இந்திய பாசிசம்!
-எஸ்.வி.ராஜதுரை

ஆர்.எஸ்.எஸ்… உலகில் உள்ள/இருந்த பாசிசங்களில் பழைமையானதொன்றாகும். 1925 செப்டம்பர் 23 இல் நாக்பூரில் நிறுவப்பட்ட அந்த அமைப்பு, இந்த 2025 ஆம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணப் போகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி இடதுசாரிக் கருத்துடைய வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்:
”1920-களின் நடுப்பகுதியில் இந்துத்துவக் கருத்தியலும் இந்துத்துவ அமைப்பும் நிறுவப்பட்டதில் மகாராஷ்டிரா மையமாக இருந்தது வியப்புத்தரக்கூடியதாகத் தோன்றக்கூடும். ஏனெனில், அங்கு முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராகவே இருந்தனர். எனவே, அவர்கள் அச்சுறுத்தலைச் செய்பவர்களாக இருக்கவில்லை. மேலும், 1920-களின் தொடக்கத்தில் அந்தப் பிராந்தியத்தில் பெரிய கலவரங்கள் ஏதும் நடக்கவில்லை.
ஆனால், மகாராஷ்டிராவில் ஜோதிபா புலெ சத்யசோதக் சங்கை உருவாக்கியதில் இருந்து – 1870-களில் இருந்தே வலுவான பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியிருந்தது. 1920-களில் தலித்துகள் அம்பேத்கரின் தலைமையில் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளத் தொடங்கினர். ஆகவே, இந்துத்துவம் என்பது மேல்சாதியினர் 1925 இல் இருந்து 1990-91 வரை தங்கள் கையிலிருந்து நழுவிச் சென்று கொண்டிருந்த மேலாண்மையை மீட்டெடுக்க மேற்கொண்ட முயற்சியாகும்.” (Tapan Basu,Pradeep Dutta, Smit Sarkar, Tanika Sarkar, Sambuddha Sen, Khaki Shorts: Saffron Flags, Tracts For The Times/1’, Orient Longrnan, New Delhi, 1993,pp 10-11)
சாதியவாதிகள் டூ மதவாதிகள்!
இந்த வரலாற்று அறிஞர்களும்கூட மரபான மார்க்ஸியப் பார்வையையே கொண்டிருந்தவர்களாதலால், அவர்களாலும்கூட ‘இந்துத்துவம்’ என்பது பார்ப்பனியம்தான் என்று கூற முடியவில்லை. மேலும், ‘மேல் சாதியினர்’ என்று எந்த சாதிகளைக் குறிப்பிடுகின்றனர் என்பதிலும் தெளிவில்லை.
மறுபுறம், 1925 செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று நாக்பூரில் கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனர்கள் உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதல் தலைவர் எனக் கருதப்படுபவரும் வி.டி.சாவர்க்கரைத் தன் குரு என்று அழைத்துக் கொண்டவருமான டாக்டர் ஹெட்கேவர் அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட காலச் சூழலைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
”மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்துக்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன.
தேசியப் போராட்ட அலை தணிந்துவந்தபோது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகளும் பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்களும் தொடங்கியிருந்தன. பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதோருக்குமிடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரிய தொடங்கியது. எந்த ஓர் அமைப்பிலும் ஒருமைப்பாடோ, ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தாடி தேசத்தில் கலவரங்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தன.”
இங்கு டாக்டர் ஹெட்கேவர் தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களையும்தான் ’பார்ப்பனரல்லாதோர்’ என்ற பொது வகைப்பாட்டில் உள்ளடக்குகிறார். ‘யவனப் பாம்புகள்’ என்று அவர் கூறுவது இஸ்லாமியர்களைத்தான். ஆக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் பார்ப்பனரல்லாதாரிடமிருந்தும் ‘யவனப் பாம்புகளி’டமிருந்தும் இந்து தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
இந்துத்துவம் என்றால் என்ன?
இந்துத்துவவாதிகளை வகுப்புவாதிகள், மதவாதிகள் என்று அழைக்கும் கம்யூனிஸ்டுகளில் கணிசமானோர், வகுப்புவாதத்தை உருவாக்கியது பிரிட்டிஷார்தான் என்றோ, ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை போன்ற அமைப்புகள்தான் என்றோ கூறுகிறார்கள். உண்மைதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் மதவாதிகளாக அமைவதற்கு முன்பே சாதியவாதிகளாக இருந்தனர் என்று கூறுவதில்லை. சாதி அமைப்புக்குப் பல நூற்றாண்டுக்கால வரலாறு உண்டு. மதவாதம் என்பது பின்னாளில் உருவான நிகழ்ச்சிப் போக்கு.
‘இந்துத்துவம்’ என்பது மதவாதம்தான் என்பதற்கு வி.டி.சாவர்க்கர் எழுதி 1923 இல் வெளியிட்ட ‘ இந்துத்துவம் அல்லது இந்து யார்’ (Hindutva or Who is Hindu) என்ற நூலில் உள்ள பின்வரும் பகுதி சான்றாகக் காட்டப்படுகிறது:
”ஒவ்வொரு இந்துவுக்கும்… இந்துஸ்தான் என்பது ஒரே சமயத்தில் தந்தை நாடாகவும் புண்ணியபூமியாகவும் உள்ளது. அதனால்தான், ஆதியில் இந்து அல்லாத மதத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் இந்துக்களோடு சேர்ந்து பொதுவான தாய்நாட்டையும், மொழி, சட்டம், பழக்கவழக்கங்கள், மரபான நம்பிக்கைகள், வரலாறு ஆகிய அடங்கிய ஒரு பொதுவான கலாச்சாரச் செல்வத்தின் பெரும் பங்கையும் சுவீகரித்தவர்கள் இந்துக்கள் அல்ல, இந்துக்களாக அங்கீகரிக்கப்பட முடியாதவர்களும் அல்லர்.
”இந்துக்கள் பலரைப் போலவே இந்துஸ்தான் அவர்களுடைய தந்தையர் நாடாக இருந்தாலும், அவர்களுக்கு அது புண்ணியபூமியாகவும் இருப்பதில்லை. அவர்களுடைய புனிதபூமி அரேபியாவில் உள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய கண்ணோட்டம் அந்நிய மூலாதாரத்தன்மையைக் கொண்டுள்ளது.
இந்துத்துவத்தின் அடிப்படைகளான இனம், இரத்தம், கலாச்சாரம், தேசியத்தன்மை ஆகிய எல்லாவற்றையும் கொண்டுள்ளவர்களும், வன்முறையின் மூலம் நமது முன்னோர்களின் இல்லத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்டவர்களும் நமக்கு எல்லோருக்கும் பொதுவான தாயின் மீது இதயம் நிறைந்த அன்பை வழங்கி, அந்தத் தாய் அவர்களது தந்தை நாடு மட்டுமல்ல, புனிதபூமியும் ஆகும் என்பதை ஏற்றுக் கொள்வார்களேயானால், அவர்கள் இந்துக்களின் மடியில் மிகவும் வரவேற்கப்படக்கூடியவர்களாக இருப்பர்.”

ஆர்.எஸ்.எஸின் இந்து ராஷ்ட்ரம்!
ஆக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உருவாக்க முனையும் இந்து ராஷ்டிரம் என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் எதிரானது என்பதுதான் கம்யூனிஸ்டுகளில் கணிசமானோர் பொதுவாகக் கொண்டிருக்கும் கருத்து. இந்தக் கருத்தைத்தான், கம்யூனிஸ்டுகள் அல்லாத ‘மதச்சார்பற்ற’ கட்சிகளும் ‘முற்போக்குச் சக்திகள்’ என்று சொல்லப்படுபவையும் பகிர்ந்து கொள்கின்றன.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, இந்து ராஷ்டிரம் என்ற கருத்தாக்கம் நால்வர்ண அமைப்பைப் போல மிகப் பழைமையானது. நால்வர்ண அமைப்பு, கடவுளால் உருவாக்கப்பட்டது என்றும், தொடக்கத்தில் ரிக் வேதத்திலும் பிறகு ஸ்மிருதிகள் (இந்துமதக் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள்), புராணங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை ஆகியவற்றிலும் சொல்லப்பட்டவைதான் என்றும் ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.
அதாவது, இந்து ராஷ்டிரம் சமத்துவமில்லாத, பாரபட்சம் உள்ள, நான்காம் வருணத்தினருக்கு இழப்பை ஏற்படுத்துகிற ஒரு முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
இந்து ராஷ்டிரம் பற்றிய முதன்மைக் கோட்பாட்டாளர்களான வி.டி.சாவர்க்கரும் எம்.எஸ்.கோல்வால்கரும் இந்து தேசத்தை ஒரு பிரமிட் போன்ற கட்டமைப்பு, அதாவது சாதியப் படிநிலை அமைப்பைக் கொண்ட கட்டமைப்பு என்பதைத் தங்கள் எழுத்துகளில் வெளிப்படையாக அறிவித்தனர்.

ஹெட்கேவரின் மறைவுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக இருந்தவரும் அந்த அமைப்புக்கு வலுவான கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கித் தந்தவருமான எம்.எஸ்.கோல்வால்கர் ‘சிந்தனைக் கொத்து’ என்னும் நூலில் பார்ப்பனிய வருண தர்மத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார்: “பார்ப்பனன் தலை, அரசன் கைகள், வைசியன் தொடை, சூத்திரர்கள் பாதங்கள். ஆக இந்த நான்கு வகை ஏற்பாடுதான். அதாவது, இந்து மக்கள்தான், நமது கடவுள்.” (Brahmin is the head, King the hands, Vaishya the thighs and Shudra the feet. This means that the people who have thus, four-fold arrangement, i.e., the Hindu people, is our God”. (Golwalkar, Bunch of Thoughts, Vikrama Prakashan, Bangalore, 1966)
கோல்வால்கர், மிகப் பிழையான ஆங்கிலத்தில் தனது முக்கியமான இரு நூல்களை எழுதியுள்ளதால், மேற்சொன்ன வாக்கியத்தில் அவர் இந்து மக்களைக் கடவுள் என்கிறாரா அல்லது நான்கு வகை ஏற்பாட்டைக் கடவுள் என்கிறாரா என்பது தெளிவாக இல்லை என்றாலும், சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பாகுபடுத்தி பார்ப்பனர்களைத் தலை என்று கூறுவதின் மூலம், மனு சாத்திரக்கருத்தையே – பார்ப்பனரின் மேலாண்மையையே… இங்கு வலியுறுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.
நாம் அல்லது இந்து தேசத்தன்மையை வரையறுத்தல்’ (We or our Nationhood Defined) என்ற நூலில் எம்.எஸ்.கோல்வால்கர், இந்து ராஷ்டிரம் என்பது நாடு, மரபினம் (Race), மொழி, மதம், பண்பாடு ஆகிய ஐந்து கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். ‘இந்துத்துவம் அல்லது இந்து யார்’ என்ற நூலில், சாவர்க்கரும் இதே ஐந்து கூறுகளைக் குறிப்பிட்டார். ஆனால், கோல்வால்கர் ‘மரபினம்’ (Race) என்று அடையாளப்படுத்தியதை சாவர்க்கர் ‘ஜாதி’ என்று அழைத்தார். நால்வர்ணக் கோட்பாட்டை அவர் ’வர்ண வியயவாஸ்ச்தா’ என்றும் அது இல்லாத நாடு மிலேச்ச நாடு (Foreign country) என்றும் கூறினார்.
தேசம் என்பது நான்கு வர்க்கங்கள் (வர்ணங்கள்) அனைத்தையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்து மதமும் கலாச்சாரமும் கட்டளையிடுகின்ற சமூக விதிகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் மிலேச்சர்கள்தான் என்றும் கோல்வால்கர் கூறினார்.
அவர்கள் இருவரையும் பின்பற்றுகிற ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை முதலியவை மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கின்றன. அது புரோகித-பார்ப்பனனுக்குக் கீழே உள்ளவனே அரசன் என்று கூறுகிறது. இதுதான் கோல்வால்கரின் கருத்தும் ஆகும். மேற்சொன்ன நூலின் முன்னுரையில் அவர் கூறுகிறார்… “நாங்கள் தேசத்தின் புத்துயிர்ப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறோமேயன்றி அரசியல் உரிமைகளுக்காக –அரசு என்று கூறப்படும் மூட்டை முடிச்சுகளுக்காக அல்ல. நமக்கு வேண்டியது சுயராஜ்யம்.”
‘சுய’ என்பது இந்துக்களையும் ‘ராஜ்யம்’ என்பது இந்து ராஷ்டிரத்தையும் குறிக்கின்றன. கோல்வால்கரின் கருத்துப்படி ‘தேசம்’ என்பது ‘அரசு’க்கு மேலானது என்பதால் ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்கு மேலானது. அதாவது பா.ஜ.க அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ் (அதாவது தேசம்) அமைப்புக்குக் கீழ்ப்படிந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், கம்யூனிஸ்டுகள் பலரும், மதச்சார்பற்ற கட்சிகள், முற்போக்குச் சக்திகள் ஆகிவையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இணைப்பின் மதவாதத்தை எதிர்த்து உறுதியாகப் போராட வேண்டும் அல்லது அதிகபட்சமாக சாதிய வன்முறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று கூறுகிறார்களேயன்றி அந்த இணைப்பின் தத்துவ அடிப்படையாக உள்ள சாதியமைப்பை ஒழிக்க உறுதியாகப் போராட வேண்டும் என்று அல்ல.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களான மகாத்மா ஜோதிபா புலெ, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் இந்த நால்வர்ண அமைப்பையும், அதை அடிப்படையாகக் கொண்டதும் படிநிலை ஏற்றத்தாழ்வைக் கொண்டிருப்பதுமான சாதியையும் ஒழித்துக்கட்ட விரும்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரை சாதி என்பது வர்க்கத்தைவிட மிகக் கொடுமையானது.
இந்தியாவில் வர்க்கங்கள் என்பன சாதியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
சாதியை ஒழித்துக்கட்டுதல் என்பது வர்க்கங்களை ஒழித்துக்கட்டுவதைவிடக் கடினமானது. அது ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களால் மட்டும் சாதிக்கக் கூடியது அல்ல.
அதற்கான அரசியல், பண்பாட்டுத் தளங்கள் உருவாக்கப்பட்டு பல தலைமுறையினரைச் சேர்ந்தவர்களால் விடாது மேற்கொள்ளப்படும் முயற்சியின் மூலமே கைகூடிவரும். எனவே, கம்யூனிஸ்டுகளும் முற்போக்குச் சக்திகளும் பாசிச பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைப்பவர்களும் சாதியை ஒழித்துக்கட்டுதல் என்பதைத் தங்கள் வேலைத் திட்டத்தில் இன்றியமையாத பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரலாற்று ரீதியாகப் பார்த்தால், சாதியப் படிநிலை அமைப்பின் தத்துவமான பார்ப்பனியம் வெவ்வேறு வடிவங்களில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வரும்.
பார்ப்பனியம் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் மிகச் சிறப்பான விளக்கமொன்றைக் கொடுத்தார்: பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள், பார்ப்பனர்கள் ஒரு சமூகம் என்ற வகையில் கொண்டிருக்கும் அதிகாரம், சிறப்புச் சலுகைகள், நலன்கள் என்பனவல்ல. நான் அந்தப் பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்தவில்லை, பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வின் மறுப்பு என்பதாகும்.
இந்தப் பொருளில் நாம் பார்த்தோமேயானால், பார்ப்பனியம் எல்லா வகுப்புகளிலும் கட்டுக்கடங்காதபடி இருப்பதைப் பார்க்கலாம். பார்ப்பனர்கள்தான் அதன் மூலகர்த்தாக்கள் என்ற போதிலும் அவர்களோடு மட்டும் அது மட்டுப்படுத்தப்பட்டிருப்பதில்லை. பார்ப்பனியத்தின் விளைவுகள் என்பன கலந்துண்ணல், கலப்புத் திருமணம் போன்ற சமூக உரிமைகளை மறுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது குடிமை உரிமைகளையும் (Civil Rights) மக்களுக்கு மறுத்தது. பொருளாதார வாழ்க்கையையும்கூட பாதிக்கும் அளவுக்குப் பார்ப்பனியம் அனைத்து வல்லமை பொருந்தியதாக உள்ளது.”
ஏணி மரப்படி போல் தீண்டாமை சமுதாயம் முழுவதையும் கவ்வியுள்ளது என்று பெரியார் கூறியது மேற்சொன்ன பொருளுக்கு அருகில் வரக்கூடியதாகும்.
சாதியை ஒழித்தல் சாத்தியமா?

இந்துத்துவா-கோர்ப்பரேட் கூட்டணி!
பிரமிட் போல் அமைந்த சாதிப் படிநிலை அமைப்பைக் கொண்ட சமுதாயத்திற்கு இது முழுமையாகப் பொருந்தும் உண்மை. எனினும் பார்ப்பனியத்தின் முதன்மை முகவர்களாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதை அண்ணல் அம்பேத்கர் மறந்துவிடவில்லை.
எடுத்துக்காட்டாக, ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாதோருக்குச் செய்ததென்ன?’ என்ற நூலில் அவர், பார்ப்பனர்கள் தமக்கு ஆளும் வர்க்கம் என்ற தகுதியைக் கொடுக்கக்கூடிய சத்திரியர்களின் வாளுடன் தங்கள் எழுதுகோலை இணைத்தும் தற்காலத்தில் பொருளாதார பலம் கொண்டுள்ள வைசியர்களுடன் (பனியாக்களின்) கூட்டுச் சேர்ந்தும் ஆளுகை புரிந்து வருவதைக் குறிப்பிட்டார்.
’எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ என்ற புகழ்பெற்ற வார ஏடு ஓகஸ்ட் 11, 2020 இல் வெளியிட்ட ஒரு ஆழமான ஆராய்ச்சிக் கட்டுரை (D Ajit, Han Donker, Ravi Saxena, Corporate Boards in India Blocked by Caste?) பின்வரும் புள்ளிவிவரங்களைத் தருகிறது: 2010 ஆண்டு நிலவரப்படி இந்திய கோர்ப்பரேட் நிறுவனங்களை இயக்கியவர்களின் (Corporate Board Members) சாதிகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு: மொத்தம் இருந்த 9,052 பேரில், முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களான பார்ப்பனர்கள் 4,057 (44.6%), வைசியர்கள் 4,167(46%), சிரியன் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற முற்போக்கு சாதியினர் 137 (1.5%), இதர பிற்பட்ட வகுப்பினர் (சாதியினர்) 346 (3.8%) பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடி மக்களும் 319 (4.5%). 2010 இல் இருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசியல் அங்கமான பா.ஜ.கவின் ஆட்சியின் கீழ் கோர்ப்பரேட் போர்டு உறுப்பினர்களில் முன்னேறிய சாதியினரின் விகிதாச்சாரம் இன்னும் அதிகரித்திருக்கும்.
இதுபோதாதென்று ஒன்றிய அரசாங்கத்தின் நிர்வாகப் பணிகளில் முன்னேறிய சாதியினரின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக ‘பொருளாதாரரீதியாக பலகீனமானவர்களுக்கு‘ (அதாவது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரையுள்ளவர்கள் அல்லது ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு) 10% இட ஒதுக்கீடு என்ற ஆர்.எஸ். எஸ் – பா.ஜ.கவின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக, ‘இந்துத்துவா-கோர்ப்பரேட் கூட்டணி’ என்பது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சொற்களில் கூறுவதென்றால், ‘பார்ப்பன-பனியாக் கூட்டணி’தான்.
இது ஒருபுறமிருக்க, இந்திய பாசிசமான பார்ப்பனியத்திற்கு, ‘கிளாசிக்கல் பாசிசம்’ அல்லது தற்காலத்தில் காணப்படும் ‘நவ-பாசிசம்’ போல ஒரு குறிப்பிட்ட அரசியல்,பொருளாதாரச் சூழல்தான் தேவைப்படும் என்று கருத முடியுமா?
பொருளாதார அடித்தளம், சமூக, அரசியல், பண்பாட்டு மேலடுக்கு (Base and superstructure) என்ற மார்க்ஸிய உருவகத்தை இந்தியச் சூழலில் வைத்துப் பார்த்த அம்பேத்கர் கூறினார்: அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்ற அடிப்படையில் மத, சமூக, அரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் அமைக்கப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோ, அந்த அளவுக்கு கட்டடமும் உண்மையானதுதான்.
அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால், அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோல், சமுதாயத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால், இருக்கும் சமூக, அரசியல் அமைப்புகளையும், இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும்.” (Quoted by Gail Pmvedt in Ambedkar: The Theory of Dalit Liberation, Frontier, Vol25, No.12 & 13, October 31, November 7, 1992)

அண்ணல் அம்பேத்கரின் இந்தக் கூற்று, பிரெடெரிக் எங்கெல்ஸ், ஜோசஃப் ப்ளாஹ் என்ற நண்பருக்கு 1893 ஜூலை 14 இல் எழுதிய கடிதத்தில் கூறிய பின்வரும் கருத்துகளுக்கு நெருக்கமாக உள்ளது: ”வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி, வரலாற்றில் இறுதியாகத் தீர்மானிக்கக்கூடியவை யதார்த்த வாழ்வை உற்பத்தி செய்தலும் மறு உற்பத்தி செய்தலும் ஆகும். இதற்கு மேல் மார்க்ஸோ, நானோ எதையும் எப்போதும் கூறியதில்லை. எனவே, எங்கள் கூற்றை, பொருளாதாரக் காரணி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய ஒரே காரணி என நாங்கள் சொல்வதாக யாரேனும் திரித்துக் கூறுவாரேயானால், அவர் இந்தக் கருத்தோட்டத்தை அர்த்தமற்ற அருவமான, அறிவுக்குப் பொருத்தமற்ற சொற்றொடராக மாற்றுகிறார்.
பொருளாதார நிலைமை என்பது அடித்தளம். ஆனால், மேல்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள் – வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்கள், அதன் விளைவுகள் (எடுத்துக்காட்டாக,போர்க்களத்தில் வெற்றி பெற்று வந்த ஒரு வர்க்கம் உருவாக்குகிற அரசியல் சாசனங்கள் போன்றவை), நீதி முறைமைகள், இந்த யதார்த்தமான போராட்டங்கள் அவற்றில் பங்கேற்போரின் மூளையில் ஏற்படுத்தும் மறுவினைகள் (Reflexes), அரசியல், நீதி பரிபாலன, தத்துவக் கோட்பாடுகள், சமயச் சிந்தனைகள், மீற முடியாத புனிதக் கோட்பாடுகளாக அவை அடையும் வளர்ச்சி ஆகியனவும் வரலாற்று முக்கியத்துவமுடைய போராட்டங்களில் தமது செல்வாக்கைச் செலுத்துகின்றன. பல சமயங்களில் அந்தப் போராட்டங்களின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் முதன்மைக் கூறாய் அமைகின்றன. மேற்சொன்னவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஊடாடுகின்றன.
இந்த ஊடாட்டத்தில்தான், முடிவே இல்லாதபடி நடக்கும் தற்செயல் நிகழ்வுகளுக்கிடையில்தான். அதாவது, எண்ணற்ற விஷயங்கள், நிகழ்வுகள், இவற்றில் உள்ளார்ந்த பரஸ்பரத் தொடர்புகள் – அவை இல்லவே இல்லை அல்லது பொருட்படுத்தத்தக்கவை அல்ல என நாம் கருதுமளவிற்கு நெடுங்காலத்துக்கு முந்தியவையாகவோ அல்லது நிரூபிப்பதற்கு சாத்தியமற்றவையாகவோ இருக்கின்றன. தவிர்க்க முடியாதது என இறுதியாக பொருளாதார இயக்கமே தன்னை அறுதியிட்டுக் கொள்கிறது. இல்லாவிட்டால், வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை எந்தவொரு வரலாற்றுக் கட்டத்திற்கும் பிரயோகிப்பது, இரண்டும் இரண்டும் நான்கு எனச் சொல்வதைவிட எளிதானதாக இருக்கும்.
நமது வரலாற்றை நாம்தான் உருவாக்குகிறோம். ஆனால், முதலாவதாக திட்டவட்டமான அனுமானங்கள், நிலைமைகள் ஆகியவற்றின் கீழ்தான். இவற்றில் பொருளாதார நிலைமைகள்தான் இறுதியில் தீர்மானகரமானவை. ஆனால், அரசியல் நிலைமைகள் முதலியன, ஏன் மனித மனங்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிற மரபுகளும்கூட, ஒரு பாத்திரம் வகிக்கின்றன, அது தீர்மானகரமான பாத்திரம் அல்ல என்னும் போதிலும்… இளம் எழுத்தாளர்கள் சில சமயம் பொருளாதாரப் பகுதிக்கு, அதற்கு உரியதைவிட அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்ற பழிக்கு மார்க்ஸும் நானும் ஓரளவு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். எங்களது முதன்மைக் கோட்பாட்டை மறுத்த எதிராளிகளுக்கு எதிராக நாங்கள் அதனை வலியுறுத்த வேண்டியிருந்தது.
பொருளாதாரக் கூறுகளுடன் ஊடாடும் பிற கூறுகளுக்கு அவற்றுக்கு உரிய மதிப்பை வழங்க எங்களுக்கு நேரமோ, இடமோ, வாய்ப்போ எப்போதும் கிடைக்கவில்லை. ஆனால், வரலாற்றின் ஒரு பகுதியை விளக்க நேர்கையில்,அது முற்றிலும் மாறுபட்ட விஷயமாகிவிடுகிறது. அங்கு எந்தத் தவறும் அனுமதிக்கப்படக்கூடியதல்ல.
எனினும், அவப்பேராக, பல சமயங்களின் நடப்பது என்னவென்றால், சிலர் ஒரு புதிய கோட்பாட்டின் முதன்மையான விதிகளைக் கிரகித்துக்கொண்ட நொடியிலிருந்தே (அவற்றையும்கூட அவர்கள் எல்லாச் சமயங்களிலும் சரியாகக் கிரகித்துக் கொள்வதில்லை) அக்கோட்பாட்டை முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டதாகவும் எவ்வித சிரமமுமின்றி அதைப் பிரயோகிக்க முடியுமென்றும் நினைக்கிறார்கள். மிக அண்மைக்காலத்தில் மார்க்ஸியவாதிகளாகிவிட்டவர்களைக்கூட என்னால் கண்டனம் செய்யாமல் இருக்க முடியாது.
ஏனெனில் திகைக்க வைக்கும் அறிவற்ற கருத்துகள் இந்த வட்டாரத்திலிருந்துதான் உருவாக்கப்பட்டுள்ளன.” (Karl Marx and Frederic Engels, Collected Works, Progress Publishers, Moscow. Volume 49, pp 33-36)