பதின்பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
-இந்து குணசேகர்

உலகெங்கிலும் ஏராளமான பதின்பருவத்தினர் மனநலம் சார்ந்து கடினமான காலக்கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்; கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு, இதே மனநிலை பலருக்கு இருந்தாலும், கொரோனா காலம் இந்த நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது.
அதிகப்படியான திறன்பேசி / சமூக ஊடகப் பயன்பாடுகள் இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. நண்பர்களுடன் ஓடி விளையாடுவது, சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுவது பதின்பருவத்தினரிடம் குறைந்துள்ளது; பள்ளிகளில் உணவு இடைவேளைகளில்கூடத் தேர்வுக்காகப் படிப்பது, போட்டித் தேர்வுகள் தரும் அழுத்தங்கள் போன்றவை பதின்பருவத்தினரின் மனநலனைப் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்பால் நண்பர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்து, இணையம் மூலமாகவே தொடர்பு கொள்ளும் மனநிலைக்கு இன்றைய இளம் பருவத்தினர் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய அலுவலகம் (The WHO Regional Office for Europe) 2022இல் ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், கனடா உள்ளிட்ட 44 நாடுகளில் 11 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட 2,80,000 பதின்பருவத்தினரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சமூக ஊடகப் பயன்பாடு இளம் பருவத்தினரின் மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. 2018 இல் சமூக ஊடகப் பயன்பட்டால் மனநல ஆரோக்கியப் பாதிப்பு 7% ஆக இருந்த நிலையில், 2022இல் இது 11%ஆக அதிகரித்ததாகவும், 12% பதின்பருவத்தினர் இணைய கேமிங் பயன்பட்டால் மனரீதியாகக் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
தரவுகள் என்ன சொல்கின்றன? – மனநலனை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சமூக – உணவுப் பழக்கங்களை வளர்ப்பதற்கும் பதின்பருவம் மிகவும் முக்கியமான காலக்கட்டம். முறையான உறக்கம், உடற்பயிற்சி, உணர்வுகளைச் சரியாகக் கையாள்வது, சிக்கல்களைத் தீர்ப்பது, தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்வது ஆகியவை இதில் அடக்கம். இத்தகைய திறன்களை வளர்ப்பதற்குக் குடும்ப – பள்ளிச் சூழல் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது முக்கியம்.
கடந்த 10 ஆண்டுகளில் பதின்பருவத்தினரின் மனநல ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்தில் பிரிட்டனில் உள்ள ‘யுகே’ தரவு சேவை (UK Data Service) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 7–16 வயதுடையவர்களில் ஆறு பேரில் ஒருவருக்கும், 17–19 வயதுடைய நான்கு பேரில் ஒருவருக்கும் மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2017 இல் முறையே, ஒன்பது பேரில் ஒருவருக்கு, பத்தில் ஒருவருக்கு என்கிற அளவில் இந்தப் பாதிப்பு இருந்தது. இந்தத் தரவுகள், பதின்பருவத்தினரின் மனநல ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகின்றன.
மோசமான உணவுப் பழக்கம், மனநல ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு ஆகியவை இளைஞர்களிடம் உடல் பருமனை அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் 40 கோடி பதின்பருவத்தினர் உடல் பருமனுடன் இருப்பார்கள் என மருத்துவ இதழான ‘லான்செட்’ எச்சரித்து உள்ளது.
பதற்றமான தலைமுறை: அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரும், சமூக உளவியலாளருமான ஜோனதன் ஹெய்ட் (Jonathan Haidt), பதின்பருவத்தினரின் மனநல ஆரோக்கியத்தில் திறன்பேசிகள் – சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். தொழில்நுட்பங்களின் வளர்ச்சியானது, பதின்பருவத்தினரிடம் பதற்றம், மன அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாக ஆய்வுகளின் மூலம் ஹெய்ட் உறுதியாகத் தெரிவிக்கிறார். “முன்பெல்லாம் திறன்பேசிகள், ஐபோன்கள் வெறும் கருவியாக மட்டுமே இருந்தன.
ஆனால், 2008க்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இலட்சக்கணக்கான நிறுவனங்கள் திறன்பேசிகள், சமூக ஊடகங்கள் மூலம் கவனத்தை ஈர்க்கவும், நமது நேரத்தை அவற்றுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் முயல்கின்றன; இன்றைய காலத்தில் இத்தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் கவனச் சிதறலுக்கே வழிவகுக்கின்றன” என்கிறார் ஹெய்ட்.
மிக முக்கியமாக, இத்தகைய மாறுபாடுகள் வயதில் மூத்தவர்களின் மனநல ஆரோக்கியத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை; பதின்பருவத்தினர்தான் இதில் சிக்கிக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவிக்கிறார். தனது ஆய்வின் அடிப்படையில் ஹெய்ட் எழுதிய ‘The Anxious Generation’ (பதற்றமான தலைமுறை) புத்தகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. மறுபுறம், மனநல ஆரோக்கிய பாதிப்புக்கு, திறன்பேசி – சமூக ஊடகங்களே முக்கியக் காரணம் என்கிற வாதம் பலவீனமானது எனச் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கும் – மனநல ஆரோக்கியத்துக்கும் இடையே தொடர்பு இருந்தாலும், மருத்துவரீதியாக இதன் தாக்கம் மிகக் குறைவாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஹெய்ட்டின் தரவுகள் எதிர்மறைத் தாக்கங்களைச் சற்று மிகைப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஹெய்ட்டின் ஆய்வானது அறிவியல் அடிப்படையிலான தரவுகளைவிடவும் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளையே அதிகம் கொண்டிருப்பதாகவும், இது ஒரு சார்பு நிலைப்பாட்டுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாசிப்பை ஊக்குவித்தல்: எல்லாவற்றையும் தாண்டி, மனநல ஆரோக்கிய பாதிப்பு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளதால், தீவிரமான திறன்பேசி – சமூக ஊடகப் பயன்பாட்டிலிருந்து பதின்பருவத்தினரை மீட்பது அவசியம். திறன்பேசிகளை விலக்கி வைப்பதால் பதின்பருவத்தினரிடையே அதீதக் கோபம், கவனச்சிதறல், தூக்கமின்மை, பதற்றம் போன்றவை ஏற்படலாம்; இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் எந்தவிதத் தயக்கமுமின்றி உடனடியாக நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
புத்தக வாசிப்பு, குழந்தைகளின் கற்பனைத் திறன்களை அதிகரித்து அறிவுசார் செயல்பாடுகளை வளர்ப்பதால் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். உயர்நிலை வகுப்புகளுக்கு முன்னர் திறன்பேசிகளைப் பயன்படுத்தக் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது; குறிப்பாக, வன்முறை மனநிலையை வளர்க்கும் கேமிங் விளையாட்டுகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ‘ஸ்க்ரீன் டைம்’ எனப்படும் திறன்பேசிகள் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது குழந்தைகள், நண்பர்களுடன் மைதானங்களில் தங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிடப் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். இன்றைய சூழலில், தொழில்நுட்பங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் அவற்றின் பயன்பாட்டில் உரிய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், அவற்றால் ஏற்படும் தீமைகளைக் கணிசமாகக் குறைக்கலாம்!
-இந்து தமிழ்
மே 22, 2025