தமிழ்நாட்டு தேர்தல் களமும், கருத்தியல் முரணும்: நூறாண்டுகால வரலாறு கூறுவது என்ன?
–ராஜன் குறை

“அரசியலுக்கு யார் வேண்டுமானால் வரலாம்!”
“மக்கள் ஏற்றுக்கொண்டால் யார் வேண்டுமானால் முதல்வராகலாம்!”
“அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது!”
“கொள்கை வேறு! கூட்டணி வேறு!”
“தேர்தலில் வெற்றி பெற யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம்!”
இவையெல்லாம் இன்று நாள்தோறும் தொலைக்காட்சி விவாதங்கள், சமூக ஊடக விவாதங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து ஒலிக்கும் கூற்றுக்கள். இதையெல்லாம் தொடர்ந்து கேட்கும்போது மக்களாட்சி அரசியல் என்பது கருத்தியலுக்கே தொடர்பில்லாத ஒரு மங்காத்தா விளையாட்டு போல ஒருவருக்குத் தோன்றும். அப்படித்தான் பலரும் உணர்கிறார்கள். அதனால் மத்தியதர வர்க்கத்தினர் அரசியலில் பெரிய ஆர்வமில்லாமல் கடந்து போகிறார்கள். இல்லாவிட்டால் மனம் போன போக்கில் யாரையாவது ஆதரிக்கிறார்கள். லங்கர் கட்டையில் பந்தயம் கட்டுவது போல யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று விவாதிக்கிறார்கள்.
இதுதான் உண்மையென்றால் குடியரசு என்பதற்கும், மக்களாட்சி என்பதற்கும் பொருள் என்ன என்ற ஐயம் ஒருவருக்கு எழும். மக்களாட்சி உலக அளவில் இன்று இவ்வாறான நெருக்கடியைச் சந்திக்க முக்கிய காரணம் ஊடகங்களின் பெருக்கம் எனலாம். வணிகமயமாகிவிட்ட ஊடகத்தில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே முக்கியமாக இருப்பதால் பல்வேறு பிம்பங்கள் ஊதிப் பெருக்கப்படுகின்றன. பரபரப்பான செய்திகள் பகிரப்படுகின்றன. ஆழமான சிந்தனைக்கோ, வரலாற்றுப் பார்வைகளுக்கோ அதிக இடம் கிடைப்பதில்லை. அதனால் சினிமா, விளையாட்டு என பல்வேறு கேளிக்கைகளில் ஒன்றாக அரசியலும் மாறிவிட்ட து போன்ற தோற்றம் உருவாகிறது. மத்திய தர வர்க்கம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு பிழைப்புவாத நோக்கில் இயங்குவது இயல்பாகிவிட்டதால் இந்த தோற்றத்தை நம்புகிறது.
இந்த தோற்றம் முற்றிலும் உண்மையல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் மக்களாட்சி அரசியல் என்பது பரந்துபட்ட சாமானிய மக்களின் வாழ்விற்கு இன்றைக்கும் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்வதாக இருக்கிறது. மக்களாட்சி அரசியலும், தேர்தல்களும், அவை தரும் வாய்ப்புகளும், உரிமைகளும் இல்லாவிட்டால் எழுபது சதவீத அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, தமிழ்நாட்டில் என்று வைத்துக்கொண்டால் ஆறு கோடி மக்களின் வாழ்க்கை, இப்போது உள்ளதை விட மிக மோசமானதாகத்தான் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும், ஓரளவாவது அவர்களது உரிமைகள் பயன் தருவதற்கும் மக்களாட்சிக் களம் உருவாக்கிய கருத்தியல் முரண்களின் இயக்கமே காரணம் எனலாம். எனவே அரசியலின் உயிர்நாடி கருத்தியல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக முக்கியத்துவம் பெறுவது அரசியல் கட்சி என்பதை சமூகப் பரப்பிலிருந்து உருவாக்குவது, கட்டமைப்பது. மூன்றாவதாகத்தான் தலைமை என்பதும், தேர்தல் கூட்டணி என்பதும் இடம் பெறுகின்றன.
சுருங்கச் சொன்னால் முதலில் கருத்தியல், இரண்டாவது அந்த கருத்தியல் பின்புலத்தில் கட்சி கட்டமைப்பு, மூன்றாவதாகத் தலைமை, கூட்டணி இன்னபிற. இதற்கு நேர்மாறாக, தலைகீழாக, முதலில் வசீகரமான ஒரு தனி நபர் தலைவராவது, பின்னர் அவர் ரசிகர்கள், ஆதரவாளர்களிலிருந்து கட்சி நிர்வாகிகள் மேலிருந்து நியமிக்கப்படுவது, பின்னர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக சில வசனங்கள், பிம்பங்கள் என்று பயணப்படுவது மக்களாட்சியை கேலி செய்வது என்றுதான் கூற வேண்டும். இப்படி சொல்லும்போது பலரும் வியப்படைகிறார்கள். கட்டுரையின் மேலே சொன்ன வாக்கியங்களை கிளிப்பிள்ளைகள் போல சொல்கிறார்கள். “அரசியலுக்கு யார் வேண்டுமானால் வரலாம்!” “அரசியலில் எதுவும் நடக்கும்” என்று வரிசையாக அடுக்குகிறார்கள். இன்னொரு பக்கம் கருத்தியல் கொள்கை எல்லாம் தேர்தல் அரசியலில் முக்கியமல்ல; கொள்கை வேறு கூட்டணி வேறு. கொள்கை எதிரி வேறு, அரசியல் எதிரி வேறு என்றெல்லாம் வசனம் பேசுகிறார்கள்.
ஒரு கட்டிடத்தின் வர்ண மேற்பூச்சுதான் அதை பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கச் செய்யும். அதற்கு அடுத்தபடி அந்த கட்டிடத்தின் சுவர்கள், சாளரங்கள், பலகணிகள் என எத்தனையோ அம்சங்கள் அந்த கட்டிடத்தின் சிறப்புகளுக்குக் காரணமாக இருக்கும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத பூமிக்குக் கீழுள்ள அஸ்திவாரம்தான் கட்டிடத்தை தாங்கி நிற்கும். அதுபோல ஒரு கட்சியின் அஸ்திவாரம் என்பது கருத்தியல்தான். அதன் சுவர்களும், சாளரங்களும், பலகணிகளும் கட்சியின் கட்டமைப்பு என்றால், அதன் வண்ணப்பூச்சுதான் மக்களை ஈர்க்கும் தலைமை, தேர்தல் கூட்டணி இன்னபிற. வரலாற்றில் நிற்கும் தலைவர்களின் சிறப்பு என்னவென்றால் அந்த கருத்தியல் அஸ்திவாரத்தை அவர்களே இடுவதன் மூலம்தான், அதற்கு வலுச் சேர்ப்பதன் மூலம்தான் அதன் வண்ணப்பூச்சாக மிளிர்வார்கள்.
இந்த வண்ணம் மிகவும் வசீகரமான வண்ணம்; கட்டிடத்தை தாங்கி நிற்க அதற்கு பூசப்படும் வண்ணமே போதும் என்று யாரும் கூற மாட்டார்கள். எனவே நாம் கருத்தியல் என்றால் என்ன, கட்சி என்றால் என்ன, தலைமை என்றால் என்ன என விரிவாக ஆராய்வோம்.

கருத்தியல்
தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty ) என்ற ஃபிரெஞ்சு அரசியல் பொருளாதார ஆய்வாளர், சிந்தனையாளர் சமத்துவம் என்பதை மையமாக வைத்து சமகால அரசியல் நிலையை சிறப்பாக விளக்கியுள்ளார். மானுட வரலாற்றில் துவக்க கால அரசர்கள், பேரரசர்கள் உருவாக்கத்திற்குப் பிறகு உலகில் மூவடுக்கு சமூகம் உருவாகி நிலைபெற்றது என்று அவர் கூறுகிறார். பூசாரிகள் அல்லது மதகுருக்கள், அரசர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள், சாமானிய மக்கள் என்ற மூவடுக்கு சமூகம் உலகின் பல பகுதிகளிலும் ஏதோவொரு வகையில் நிலைபெற்றது என்கிறார். இது அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட படிநிலை சமூகம்.
இந்தியாவில் இது நான்கு அல்லது ஐந்தடுக்குகள் கொண்ட சமூகமாக விளங்கியது. அதனை வர்ண தர்ம கோட்பாட்டை உருவாக்கிய பார்ப்பனீயக் கருத்தியல் வடிவமைத்தது. ஆன்மா, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி, இவற்றையெல்லாம் செயல்படுத்தும் இறைவன் என விரிவான நம்பிக்கைகள் மூலம் அனைவர் வாழ்வையும் வர்ணப் படிநிலையில் கட்டுப்படுத்தியது.
