்டு கூட்டணியை முடிவு செய்வதற்கு மாறாக, யாருடன் கூட்டணி இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசு குறித்த சி.பி.ஐ (எம்) கட்சியின் சித்தரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மார்க்சிய அணுகுமுறையில் எத்தகையதொரு தலைகீழ் மாற்றம்! ஐக்கிய முன்னணிகளின் வரலாற்று அனுபவம் குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. சோவியத் யூனியனுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையிலான ஐக்கிய முன்னணி, சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குவோமின்டாங்குக்கும் இடையில் ஏற்பட்ட ஐக்கிய முன்னணி சி.பி.ஐ (எம்) கட்சியின் வரலாற்று நினைவிலிருந்து தப்பிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது.

அதனால்தான், தற்போதைய ஆட்சி பாசிசமோ அல்லது நவ-பாசிசமோ இல்லை என்ற அபத்தமான தத்துவ விளக்கங்களைத் அவர்களால் தரமுடிகிறது. அவர்களைப் பொறுத்தவரை : ‘நிதி முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான, மிகவும் வெறிகொண்ட, மிகவும் ஏகாதிபத்திய தன்மைகள் கொண்ட வெளிப்படையான சர்வாதிகாரமே பாசிசம்’. இந்தியாவில் அப்படியான நிலை இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். முதலாளித்துவத்திற்கு ஒரு நெருக்கடியும் இல்லை, எனவே ஆளும் வர்க்கம் பாசிசத்தில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்? எனக் கேட்கிறார்கள். அதற்குமேல் விவாதிக்க என்ன இருக்கிறது !

வரலாற்றில் எந்தவொரு தீவிர மார்க்சியவாதியும், ஆய்வு செய்யப்படும் நிகழ்வுகள் ஒருவரின் வரையறையின் இடத்திற்கு அப்படியே பொருந்திப்போகவில்லையென்றால், பின்னர் அல்லது வேறுபட்ட சமூகச் சூழலில், அது அவசியம் வேறு ஏதாவதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியதில்லை. அந்தக் காலத்தின் குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு வரையறையைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

இன்றும் நாளையும் கடந்து போன நேற்றாக இருக்க முடியுமா? அல்லது சில கூறுகள் சேர்க்கப்பட்டதால் சில கூறுகள் இல்லாமல் போனதால் அது நேற்றை ஒத்ததாக இருக்க அதிக வாய்ப்புள்ளதா?

இன்றைய சமூக-அரசியல் நிலைமையை, அல்லது மிகவும் டெக்னிக்கலாகக் கூறுவதானால், தற்போதைய இந்திய அரசு மற்றும் அதை மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளை சித்தரிப்பதில் சி.பி.ஐ (எம்) கட்சிக்குள்ள பிரச்சினை, பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனியிலிருந்து பெறப்பட்ட ஒரு முன்-நிர்ணயிக்கப்பட்ட வரையறையை (a priori definition) அடிப்படையாக எடுத்துக் கொண்டு, அதை அப்படியே இந்திய யதார்த்தத்திற்குப் பொருத்த முயற்சிப்பதாகும்.

ஏன் இந்த ‘நிரந்தர ‘டெம்ப்ளேட்’ ? 

அதன் தலைவர்கள் பாசிசத்திற்கு தேவையான ஆறு அல்லது ஏழு அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டி, அவற்றுள் ஒன்று அல்லது இரண்டு அம்சங்கள் பாசிச இத்தாலி அல்லது நாஜி ஜெர்மனியோடு சரியாகப் பொருந்திப் போகவில்லை என்ற காரணத்தைக் கூறி இந்தியாவில் நிலவும் சூழலை விவரிக்கப் பாசிசம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது என முடிவு செய்துள்ளனர்.

கார்ல் மார்க்ஸ் தனது காலத்தில் வெவ்வேறு நாடுகளில் முதலாளித்துவத்தை ஒரே மாதிரியான பிரதிகளாகப் பார்த்தாரா? லெனின் தனது ‘அரசும் புரட்சியும்’ நூலில், ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு பல்வேறு அரசு வடிவங்களை, பல்வேறு நாடாளுமன்ற ஆட்சிகள் மற்றும் சர்வாதிகாரங்கள், அல்லது கூட்டணிகள் மற்றும் கொள்கைகளைத் தனது ஆட்சிக்குக் கருவியாகப் பயன்படுத்தும் என்று வாதிடவில்லையா? ஹாப்ஸ்பாம் தேசியவாதத்தின் பயணங்களை வெவ்வேறு காலங்களிலும் வரலாற்று சூழல்களிலும் அற்புதமாக விவரித்துக் காட்டியுள்ளார். அவ்வாறிருக்கும்போது, பாசிசத்தை உருவாக்கும் கலவை ஏன் ஒரு நிரந்தர ‘டெம்ப்ளேட்டுக்கு’ பொருந்த வேண்டும்? அல்லது, எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பிரதியாக அது ஏன் இருக்க வேண்டும்?

இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பானில் பாசிசம் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. முதலாளித்துவம் அந்தக் காலக்கட்டத்தில் பாசிச சக்திகளுடன் இணைந்துதான் செயல்பட்டது.

இந்து ராஷ்டிரம் என்னவென்று சிபிஐ எம் முக்குத் தெரியாதா?

சி.பி.ஐ (எம்) கட்சியின் விளக்கத்தின்படியே வைத்துக்கொண்டாலும்கூட, ஆளும் வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான, வெறிபிடித்த கூட்டத்தால் நாம் ஆளப்படவில்லையா? நீண்ட காலமாகத் தொடர்ந்து வாழ்ந்து செழித்து வரும் ஒரு பாசிச அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சியால் ஆளப்படுகிறோம் என்றும்; ஒருவர் அந்தப் பாசிச அமைப்பிலும் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியிலும் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய இரட்டை உறுப்பினர் முறை உள்ளது என்றும்; அவர்கள் இனவாதம், வன்முறை, பாகுபாடானக் குடியுரிமை, சிறுபான்மையினரை அழித்தல், பெண்கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளை அடிமைப்படுத்துதல் ஆகியவற்றில் பாசிஸ்டுகள் எப்படி நம்பிக்கைக் கொண்டிருந்தார்களோ அதே விதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் கூற முடியாதா? அவர்களின் சித்தாந்தி கோல்வால்கர் எழுதிய புத்தகத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட ‘நாம் மற்றும் நமது தேசியத்தன்மை வரையறுக்கப்பட்டது’ என்ற நிலைப்பாட்டை அவர்கள் ஆதரிக்கவில்லையா? காந்தியின் படுகொலையை அவர்கள் கொண்டாடவில்லையா? சி.பி.ஐ (எம்) கட்சியின் காலஞ்சென்ற பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாராளுமன்றத்தில் கூறியது போல, காந்தியை சாவர்க்கரால் அவர்கள் பதிலீடு செய்ய முயற்சிக்கவில்லையா ?

இந்து ராஷ்டிரத்தின் அரசியல், பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனியை முன்மாதிரியாகக் கொண்டதில்லையா? இந்து ராஷ்டிரம் என்றால் என்னவென்று சி.பி.ஐ (எம்) முக்குத் தெரியாதா? அது காங்கிரஸ் கட்சியின் கருத்தியலுடைய வெறும் தொடர்ச்சி மட்டும்தானா? பெருநிறுவன சர்வாதிகாரம் என்பது அதற்குப் போதுமான வரையறைதானா? ஒருவர் பாசிசத்தை எதிர்கொள்ள விரும்பவில்லையென்றால், இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் சொல்லிவிட்டுப் போய்விடலாம் . இன்றைய “தேசிய” நிலைமையை அடையாளம் காண்பதில் இருக்கும் பிரச்சினை இதுதான்.

நன்றி: – CPM Invisibilising Fascism | Nalini Taneja
தமிழாக்கம் : ரவிக்குமார்

கட்டுரையாளார் குறிப்பு :

நளினி தனேஜா : இடதுசாரி வரலாற்று ஆய்வாளர், அரசியல் செயற்பாட்டாளர்.

Tags: