ஒரே அறிவிப்பில் பல கோடி மக்களின் பணம் காலி!
-ஜா.செழியன்

டிரம்பின் கோமாளித்தனத்தால் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார இழப்புகள் தனிக் கதை! ஆனால், நமது பங்கு சந்தையில் மட்டுமே முதலீட்டாளர்கள் எதிர்பாராத விதமாக 14 இலட்சம் கோடிகளை பங்குச் சந்தை இறக்கத்தால் பறி கொடுத்தனர். கடந்த திங்கள்கிழமை இரத்த ஆறே பங்குச் சந்தையில் ஓடியது. இது எப்படி நிகழ்ந்தது..?
பங்கு சந்தை, தங்கம், பெட்ரோல் போன்றவற்றின் விலைகள் ஏறும், இறங்கும் இவை பொதுவான ஒன்றாகும். விலை ஏறி கொண்ட இருக்கும் என்று எந்த ஒரு பொருளும் இல்லை. அப்படி ஏறி கொண்டு இருந்த தங்கம் தற்போது இறங்குகிறது. ஏற்கனவே ஏறி இருந்த பங்கு சந்தை இறங்கிவிட்டது.
ஆனால் சில நாட்கள் முன்பு பங்கு சந்தை கடுமையாக இறங்கியது. பல இலட்சம் கோடிகள் முதலீட்டாளர்கள் இழந்து உள்ளனர் என்று செய்திகள் வந்தது. இதற்கு சொல்லப்படும் காரணங்களில் முக்கியமானது அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு அதிகமாக வரி விதித்ததே ஆகும். இது உண்மை தான். இதற்கு. பல நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தன. கனடா, சீனா நாடுகள் பதிலுக்கு தாங்களும் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிப்போம் என்று அறிவித்தன.
வரி விதிப்பிற்கும்- பங்கு சந்தை இறக்கத்திற்கும் என்ன சம்பந்தம் ?
பங்குச் சந்தை ஏற்ற -இறக்கங்கள் எப்படி ஏற்படுகிறது என்றால், வீடு கட்ட ஒரு இடம் வாங்குவோம் எதிர்காலத்துக்கு இந்த இடம் நல்ல விலை போகும் என்ற எண்ணமும் ஒரு காரணம். ஆனால் திடீரென்று அந்த இடம் அருகில் அரசு பெரிய பஸ் நிலையம் கட்டப்போகிறது என்று ஒரு தகவல் வந்தால் அல்லது அருகில் ரயில் நிலையம் வரப்போகிறது என்று ஒரு தகவல் வந்தால் அந்த செய்தியை வைத்து அந்த இடத்தின் விலை உடனே உயர்ந்து விடும்.
உண்மையாக ரயில் நிலையம் அங்கு வரப் போகிறதா? என்பது இன்னும் பல வருடங்களுக்கு பிறகு தான் தெரிய வரும் ஆனால் செய்தியை வைத்து அந்த இடத்தோட விலையை உடனே உயர்த்தி விடுவார்கள் அதேப்போல் ஏதாவது ஒரு தவறான தகவல் வந்தாலும் அந்த இடத்தோட விலையை உடனே இறக்கி விடுவார்கள்.
அந்த தகவல் உண்மையா, பொய்யா என்று தெரிவதற்குள்ளாகவே மறுநாளே ஏற்றுவதும், குறைப்பதும் நடந்து விடும். இதே நிலை தான் பங்கு சந்தையிலும் நடைபெறுகிறது.
சந்தை மிக பலமாக இருந்தாலும், ஒரு தவறான தகவல் அல்லது யூகத்தில் வரக்கூடிய தகவல் உடனே பங்கு சந்தையில் எதிரொளித்து இறக்கி விடும். பிறகு தான் அவை உண்மையா? பொய்யா? என்று தெரிய வரும்.
பல முறைகளில் பங்கு சந்தை இப்படித் தான் ஏறி-இறங்கி உள்ளது. பிறகு, அவை உண்மை இல்லை என்று தெரிந்தால் தன் வழக்கமான நிலைக்கு பங்கு சந்தை சென்று விடும்.
உதாரணமாக ஒரு நாட்டிற்கு தேர்தல் நடக்கும் சமயத்தில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்று ஒரு தகவலும், எதிர்க்கட்சி வெற்றி பெறும் என்ற ஒரு தகவலும் வரும். ஆளும் கட்சி திரும்பி வந்தால் பங்கு சந்தை ஏறும், எதிர்கட்சி வந்தால் இறங்கும் என்பது ஒரு நடைமுறை.
ஆனால், எந்த கட்சி வரும் என்பது வாக்குச்சீட்டு எண்ணி முடித்த பிறகு தான் தெரிய வரும். ஆனால், அதற்கு முன்பே வரக்கூடிய கருத்துக் கணிப்புகளை வைத்தே கூட பங்குச் சந்தை இறங்குவது – ஏறுவதோ நடைபெறும். ஆக, பெரும்பாலும் பங்கு சந்தை ஏறுவது, இறங்குவது யூகத்தின் அடிப்படையிலே.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது கருத்துக் கணிப்புகள் ஆளும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்ற காரணத்தால் பங்கு சந்தை மிக உயரத்துக்கு சென்றது. ஆனால் வாக்கு எண்ணும் நேரத்தில் ஆளுங்கட்சி மெஜாரிட்டியில் ஜெயிக்காது என்ற நிலை வந்த போது, மல மலவென்று சரிந்து விட்டது.
மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை பங்கு சந்தை அன்று சந்தித்தது! ஆனால், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தை ஏறி விட்டதற்கு காரணம் ஆளுங்கட்சி தான் நிச்சயம் ஜெயிக்கும் என்று யூகத்தின் அடிப்படையில்!
முதலீட்டாளர்கள் பணமும் பல இலட்சம் கோடிகள் இறங்கியது. ஆனால் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி இறங்கும் பங்கு சந்தை குறுகிய காலத்திலேயே மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடும்.
மெஜாரிட்டி இல்லாமல் ஆளும் கட்சி வந்த நாள் அன்று இறங்கிய பங்கு சந்தை சில நாட்களிலேயே மீண்டும் ஏறிவிட்டது. இந்த அடிப்படையில் உலகில் நடக்கக் கூடிய எந்த ஒரு செயலாலும் முதலில் பாதிப்படக் கூடியது எதுவென்றால், பங்கு சந்தை தான்.

உதாரணமாக ரஷ்யா -உக்கரைன் போர் வந்தபோது, பங்கு சந்தை குறைந்தது. ஈரான் இஸ்ரேல் போர் வரும் சூழல் இருந்த போதும் பங்கு சந்தை இறங்கியது.
அதிபர் ஆவதற்கு முன்பே நான் ஆட்சிக்கு வந்தால், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி உயர்த்துவேன் என்று டிரம்ப் சொன்னபோதே பங்கு சந்தைகள் இறங்கத் தொடங்கியது.
அப்போது அவை உண்மையாக நடக்குமா? நடக்காதா? என்று தெரியாது. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே நாளில் வரியை உயர்த்துவதும் குறைப்பதும் என்பதை ஒரு விளையாட்டாகவே டிரம்ப் செய்ய தொடங்கினார்.
அதன் அடிப்படையில் மீண்டும் அதிகம் வரி விதிக்கப்பட்ட நாடுகளுக்கு அடுத்து 90 நாட்கள் அதை நிறுத்தி வைப்பதாக இன்னொரு கோமாளித்தனமான செயலை செய்து உள்ளார் டிரம்ப். இதில் சீனா நாட்டிற்கு மட்டும் இந்த நிறுத்தி வைப்பு காலம் இல்லை இன்னும் கொஞ்சம் வரியை உயர்த்துவேன் என்று 145 சதவிகிதம் உயர்த்தி உள்ளார்.
பங்கு சந்தை டிரம்ப் செய்யும் செயலால் ஏறுவதும்-இறங்குவதும் நடைபெறுகிறது. ஒருவர் பங்குகள் மேல் ஏறும் என்ற எண்ணத்தில் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்கிறார்.
அடுத்த நாளே டிரம்ப் கொடுக்கும் ஓர் அறிவிப்பால் தடாலடியாக இறங்கி பங்கு சந்தையில் பணம் போட்டவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது. அப்படி கடந்த திங்கள்கிழமை இரத்த ஆறே பங்குச் சந்தையில் ஓடியது.
டிரம்ப் 180 நாடுகளுக்கு வரியை உயர்த்தினார்! இதனால் பங்குசந்தை 1000 புள்ளிகள் வரை நிப்பிடி குறைந்து, கிட்டத்தட்ட 14 இலட்சம் கோடி ரூபாய் வரை பணத்தை முதலீட்டாளர்கள் இழந்தனர். இதில் பலர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி, அச்சப்பட்டு பலர் நஷ்டத்திலேயே பங்கு சந்தையில் இருந்து வெளியே வந்து விடுகின்றார்கள்.
இதை டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அதிகமாகவே செய்து வருகிறார். வரும் நாட்களிலும் இதே போல் அதிக முறை நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்கா மட்டுமே உலகம் இல்லை. இன்னும் நூற்றுக் கணக்கில் நாடுகள் உள்ளன. ஆனால், அமெரிக்கா பெரிய அண்ணன் போன்று நடந்து கொள்வது பார்த்து மக்கள் அச்சப்பட்டு தங்கள் பணத்தை பங்குச் சந்தையில் இருந்து வெளியே எடுக்கிறார்கள்

யூகத்தின் அடிப்படையில் பங்கு சந்தை இறங்கினாலும் முதலீட்டாளர்கள் பணமும் இறங்கும்.
பங்குச் சந்தை பெரும்பாலான தடவை யூகத்தின் அடிப்படையிலேயே இறங்குகிறது. இதனால் பல இலட்சம் கோடி பணமும் இறங்குவதால் பலர் அச்சப்பட்டு உடனே வெளியே வருகிறார்கள் இன்னும் சிலர் ஒதுங்கி நிற்கிறார்கள் இந்த செய்தி உண்மையில்லை, யுகமானது. இப்படி இறங்கும் பங்குசந்தை நாளை ஏறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்து கொள்ளாமல் மக்கள் அச்சப்படும் செயல் மீண்டும் மீண்டும் பங்கு சந்தையில் நடைபெறுகிறது. முன்னணி செய்தித்தாள்களிலும் பல இலட்சம் கோடி இழப்பு என்று செய்திகள் வருகிறது.
இந்த செய்தி பங்குசந்தையில் நுழையாத புதியவர்களுக்கும் ஒரு அச்சம் ஏற்பட்டு ஒதுங்கி நின்று விடுகிறார்கள். ஒரு நிறுவனம் தவறு செய்தால் மட்டுமே நாம் அந்த நிறுவனத்தில் போடும் பணத்தை நிறுத்த வேண்டுமே தவிர, யுகத்தில் வரும் செய்திகளைக் கொண்டு இறங்கும் பங்குச் சந்தைகள் மீது அச்சபடக் கூடாது. ஆனால், அமெரிக்கா அதிபர் டிரம்ப் செய்யும் கோமாளித்தனத்தை நாம் கோமாளித்தனமாக எடுத்து கொள்ளலாமே தவிர, சிரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம்.
இவை எல்லாம் இன்னும் சில மாதங்களில் சரியாகிவிடும். அப்போது வழக்கமான உயரத்திற்கு பங்குச் சந்தை செல்லத் தொடங்கும்.