பிக்கெட்டி இந்த மூவடுக்கு ஏற்றத்தாழ்வு சமூகம் முதலீட்டியம் உருவானபோது சிதைவுற்ற நிலையில் அனைத்து மனிதர்களும் சமம் என்ற மானுடவாத சிந்தனை வலுப்பெற்றதைக் கூறுகிறார். இதன் விளைவாக காலப்போக்கில் குடியரசுத் தத்துவம், சட்ட த்தின் ஆட்சி, மக்களாட்சி ஆகிய வடிவங்கள் உருவாகி அதிகாரப் பரவலும், சமத்துவமிக்க சமூகப் பரப்பை உருவாக்குதலுக்கான முயற்சிகளும் இருபதாம் நூற்றாண்டில் முனைப்பு பெற்றதை தரவுகளுடன் கூறுகிறார்.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் சமத்துவத்தை நோக்கிய பயணம் தேக்கமடைந்து, பெருமுதலீட்டிய சக்திகளின் குறுங்குழு ஆதிக்கங்கள் (oligarchy) பெருகுவதையும் அதனால் ஏற்றத்தாழ்வுகள் பெருகுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த போக்கினைத் தடுத்து அதிகாரப் பரவலும், சமத்துவ நோக்கும் கொண்ட கருத்தியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இந்த உலகளாவிய மானுட கருத்தியல் பயணத்தின் பகுதியாக நாம் இந்திய, தமிழ்நாட்டு அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலீட்டிய திரட்சியின் அங்கமாக, முதலீட்டிய உற்பத்தி முறையின் விரிவாக்கமாக இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும், ஆட்சியும் உருவானபோது அதனை எதிர்த்துப் போராடிய குறுநில மன்னர்களோ, அடித்தள மக்கள் கிளர்ச்சிகளோ வெல்ல முடியவில்லை. ஆனால் முதலீட்டிய சமூக அமைப்பின் அங்கமான குடிமைச் சமூக அமைப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உருவான போது அது ஆங்கிலேயே ஆட்சியுடன் அதிகாரப் பகிர்வைக் கோரத்துவங்கியது. அந்த கட்சியில் அங்கம் வகித்தவர்கள் படித்த மேட்டுக்குடியினரான பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினரும், மார்வாரி, பனியா வர்த்தக சமூகத்தினருமாக இருந்தனர். வெகுமக்கள் பங்கேற்பு என்பது ஆங்காங்கே தோன்றி மறையும் கிளர்ச்சிகளாக இருந்தது. காந்தியின் தலைமை உருவான பின்பே காங்கிரஸ் கட்சி வேர்மட்ட அணிதிரட்டலை செய்து கட்சி அமைப்பினை வலுப்படுத்தத் துவங்கியது எனலாம். அப்போது காங்கிரஸ் பல்வேறு கருத்தியல் முனைப்புகளின் தொகுப்பாக விளங்கியது.
சரியாக நூறாண்டுகளுக்கு முன் 1925 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய இரண்டு கருத்தியல் துருவ முனைகள் தோன்றின. ஒரு துருவ முனை பார்ப்பனீய இந்து அடையாளத்தை வலுப்படுத்தி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக பாசிச பாணியில் வடிவமைக்க விரும்பிய இந்துத்துவ அமைப்புகளான இந்து மகாசபா, ராஷ்டிரீய சுயம் சேவக் சங் ஆகியவை. மராத்திய பேரரசின் பேஷ்வாக்களின் ஆட்சியின் தொடர்ச்சியாக இருந்த மராத்திய பார்ப்பன சமூகமே இத்தகைய இந்துத்துவ தேசியத்தின் விளைநிலமாக இருந்தது. இது புதிய பெருமுதலீட்டிய குறுங்குழு ஆதிக்கத்தையும், பழைய வர்ண தர்ம மீட்புவாதத்தையும் முதலீட்டிய வல்லரசு உருவாக்க நோக்கில் இணைக்கும் வலதுசாரி தேசியமாக வளர்ந்து நிற்கிறது. ஒன்றிய அரசை ஒற்றை அரசாக மாற்ற நினைக்கிறது.
மற்றொரு துருவ முனையாக பார்ப்பனீய வர்ண தர்மத்தை முற்றிலும் மறுதலித்த சுயமரியாதை இயக்கம் அதே 1925 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாரால் தமிழ்நாட்டில் துவங்கப் பெற்றது. ஏற்கனவே நீதிக் கட்சியாக உருவாகியிருந்த பார்ப்பனரல்லாதோர் கூட்டமைப்புடன் இணைந்து அதன் தீவிர கருத்தியல் தளமாக இயங்கத் துவங்கியது. சுயமரியாதை, சமதர்மம் என்பது எல்லா வடிவங்களிலும் அதிகாரப் பரவலையும், சமத்துவத்தையும் நாடும் கருத்தியல் விளைநிலமாக மாறியது. இதுவே இந்துத்துவ பெருமுதலீட்டிய அதிகாரக் குவிப்பிற்கு எதிராக, அதிகாரப் பரவலையும், சோஷலிச நோக்கையும், சமத்துவ நோக்கையும், கூட்டாட்சிக் குடியரசு தத்துவத்தையும் வலியுறுத்தி நிற்கும் தரப்பாக வளர்ந்து நிற்கிறது.

அரசியல் கட்சி உருவாக்கம்
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய கருத்தியல் அடிப்படையில், வேர் மட்ட கட்சி அமைப்பினைக் கட்டிய சாமானியர்களின் ஒப்பற்ற அரசியல் இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம். அறிஞர் அண்ணா என்ற கருத்தியல் ஆசானின் தலைமையில் எண்ணற்ற இளம் தலைவர்களை இந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியது. கிளைகளை அமைத்து, மாவட்ட மாநாடுகளை நடத்தி, எண்ணற்ற கூட்டங்களை நடத்தி, கட்சி அமைப்பை உருவாக்கிய பிறகே முதல் மாநில மாநாட்டை சென்னையில் நடத்தியது. மக்களிடையே பெரும் பண்பாட்டு மறுமலர்ச்சியையும், திராவிட தமிழர் என்ற தன்னுணர்வையும் இடைவிடாத பிரசாரத்தினால் உருவாக்கியது. அதற்கான கிளர்ச்சிகள், கலை இலக்கிய வடிவங்கள், எண்ணற்ற இதழ்கள், ஏடுகள் என ஓயாத இயக்கத்தின் மூலம் கட்சியின் கட்டமைப்பை உறுதிபட உருவாக்கியது.
இவ்வாறு உருவாகும் அரசியல் கட்சியின் பணி என்பது தேர்தல்களில் போட்டியிடுவது மட்டுமல்ல. அரசியல் கட்சி என்பது மக்களுக்கும், அரசு இயந்திரத்திற்கும் இடையிலான பாலமாக விளங்க வேண்டும். தனிப்பட்ட குடிநபர்களின் பிரச்சினைகள் ஆனாலும் சரி, மக்கள் தொகுதிகளின், வசிப்பிட பகுதிகளின் பிரச்சினைகள் ஆனாலும் சரி, அவற்றை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்த்துவைக்கும் பணியினை கட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். அதுதான் கட்சிகளின் குடிமைச் சமூகப் பணி. இவ்வாறு பணியாற்றுவதன் மூலம்தான் கட்சி தனக்கான ஆதரவுத் தளத்தை மக்களிடையே உருவாக்கிக் கொள்ள முடியும்.
கருத்தியல் பயிற்சி மூலம் கட்சிப் செயல்பாட்டாளர்களை உருவாக்குவது முதல் கட்டமென்றால், கட்சி செயல்பாட்டாளர்கள் தங்கள் சமூகப் பணியின் மூலம் மக்களிடையே ஆதரவுத் தளத்தை உருவாக்குவது இரண்டாம் கட்டம். பதினெட்டு ஆண்டுகளில் இதையெல்லாம் சிறப்புறச் செய்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டில் ஏறியது. மக்களாட்சி வரலாற்றின் மகத்தான அத்தியாயத்தை எழுதியது.

தேர்தல் களம்
கருத்தியல், அதனால் உருவான கட்சி அமைப்பு எல்லாம் இருந்தாலும் இந்திய சமூகப் பரப்பு என்பது மிகவும் விரிவானது, பல்வேறு அடுக்குகள் கொண்ட து என்பதால் தேர்தல் என்பது எதிரி, நண்பன் என்ற அடிப்படை முரணின் வெளிப்பாடாகவே அமையும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மகன் களுக்கும், தம்பி மகன்களுக்கும் பெரும் விரோதம் இருக்கும். ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள், ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள், ஒரே தொழிலைச் சேர்ந்தவர்கள் என பல தளங்களிலும் இந்த முரண்பாடுகள் இருக்கும். இந்த முரண்பாடுகளின் காரணமாக வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவது நடக்கும்.
இதனால் உட்கட்சி அதிகாரப் போட்டிகளும் உக்கிரமாக நடக்கும். களத்தில் செயல்பாட்டாளர்கள் கட்சி மாறுவது நடக்கும். மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட கட்சி மாறுவார்கள். பிளவுகளால் தோன்றும் சிறிய கட்சிகள் மாறி, மாறி கூட்டணி வைக்கும்.
தமிழ்நாட்டை திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியாக கட்டமைப்பதில் தி.மு.க பெருவெற்றி பெற்ற பிறகுதான் அது பிளவுண்டு, அண்ணா தி.மு.க தோன்றியது. அது சமூகப் பரப்பின் பல்வேறு முரண்பாடுகள் தங்களை இரண்டு அணிகளாக தொகுத்துக் கொள்ள வகை செய்தது. கட்டிய வீட்டில் பாகம் பிரிப்பது போல அ.தி.மு.க உருவானதால் கருத்தியல் என்பது அண்ணாவின் பெயரால் தொடரவே செய்தது. ஆனால் மாநில சுயாட்சிக்கு அழுத்தம் கொடுப்பதில், பார்ப்பனீய எதிர்ப்பில், சோஷலிச நோக்கில் அ.தி.மு.க மென்போக்கைக் கடைபிடிப்பதாகவும், தி.மு.க தீவிர போக்கைக் கடைபிடிப்பதாகவும் கருத்தியல் அழுத்தங்களில் வித்தியாசம் தோன்றியது.
இந்திய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டையும் எதிர்க்கும் மூன்றாவது அணி முயற்சிகள் பலவீனமடைந்து இன்றைக்கு காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இருதுருவ அரசியல் நிலைபெற்று வருகிறது. அதில் காங்கிரஸ் மாநில சுயாட்சி, பன்மைத்துவ பண்பாடு, சோஷலிச சமத்துவ நோக்கிற்கு அனுசரணையாகவும், பா.ஜ.க பெருமுதலீட்டிய குறுங்குழு வாதம், ஒன்றிய அதிகாரக் குவிப்பு, இந்துத்துவ ஒற்றை அடையாள பாசிச நோக்கு ஆகியவற்றினை முன் நிலைப்படுத்தியும் இயங்குவது தெளிவுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் அரசியல் அணிசேர்க்கைகள், எதிரி-நண்பன் முரண்களினால் தலைவர்களின் கட்சி மாற்றம், அணிமாற்றம் ஆகியவற்றை மட்டும் கவனத்தில் கொண்டு, கருத்தியல் என்று எதுவுமே இல்லை என்று கருதுபவர்கள் அரசியலின் மூலவிசை இன்றும் கருத்தியல் சார்ந்துதான் உள்ளது என்பதையும், மக்கள் நலன்களை பாதுகாக்க அந்த கருத்தியல் அம்சங்களை வலியுறுத்திப் பேசுவது அவசியம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
தேர்தல் களம் சார்ந்த மக்களாட்சியில் கருத்தொப்புமை உருவாக்கம், கருத்தியல் முரண் இரண்டும்தான் இயங்கும். அதனால் பல்வேறு சமரசங்கள் கட்சிகளின் இயக்கத்தில் உருவாகத்தான் செய்யும். அதனை மிகைப்படுத்தி கருத்தியலே இல்லை என்பதோ, ஒட்டுமொத்த வரலாற்று விசைகளை கணக்கில் கொள்ளாமல், சமூகப் பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளை மட்டும் பொறுப்பாக்குவதோ அரசியல் நீக்கத்திற்கே இட்டுச் செல்லும். அரசியலை இகழும் மேட்டுக்குடியினரைவிட, அரசியல் செயல்பாட்டாளராகும் சாமானியர்களே மக்களுக்கு தேவையானர்கள். ஆனால் கருத்தியல் தெளிவின்றி உருவாகும் செயல்பாட்டாளர்கள் சுயநல சந்தர்ப்பவாதிகளாக மதிப்பிழந்து போவார்கள்.