லெனினியமாக வாழ்கிற லெனின்!

-என்.குணசேகரன்

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22. அன்று, சோவியத் யூனியனின் நகரங்கள், கிராமங்கள் என எங்கு நோக்கினாலும் ஒரு முழக்கம் எதிரொலித்தது. அது, போஸ்டர்களையும் பேனர்களையும் அலங்கரித்தது. நாடு முழுவதும் எதிரொலித்த அந்த முழக்கம் மூன்று வாக்கியங்களை கொண்டது “லெனின் வாழ்ந்தார்!“ “லெனின் வாழ்கிறார்!” “லெனின் என்றும் வாழ்ந்திடுவார்!”. அன்று லெனின் பிறந்ததின நூற்றாண்டு.

தற்போது 55 ஆண்டுகள் கடந்து, 155 ஆவது லெனின் பிறந்த தினத்தினை கொண்டாடுகிற போதும் கூட, மேற்கண்ட முழக்கங்கள் முற்றிலும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளன. கடந்த 20 ஆம் நூற்றாண்டு மற்றும் நாம் வாழ்ந்து வருகிற 21 ஆம் நூற்றாண்டின் 25 வருடங்களிலும், அரசியல், சமூக, பொருளாதார, தத்துவார்த்த தளங்களில் மார்க்சியம், லெனினியம் பெரும் தாக்கம் செலுத்தி வந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முதலாளித்துவ எதிரிகள் லெனினியத்தை விமர்சிக்கலாம்; அவதூறு செய்யலாம்; அந்த தத்துவத்தைப் பின்பற்றிய நாடுகளின் ஆட்சியை கவிழ்த்திருக்கலாம். ஆனால் அந்த தத்துவம் மானுட சிந்தனையிலும், செயல்பாட்டிலும் எழுச்சியுடன் கம்பீரமாக மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பெரும்பாலான நாடுகளில் சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கங்களில் லெனினியச் சிந்தனைகள் வலுவான தாக்கத்தைச் செலுத்தி வந்துள்ளன. புரட்சி இலட்சியம் கொண்ட இயக்கங்கள் உலகம் முழுவதும் ஏற்ற இறக்கங்களோடு இயங்கினாலும், அவை அடக்குமுறைகள் பல கண்டு, நீடித்து வருகின்றன. அவற்றுக்கு அடிப்படையாக லெனினிய சிந்தனை அமைந்து வருகிறது. புரட்சிகர அரசியலில் லெனின் நீடித்து நிலைத்து வாழ்ந்து வருகிறார்.

ரஷ்ய வரலாற்றில் தத்துவப் போராட்டம்

மார்க்சியத்திலிருந்து லெனினியத்தை பிரிக்க இயலாது. லெனினியம் வரலாற்றின் போக்கை மாற்றி அமைத்த தத்துவம். ரஷ்ய வரலாற்றை எடுத்துக் கொண்டால் லெனினியம் நவம்பர் புரட்சிக்கு வித்திட்டது என்பதை அறிய முடியும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலும், முதல் பத்தாண்டுகளிலும், ரஷ்யா, புரட்சிகர மாற்றத்திற்கான பெரு நெருப்பை தன்னுள் கனன்று கொண்டிருந்தது. அன்றைய ஜார் மன்னராட்சி அனைவராலும் வெறுக்கத்தக்க நிர்வாகமாக மாறி இருந்தது. கடும் பொருளாதார நாசம்,கொடூரமான போர் ஏற்படுத்திய அவலங்கள்,வறுமை வேலையின்மை பிரச்சனைகளின் கோரத்தாண்டவம் என அனைத்தும் ரஷ்யாவில் பெரு வெடிப்பிற்கான சூழலை ஏற்படுத்தி இருந்தது.

ஏகாதிபத்திய உலக மேலாதிக்கம் எனும் சங்கிலியில் ஒரு பலவீனமான கண்ணியாக ரஷ்யா இருந்தது என்பது லெனின் வரையறுப்பு. சாதாரணமாக இப்படிப்பட்ட நிலைமைகளில், ஒரு இராணுவப் புரட்சி நிகழ்ந்திருக்கும். அல்லது தனிநபர் மற்றும் தனிநபர் குழு அதிகாரத்தை கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். வரலாற்றில் அவ்வாறு நிகழ்ந்ததுண்டு. ஆனால் ரஷ்யாவில் இலக்கு இல்லாத, திசை வழி தெரியாத புரட்சி நிகழவில்லை.மகத்தான சோசலிச எதிர்காலப் பார்வை கொண்டதாக நவம்பர் புரட்சி வெற்றி வாகை சூடியது. இதற்கு முக்கியக் காரணம், பல பத்தாண்டுகளாக ரஷ்யாவில் நடந்த தத்துவார்த்த விவாதங்களும் தத்து வார்த்த மோதல்களும்தான். அவை ரஷ்ய பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சிகரப் போதனைகளை ஆழமாகப் பதிய வைத்தன.

  • மார்க்சிய வாசிப்பு வட்டங்களில் மார்க்சியக் கல்வி,
  • முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை சாதிப்பதற்கான வியூகங்கள் பற்றிய கருத்து மோதல்கள்,
  • கட்சி கோட்பாடுகளை உருவாக்குவதற்கான கருத்துப் போராட்டம்
  • சோசலிச சமூக,பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கான கருத்துக்கள்
  • உலக ஏகாதிபத்தியத்தின் இயக்கம்
  • ரஷ்யாவில் வர்க்கங்களின் நிலை

என பல தளங்களில் கூர்மையான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த தத்துவார்த்தப் போராட்டங்களில் லெனின் தலைமைப் பங்கு வகித்தார். இந்த தத்துவப் போராட்டமும், நாடு முழுவதும் நடந்த வர்க்கப் போராட்டமும், கம்யூனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியை பலம் கொண்ட அமைப்பாக மாற்றியது; தொழிலாளி -விவசாயி வர்க்கக் கூட்டணியை முன்னெடுத்து, புரட்சியை சாதித்தது. இந்த தத்துவார்த்தப் போராட்ட வரலாறு என்பதில்தான், லெனினியம் உருவான வரலாறு அடங்கியுள்ளது. இந்தப் போராட்ட அனுபவச் செறிவில் உருவான லெனினியம், உலக புரட்சிகர இயக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான கொடை. இன்றளவும் இது சமூக மாற்றப் போராட்டங்களுக்கு வழிகாட்டி வந்துள்ளது.

லெனின் நடத்திய கருத்துப்போர்

லெனினது வாழ்க்கையின் துவக்கமே தத்துவார்த்தப் போராட்டமாகத் துவங்கியது. லெனினது மூத்த சகோதரர், ஜார் மன்னனான மூன்றாம் அலெக்ஸாண்டரை கொலை செய்ய முயற்சித்து, தோல்வியடைந்து, தூக்குத் தண்டனைக்கு ஆளாகி மரணித்தார். இந்த நிகழ்வு லெனினது சிந்தனைகளில் ஆழ்ந்த தாக்கத்தை இளவயதில் ஏற்படுத்தியது. மன்னராட்சியை வீழ்த்துவதற்கான உறுதிப்பாடு அவரது மனதில் வேரூன்றியது. மறுபுறத்தில் அவரது சகோதரர் சார்ந்த இயக்கத்தின் தத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில் லெனின் உறுதியாக இருந்தார்.

தனது 24 ஆவது வயதிலேயே ரஷ்யாவில் நரோத்தினியம் என்கிற தத்துவார்த்தப் போக்கினை வலுவாக விமர்சித்து தத்துவப் போராட்டத்தை நடத்தினார் லெனின். அவர் எழுதிய “மக்களின் நண்பர்கள் யார்?அவர்கள் எவ்வாறு சமூக ஜனநாயகவாதிகளை எதிர்க்கின்றனர்?” என்கிற நூல் ஒரு முக்கியமான கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த நூலில், ரஷ்ய முதலாளித்துவ வளர்ச்சி, புரட்சிகர தொழிலாளர் இயக்கம், வர்க்கப் போராட்டம் உள்ளிட்ட மார்க்சிய அடிப்படைகளை வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்த சில ஆண்டுகளில் “ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” என்ற சிறந்த ஆய்வு நூலை எழுதினார். இது ரஷ்ய முதலாளித்துவ வளர்ச்சி பற்றி அன்று நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இவ்வாறு அடுத்தடுத்து எழுந்த புரட்சிகர மாற்றம் குறித்த பல தத்துவார்த்த பிரச்சனைகள், அவற்றை ஒட்டி நடந்த கருத்துப் போராட்டங்கள் அனைத்தும் மாபெரும் வரலாறாக அமைந்துள்ளது. இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவ அடிப்படைகளை பாதுகாப்பதற்கான போராட்டம்; அரசு பற்றிய மார்க்சியப் பார்வை; புரட்சியை முன்னெடுக்கும் நடைமுறைகள்; சோசலிச கட்டுமானம் என கருத்து ரீதியான பல போர்முனைகளில் போராடி, லெனின் மார்க்சிய நோக்கிலான சரியான கருத்தாக்கங்களை நிறுவினார். இந்த பொதுக்கோட்பாடுகள் அனைத்தும் இன்றைய நடப்புகளுக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் ஆய்வு முடிவுகள் இன்றைய டொனால்டு டிரம்ப் தலைமை வைக்கும் அமெரிக்காவின் மேலா திக்கப் போக்குகளை சரியாக ஆராய்ந்து புரட்சி நடை முறைகளை உருவாக்கிட உதவுகிறது.

“புதிய வகையான கட்சி”

இந்தக் கருத்துப் போராட்டத்தில் கட்சிக் கோட்பாடுகளை உருவாக்குவதான போராட்டம் மிக முக்கிய மானது. “என்ன செய்ய வேண்டும்?” நூலில் லெனின் புதிய வகையான கட்சியை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார். இரண்டாவது ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் நடந்த உக்கிரமான கருத்துப் போரின் விளைவாக புரட்சிகரக் கட்சி கோட்பாடுகளை லெனின் உருவாக்கினார். இதனை “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” என்கிற நூலில் விளக்குகிறார்.

கட்சி உறுப்பினர் கடமைகள் உரிமைகள் வெகு மக்கள் ஸ்தாபனங்களின் பங்கு என விரிந்த அளவில் பல அம்சங்களில் கட்சிக் கோட்பாடுகள் இந்த விவாதத்தில் உருப்பெற்றன. ஜனநாயக மத்தியத்துவம் பற்றி இன்றளவும் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிரிகள் விமர்சித்து வருகின்றனர். எதிரிகள் மட்டுமல்லாது, மார்க்சிய இயக்கத்தில் இருந்து, தடம் மாறிச் சென்று துரோகம் இழைத்த பலரும் இந்தக் கோட்பாட்டை அவதூறு செய்து வருகின்றனர். இது லெனின் போதிக்கும் முக்கியமான ஸ்தாபனக் கோட்பாடு. ஜனநாயக ரீதியான விவாதங்கள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்பாட்டில் முழு ஒற்றுமையைக் கட்டுவதற்கு இந்த கோட்பாடு உதவுகிறது.

கட்சியின் பல்வேறு மட்டத்தில் செயலாற்றும் உறுப்பினர்கள் கருத்துக்களையும், கொள்கைகளையும் விவாதிப்பதற்கும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்குமான ஜனநாயகத்தை லெனினியம் வலியுறுத்துகிறது. இது கட்சியின் அமைப்புச் சட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. விமர்சனம், சுயவிமர்சனம் எனும் கோட்பாடு அடிப்படையிலும், இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோணத்தில் நிலைமைகளை ஆராய்கிறபோது வெளிப்படுகிற மாறுபட்ட கருத்துக்களும் விவாதிக்கப் படுகின்றன, இது குறிப்பிட்ட முடிவு எடுப்பதற்கு முந்தைய தருணங்கள். முடிவுகள் எட்டப்பட்ட பிறகு, ஒருவர் தனக்குள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, முடிவுகளை அமுலாக்கிட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பது மத்தியத்துவம். முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது, கட்சி முடிவுகளை விமர்சித்துப் பேசுவது, பொது வெளியில் விமர்சிப்பது போன்றவை ஒரு கம்யூனிஸ்ட் செயல்பாடாக இருக்க முடியாது. இது போன்ற தவறான நடைமுறைகள் கட்சியின் செயல்பாட்டையும், கட்டுப்பாட்டையும் பாதித்து புரட்சிகர இலட்சியத்தை நோக்கி முன்னேறுவதை தடுத்திடும். முதலாளித்துவக் கட்சிகளில் தனிநபர் முடிவுகள், தனிநபர் மேலாதிக்கம் நிலவுவது போன்ற நிலையை கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை உறுதியாக பின்பற்ற லெனினியம் வலியுறுத்துகிறது.

லெனினியப் பாதையில் மார்க்சிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க காலம் முதலே லெனினியக் கோட்பாடுகள் அடிப்படையில் பயணித்து வருகிறது. இன்றும் வாழ்ந்து வரும் தத்துவமான மார்க்சிய-லெனினியம் கட்சியின் வழிகாட்டும் தத்துவமாக அமைந்துள்ளது. இந்திய முதலாளித்துவம், இந்தியாவில் வர்க்கங்களின் நிலை, இந்தியப் புரட்சி போன்றவற்றை பகுப்பாய்வு செய்து, சோசலிசத்திற்கான இந்தியப் பாதையை கட்சியின் திட்டம் விளக்குகிறது. மூன்றாண்டு இடைவெளியில் நடைபெறுகிற கட்சியின் அகில இந்திய மாநாடு, அவ்வப்போதைய சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அரசியல், ஸ்தாபன நிலைபாடுகளை வகுக்கிறது. மதுரையில் நடைபெற்ற 24 ஆவது அகில இந்திய மாநாடு அரசியல் திசைவழியை செம்மையாக உருவாக்கியுள்ளது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முடிவும், அதற்கான வழிகாட்டுதல்களும் ஆழமான விவாதம் நடத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் முடிவுகளை அமுலாக்குவதில் உருக்கு போன்ற ஒற்றுமையுடன், புரட்சிகர வீச்சுடன் செயலாற்றுவோம்.

Tags: