பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வல்லமை யாரிடம்..?
-அ. குமரேசன்

“பத்திரிகைச் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்பது மட்டுமல்ல, ஜனநாயகமே அதுதான்.” -வால்டர் குரோங்கைட்
நேர்மையான, நம்பகமான ஊடகவியல் பணிக்கான ஒரு முன்னுதாரணமாக உலக அளவில் கொண்டாடப்படுபவர் வால்டர் குரோங்கைட் (1916–2009). அவருடைய இந்தக் கருத்தும் ஊடகவியலாளர்களால், ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றைய வளர்ச்சியில் பத்திரிகை என்பது அனைத்து ஊடகங்களுக்குமான அடையாளம் தான். ஆகவே தான், உலகப் பத்திரிகைச் சுதந்திர நாளுக்கான (மே 3) ஓவியச் சித்தரிப்புகள் அனைத்தும் பேனா, ஒலிவாங்கி, கைப்பதிவுக் கருவி, கைப்பேசி, கணினித் தட்டச்சுப் பலகை உள்ளிட்ட அடையாளங்களோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
பத்திரிகைச் சுதந்திரம் என்றால், அது பத்திரிகையை நடத்துகிற நிறுவனம் அல்லது குழு அல்லது தனி மனிதர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம் அல்ல. செய்திக்கும் கருத்துக்குமான வெளிப்பாட்டுச் சுதந்திரம் அது. அரசுகளின் கெடுபிடிகள் சந்தைச் சக்திகளின் ஆதிக்கங்கள், கும்பல்களின் மிரட்டல்களை மீறுவதோடு, நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களையும் – ஏன் சொந்தக் குடும்பத்தின் நிலைமைகளையும் – மீறுகிற சுதந்திரம். சுதந்திரத்தின் ஓர் அங்கமே மீறல். சும்மாக் கிடந்த பூமியை உலகமாய் மாற்றிய உழைப்பாளிகளின் கைகளோடு ஊடகத்தினரின் இந்தச் சுதந்திர வெளிப்பாடும் இணைகிறது.

எதைப் பற்றியும் சொல்வதற்கு, விமர்சிப்பதற்கு, எதிர்ப்பதற்கு உள்ள உரிமையே சுதந்திரம். பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இது மிகப் பொருந்துவது. அந்தச் சுதந்திரத்தை அரசாங்க அதிகாரமோ, மதபீடங்களின் கட்டளையோ, இன்னும் எதையும் அடக்கி வைப்பதற்கென என்னென்ன இருக்கிறதோ அவற்றின் கட்டாயமோ எதுவும் ஒடுக்க முடியாது, ஒடுக்கக் கூடாது.
மறுப்புச் சுதந்திரம்
ஜனநாயகம் என்றால், எதிர்ப்பவரின் சுதந்திரத்தோடு நிற்பதல்ல, எதிர்க்கப்படுகிறவர் அதை மறுப்பதற்கான சுதந்திரத்தோடும் இணைவது. ஒரு போர் தொடங்குகிறதென்றால், அந்தப் போர் தேவையற்றது, அநீதியானது என்று ஒருவர் கருதுவாரானால், அதை எழுதுகிற உரிமை உறுதிப்பட வேண்டும். தேசப்பற்றின் பெயரால் அது ஒடுக்கப்படக் கூடாது. அவருடைய கருத்து தவறானது, ஏற்க முடியாதது என்று இன்னொருவர் கருதுவாரானால் அதை எழுதுகிற உரிமையும் உறுதிப்பட வேண்டும்.

ஆனால், என்ன நடக்கிறதென்றால், நாடுகளின் ஆட்சியாளர்கள் வேறொரு நாட்டுக்கு அல்லது ஏதோவொரு அமைப்புக்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டால், கையைக் கட்டிக்கொண்டு அதை ஏற்க வேண்டும் அல்லது எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. மீறி எழுதுகிறவர்களின் கைகள் கட்டப்படுகின்றன.
அதே போல், ஓர் ஆன்மீகச் சடங்கின் பெயரால் அத்துமீறல் ஒன்று நடக்கிறது, அறியாமை வளர்க்கப்படுகிறது என்று ஒருவர் கருதுவாரானால், அதைச் சொல்வதற்கான உரிமை இருக்கிறது, இருக்க வேண்டும். சடங்கை நடத்துகிறவர்கள் அத்துமீறலோ, அறியாமை வளர்ப்போ ஏதுமில்லை என்று மறுப்பதற்கான உரிமையையும் நாம் மறுக்கப் போவதில்லை.
ஆனால், என்ன நடக்கிறது என்றால், சடங்கைக் கேள்விக்கு உட்படுத்துகிறவர்கள் ஒழுக்கமற்ற மத விரோதிகளாகக் காட்டப்படுகிறார்கள். அவரைப் பார்ப்பதோ, அவர் எழுதியதைப் படிப்பதோ கடவுளுக்கு எதிரான செயல் என்பதாக, அச்சுறுத்தப்படுகிறார்கள்.
சிறைகளில் 361 பேனாக்கள்
உலகம் முழுவதும் ஆட்சியாளர்களை, மதபீடங்களை, கோர்ப்பரேட்டுகளை விமர்சித்ததற்காக 361 ஊடகவியலாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது 2025 ஜனவரி 1 நிலவரம். பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (CPJ), எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் (RSF) ஆகிய அமைப்புகள் இதைத் தெரிவிக்கின்றன. இந்தக் காரணங்களுக்காக, ஆனால் வேறு புகார்களைப் புனைந்து சிறைகளில் அடைக்கப்பட்டு, விசாரணை வெளிச்சத்துக்காகக் காத்திருக்கிற ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள். ஆகவே துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன.

இது பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் உடன் பங்கேற்ற நண்பர் பெருமளவுக்கு சமத்துவத்தை நிலைநாட்டியுள்ள முற்போக்கான நாடுகளில் கூடப் பத்திரிகையாளர்கள் சிறையிடப்பட்டிருக்கிறார்களே என்று கேட்டார். நான் அதை நியாயப்படுத்துவேன் என்று எதிர்பார்த்தார் போலும். “உண்மைதான். அதை நான் ஏற்கவில்லை. சமத்துவப் பாதையில் அது ஒரு சங்கடமான, அழகைக் கெடுக்கிற பள்ளம்தான்,” என்று பதிலளித்தபோது விவாத நெறியாளரும் வியப்பை வெளிப்படுத்தினார்.
செய்திப் பணிக்காக என்ற போர்வையில், வேறு வகையான திருக்காரியங்களில் இறங்கியவர்கள் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அரசுகள் கூறுகின்றன, அது பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அதைச் சொல்லி, உண்மையிலேயே விமர்சனக் கருத்துகளை வெளிப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பார்களானால், அதை எதிர்க்கிறவர்களோடு நானும் சேர்ந்து நிற்கிறேன் என்று தொடர்ந்து நான் கூறியதை விவாதக் குழுவினர் அங்கீகரித்தார்கள்.
இப்படியொரு நெருக்கடி
இது ஒருபுறமிருக்க, உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகள் ஊடகச் சுதந்திரத்தில் கை வைக்கின்றன என்று எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் (RSF) அமைப்பு மே 2 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியியிருக்கிறது. நாடுகளின் நிதி நெருக்கடியும், ஊடக நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் சந்தை சார்ந்த சவால்களும் சமரசப் போக்குடன் செயல்படும் கட்டாயச் சூழலை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக, பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்து வந்த பல பெரும் நிறுவனங்கள் படிப்படியாக அந்த விளம்பரங்களைக் குறைத்து விட்டன, பொது இடங்களில் பெரிய டிஜிட்டல் பலகைகள் நிறுவுவது, விளையாட்டுப் போட்டி மைதானங்களில் விளம்பரப் பதாகைகளை வேலியாக வைப்பது, அவற்றை நடத்துகிற அமைப்புகளுக்கும் ஒளிப்பதிவு நிறுவனங்களுக்கும் பெருந்தொகை கொடுப்பது என்று போய் விட்டார்கள். இதனாலும், உண்மையான ஊடக நெறிகளோடு செயல்படும் நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றன. நெறிகளையும், ஊடகவியலாளர்களையும் பாதுகாத்துத் தக்கவைக்கப் போராடுகின்றன.
ஊடகங்களின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், விளம்பரதாரர்களின் ஜனநாயகப் பொறுப்பை நிறுவுதல், நம்பகமான செய்திகளை உறுதிப்படுத்துவதற்காக பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரிவிதித்தல் ஆகியவை உள்ளிட்ட 11 கொள்கைப் பரிந்துரைகளை ஆர்.எஸ்.எஃப் முன்வைத்திருக்கிறது. அவற்றின் அடிப்படையில் பேச்சுகள் நடத்தப்பட்டு புதிய உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியிருக்கிறது.
நாடுகளிடையே பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), உலக செய்தி வெயியீட்டாளர்கள் சங்கம் – செய்தி வெளியீட்டு ஆராய்ச்சி மற்றும் சேவைகள் சங்கம் (WAN-IFRA), நாடுகளிடை ஊடக ஆதரவு (IMS) உள்ளிட்ட, உலக அளவில் பத்திரிகைச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வரும் அமைப்புகள் இதை முன்னெடுக்க முடியும். 1993 முதல் ஆண்டு தோறும் மே 3 அன்று உலக பத்திரிகைச் சுதந்திர நாளாகக் கடைப்பிடிக்கும் தீர்மானத்தை 1993 இல் நிறைவேற்றியது ஐக்கிய நாடுகள் அமைப்பு. அதன் மனித உரிமை உயர் ஆணையர், கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திர தனித் தொடர்பாளர், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் (UNESCO) தலைமை இயக்குநர் ஆகியோர் இதனைத் தங்களின் செயல் நிரல்களில் சேர்க்க வேண்டும்.