அமெரிக்கா, சீனா பரஸ்பரம் வரி குறைப்பு

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்படி சீன பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது.
இதன்பிறகு இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரி விகிதங்களை அதிகரித்தன. இறுதியில் சீன பொருட்களுக்கு 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. சீன அரசு சார்பில் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்து வந்தது. இதன்காரணமாக சுமார் 600 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதனிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்கா, சீனாவை சேர்ந்த உயரதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 11-ம் திகதி இருதரப்பு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதுகுறித்து அமெரிக்கா, சீனாவின் தரப்பில் ஜெனீவாவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 145 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேபோல சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்கா மற்றும் சீன அரசுகள் தரப்பில் பரஸ்பரம் 115 சதவீதம் வரிகுறைப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தரப்பில் 30 சதவீத வரி விதிக்கப்படும். இதேபோல அமெரிக்க பொருட்களுக்கு சீன அரசு தரப்பில் 10 சதவீத வரி விதிக்கப்படும்.
புதிய வரி விகிதம் மே 14-ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த 90 நாட்களுக்கு இந்த வரி விகிதம் அமலில் இருக்கும். வரி விகிதம் தொடர்பாக இரு நாடுகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. புதிய வரிவிதிப்பு தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவின் சார்பில் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்வு எட்டப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்கா, சீனா இடையேயும் சுமுக தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இரு நாடுகள் இடையே நீடித்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. இவ்வாறு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். சீனாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க பிரதிநிதி ஜேமிசன் கிரீன் கூறும்போது, “இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மைதான்.
ஆனால் அவை மிகப்பெரிய பிரச்சினைகள் கிடையாது. வரி விதிப்பில் அமெரிக்கா, சீனா இடையே சுமுக தீர்வு எட்டப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். சீன வணிகத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறியதாவது: உலக நாடுகளின் நன்மையை கருதி அமெரிக்காவும் சீனாவும் வரிவிதிப்பு விகிதங்களை பரஸ்பரம் குறைத்துள்ளன.
இதன்மூலம் இரு நாடுகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் பயன் பெறுவர். அமெரிக்கா, சீனாவின் தரப்பில் ஒருங்கிணைந்த குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரிவிகிதம் தொடர்பாக எதிர்காலத்தில் எழும் பிரச்சினைகளுக்கு இந்த குழு தீர்வு காணும். இவ்வாறு சீன வணிகத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.