பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா?
-ச.அருணாசலம்

ஊழல் செய்து உடல் வளர்த்தவர்களா? ஓட்டு அரசியலுக்காக மக்களின் ஒற்றுமையை குலைத்தவர்களா..? இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களா? இல்லை, இல்லவே இல்லை! இவற்றையெல்லாம் செய்தவர்களை எதிர்த்தார்கள் என்பதற்காகத் தானே நக்சல்கள் கொல்லப்பட்டார்கள் மிஸ்டர் அமித்ஷா..?
ஏப்ரல் 22. இற்குப்பிறகு அரவமில்லாமல் ஒடுங்கியிருந்த உள்துறை அமைச்சர் அமீத் ஷா நேற்று X பதிவேட்டில், “நக்சலிசத்தை முறியடிக்கும் போரில் இன்று முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. சட்டீஸ்கரில் உள்ள நாராயண்பூரில், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பும், சி.பி.ஐ மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான ‘நம்பல கேசவராவ் என்ற பசவ ராஜூ’ மற்றும் அவரது கூட்டாளிகள் 27 பேரை நமது படைகள் சுட்டு கொன்றுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக நக்சலிசத்தை எதிர்த்து ‘பாரத்’ நடத்தும் போரில் இன்று முதன்முறையாக அக்கட்சியின் பொதுச்செயலாளரையே சுட்டு வீழ்த்தியுள்ளனர். நமது பாதுகாப்பு படையினர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதையே பிரதமர் மோடியும் அச்சு பிசகாமல் அறிவித்துள்ளார். அதில் பெருமிதமும் அடைந்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கிலுள்ள பெகல்காமில் 27 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை இன்று வரை கண்டுபிடித்து கைது செய்ய திராணியற்ற உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும், ’56 இன்ச்’ பிரதமர் மோடியும் இந்த மாவோயிஸ்டு கட்சி பொதுச் செயலாளரை, அவரது சகாக்களை – நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்து, பேச்சுவார்தைக்கு காத்திருந்தவர்களை – சட்ட புறம்பாக ‘என்கவுண்டர் படுகொலை செய்த பாதுகாப்பு படையினரை பாராட்டுவது விசித்திரமாக உள்ளது. ஆனால், அதை மோடி பக்தர்கள் கரகோஷமிட்டு பாராட்டுவது ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. இன்றைய இந்தியாவில் அரசின் தாரக மந்திரம் “ சத்யமேவ ஜெயதே” – வாய்மையே வெல்லும்- அல்ல “ஆளுபவர்களின் வாய்மொழியே வெல்லும்” என்பது தான் அது!
கொல்லப்பட்டவர்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடித்தவர்கள் அல்ல,
கொல்லபட்டவர்கள் வங்கி பணத்தை சுருட்டி விட்டு ஓடி ஒளிந்தவர்கள் அல்ல,
நாட்டின் வளங்களை தாரைவார்த்து அதனால் அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் அல்ல,
மதவெறியை கிளப்பி மக்களை பிளவு படுத்துபவர்களும் அல்ல,
ஏராளமான என்கவுண்டர் கொலைகள் மூலம் அதிகாரத்தை சுவைப்பவர்களும் அல்ல,
பின் எதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?
எதற்காக ”மார்ச் 2026-க்குள் இவர்களை ஒழித்துகட்டுவேன்” என அமீத் ஷா சபதமிட வேண்டும்?

ஆம், ‘இவர்கள் தண்டகாருண்ய பகுதிகளில் வாழும் எளிய பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக, வாழ்வாதரங்களுக்காக சமரசமின்றி போராடுவதாலே – ஓட்டு அரசியலில் நுழையாமல் உரிமைக்காக உறுதியாக நின்றதால் – இவர்களை ஒழித்து கட்டுவேன்’ என உள்துறை அமைச்சர் வீராப்பு காட்டுகிறார்.
தண்ட கருண்யா என்ற வனப்பகுதி , மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் , மபி, தெலுங்கானா மற்றும் பீகார் ஒடிசா மற்றும் மே வங்கம் வரை விரிந்து பரந்த எல்லையோரப் பகுதிகளாகும்.
ஆட்சியாளர்களால், சிவந்த தாழ்வாரம் – Red Corridor- என வருணிக்கப்படும் , கோண்ட் இன ஆதிவாசிகள் வாழும் பகுதியாகும். ஆதிவாசிகளின் நில உரிமைகள் மற்றும் வன வாழ்வுரிமைகளை( Land and Forest rights) பாதுகாக்க தவறிய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் , அங்கு கொட்டி கிடக்கும் கனிமங்களை வளர்ச்சி என்ற பெயரில் கோர்ப்பரேட்டு நிறுவனங்கள் சூறையாட திட்டங்களை தீட்டி நடைமுறை படுத்தியது. இதை நியோ லிபரல் – தாரளமய- கொள்ளை என நாம் அழைத்துக்கொள்ளலாம்.

பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக நலன்களுக்காக சமரசமின்றி களத்தில் இறங்கியவர்கள் மாவோயிஸடுகள். இவர்கள் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ, கவுன்சிலர் பதவிக்கோ, எம்.எல்.ஏ பதவிக்கோ , எம்பி பதவிக்கோ ஆசை பட்டவர்கள் அல்ல. அதனால் ஒட்டு அரசியலிலும் மாவோயிஸ்டுகளுக்கு ஈடுபாடு இல்லை.
ஒட்டு அரசியலில் ஈடுபட்டால் அவர்களை வழிக்கு கொண்டு வருவது ஆட்சியாளர்களுக்கும், சுரங்க முதலாளிகளுக்கும் எளிதான செயல் .
காசு பதவிக்கு மசியாத, சோரம் போகாத மாவோயிஸ்டுகளை வழிக்கு கொண்டு வருவது எளிதான செயல் இல்லை என்பது முதலாளிகளுக்கும் அவர்களது நண்பர்களான ஆட்சியாளர்களுக்கும் தெளிவாகவே புரிய ஆரம்பித்தது.
பிரச்சினைகளை தீர்ப்பதை விடுத்து, ஆட்சியாளர்கள் பிரச்சினையை திசை திருப்புவதிலே அதிக கவனம் கொண்டதால் இந்த நக்சலைட் விவகாரம் கடந்த முப்பது ஆண்டுகளாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை நோக்கி நகராமல் இருக்கிறது.
ஓட்டு அரசியலில் உள்ள அனைத்து கட்சிகளும் – காங்கிரஸ், பாஜக – மற்றும் அந்தந்த மாநில கட்சிகள் அனைவரும் படிப்பறிவு இல்லாத ஆதிவாசி மக்களிடையே செல்வாக்கு பெறவில்லை.

காரணம், இவர்கள் அனைவரும் நகரமக்களின் நலன்களை மட்டுமே ஓட்டு அரசியலுக்காக கருத்தில் கொண்டனர். இதற்கு இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் -CPI, CPM- விதி விலக்கல்ல. CPI ML Liberation கட்சி மட்டும் ஓரேயொரு இடங்களில் இதற்கு விதிவிலக்காக உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படும் CPI Maoist கட்சியினர் முதலில் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் விடுதலைக்கான ஒரே வழி, தேர்தல் அல்ல என்ற நிலையை எடுத்தாலும், ஆயுதங்களை சேகரிப்பதோ, தயாரிப்பதோ, அதற்கு ஆள் சேர்த்து பயிற்சி கொடுப்பதோ நடைமுறை சாத்தியமான ஒன்றல்ல என்பதை உணர்ந்தாலும், பாதுகாப்பு படையினர் மற்றும் முதலாளிகளின் கூலிப்படை சல்வா ஜுடூம் என்ற அரசு பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலை எதிர் கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எதிரெதிர் தாக்குதலால் வன்முறை சுழற்சிக்குள் அரசு எந்திரமும், மாவோயிஸ்டுகளும் இழுக்கப்பட்டு உயிர்சேதம் அதிகரிக்க தொடங்கியது.
பா.ஜ.க உச்சம் பெற்ற கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளை மெயின்ஸ்டிரீம் அரசியலுக்கு (ஊழல் நிறைந்த ஒட்டு அரசியலுக்கு) கொண்டு வருவதை விட, அவர்களை தனிமைப்படுத்தி அழித்து ஒழிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக பாதுகாப்பு படையினரின் அத்து மீறல்களை, சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றனர். மாவோயிஸ்டுகள் எடுத்த பேச்சுவார்த்தை முயற்சியை பா.ஜ.க நிராகரித்தும் உள்ளது.
பா.ஜ.க அரசின், ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அழித்தொழிப்பு கொள்கையை எதிர்த்து தெலுங்கானா முன்னாள் முதல்வரும் , டி.ஆர்.எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் “காகர்” பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பு படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், மாவோயிஸடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இது போன்ற கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிட தக்கது. ஆனால் சத்தீஸ்கர் மாநில அமைச்சரும், ஒன்றிய தலைவர்களும் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்புவதை விரும்பவில்லை. அவர்கள் மாவோயிஸ்டுகளை கொன்றொழித்துவிட்டால் நக்சலிசத்தை அழித்துவிடலாம் என எண்ணுகின்றனர்.
ஆந்திராவிலுள்ள ஜித்னபேட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவரான கேசவராவ் என்ற பசவ ராஜு வாராங்கல்லில் உள்ள Regional Engineering College (தற்போது NIT Warangal) எம் டெக் பட்டம் பெற்றவர்.
மக்கள் யுத்தம் -Peoples War- என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். மக்கள் யுத்தம் என்ற குழுவும் மாவோயிஸ்டு சென்டர் என்ற குழுவும் 2004 ஆம் ஆண்டு இணைந்து சி.பி.ஐ மாவோயிஸ்டு கட்சி பிறந்தது!
2018 ஆம் ஆண்டு CPI (Maoist) கட்சியின் பொதுச்செயலாளராக கேசவ் ராவ் உயர்ந்தார். அறுபத்தி எட்டு வயதான கேசவ் ராவ் தனது வாழ்நாள் முழுமையும் ஆதிவாசி மக்களின் நலன்களுக்காக அர்ப்பணித்தார்.
இவர் மீது 2013 இல் காங்கிரஸ் தலைவர்களின் அணிவகுப்பில் குண்டுவீசி கொன்றதாக ஒரு வழக்கு உள்ளது.

75 சி.ஆர்.பி.எப் படையினரை கொன்றதாக சிந்தல்நர் வழக்கு ஒன்றும் உள்ளது. இவரது தலைக்கு அரசு 1.5 கோடி விலை வைத்திருந்தது குறிப்பிட தக்கது. இவருக்கு பல புனைபெயர்கள் இருந்தது என்றாலும், இவரது மரணம் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த தருணத்தில் நடந்தது என CPI ML கட்சி கூறியுள்ளது. அதன் தலைவர் திபாங்கர் குப்தா‘ஆபரேஷன் காகர்’ மூலம் நடைபெற்ற Extra Judicial Killing (சட்ட புறம்பான கொலை) என வருணித்து உள்ளார்.
தார்மீக கோட்பாடுகளையோ , சமூக ஒப்பந்தங்களையோ அல்லது அரசியல் மாண்புகளையோ ஏற்றுக் கொள்ளாத ஒரு கும்பல் ‘இளைத்தவனை கண்டால் எகிறி மிதிப்பதும், வல்லானை கண்டால் வணங்கி ஒதுங்குவதையும்’ தனது கொள்கை வழியாக கொண்டுள்ளது .
ஆட்சி அதிகாரம் இந்த கும்பலிடம் சிக்கி உள்ளதால் நியாங்களுக்கும், தர்மங்களுக்கும் அர்த்தமே வேறு தான். சாத்தான்கள் பெயரை மாற்றினாலும், அவை ஓதுவது வேதமாகாது!
இன்றைய இந்தியாவே இதற்கு சாட்சி!