ஹெலன் கெல்லரின் புரட்சிகர மரபின் பாரம்பரியம்!
-டி.முரளிதரன்

ஹெலன் கெல்லரின் 145 ஆவது பிறந்த நாள், 2025 ஜூன் 27 அன்று வருகின்றது. அவர் குறித்து இதுவரை வந்துள்ள செய்திகள் எல்லாமே, அவரை ஓர் உத்வேகமான நபராக, அவர் ஓர் ஊனமுற்றவராக இருந்தபோதிலும் அதனையெல்லாம் தாண்டி, அவரை மாபெரும் நபராக சித்தரிக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் இவை அனைத்துமே அவரை பெரிய சிகரங்களைத் தொட்டவராக சித்தரிக்கும்.
எனினும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஹெலன் கெல்லர் (Helen Keller) ஓர் அரசியல் ஆர்வலராகவும் இருந்தார் என்ற உண்மையை இந்தக் கதைகள் மறைக்கின்றன. மிக முக்கியமாக, இயலாமை, ஒடுக்குமுறை மற்றும் விடுதலை பற்றிய மார்க்சிய புரிதலை நோக்கிச் செல்வதில் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார் என்கிற உண்மை இன்றுவரை பெரும்பாலும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.
ஏகாதிபத்திய எதிர்ப்பே முதன்மையானதாகும்
அனுமானமாக, ஹெலன் கெல்லர் இன்று உயி ருடன் இருந்திருந்தால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வால் இறையாண்மை கொண்ட ஈரான் மீது தூண்டு தலற்ற மற்றும் வெட்கமற்ற தாக்குதல்கள் தொடர்வதைக் கண்டிருந்தால், அவருடைய பதில் என்னவாக இருந்திருக்கும்? தாக்குதல்களைத் தொடங்குவதற்கான அவர்களின், கூறப்பட்ட நோக்கங்களுடன் எந்த வகையிலும் பொருந்தாத தங்கள் புவிசார் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பை கெல்லர் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்திருப்பார்.
போரும் சமாதானமும் குறித்த கெல்லரின் கருத்துக்கள் சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கைகளுடன் வலுவாக ஒத்துப்போயின. போருக்கு எதிரான அவரது வெளிப்படையான எதிர்ப்பு, முதலாளித்துவம் மற்றும் வர்க்கச் சுரண்டல் மீதான அவரது விமர்சனத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகும். போரை ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக அவர் கண்டார். தொழிலாளர் வர்க்கத்தின் இழப்பில் தங்கள் செல்வத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்க பணக்காரர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி என்றே அவர் கருதினார்.
கெல்லரின் இன்றைய குரல்…
கெல்லர், இன்றிருந்திருந்தால், ஈரானிய மக்களுடன், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் ஒற்றுமையுடன் நின்றிருந்திருப்பார். அதே சமயத்தில், ஈரானுக்குள் எந்தவொரு எதேச்சதிகாரத்தையும் அல்லது மதரீதியிலான ஒடுக்குமுறையையும் நிராகரித்திருந்திருப்பார்.
அத்தோடு, அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குடிமக்கள் போர் இயந்திரத்தை எதிர்க்கவும், ஒழுங்கமைக்கவும், இராணுவவாதத்தில் பங்கேற்பதை மறுக்கவும் தயக்கமின்றி அழைப்பு விடுத்திருந்திருப்பார். கிரேட்டா தன்பெர்க் மற்றும் மேட்லீனுக்கு வெளியே உள்ள மற்றவர்களுடன் அவரும் இருந்திருப்பார். மேலும் பலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரவும் அதன் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுத்திருப்பார்.
ஹெலன் கெல்லரின் இன்றைய குரல் ஒற்றுமை, நீதி மற்றும் மன்னர் சாம்ராஜ்யத்தை அகற்றுவதன் மூலம் அமைதிக்கான ஒரு தெளிவான அழைப்பாக இருந்திருக்கும். முதல் உலகப் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டை கடுமையாக விமர்சித்த அவர், இலாபம் ஈட்டுபவர்கள் பணக்காரர்களாவதற்காக, தொழிலாளர்களை இறக்க அனுப்பும் ஒரு முதலாளித்துவ நிறுவனமே போர் என்று போரைக் கண்டித்தார். 1916 ஆம் ஆண்டு “போருக்கு எதிராக வேலைநிறுத்தம்” என்ற தலைப்பின்கீழ் அவர் ஆற்றிய உரையில் தொழிலாளர்களைப் பார்த்து, “நீங்கள் இல்லாமல் எந்தப் போர்களையும் நடத்த முடியாது” என்று அறிவித்தார். இவருடைய இந்தத் தீவிரமான நிலைப்பாடு முதலாளித்துவத்தின் ஆதரவை இழந்தது. இவ்வாறான இவருடைய கருத்து, கண் தெரியாத மற்றும் காது கேளாத ஒருவரின் தனிப்பட்ட வெற்றியின் அடையாளமாகவே விமர்சிக்கப்பட்டது.

ஓர் உறுதிமிக்க சோசலிஸ்ட்
கெல்லரின் போர் எதிர்ப்பு நடவடிக்கைகள் அவருடைய சோசலிச நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அவரைப் பொறுத்தவரை அமைதி என்பது மோதல் இல்லாதது மட்டுமல்ல, பாலின சமத்துவத்தின் அடிப்படையில் நிறவெறியற்ற ஒரு பொருளாதார நீதிக்கான இருப்புமாகும். அமைதி பற்றிய அவரது பார்வை, சமத்துவமின்மை மற்றும் வன்முறையை நிலைநிறுத்தும் முதலாளித்துவத்தை அகற்றுவதைக் கோரியது.
கெல்லரின் கருத்துக்கள் வெறுமனே உத்வேகம் அளிப்பவை மட்டுமல்ல, அவை புரட்சிகரமானவைகளுமாகும். அவர் தேசபக்தி பிரச்சாரத்தை நிராகரித்து, ஒடுக்கப்பட்டவர்களிடையே சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறு செய்ததன் மூலம், போரை வீரத்திற்கும், அமைதியை செயலற்றதன்மைக்கும் சமமாகக் கூறும் அவரது காலத்திய ஆதிக்கவாதிகளின் கதைகளுக்கு சவாலாக இருந்தார். இவ்வாறு அமைதிக்கான ஹெலன் கெல்லரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, போர் எதிர்ப்பு செயல்பாட்டின் தீவிர மரபில் அவரை உறுதியாக நிலைநிறுத்துகிறது.
வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த ஹெலனுக்கு 19 மாதக் குழந்தையாக இருந்தபோது ஒரு நோய் ஏற்பட்டது. அது அவரை பார்வையற்றவராகவும், காது கேளாதவராகவும் மாற்றியது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பெண்கள் பிரிவான ராட்க்ளிஃப் கல்லூரியில் சேருவதற்கு முன்பு, காது கேளாதோருக்கான பல நிறுவனங்களில் அவர் பயின்றார். 1904 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்தகைய சாதனையை அடைந்த முதல் காது கேளாத நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
மார்க்ஸின் கருத்துக்களின் தாக்கம்
ராட்க்ளிஃப் நகரில்தான் ஹெலன் முற்போக்கான கருத்துக்களை எதிர்கொண்டார். அவற்றில் கார்ல் மார்க்ஸின் கருத்துக்களும் அடங்கும். அவை அவரது பிற்கால அரசியல் செயல்பாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. மாற்றுத்திறனாளிகளை நடத்துவதை மட்டுமல்ல, சமத்துவமின்மையை நிலைநிறுத்திய பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளையும் அவர் விசாரணைக்கு உட்படுத்தினார்.
1913 இல் ஹெலன் எழுதி வெளி வந்த “இருட்டுக்கு வெளியே:கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் உடல்ரீதியான மற்றும் சமூகரீதியான பார்வை தொடர்பான உரைகள் (“Out of the Dark: Essays, Letters, and Addresses on Physical and Social Vision” (1913)” என்ற கட்டுரைகளின் தொகுப்பில், அவர் சோசலிசம், பாலின சமத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார். இந்தப் புத்தகம் அவரது மிகவும் வெளிப்படையான அரசியல் புத்தகம் என்றும், சோசலிச சித்தாந்தத்திற்கான அவரது வலுவான அர்ப்பணிப்பை அது வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
கெல்லர் 1908 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தொழிலாளர் உரிமைகள், பெண்களின் வாக்குரிமை, ஊனமுற்றோருக்கான உரிமைகள் மற்றும் இன சமத்துவத்திற்காகவும் அவர் உரைகளை வழங்கவும் கட்டுரைகளை எழுதவும் தொடங்கினார். அவரது பணி வறுமை மற்றும் அநீதி யின் வேர்களை ஆராய்வதை மையமாகக் கொண்டிருந்தன. முதலாளித்துவம் மோசமடைந்துவிட்டது என அவர் நம்பினார்.
ஊனம்: ஒரு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனை
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து அவர் வெளிப்படையாகப் பேசினார். அவர்களில் பலர், தொழிற்சாலை விபத்துகள், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் அல்லது மோசமான சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றால், நிறுவனங்களின் பேராசை மற்றும் அரசாங்கப் புறக்கணிப்பு ஆகியவற்றால், தங்கள் ஊனங்களைப் பெற்றுள்ளனர் என்பதை அவர் கண்டறிந்தார். இந்த உணர்தல் அவரை ஆழமாகப் பாதித்தது. தனது குடும்பத்தின் வளங்கள் தான் செழித்து வளர உதவியிருந்தாலும், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்கள் பெரும்பாலும் ஆதரவோ நம்பிக்கையோ இல்லாமல் விடப்படுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.
கெல்லர் ஊனமுடைமையை மருத்துவ அல்லது தனிப்பட்ட பிரச்சனையாகக் கருதாமல், அது ஒரு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாகக் கருதினார். வறுமை, கல்வி மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஆபத்தான தொழில்களில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுதல் ஆகிய அனைத்தும் ஊனத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள் என அவர் வாதிட்டார். ஊனமுற்றோருக்காக இயங்கிடும் அமைப்புகள் பலவும் இவ்வாறு இவர் கூறும் காரணிகளை வேண்டுமென்றே மறைத்துவிடுகின்றன.
ஊடகங்கள் : ஆரம்பத்தில் கொண்டாடின, பின்னர் எதிர்க்கத்தொடங்கின
அவரது வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில், அமெரிக்க ஊடகங்கள் அவரை ஓர் உத்வேகமளிக்கும் நபர் என்றும், தனிப்பட்ட விடாமுயற்சி கொண்ட நபர் என்றும் “அமெரிக்க மனப்பான்மை”யின் அடையாளமாகத் திகழ்பவர் என்றும் கொண்டாடின. ஆனால் அவர் முதலாளித்துவத்தைக் கடுமையாக விமர்சித்து, சோசலிசத்தை ஆதரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, விரைவில் அவை அவருக்கு எதிராகவும் அவரை அவமதித்திடும் விதத்திலும் திரும்பின. ஊடகங்கள் அவர் குறித்து கூறியது போன்றே இன்றைக்கும் நிலைமைகள் இருப்பதைக் காண முடியும். மாற்றுத்திறனாளிகள் இந்த சமூகத்தில் யாசிப்பவர்களாக இருக்கும் நிலை தொடரும் வரைக்கும் அவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களே இந்த சமூகத்திற்கு எதிராக தங்கள் அரசியல் கருத்துக்களை, குறிப்பாக தீவிரமான கருத்துகளைக் கூறிடும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது பேய்த்தனமாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
1914 ஆம் ஆண்டில் ‘டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்’ (‘Det roit Free Press’) ஹெலனைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதியது: “மிஸ் கெல்லர், பெரும் குறைபாடுகளின் கீழ் உன்னதமாகப் போராடும் ஒரு சமூக உறுப்பினரின் வெளிச்சத்தில் பொதுமக்கள் முன் தோன்றி, துரதிர்ஷ்ட வசமாக வைக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு தனது முன்மாதிரியால் உத்வேகம் அளிக்கும் வரை, அவர் ஒரு மதிப்புமிக்கவராகத் தோன்றினார். ஆனால், அவர், அன்றைய அனைத்து அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளையும், முன்னாள் கதீட்ராவைப் போலப் பேசத் தொடங்கியபின்னர், அவை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன.” “காது கேளாதோர், பேச முடியாதவர் மற்றும் பார்வையற்றோருக்கு வெளிச்சத்திற்கு வழி காட்ட, போராடும் ஹெலன் கெல்லர் ஊக்கமளிக்கிறார்.
ஹெலன் கெல்லர் சோசலிசத்தைப் பிரசங்கிப்பது; ஹெலன் கெல்லர் செப்புத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் நன்மைகளைப் பற்றிப் பேசுவது; ஹெலன் கெல்லர் அமெரிக்காவின் அரசியலமைப்பை ஏளனம் செய்வது; இந்த அம்சங்களின் கீழ் ஹெலன் கெல்லர் பரிதாபகரமானவர். அவர் தன் ஆழத்திற்கு அப்பாற்பட்டவர். எந்த அளவிலான உறுதியோ அல்லது அறிவியலோ கடக்க முடியாத வரம்புகளின் குறைபாட்டுடன் அவர் பேசுகிறார். அவருடைய அறிவு கிட்டத்தட்ட முற்றிலும் தத்துவார்த்தமானது, துரதிர்ஷ்டவசமாக இந்த உலகமும் அதன் பிரச்சனைகளும் மிகவும் நடைமுறைக்குரியவை”.

கெல்லரின் பதில்
இவ்வாறு தன்மீது ஏவப்பட்ட விமர்சனத்திற்கு கெல்லர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்: “எனக்கு செய்தித்தாள்களின் ஆசிரியர்களை மிகவும் பிடிக்கும். எனக்குப் பலரைத் தெரியும். இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் எனது மிக நெருங்கிய நண்பர்களாவார்கள். மேலும், பார்வையற்றோருக்காக நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு செய்தித்தாள்கள் பேருதவியாக இருந்துள்ளன. பார்வையற்றோருக்காக தங்கள் உதவியை வழங்குவதற்கு அவர்களுக்கு எந்தச் செலவும் இல்லை. ஆனால் சோசலிசமா? அது வேறு விஷயம்! அது அனைத்து வறுமை மற்றும் அனைத்து நிறுவனங்களின் வேருக்கும் செல்கிறது. செய்தித்தாள்களுக்குப் பின்னால் உள்ள பணபலம் சோசலிசத்திற்கு எதிரானதாகும். மேலும் அவர்களுக்கு உணவளிக்கும் முதலாளிகளுக்குக் கீழ்ப்படிந்த ஆசிரியர்கள், சோசலிசத்தை நசுக்கவும், சோசலிஸ்டுகளின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் எந்த எல்லைக்கும் செல்வார்கள்”.
நியுயார்க் டைம்ஸ் இதழ் ஹெலனை சாதியிலிருந்து விலக்கப்பட்டவர் என்று முத்திரை குத்தியபோது, அவர் பதிலளித்தார்: “நான் எந்த நிற துணியையும் வணங்குபவள் அல்ல. ஆனால் நானும் மற்ற சோசலிஸ்டுகளும் செங்கொடியை விரும்புகிறோம். என் அலுவலகத்தில் ஒரு செங்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. நான் செங்கொடியை ஏந்தி டைம்ஸ் அலுவல கத்தைக் கடந்து அணிவகுத்துச் செல்லும்போது அதன் நிருபர்களும், புகைப்படக்கலைஞர்களும் அக்காட்சியைப் படம் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டைம்ஸ் இதழின் உள்ளடக்கக்கூறுகளின்படி நாங்கள் சந்தேகத்துடன் கருதப்பட வேண்டியவர்கள். ஆனாலும் டைம்ஸ் ஆசிரியர் நான் அவருக்கு ஒரு கட்டுரை எழுதித்தர வேண்டும் என்று விரும்புகிறார். நாங்கள் யாருடைய இரக்கத்தையும் கோரவில்லை. எனினும் எங்களில் சிலர் அவருடைய இதழுக்கு, பணம் பண்ணுவதற்காக கட்டுரைகள் எழுதலாம். அநேகமாக எங்களுடைய கருத்துக்கள் அவர்களைப் பொறுத்தவரை, ஒரு புகழ்பெற்ற கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலம் போன்றவையே. நாங்கள் நல்லவர்கள் அல்ல, ஆயினும் சுவாரசியமானவர்கள்.
” கெல்லரின் பணிகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே!
ஹெலன் கெல்லர் தைரியம், விடாமுயற்சி மற்றும் அறிவுசார் புத்திசாலித்தனத்தின் நீடித்த அடையாளமாகத் தொடர்கிறார். இருப்பினும், அவரது மரபை ஓர் உத்வேகமளிக்கும் நபராகக் குறைப்பது அவருக்கு ஒரு அவமானத்தைச் செய்வதாகும். கெல்லர் ஒரு பரிணாம வளர்ச்சி பெற்றவர். தனிப்பட்ட தடைகளை அவர் வெறுமனே கடக்கவில்லை. மற்றவர்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்கு சவால் விடுக்க தனது அனுபவத்தையும் பார்வைகளையும் பயன்படுத்தியவர். ஊனத்திற்கு எதிராகவும், செயல்பாடு மற்றும் நீதிக்காகவும் உண்மையிலேயே போராடுவதன் அர்த்தம் என்ன என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதை அவரது வாழ்க்கை மறுபரிசீலனை செய்யத் தூண்ட வேண்டும். ஊனமுற்றோருக்கான உரிமைகள், சுகாதார அணுகல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை இன்றைக்கும் ஆழமான மற்றும் அழுத்தமான பிரச்சனைகளாக இருக்கும்போது, கெல்லரின் பணி இன்றைக்கும் மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது.