காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதானா?

ராஜன் குறை 

ந்திய தேர்தல் ஆணையம் தேசிய அரசியல் கட்சி என ஒரு கட்சியை அங்கீகரிக்க அதன் மாநிலங்கள் அளவிலான தேர்தல் வெற்றிகளைத்தான் கணக்கில் கொள்கிறது. நான்கு மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும், அல்லது நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளும், நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற வேண்டும், அல்லது இரண்டு சதவீத நாடாளுமன்ற தொகுதிகளில் குறைந்தது மூன்று மாநிலங்களிலிருந்து வெல்ல வேண்டும். நான்கு வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால் சங்மாவின் நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 

இந்த விவரங்களை கணக்கில் கொண்டால் தமிழில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகளை நாம் ஒன்றியக் கட்சிகள் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். காரணம் முதலில் தேசிய கட்சிகள் என்றழைத்தால் மாநிலக் கட்சிகள் போலன்றி தேசம் முழுவதும் செல்வாக்கு பெற்றவை என்ற பிழையான தோற்றம் வருகிறது. இரண்டு தமிழில் “தேசிய” என்ற சொல் தேசியம் என்ற கருத்தியலையும் சுட்டுகிறது. அதனால் தேசிய கட்சிகளுக்குத்தான் தேசப்பற்று இருப்பது போலவும், மாநில கட்சிகளெல்லாம் குறுகிய அடையாளங்களைக் கொண்டாடுபவை என்ற பொருளும் வருகிறது. மாநில கட்சிகளும் தேசப்பற்று கொண்டவையே. இந்தியக் குடியரசின் இறையாண்மையை ஏற்று, மதித்து நடப்பவையே. அரசியலமைப்பு சட்டத்தை காத்து நிற்பவையே. இதனால் ஒன்றிய கட்சிகள், மாநில கட்சிகள் என்று வேறுபடுத்தி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

இறுதியாக ஒன்றியக் கட்சிகளும் அந்தந்த மாநிலங்களின் முன்னுரிமைகளை அனுசரித்துதான் அரசியல் செய்கின்றன. எல்லைத் தகராறு என்று வந்தால் கர்நாடக பா.ஜ.க கர்நாடகா சார்பாகவும், மகாராஷ்டிர பாஜக மகாராஷ்டிரா சார்பாகவும்தான் பேசும். அந்தந்த மாநிலத் தலைவர்களே தேர்தல்களில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிறார்கள். இதனால் ஒன்றியக் கட்சிகள் என்று குறிப்பிடும்போதுதான் அவற்றிற்கும், மாநில கட்சிகளுக்குமான வேறுபாடு துல்லியமாக வெளிப்படும். ஒன்றியக் கட்சி என்பது நான்கு அல்லது அதற்கு அதிகமான மாநிலங்களில் தடம் பதித்துள்ளது என்பதுதானே தவிர, மாநிலக் கட்சியைவிட “தேசிய” அளவில் முக்கியத்துவம் பெற்றதல்ல. 

தமிழ்நாட்டின் முதன்மையான ஒன்றியக் கட்சி காங்கிரஸ்

இந்தியாவில் தோன்றிய முதல் அரசியல் கட்சி காங்கிரஸ் என்பதைவிட இந்தியா என்ற தேசியக் கருத்தாக்கமே இந்திய தேசிய காங்கிரஸ் 1885 ஆம் ஆண்டு தோன்றியபோதுதான் உருவானது என்றும் கூறலாம். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி அமைப்புகள் உருவானபோது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சி அமைப்புகள் உருவாயின. வ.உ.சிதம்பரனார், திரு.வி.கலியாணசுந்தரனார் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்கள் உருவானார்கள். பெரியாரே காங்கிரசில்தான் தன் அரசியல் வாழ்வைத் துவங்கினார். மகாத்மா காந்தியின் செல்வாக்கு தமிழ்நாட்டு மக்களிடையேயும் பெருமளவு பரவியது. 

காங்கிரஸ் கட்சி என்பது பல்வேறு சிந்தனைப் போக்குகள் கொண்டவர்கள், கருத்தியல் கொண்டவர்கள் இணைந்து பணியாற்றும் பேரியக்கமாக இருந்தது. சோஷலிஸ்டுகளும் இருந்தார்கள். பெருமுதலீட்டிய ஆதரவாளர்கள், சுதந்திரச் சந்தை ஆதரவாளர்களும் இருந்தார்கள். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க பார்ப்பனரும், மரபுவாத சிந்தனை கொண்டவர்களும் இருந்தார்கள்; முற்போக்கு சிந்தனை கொண்ட பார்ப்பனரல்லாத தலைவர்களும் இருந்தார்கள். உதாரணமாக சுதந்திரத்திற்குப் பிறகு தேர்தல் நடந்து காங்கிரஸ் மந்திரி சபை அமைந்தபின் ராஜாஜிக்கும், காமராஜருக்கும் முரண் ஏற்பட்டபோது திராவிட இயக்கத்தினர் காமராஜரை ஆதரித்தனர். காங்கிரசிலிருந்த பார்ப்பனரல்லாதோரை “காங்கிரஸ் திராவிடர்கள்” என்று அழைத்தனர். 

மெட்ராஸ் பிரசிடென்ஸியாக 1952 இலும், மொழிவாரி மாநிலங்கள் தோன்றியபின் இன்றுள்ள மாநிலமாக 1957, 1962 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி செய்தது. காமராஜர் முதல்வராக இருந்த 1954 முதல் 1963 வரையிலான காலத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வலுவடைந்தது; கணிசமான வளர்ச்சிப் பணிகள், குறிப்பாக பள்ளிக் கல்வியில் நடந்தன. ஆனால், ஒன்றிய அளவில் இந்தி மொழியை ஒன்றிய அரசின் ஒரே அலுவல் மொழியாக மாற்ற வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் வட நாட்டு தலைவர்கள் சிலருக்கு இருந்தது. பார்ப்பனீய மீட்புவாத சக்திகள் இதனை வலியுறுத்தின. 

பார்ப்பனரல்லாதோர் நலன்கள், உரிமைகள், தமிழ் நாட்டு நலன், உரிமைகள், தமிழ் மொழி பாதுகாப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான திராவிடர் கழகம், அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை வேர்மட்ட அளவில் மக்களிடையே பரவத் தொடங்கின. இந்தி மொழி ஆதிக்கம் என்பது பார்ப்பன பனியா ஆதிக்கமாக புரிந்துகொள்ளப்பட்டதில் தென்னிந்திய கூட்டாட்சிக் குடியரசாக திராவிட நாடு என்ற தனிக் குடியரசு உருவாக்கும் கோரிக்கையை திராவிட இயக்கம் கொண்டிருந்தது.  குறிப்பாக அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு வலுவான வேர்மட்ட சாமானியர்களின் கட்சி அமைப்பாக வலுப்பெற்றது. தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகள் பிரிவினைக் கோரிக்கையை பேசமுடியாது என்ற சட்டம் இயற்றப் பட்டபின், தி.மு.க இந்தியக் கூட்டாட்சி குடியரசில் தொடரவும், மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தவும் முடிவு செய்தது. இந்தி மொழி ஆதிக்கத்தை தடுப்பதில் வெற்றிபெற்றதுடன், 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியையும் கைப்பற்றியது தி.மு.க. அதனைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிகளே பள்ளிகளில் போதிக்கப்படும் என்ற இருமொழிக்கொள்கையை உருவாக்கி நிலைபெறச் செய்தது. 

பின்னர் 1969 இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தி தலைமையில் இயங்கிய சோஷலிச நோக்கு கொண்ட காங்கிரசை கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆதரித்தது. அதன் பின் 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜர், ராஜாஜி ஆகியோர் ஒருபுறமும், கலைஞர்-இந்திரா காந்தி மறுபுறமுமாக தேர்தல் முரண்களம் உருவானது. தி.மு.க – இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெருவெற்றி பெற்றது. வங்க தேச போரில் வென்றது, ஏழ்மை ஒழிப்பு முழக்கம் போன்றவற்றால் இந்திரா காந்திக்கும் கணிசமான செல்வாக்கு உருவானது. “இந்திரா இந்தியாவே, இந்தியா இந்திராவே” என்று கவிதை எழுதப்படும் அளவுக்கு அவருக்கு புகழ் சேர்ந்தது. தமிழ்நாட்டு மக்களிடையே நேரு குடும்பத்தின் மீதான நன்மதிப்பு தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது.

அதன் பின் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து விலகி அண்ணா தி.மு.க என்று புதுக்கட்சி கண்டதில், தமிழ்நாட்டு தேர்தல் களம் இந்த இரு மாநில கட்சிகளுக்குமான முரண்களமாக உருவாகிவிட்டது. காங்கிரஸ் ஒன்றிய அரசியலின் பல்வேறு முரண்களுக்கு ஏற்ப தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டுடனும் கூட்டணி அமைப்பது வழக்கமானது. காங்கிரசிற்கும் மாநில கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற எண்ணம், அதன் மூலம் தானே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம்கூட  அவ்வப்போது தோன்றினாலும், அவ்வாறு செய்யும் தருணங்களில் அந்த கூட்டணி தோல்வியே கண்டது.

காங்கிரஸ் கட்சி துவக்கம் முதலே பல்வேறு கருத்தியல் போக்குகளுக்கும், பன்மைத்துவத்திற்கும் இடமளிக்கும் கட்சி என்பதால், அது அதிக முரண்கள் இல்லாமல் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமாகவே இருந்து வந்துள்ளது. மேலும் காங்கிரஸ் வரலாற்றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது கருத்தியல் அடிப்படைகளை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது என்பதையும் நாம் காண முடியும். இன்று ராகுல் காந்தி மாநில சுயாட்சிக்கும், பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் நலன்களுக்கும் வெளிப்படையாக ஆதரவு தருபவராக இருக்கிறார் என்பதால் தி.மு.க காங்கிரசுடன் வலுவான உறவில் இருப்பது இயல்பானதாக இருக்கிறது.  

தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாத ஒன்றியக் கட்சி பா.ஜ.க   

காந்தியின் அகிம்சையும், மதநல்லிணக்க நோக்கும் பிடிக்காத பார்ப்பனீய இந்து மத அடையாள நோக்கும், ராணுவ வாத கற்பிதங்களும் நிறைந்த இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகள் மராத்திய பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களான சாவர்க்கர், மூஞ்சே, ஹெட்கவார், கோல்வால்கர் ஆகியோரால் துவங்கப்பட்டன. அந்த அமைப்புகளின் அரசியல் கட்சியாக ஜனசங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே வட மாநிலங்களில் மார்வாரி, பனியா வர்த்தக சமூகங்களின் ஆதரவில் உருவான உருது மொழி நீக்கம் செய்யப்பட்ட, சமஸ்கிருதமயமான இந்தி மொழி, இந்து அடையாள பொதுமன்றம் இந்துத்துவ கருத்தியலுக்கு இசைவான சக்திகளை கட்டமைத்தது. “இந்து, இந்தி, இந்தியா” என்ற முழக்கத்தில் அடையாளமாகும் இந்து ராஷ்டிர கருத்தியல் இவர்களால் உருவாக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை, சமதர்ம குடியரசு நோக்கிற்கு முற்றிலும் எதிரான கருத்தியல்தான் மராத்திய பார்ப்பன சமூகத்தினரின் இந்துத்துவ கருத்தியல். அதனால் தமிழ்நாட்டில் அந்த கருத்தியலுக்கு துவக்கம் முதலே எந்த வரவேற்பும் இருக்கவில்லை. தமிழ்நாட்டில் செழித்தோங்கியிருந்த இறையியல் சிந்தனைகளுக்கும், வழிபாட்டு மரபுகளுக்கும் மராத்தியத்தில் உருவான இந்து அரசியல் அடையாளத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்து அரசியல் அடையாளம் வட மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டது. இது முஸ்லீம்களை மேலும் அன்னியப்படுத்தியதால் பாகிஸ்தான், இந்தியா என்று இருதேசங்கள் உருவாகவும், பெரும் வன்முறை வெடிக்கவும் காரணமானது. இதன் தொடர்ச்சியாக இந்துத்துவ அணிகளில் பயிற்சிபெற்ற, சாவர்க்கரின் சீடரான நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார்.

அதன் பின் முப்பதாண்டுகளாக ஒன்றிய அளவிலும் ஜன சங்கத்தால் கணிசமான நாடாளுமன்ற இருக்கைகளை பெறமுடியவில்லை. அதிகபட்சமாக 35 இருக்கைகளை 1967 ஆம் ஆண்டு பெற்றனர். தமிழ்நாட்டில் அங்கும், இங்கும் அமைப்புகள் தோன்றினாலும் தேர்தல் களத்தில் தடம் பதிக்க இயலவில்லை. 

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவிக்கும் தவறைச் செய்ததால், அதன் பிறகு நடந்த 1977 தேர்தலில் இந்துத்துவர்கள் ஜனதா கட்சியில் ஐக்கியமாகி ஒன்றிய அமைச்சரவையில் முதன்முறையாக இடம் பெற்றனர். கட்சியின் பிற பிரிவினர் ஜனசங்கத்திலிருந்து வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாக தொடரக்கூடாது என்று கூறியதை ஏற்காததால் ஜனதா கட்சி பிளவு பட்டு ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாரதீய ஜனதா கட்சியைத் தோற்றுவித்தனர். இந்திரா காந்தி படுகொலை, அதன் பின் ராஜீவ் காந்தி படுகொலை ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்தபோது, ராம ஜன்ம பூமி இயக்கம், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு என மதவாத அரசியல் செய்து வட மாநிலங்களில், குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில் காலூன்றினர். 

உத்திரப்பிரதேசத்தில் தோன்றிய பிற்படுத்தப்பட்டோர், தலித் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதவாத அடையாளத்தை வைத்துக் களமாடி தங்களை வளர்த்துக் கொண்டனர். குஜராத்தில் காங்கிரசின் உட்கட்சி முரண்களை பயன்படுத்திக்கொண்டு அரசைக் கைப்பற்றினர். வேர்மட்டத்தில் முஸ்லீம் வெறுப்பை, இந்து அடையாளவாதத்தை பிரசாரம் செய்து தங்களை வளர்த்துக் கொண்டனர். அதன் பின் குஜராத் பெருமுதலீட்டிய ஆதரவைப் பெற்றனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களையும் காங்கிரசிடமிருந்து கைப்பற்றினர். பீஹார், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் மேல் சவாரி செய்வது. அவற்றை பலவீனப்படுத்திப் பிளப்பது ஆகியவற்றின் மூலம் வலுப்பெற்றனர். 

தமிழ்நாட்டில் 1984, 1989, 1991, 1996 ஆகிய நான்கு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க தடயமே இல்லை. முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வென்றனர். ஒன்றியத்தில் வாஜ்பேயி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவந்த தி.மு.க அரசை பதவிநீக்கம் செய்யச்சொல்லி அ..இ.அ.தி.மு.க வற்புறுத்தியதற்கு வாஜ்பேயி இணங்காததால் ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டார். தி.மு.க-வை அரசியலில் தனிமைப்படுத்த நடந்த சதி காரணமாக 1999 தேர்தலில் தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வென்றனர். இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் பலவீனம் மற்றும் தவறான நிலைபாடுகள் காரணமாக மாநில கட்சிகளின் உதவியுடன் தமிழ்நாட்டில் 3, 4 நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்றது பா.ஜ.க. 

அதன்பிற்கு நடந்த 2004 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தும் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. அடுத்த 2009 தேர்தலில் தனித்து நின்று துடைத்தெறியப்பட்டது. இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய 2014 தேர்தலில், பாமக, தே.மு.தி.க, மதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்து எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வென்றது. அதன் பிறகு நடந்த 2019, 2024 ஆகிய இரண்டு தேர்தல்களில் தி.மு.க தலைமையிலான யூ.பி.ஏ/இந்தியா கூட்டணிகளிடம் முழுமையாக தோல்வியடைந்தது. எத்தனையோ முறை பிரதமர் மோடி பிரசாரத்திற்கு தமிழ்நாடு வந்த போதும் ஒரு சிறிய அலையைக் கூட ஆதரவாக உருவாக்க முடியவில்லை. 

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த ஐந்தாண்டுகளாக தி.மு.க ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை விளைவித்து வருகிறது. புதிய கல்விக்கொள்கையை, மும்மொழித் திட்டத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்துகிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கான அச்சாரமே அது என்பது வெளிப்படை. நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது. மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முறைப்படி சட்டமியற்றியும், விலக்களிக்க மறுக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் மாநில அரசியலையே பலவீனப்படுத்த முயல்கிறது. தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மதவாத அரசியலைக் கூர்மைப்படுத்துகிறது. ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து பெரும் தேர்தல் நிதியை தேர்தல் பத்திர ஊழல் மூலம் குவித்துள்ளது. ஆளுனரின் ஒத்துழையாமை உச்சநீதிமன்றத்தால் கடுமையாக க் கண்டிக்கப்பட்ட பிறகும் ஆளுனர் ஆர்.என்.ரவியை பதிவிக்காலம் முடிந்தும் விலக்கிக்கொள்ள மறுக்கிறது. 

இத்தனைக்கும் பிறகும் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்று அ.இ.அ.தி.மு.க நம்புவதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதே கேள்வி. 

Tags: