போர் நிறுத்தமும் பதிலற்ற கேள்விகளும்!

சத்யா சிவராமன் 

பரேஷன் சிந்தூரையும் அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கும் பிறகு, இந்தத் தீர்மானத்தின் தன்மை, இந்தியாவின் இறையாண்மையையும் வெளியுறவுக் கொள்கையையும் அது எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்துப் பல தொந்தரவான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தப் போர் நிறுத்தம் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் புதுடெல்லியிலிருந்து வரும் முரண்பாடான கதையும் மிகவும் கவலைக்குரியது.

மே 10 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து ஏற்பாடுசெய்த போர் நிறுத்தம்” என்று இதற்கான பெருமையைக் கோரினார். இரு நாடுகளுக்கும் இடையே “அணுசக்திப் போரை”த் தடுக்க வர்த்தகம் என்னும் அம்சத்தைப் பயன்படுத்தியதாகக் கூறினார். 

மே 13 அன்று சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்த டிரம்ப், அணு குண்டுகளைப் பரஸ்பரம் அனுப்பிக்கொள்வதற்குப் பதிலாக இரு நாடுகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் ‘அழகான பொருட்களை’ வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்தியாவும் பாகிஸ்தானும் பொதுவானதொரு பிரதேசத்தில் காஷ்மீர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுசெய்ய முன்வந்த அவர், “நல்ல இரவு உணவை ஒன்றாகச் சேர்ந்து” உண்ணலாம் என்றும் பரிந்துரைத்தார். 

இந்திய அரசாங்கம், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மூலம் டிரம்பின் கூற்றுக்களைத் திட்டவட்டமாக மறுத்தது. இந்திய, அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே “வர்த்தக அம்சம் எந்த விவாதத்திலும் வரவில்லை” என்று கூறியது. டிரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில் போர்நிறுத்தத்தை அறிவிப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, மே 10 அன்று இந்தியா, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின்போது, ​​”புரிந்துணர்வுக்கான குறிப்பிட்ட தேதி, நேரம் வார்த்தைகள்” ஆகியவை நேரடியாகத் தீர்மானிக்கப்பட்டதாக ஜெய்ஸ்வால் கூறினார்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்த முரண்பாடு கடுமையான கவலைகளை எழுப்புகிறது. டிரம்ப் பொய் சொல்கிறாரா, அல்லது மோடி அரசாங்கம் அமெரிக்க மத்தியஸ்தத்தை அனுமதித்ததுவிட்டுப் பிறகு அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறதா? எழுபது ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் கொண்டுசெல்ல இந்தியா அனுமதித்ததா? டிரம்ப் இந்தியாவை பாகிஸ்தானுக்குச் சமமாக வைத்துப் பேசுவதை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா? இவை அனைத்தும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் பெரிய தோல்விகள் இல்லையா?

26 அப்பாவி உயிர்களைக் கொன்ற கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து ராஜதந்திரத்தின் மீது கவனம் மாறியுள்ளது என்பது இன்னும் கவலைக்குரியது. இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் சித்தாந்த வெற்றிகளுக்காக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் உள்ளனர். ஒபரேஷன் சிந்தூரின் பரபரப்பு அடங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதாகத் தெரியவில்லை.

இந்த மோதலைச் சுற்றியுள்ள சொல்லாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய அதிகாரிகள் “போருக்குச் செல்லவில்லை”, ஆனால் “பாகிஸ்தான் நிலப்பரப்பில் பயங்கரவாத முகாம்களை அழித்தோம்” என்று கூறுகிறார்கள். இரு நாடுகளும் அதிகரித்துவரும் தீவிரத்துடன் சிவிலியன் உள்கட்டமைப்பைக் குறிவைத்தபோது இந்த இரண்டு கூற்றுகளுக்குமிடையிலான வேறுபாடு அர்த்தமற்றதாக ஆகிறது. இரு தரப்பினருமே தாக்குதல்கள் “மேலும் கடுமையான மோதலாக மாறாது” என்று விவரித்தனர். இது ஒருவரை முகத்தில் அறைவது அகிம்சையின் அடையாளம் என்று சொல்வதைப் போன்றது!

பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை மற்றொரு முரண்பாட்டை முன்வைக்கிறது. அரசாங்க அதிகாரிகள் நிதானத்தைப் பற்றிப் பேசுகையில், எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் உடனடி பதிலடி கொடுக்கும் “புதிய இயல்பை” மோடி அறிவித்தார். “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செயல்பட முடியாது” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். 

இந்த முரண்பாடுகள் இந்தியாவின் அணுகுமுறையில் உள்ள அடிப்படையான பதற்றத்தை வெளிப்படுத்துகின்றன. உரையாடலை நிராகரிக்கும் அதே வேளையில் அமைதியை விரும்புவதாகக் கூறுகிறோம். “இது போரின் சகாப்தம் அல்ல, பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல” என்று மோடி கூறும்போது, அப்படியானால் இது எந்த சகாப்தம் என்ற கேள்வி எழுகிறது. போர் அல்லது பயங்கரவாதம் இல்லையென்றால், அது ராஜதந்திரத்தின் சகாப்தமாக இருக்க வேண்டாமா?

வெளிப்படையாகப் பேசுவோம்

சமீபத்திய மோதலின்போது உலகின் ஏழ்மையான நாடுகளில் இரண்டு, விலையுயர்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சண்டையிட்டு, இருபுறமும் பொதுமக்களைக் கொன்று, “வெற்றி” என்று கூறின. இந்த வன்முறை இரு நாடுகளிலும் உள்ள உயர் சாதி/ உயர் வர்க்க ஆட்சியாளர்களுக்குப் பொருந்தக்கூடும். ஆனால் இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளின் குடும்பங்களை யார் ஆறுதல்படுத்துவார்கள்? இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்படும் உடல்கள், குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களின் பாதுகாப்பிலிருந்து ‘தேசபக்தி’ முழக்கமிடும் உயரடுக்கினரின் உடல்கள் அல்ல.

“இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சினையை ஏன் தீர்க்க முடியாது?” என்று உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் கேட்கலாம். இதற்கான பதில், இரு தரப்பிலும் உள்ள நச்சு தேசியவாதத்தில் உள்ளது. இது காஷ்மீரை “சொத்துப் பிரச்சனை”யாகச் சித்தரிக்கிறது. இது பிரிவினைக் காலப் பிரச்சினையின் தொடர்ச்சி; பஞ்சாபி ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானுக்கும் இந்தி ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவிற்கும் இடையிலான மகாபாரதம் போன்ற பகைமையின் விளைவு.

காஷ்மீரின் மையப் பிரச்சினை 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்த “இரு தேசக்” கோட்பாட்டிலிருந்து பிறக்கிறது. இந்தப் பக்கம் சாவர்க்கரும் அந்தப் பக்கம் முகம்மது இக்பாலும் முன்வைத்த இந்தப் பார்வை முற்றிலும் தவறானது. இந்தியாவும் பாகிஸ்தானும் வெறும் ‘இரு’ நாடுகள் அல்ல, உண்மையில் அவை இரண்டிலும் இருக்கும் டசின் கணக்கான நாடுகளால் ஆனவை. இந்தச் சிறிய நாடுகளில் பெரும்பாலானவை மதத்துடன் எந்தத் தொடர்பும் அற்றவை. புவியியல், கலாச்சாரம், மொழி, பொதுவான வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தியத் துணைக்கண்டத்தில் அமைதியாக வாழ்வதற்கான ஒரே வழி, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு குழுக்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொள்வதுதான். இந்தியாவிற்குள்ளும் பாகிஸ்தானுக்குள்ளும் எழும் சுயாட்சி, கூடுதல் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை அடக்குவதை நிறுத்த வேண்டும். தெற்காசியா முழுவதும் ஒரு பெரிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக – தெற்காசிய ஐக்கிய அரசுகளாக – ஒன்றிணைவதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல. ஒவ்வொரு நாடும் தன்னுடைய தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு தெற்காசிய ஐக்கிய அரசுகளாக ஒன்றிணைய வேண்டும். 

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வரலாற்று ரீதியான பகைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்த முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால், இதைப் புறக்கணித்தால் துணைக்கண்டம் ஒருகட்டத்தில் அணு ஆயுதப் போரை சந்திக்கும்; எல்லாப் பக்கங்களிலும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்பதே யதார்த்தம். 

நான் நடைமுறை சாத்தியமற்ற தீர்வையே விரும்புவேன். இரு நாடுகளிலும் வாழும் பெரும்பாலான சாதாரண மனிதர்களும் இதையே விரும்புவார்கள். ‘தலைவர்கள்’ சண்டையிட விரும்பினால், அவர்கள் அமெரிக்காவிற்குச் செல்லலாம். டிரம்ப் நிச்சயமாக அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ள ஒரு பிரமாண்டமான அரங்கத்தை ஏற்பாடு செய்வார். 

சத்யா சிவராமன் மேற்கு வங்கம், சாந்திநிகேதனில் வசிக்கும் இதழாளர்.

Tags: