மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றவாளி இஸ்ரேல் அரசு

ஈரான் துடே கட்சி (Tudeh Party of Iran) மற்றும் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Israel), மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறி நடத்துகிற போர் நடவடிக்கைகளை கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு கண்டனம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறி ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம் என்று இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இரண்டு நாடுகளிலும் பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் அனைத்து வகையான இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளன.
பலஸ்தீன மக்கள் மீதான அழிவு
ஏகாதிபத்திய அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளின் ஆதரவுடன் பெஞ்சமின் நேதன்யாகுவின் பிற்போக்குத்தனமான அதிதீவிர வலதுசாரி அரசு காசா மற்றும் மேற்குக் கரையில் செய்துள்ள குற்றங்களின் விளைவாக, 56,000 பலஸ்தீனர்கள் (18,000 குழந்தைகள்) படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு அரசாங்கம் தான் இஸ்ரேல் அரசு என்றும் தெரிவித்துள்ளது.
ஏகாதிபத்தியத்தின் நீண்டகால திட்டம்
நேதன்யாகு அரசிற்கு அமெரிக்காவின் நீண்டகால இலக்குகளுக்கு ஏற்ப மத்திய கிழக்கின் வரைபடத்தை மீண்டும் மாற்றுவதற்காக (நாடுகளை ஆக்கிரமிப்பது/ஆட்சி கவிழ்ப்பு நடத்தி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஆட்சியை கொண்டு வருவது) இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மீது கூடுதலான ஆக்கிரமிப்பு போர்களுக்கும் “அனுமதி” கொடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேற்கொண்டு தீவிரமாக்கும் அபாயம்
ஈரான்-இஸ்ரேல் இடையே நடை பெற்று வரும் போரையும் அழிவையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், இந்த நிலைமையை பயன்படுத்தி காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீன மக்களின் மீதான மனிதாபிமான கொடுமைகளையும் ஒடுக்கு முறையையும் மேலும் தீவிரப்படுத்துவதற்கு எதிராகவும் எச்சரிக்கிறோம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளன.
சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு
பலஸ்தீன மக்கள் மற்றும் இந்த பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுக்க உண்மையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்; இப்போதே பலஸ்தீன அரசை அங்கீகரிக்கவேண்டும், காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளன.
ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகம்
ஏகாதிபத்தியம், அதன் ஆதரவு சக்திகள், பிற்போக்கு சக்திகள், ஆட்சியில் உள்ள சர்வாதிகார அமைப்புக்கள் மட்டுமே போர்கள் மற்றும் போர் பதற்றங்களில் இருந்து பயனடைகின்றன என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஈராக், லிபியா, சிரியாவுக்கு பிறகு இப்போது ஈரானின் இறையாண்மையை அழிக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முனைந்துள்ளன என்றும், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளையும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் கட்டாயப் படுத்திக் கொண்டு வரும் வரை அவர்கள் இதை நிறுத்தமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
அணுஆயுத எதிர்ப்பு நிலைப்பாடு
மத்திய கிழக்கிலும் உலகளவிலும் அனைத்து அணுஆயுத மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராகவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போர் மத்திய கிழக்கில் அணு ஆயுத பரவலை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறை அல்ல என்றும், மாறாக இஸ்ரேல் உட்பட அனைத்து நாடுகளும் அணுஆயுதப் பரவலை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் இந்தப் பிராந்தியம் முழுவதையும் அணுஆயுதங்களிலிருந்து விடுவிப்பதும் தான் அதற்கான வழியாகும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு
இஸ்ரேல், ஈரான் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முற்போக்கு மற்றும் சுதந்திரத்தை விரும்பும் சக்திகளையும், சர்வதேச சட்டத்தின் இந்த வெளிப்படையான மற்றும் மிருகத்தனமான மீறலை கண்டிக்க ஒன்றிணையுமாறு கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒரு விரிவான அழிவுகரமான போரைத் தடுப்பதற்கும் மத்திய கிழக்கில் அமைதியை நிறுவுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன.
ஐ.நா.வின் பங்கு
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் வெளிப்படுத்திய கவலையை விட உலக மக்கள் ஒரு படி மேலே சென்று ஐ.நா மற்றும் அதன் பாதுகாப்பு அவையின் மூலம் கிடைக்கும் அனைத்து சர்வதேச வழிமுறைகளையும் பயன்படுத்தி மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு பேரழிவு தரும் மிகப்பெரிய போரில் சிக்குவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இப்போதே மத்திய கிழக்கில் போரையும் இராணுவ மோதல்களையும் நிறுத்துங்கள், காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பலஸ்தீன அரசை உடனே அங்கீகரியுங்கள் என்று அறிக்கையில் இரு கட்சிகளும் கோரியுள்ளன.