கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு
-வெற்றி மயிலோன்

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.
இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தவர். 2019 ஆம் ஆண்டு லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகினார். அதன் பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வி.அருண்குமாரின் இல்லத்தில் வசித்து வந்தார்.
அச்சுதானந்தனுக்கு கடந்த ஜூன் 23 ஆம் திகதி மூச்சுத்திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று (21.07..2025) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வி.எஸ்.அச்சுதானந்தனின் வாழ்க்கை. அவர் பிறந்த இரண்டாம் வருடத்தில்தான் எம்.என்.ராய் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான விதையைத் தூவினார். பிறகு ‘கம்யூனிஸ்ட் சோஷலிஸ்ட் பார்ட்டி’ உதயமாகி, அது ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’வான 1940 இல் வி.எஸ். அதில் அங்கமானார்.
ஆலப்புழை அருகே புன்னப்பராவில் பிறந்தவர் வி.எஸ்.அச்சுதானந்தன். தொழிலாளர் சங்க நடவடிக்கைகளில் முன்னின்றுசெயல்பட்டவர். கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமிட்ட தலைவர்களில் ஒருவரான பி.கிருஷ்ணப்பிள்ளையின் உத்வேகத்தால் கட்சிக்குள் நுழைந்தவர். ஆலப்புழையில் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றவர்.

கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்பிடிக்கக் காரணமாக இருந்தது ‘புன்னப்பரா வயலார் எழுச்சி’ப் போராட்டம். புன்னப்பரா, வயலார் தொழிலாளர்கள் இணைந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிமுகப்படுத்தவிருந்த அமெரிக்க மாதிரி ஆட்சி முறைக்கு எதிராக 1946 இல் நிகழ்த்திய போராட்டம் இது. கையில் கிடைத்ததை ஆயுதமாக ஏந்தி திருவிதாங்கூர் போலீஸ் படையை எதிர்கொண்ட தோழர்களில் வி.எஸ்.ஸும் ஒருவர். 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தில் வி.எஸ். கைது செய்யப்பட்டு, பூஜைப்புரை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் கம்யூனிஸ்ட் எனச் சொல்லிக்கொள்வதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த நெஞ்சுரத்துடன் கட்சிப் பணியாற்றினார் வி.எஸ்.
சீனப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முரண்பாடு உண்டானபோது தேசிய கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 32 தலைவர்களில் ஒருவர் வி.எஸ். இப்படித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.
வி.எஸ். மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) கேரளச் செயலாளராக இருந்தவர். 2006 இலிருந்து கேரளத்தின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் மூன்று முறை செயலாற்றியவர் இவர். அந்தக் காலகட்டத்தில் கவியூர் வழக்கு, ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு, கிளிரூர் வழக்கு போன்ற பாலியல் பலாத்கார வழக்குகளின் நீதி விசாரணைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளார். இதற்காகப் பல முறை நீதிமன்றக் கதவுகளைத் தட்டியவர். இதனால், கேரளத்தில் தந்தை ஸ்தானத்தை வி.எஸ். பெற்றார்.
-இந்து தமிழ், 21.07.2025
கேரளத்தின் பிடல் காஸ்ட்ரோ

இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் கருப்பு நாளாக பதிவாகும் நாட்களில் ஒன்று. கேரளத்தின் பிடல் காஸ்ட்ரோ என சீத்தாராம் யெச்சூரியால் கொண்டாடப்பட்ட மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். 101 ஆண்டுகள் என்ற நீண்ட வாழ்க்கையில், ஏழைகளின் குரலாகவும், அடக்கப்பட்டவர்களின் நம்பிக்கையாகவும், சூரியன் போல் சுடர் விட்டு ஒளிர்ந்த அந்த மாபெரும் மனிதர், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ளார்.
1923 ஒக்ரோபர் 20 அன்று திருவிதாங்கூர் அரசின் புன்னப்புராவில் பிறந்த வெலிக்ககாத்து சங்கரன் அச்சுதானந்தன், வறுமையின் கொடு மையை சிறுவயதிலேயே அனுபவித்தார். நான்கு வயதில் தாயையும், பதினொரு வயதில் தந்தையையும் இழந்த அந்த சிறுவன் ஏழாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியை நிறுத்தி, தன் அண்ணனின் தையல் கடையிலும் பின்னர் நார்பட்டை தொழிற்சாலையிலும் உழைத்தார். ஆனால் அந்த வறுமை அவரை வீழ்த்தவில்லை; மாறாக, அது அவரை மக்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு தலைவராக மாற்றியது.
1938 இல் மாநில காங்கிரசில் சேர்ந்த அவர், 1940 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தார். மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி.கிருஷ்ண பிள்ளையின் வழிகாட்டுதலில், அவர் ஒரு தொழி லாளர் தலைவராக வளர்ந்தார். பணக்காரர்களின் நெஞ்சுக்கு நடுக்கமூட்டிய அவரது பெயர், ஏழைகளின் இதயத்தில் நம்பிக்கையின் சின்னமாக நின்றது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மூணாறில் அத்துமீறல்களுக்கெதிரான அவரது போராட் டமும், லொட்டரி மாஃபியாவுக்கு எதிரான அவரது நடவடிக்கையும், ஊழல்களுக்கு எதிரான அவரது அசைக்க முடியாத நிலைப்பாடும் கேரள அரசியலின் ஜொலிக்கும் வரலாறாக நிற்கின்றன. எதிர்க் கட்சித் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதிகாரத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் மக்களுக்காகப் போராடுவதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்திய அரசியலில் நேர்மையின் சின்னமாகத் திகழ்ந்த அவர், முதிய வயதிலும் கூட காலை நடைப் பயிற்சியையும் யோகாசனங்களையும் தவறவிடாமல் செய்து, நூறு வயதைக் கடந்த முதல் கேரள முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.
கேரளத்தின் காஸ்ட்ரோ, இந்திய கம்யூனிசத்தின் முகவரி, ஏழைகளின் நாயகன் வி.எஸ். அச்சுதானந்தன், நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது போராட்ட வாழ்க்கை இன்றைய இளம் தலைமுறைக்கு வழி காட்டியாக நிற்கும். அவருக்கு ‘தீக்கதிர்’ நாளிதழ் புரட்சிகர செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறது.
-தீக்கதிர், 21.07.2025