கல்லறைக்கு அருகே ‘காலிஃப்ளவர்’ உடன் அமித் ஷா

எஸ்.வி.ராஜதுரை 

டந்த மே 23 அன்று பா.ஜ.க.வின் கர்நாடகக் கிளையின் அதிகாரபூர்வமான ‘எக்ஸ்’ தளம் ஒரு படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டது. அது மாவோயிஸ்டுகளின் கல்லறைக்கு முன் ஒரு ‘காலிஃப்ளவர்’ (cauliflower) உடன் அமித்ஷா நிற்பதாகவும் கல்லறைக் கல்லில் ‘நக்கஸலிசம் அமைதியில் ஓய்வுகொள்கிறது‘ என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் சித்தரித்துள்ளது. மேலும் அந்தக் கல்லறைக் கல்லில் அரிவாள், சுத்தி, துப்பாக்கி ஆகியவை இருப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலுள்ள கம்யூனிஸ்டுகள் அனைவரும் கொல்லப்படும்போதோ அல்லது இயற்கையாகவோ விபத்தின் காரணமாகவோ, நோய்வாய்ப்பட்டோ உயிர்நீத்த தங்கள் தோழர்களுக்கு ‘செவ்வணக்கம்’ செலுத்துவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உலகிலுள்ள அனைத்துக் கம்யூனிஸ்டுகளும் கடைப்பிடித்துவருவது ஒரு மரபு. ஆங்கிலத்தில் ‘ரெட் சல்யூட்’ என்றும், இந்தியில் ‘லால் சலாம்’ என்றும் கம்யூனிஸ்டுகள் கூறுவதைக் கொச்சைத்தனமாகக் கிண்டல் செய்யும் வகையில் அந்தப் பதிவுக்கு ‘லோல் சலாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 21.5.2025 இல் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டனம் செய்து சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷனின் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்வினையாக இப்பதிவை பா.ஜ.கவின் கர்நாடகக் கிளை வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக பா.ஜ.க-சங் பரிவாரத்தின் அதிகாரபூர்வமான அங்கங்களாக இல்லாத அதீத மதவெறிக் கும்பல்கள், அமைப்புகள் முஸ்லிம்களையும் தலித்துகளையும் இழிவு செய்கின்ற, அவர்கள் ஒழித்துக் கட்டப்படுவது போன்ற சித்திரங்களைக் கொண்ட கார்ட்டூன்களையும் மீம்ஸுகளையும் வெளியிட்டு வருகின்றன.

துப்பாக்கியும் காலிஃப்ளவரும்

அந்தக் கும்பல்கள் மோடியும் அமித்ஷாவும் மதவாதிகள் என்றும், முஸ்லிம்களைக் ‘கையாளத்’ தெரியாதவர்கள், தலித்துகளை தாஜா செய்பவர்கள் என்றும் கூறி வருவதையும் முஸ்லிம்களை மோட்டார் வாகனங்களுக்குக் கீழ் நசுக்கிக் கொல்வது, தலித்துகளை கரப்பான் பூச்சிகள் என வர்ணிப்பது போன்ற மீம்ஸுகளை வெளியிடுவது போன்ற செயல்களைப் புரிந்து வருவதையும் ஆங்கில டிஜிட்டல் நாளேடான ’தி வயரில்’ வெளிவந்த கட்டுரைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளன. 

பா.ஜ.கவின் கர்நாடகக் கிளையின் அதிகாரபூர்வமான ‘எக்ஸ் ’தளமும் தற்போது அதீத மதவெறிக் கும்பல்களின் பாணியை இப்போது பின்பற்றுவதற்குக் காரணம், மாவோயிஸ்டுகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட காலக் கெடுவை (2026 மார்ச்) அமித் ஷா நிர்ணயித்திருப்பது மட்டுமல்ல, முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்காகவும்தான் என்று ‘தி வயரில் 25.5.2025 இல் வெளிவந்துள்ள கட்டுரை கூறுகிறது.

அரிவாள், சுத்தி, துப்பாக்கி, அமைதியில் ஒய்வு கொள்கிறது என்ற சொற்கள் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களைக் குறிக்கிறது என்றால், காலிஃப்ளவர் எதைக் குறிக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் ‘தி வயர்’ கட்டுரை சொல்கிறது.

1989 இல் பிகாரிலுள்ள பகல்பூரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் 900 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 110 பேர் ஒரு பண்ணையில் புதைக்கப்பட்டு, அந்த மண்ணின் மீது காலிஃப்ளவர் நாற்றுகள் நடப்பட்டன. அண்மையில் நாக்பூரில் நடந்த மதக் கலவரத்துக்குப் பிறகு ‘காலிஃப்ளவர் ’ படம் அதீத மதவெறிக் கும்பல்களின் சொல்லாடல்களில் அடிக்கடி இடம் பெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்திய மக்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பை வளர்ப்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் என்ற போதிலும் ஒன்றிய அரசாங்கமோ, பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநில அரசாங்கங்களோ சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.

இத்தகைய இன அழிப்பு கார்ட்டூன்களை ஜெர்மன் நாஜிக்கள் வெளியிட்டு வந்ததை ‘தி வயர்’ நாளேடு நமக்கு நினைவூட்டுகிறது. 

இது ஒருபுறமிருக்க, மாவோயிஸ்ட் புரட்சியாளர்களும் சாமானியப் பழங்குடி மக்களும் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் நிறுத்தி வைத்த பிறகு,  மாவோயிஸ்ட்  கட்சி செயலாளர் உள்ளிட்ட 27 புரட்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

அதுமட்டுமின்றி, உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் எத்தனை பேர் சாமானியப் பழங்குடிகள் (அதாவது போராளிகள் அல்லாதவர்கள்) என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

இதுதான் மனித மாண்பா?

இதைவிடக் கொடூரமானது என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் ஆந்திராவையும் தெலங்கானாவையும் சேர்ந்த புரட்சியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணீர் விட்டுக்  கதறி அழுதபடி சத்தீஸ்கருக்கு சென்றபோது அந்தப் புரட்சியாளர்களின் உடல்கள் அவர்களிடம் பிணக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு உடனடியாக ஒப்படைக்கப்படவில்லை. அவர்களில் இருவரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டால் பெரும் கலவரம் ஏற்படும் என்று சத்தீஸ்கர் அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கும் மனித மாண்பு இருக்கிறது என்றும் அந்த மாண்பைக் குலைப்பது குற்றம் என்றும் சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் (Pt. Parmanand Katara v. Union of India) உறுதிபடக் கூறியது. உடல்களின் மாண்பைக் குலைப்பது அரசியல் சட்டப் பிரிவு 21க்கும் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது என்று 2021ஆம் ஆண்டில் கூறிய தேசிய மனித உரிமை ஆணையம், கொல்லப்பட்டவர்களின் உடல்களின் மாண்பை சிதைக்காத  வண்ணம் அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைப்பது பற்றிய வழிகாட்டு நெறிகளை வழங்கியுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் குளிர்பதன அறையில் வைக்கப்பட வேண்டும்  என்பது அந்த  வழிகாட்டு நெறிகளிலொன்று. ஆனால் கொல்லப்பட்ட சிலரின் உடல்கள் வெறும் துணியால் போர்த்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

கோடி மீடியா என்று சொல்லப்படுகின்ற, அரசின் ஊதுகுழல்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஊடகங்கள் புரட்சியாளர் பசவராஜின் தலைக்கு அரசு விதித்த விலை ஒரு கோடியா, 5 கோடியா அல்லது பத்து கோடியா என்ற விவாதத்தில் ஈடுபட்டு இந்தப் படுகொலைகளையும் கேளிக்கைக் காட்சிகளாகக் காட்டிக் கொண்டிருந்தன.

களமிறக்கப்பட்ட 20,000 பேர்

மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதற்காக அமித் ஷாவின் தலைமையின் கீழ் தீட்டப்பட்டுள்ள ‘ஆபரேஷன் கோகர்’ என்ற நடவடிக்கையை செய்து முடிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

ஒன்றிய அரசாங்கத்தின் படைகளும், மாநில அரசாங்கத்தின் படைகளும் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. மும்பையிலிருந்து வெளிவரும் ‘ஃப்ரீ பிரஸ் ஜேர்னல்’ 26.5.2025 வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, மத்திய ரிசர்வ் போலிஸ் படை ( CRPF), அதிலுள்ள மிகத் தேர்ச்சி பெற்ற படைப் பிரிவான கோப்ரா (COBRA), மாவட்ட ரிசர்வ் பாதுகாவல் படை (District Reserve Guard), சத்தீஸ்கர் மாநிலக் காவல் படை முதலியவை உள்ளடங்கிய ஒரு இலட்சம் புற இராணுவப் படைகள் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டன என்று கூறுகிறது.

தகவல்களை சேகரிக்க 20 ட்ரோன்கள், உளவுபார்க்க செயற்கை நுண்ணறிவு, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் நடமாடும் பகுதிகளைப் பற்றிய செயற்கைக் கோள் அனுப்பிய படங்கள், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உளவு பார்த்து சேகரித்த வரைபடங்கள் ஆகியவற்றுடன் ஏராளமான ஹெலிகாப்டர்கள் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான பல்முனைத் தாக்குதலுக்கான ‘ஆப்ரேஷன் கோகாரில்’ ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 20,000 பேர் 21.3.2025 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இறங்கினர். 

அதாவது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கும் போர் போல, இந்திய மக்களில் ஒரு சிறு பகுதியினரான மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள், கோர்ப்பரேட் கொள்ளைக்காரர்கள் வராமல் தடுப்பதற்காக மாவோயிஸ்ட் புரட்சியாளர்களால் ஈர்க்கப்பட்ட பழங்குடி மக்கள் ஆகியோருக்கு எதிராக இந்திய அரசு நடத்திய, இன்னும் நடத்தவிருக்கிற போர்தான் இது என்று ‘ஃப்ரீ பிரஸ் ஜேர்னல்’ கட்டுரை கூறுகிறது. 

இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படையினர், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைக் கோள்கள் அனுப்பும் படங்கள் முதலியவற்றுக்கு செலவிடப்படும் பல கோடிக்கணக்கான பணம் இந்திய மக்களின் வரிப்பணம்தான் என்று கூறும் கட்டுரை. இது பழங்குடி மக்களை அந்த வனப் பகுதிகளிலிருந்து விரட்டிவிட்டோ அல்லது மாவோயிஸ்ட் புரட்சியாளர்களுடன் சேர்த்து அவர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டோ, அந்த வனப் பகுதிகளை அங்குள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு கோர்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடுவதற்கான போர் என்றும் சொல்கிறது.

எனவேதான் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை பத்தே ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது; அதாவது மோடி முதல் முறை ஆட்சிக்கு வந்த போது 74 பில்லியனர்கள் இருந்தனர். பத்தாண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை 284ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரிடமும் உள்ள செல்வம் ஏறத்தாழ 63 லட்சம் கோடி டாலர்கள் ( ஒரு டாலருக்கு இன்றைய பரிவர்த்தனை மதிப்பு 85 ரூபாய்.)

இந்திய மக்களில் மிகப் பெரும் செல்வந்தர்களிடம் இந்தியாவின் செல்வத்தில் 40% உள்ளது என்றும், சமுதாயத்தில் உள்ள 50% மக்களிடம் நாட்டின் செல்வத்தில் மூன்று விழுக்காடுதான் உள்ளது என்றும் கூறும் இக்கட்டுரை, இந்த பிளவு அதிகரிக்க அதிகரிக்க நக்சலிசமும் புரட்சிகர இயக்கங்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கும் என்றும், அதீதப் பெரும் செல்வந்தர்கள் செழிப்பான வாழ்க்கை வாழ, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் உழல ஏழை மக்களின் கோபத்தை அடக்க எந்த இராணுவ நடவடிக்கையாலும் இயலாது என்றும், எனவே நாட்டு மக்கள் சமத்துவத்துடன் வாழவும், நாட்டில் நிலைத்த பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் இன்று வளர்ச்சித் திட்டங்கள் என்று  சொல்லப்படுபவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துடன் ‘ஃப்ரீ பிரஸ் ஜேர்னல் கட்டுரை முடிவடைகிறது. 

Tags: