பாரதிய ஜனதாக்கட்சி இன்றைக்கு மற்றுமொரு அரசியல் கட்சிதானா? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பாரதிய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி வைப்பது சரிதானா? 

-ராஜன் குறை 

ரசியலில் ஒரு கட்சியிடம் அதிகாரம் குவிவதை எதிர்ப்பதற்காக பல்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வது இயல்புதான். இதை வானவில் கூட்டணி என்றெல்லாம் அழைப்பார்கள். சமயத்தில் கொள்கை மாறுபாடு கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு பொது நலன் கருதி “வெளியிலிருந்து” ஆதரவு தருவார்கள். அதற்கான நிபந்தனைகளை விதிப்பார்கள். இதையெல்லாம் கருதித்தான் “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரிகளும் இல்லை” என்றெல்லாம் கூற்றுக்கள் பரவலாகின்றன. “கொள்கை வேறு; கூட்டணி வேறு” என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறெல்லாம் கூறுவதன் பொருள் அரசியல் என்பது வெறும் சந்தர்ப்பவாதம் மட்டும்தான்; அதில் கொள்கைகள், கருத்தியல் என்பதெல்லாம் எதுவுமே கிடையாது என்று பொருள்கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கூட்டணி அமையலாம். ஆனால் அதற்கான நியாயத்தை அந்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால்தான் அது சந்தர்ப்பவாதமாகக் கூட விளங்க முடியும்.

பொதுவாக மக்களாட்சிக் குடியரசு என்பதற்கான அரசியலில் முற்போக்கு, பிற்போக்கு என இரண்டு போக்குகளைக் காணலாம். பழைய ஏற்றத்தாழ்வு சமூகத்தை பேணுவது, மறு உருவாக்கம் செய்வது பிற்போக்கு; சமத்துவத்தை நோக்கிப் பயணிப்பது முற்போக்கு. இந்திய அரசியலில் மூன்று வகையான அதிகாரப் பகிர்வு குறித்த முரண்கள் அல்லது மக்கள் தொகுதியின் நலன் சார் முரண்கள் இருப்பதைக் காணலாம். முதல் முரண் வர்ண தர்ம சிந்தனையால், பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தால் உருவான ஜாதீய முரண்கள். இரண்டாவது முரண் புதிதாக இருபதாம் நூற்றாண்டில் உருவான தொழில், வர்த்தகம் சார்ந்த முதலீட்டிய அமைப்பில் முதலீட்டிய நலன்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உள்ள முரண் அல்லது தனியுடமை முதலீட்டியத்திற்கும் பொதுவுடமை சோஷலிசத்திற்கும் உள்ள முரண். மூன்றாவது ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பிற்கும், மாநில அரசுகளுக்கான அதிகாரப் பரவல் கோர்க்கைக்கும் உள்ள முரண். இதனை ஒரு பட்டியலாக இப்படிப் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய அரசியலும், தமிழ்நாட்டு அரசியலும் 

இந்திய தேசிய உருவாக்கத்தில் வர்ண அமைப்பில் கல்வியை தங்கள் ஏகபோக உரிமையாகக் கொண்டிருந்த பார்ப்பனீய சமூகங்கள் நவீன ஆங்கிலக் கல்வியிலும், குறிப்பாக சட்டத்துறையிலும் வேகமாக முன்னேறியதால் முக்கிய பங்கு வகித்தன. இவர்களுடன் முதலீட்டிய திரட்சியில் முன்னிலையில் இருந்த பனியா, மார்வாரி சமூகங்களும் இணைந்து நவீன இந்து மத அடையாள உருவாக்கம், சமூக சீர்திருத்தம், சமஸ்கிருத பண்பாட்டு மீட்டெடுப்பு, நவீன இந்தி மொழி உருவாக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டன. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இப்படியான ஆங்கிலத்தில் கன்செர்வேடிவ் எனப்படக்கூடிய மரபுவாத சக்திகளும், நவீன சுதந்திரவாத சீர்திருத்த நோக்கர்களும், சோஷலிச எண்ணம் கொண்ட புரட்சிவாத நோக்கு கொண்ட இளைஞர்களும் கலந்துதான் இருந்தார்கள். கலாசார மீட்புவாத நோக்கு கொண்ட திலகர் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து உடனே விடுதலை அடைய வேண்டும் என்ற தீவிரவாத கொள்கை கொண்டிருந்தனர். வேறு வகையான மேட்டுக்குடியினர், மோதிலால் நேரு போன்றவர்கள் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெறுவதற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர். இந்த பிரிவினரிடமிருந்து வேறுபட்டு காந்தி விவசாய சமூகத்துடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு காங்கிரசை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற முனைந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் பல்வேறு நோக்கினரும் கலந்து இயங்குவது இயல்பானதாக இருந்தது. 

தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்திற்கும், தமிழிற்குமான நீண்டகால பண்பாட்டுப் போர் இருந்தது. சைவம், வைணவம் இரண்டிலுமே பார்ப்பன, பூசாரி வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரான போக்குகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாரை அடியொற்றிய நவீன சைவ சிந்தனை, பார்ப்பனீய விலக்கம் கொண்ட வைணவ சிந்தனை, அயோத்தி தாசரின் பூர்வ பெளத்தம் என பல போக்குகள் திராவிட அடையாளத்தை முன்னெடுத்து, சமஸ்கிருத ஆரிய அடையாளத்திற்கு எதிராக முன்னிறுத்தின. இது பார்ப்பனரல்லாதோர் இயக்கமாக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும், நீதிக்கட்சி என்றும் அழைக்கப்பட்ட நவீன அரசியல் கட்சியாக வடிவெடுத்தது.

காந்தியின் வெகுமக்களை அணிதிரட்டும் அரசியலால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் இணைந்த பெரியார், வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல பிரச்சினை, வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கை நிராகரிப்பு ஆகிய அனுபவங்களால் காங்கிரசின் பார்ப்பனீயத்துடனான சமரச நோக்கை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டது தமிழ்நாட்டு அரசியல் களத்தை தனித்துவத்துடன் வடிவமைக்கும் முக்கிய திருப்பு முனையானது. சுயமரியாதை இயக்கத்தின் வர்ண தர்ம, ஆணாதிக்க பழமைவாத சிந்தனை மறுப்பின் புரட்சிகர கருத்தியலால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல இளைஞர்கள் அதில் இணைந்தனர். இந்தி மொழி திணிப்பின் மூலம் காங்கிரஸ் இந்திய பெருந்தேசிய அதிகாரக் குவிப்பிற்கு வழிவகை செய்தபோது, நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து தென்னிந்தியாவை திராவிட கூட்டாட்சிக் குடியரசாக்கும் கோரிக்கையை எழுப்பினர். ஆனால் இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி பிரிட்டிஷ் அரசை கட்டாயப்படுத்த போதுமான அவகாசம் இருக்காததால் பாகிஸ்தான், இந்தியா என்று இரு சுதந்திர நாடுகள் உருவாயின. 

சுதந்திர இந்தியாவில் இந்திய அரசியலும், தமிழ்நாட்டு அரசியலும்

இந்தியா சுதந்திரம் பெறும் தருணத்தில் மகாத்மா காந்தி நாடெங்கும் வெகுமக்களால் பெரிதும் போற்றப்படும் மனிதராக, தெய்வப் பிறவியாக, அவதார புருஷராக விளங்கினார். அவர் தன் அரசியல் வாரிசாக பண்டித ஜவஹர்லால் நேருவைக் கூறியதாலும், நேருவின் ஆளுமைத் திறம், வசீகரத்தாலும் இந்தியா இடைக்கால அரசின் பிரதமரானார் நேரு. அரசியலமைப்பு சட்ட அவையும் அவர் தலைமையில் இயங்கியது. காந்தி மத நல்லிணக்கத்தையும், நேரு மதச்சார்பின்மையையும் முன்வைத்து ஒரு பன்மைத்துவ இந்தியாவை உருவாக்க விரும்பினர். அனைத்து கருத்தியல் தரப்பினரையும் இணைத்து குறைந்தபட்ச கருத்தொப்புமையை உருவாக்கி ஒரு மக்களாட்சிக் குடியரசை நிலை நிறுத்துவதில் முனைப்புக் காட்டினர். 

மராத்திய பார்ப்பன சமூகங்களைச் சேர்ந்த சாவர்க்கர், மூஞ்சே, ஹெட்கவார், கோல்வால்கர் ஆகியோர் இந்துத்துவம் என்ற அரசியல் தத்துவத்தையும், இந்து மகாசபா, ராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆகிய அமைப்புகளையும் தோற்றுவித்தனர். முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் இந்திய மண்ணில் தோன்றாத மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, இந்து மத அடையாளத்தின் அடிப்படையில் இந்து தேசியத்தை கட்டமைக்க முனைந்தனர். காந்தியையும், நேருவையும் தாண்டி அவர்களால் செல்வாக்குப் பெற முடியவில்லை. ஆனால் பிரிவினையின் போது நிகழ்ந்த பெரும் வன்முறை இந்து அடையாள அரசியலுக்கு உரமாயிற்று. இந்த இயக்கங்களில் உருவான கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றது இந்திய அரசியலின் மிகத் தீவிரமான அடிப்படை முரணை சுட்டிக் காட்டி நிற்கிறது. 

தமிழ்நாட்டில் காங்கிரசில் பெரியாரின் நண்பராக இருந்த வரதராஜுலு நாயுடு இந்து மகாசபாவில் இணைந்து மதுரையில் 1943 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தியுள்ளார். அந்த மாநாட்டில் முன்மொழியப்பட்ட இந்து ராஷ்டிர கருத்தாக்கத்தை விமர்சித்துதான் அண்ணா “ஆரிய மாயை” என்ற தன்னுடைய புகழ்பெற்ற கொள்கை விளக்க நூலை எழுதினார். அதனால் திராவிட இயக்கமென்பது அடிப்படையிலேயே இந்துத்துவ சிந்தனைக்கு நேர் முரணானது என்பதை  அந்த நூலைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். 

நாம் மேலே கண்ட அட்டவணையைக் கொண்டு பார்த்தால் பிற்போக்கு அரசியலின் வடிவமாக இந்துத்துவ அமைப்புகளும், முற்போக்கு அரசியலின் வடிவங்களாக திராவிட, கம்யூனிஸ்டு, சோஷலிச இயக்கங்களும் உருவானதைக் காண முடியும். காங்கிரஸ் இத்தகையை கருத்தியல் வடிவங்களின் தாக்கம் கொண்ட பலரும், இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லீம், கிறிஸ்துவ தலைவர்களும் இணைந்து இயங்கும் பல்வேறு முரண்களை உள்ளடக்கிய இயக்கமாக விளங்கியது. 

தேர்தல் கூட்டணிகள் 

இந்தியா, தமிழ்நாட்டின் முதல் மூன்று தேர்தல்கள் காங்கிரஸ் வெற்றிபெரும் தேர்தல்களாகத்தான் இருந்தது. காங்கிரசிலிருந்து சுதந்திர பொருளாதார ஆதரவாளர்கள் ராஜாஜி தலைமையில் பிரிந்து சுதந்திரா கட்சியை உருவாக்கினர். சோஷலிஸ்டுகள் பிரிந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். கம்யூனிஸ்டு கட்சியும் இயங்கியது. காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகளும் தோன்றின. ஆனால் இவையெல்லாம் காங்கிரசை வெற்றி கொள்ள முடியவில்லை. 

தமிழ்நாட்டில் தி.மு.க பெற்ற வளர்ச்சியும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உருவாக்கிய சூழலும் காங்கிரசை வீழ்த்தும் சாத்தியத்தை உருவாக்கியதால் 1967 தேர்தலில் தி.மு.க தலைமையில் வானவில் கூட்டணி அமைந்தது. கருத்தியலில் எதிரெதிராக இருந்த சுதந்திரா கட்சியும், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகளும் தி.மு.க-வின் கூட்டணியில் சிறிய அங்கங்களாக பங்கெடுத்தன. காங்கிரசை தனியாக இந்த கட்சிகள் வீழ்த்த முடியாது என்ற சூழ்நிலை அந்த கூட்டணியை நியாயப்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்தது: முற்போக்கு சோஷலிஸ்டுகள் இந்திரா காந்தி தலைமையிலும், சுதந்திரவாத நிலவுடமை சக்திகள் பழைய அல்லது நிறுவன காங்கிரஸ் என்ற பெயரிலும் இயங்கினர். தமிழ்நாட்டில் காமராஜ் பழைய காங்கிரசின் தலைவரானார். வங்கிகளை தேசியமயமாக்குதல், மன்னர் மான்ய ஒழிப்பு ஆகிய முற்போக்கு நடவடிக்கைகளில் இந்திரா காந்தியை ஆதரித்த தி.மு.க, 1971 தேர்தலில் அவருடன் கூட்டணி கண்டது. சோஷலிச எதிர்ப்பு கொள்கை கொண்ட பழைய காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம் ஆகியவை கூட்டணி அமைத்தன. பழைய அரசியல் எதிரிகளான காமராஜரும், ராஜாஜியும் இணைந்தனர். 

இந்திரா காந்தி பெருவெற்றி பெற்று ஆட்சி செய்தார். அவரை எதிர்த்து தீவிர சோஷலிஸ்டுகள் ஒருபுறமும், சுதந்திரவாதிகள் மறுபுறமும் இயங்கி வந்தனர். தமிழ்நாட்டில் பெருவெற்றி பெற்ற தி.மு.க இரண்டாகப் பிளந்து எம்.ஜி.ஆர் தலைமையில் அண்ணா தி.மு.க தோன்றியது. தொடர்ந்த அரசியல் அழுத்தங்களால் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை அறிவித்தார். கலைஞரின் தி.மு.க அரசு அதனை, எதேச்சதிகாரப் போக்கை, எதிர்த்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. கலைஞர் மகன் ஸ்டாலின் உட்பட தி.மு.க இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாயினர். எம்.ஜி.ஆர் தன் கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா தி.மு.க என்று மாற்றிக்கொண்டு இந்திரா காந்தியை ஆதரித்தார். 

பதினெட்டு மாத கால நெருக்கடி நிலை முடிந்து தேர்தல் வந்தபோது, இந்திரா காந்தியை வீழ்த்துவதற்காக சோஷலிஸ்டுகள், சுதந்திரவாதிகள், இந்துத்துவ ஜனசங்கம் எல்லாம் ஒரே கட்சியாக, ஜனதா கட்சியாக மாறிய அதிசயமும் நிகழ்ந்தது. அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் இரண்டே ஆண்டுகளில் கருத்தியல் முரண்பாடுகள் வெடித்து ஆட்சி கவிழ்ந்தது. இந்த அரசியல் குழப்பத்திற்கு இந்திரா காந்தியின் சோஷலிச பாதையே மேலானது என்பதால் தி.மு.க மீண்டும் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தது. “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்றார் கலைஞர்.   

ஜனதா கட்சி உடைந்து இந்துத்துவ அணி பாரதீய ஜனதா கட்சியாகவும், சோஷலிச அணிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களிலும் இயங்கத் துவங்கின. இந்திரா காந்தி மரணத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் காங்கிரசில் மீண்டும் கருத்தியல் முரண்கள் கூர்மையுற்றன. காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி,சிங் தலைமையில் ஜனதா தளம் தோன்றியது. தி,மு.க அதனை ஆதரித்தது. அப்போது நிகழ்ந்த 1989 நாடாளுமன்ற தேர்தலில் வி.பி,சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. அவருக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் காங்கிரஸ் ஆட்சியைத் தவிர்ப்பதற்காக பா.ஜ.க வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. வி.பி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று  பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசில் இட ஒதுக்கீட்டை வழங்கி பெரும் அரசியல் புயலை உருவாக்கினார். பாரதீய ஜனதா கட்சி அதனை எதிர்கொள்ள ராமஜென்ம பூமி இயக்கத்தைத் தோற்றுவித்தது. அது இந்திய அரசியலை “மண்டல் X மந்திர்” அல்லது “மண்டல் X கமண்டல்” என்ற அரசியலாக வடிவமைத்தது.  

இந்தியாவிலேயே மாநில நலனை, மக்கள் நலனை முதன்மைப்படுத்திய முரண்களமாக தி.மு.க X அ.இ.அ.தி.மு.க என்று வடிவமைக்கப்பட்ட அரசியல் களம் ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஒன்றிய அரசை ஆளும் பா.ஜ.க-வின் முற்றுகைக்கு ஆளாகியுள்ளது. கலைஞருக்குப் பின் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க வரலாற்றுத் தொடர்ச்சியை பேணுவதுடன், தேசிய அளவில் இந்துத்துவ எதிர்ப்பிற்கு வடிவம் கொடுக்கும் ஆற்றலுடன் விளங்குகிறது. ஆனால் அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க-வின் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு பிளவுபடுத்தப்பட்டு, பலவீனப்பட்டு விளங்குகிறது. இந்த நீண்ட வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டால் இன்றைய நிலையில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை எந்த தமிழ்நாட்டு அரசியல் கட்சியும் நியாயப்படுத்த முடியாது என்பதே உண்மை. 

மண்டலுக்குப் பிறகான பிற்படுத்தப்பட்டோர், தலித் சமூகங்களின் அரசியல் அணிதிரட்டல் காரணமாக பல மாநிலங்களிலும் வலுவான மாநில கட்சிகள் தோன்றின. காங்கிரசின் சோஷலிச, பன்மைத்துவ ஆதரவு தளம் உ.பி, பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா  உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு இடம் பெயர்ந்தது. மாநிலங்களுக்கு நகரும் அரசியலின் மைய விசையை எதிர்கொள்ள பா.ஜ.க பெருமுதலீட்டிய சக்திகளின் ஆதரவுடனும், இந்துத்துவ பாசிச கருத்தியலுடனும் ஒன்றிய அரசைக் கைப்பற்றி வரலாறு காணாத அதிகாரக் குவிப்பை முயற்சிக்கிறது. 

Tags: