சீனாவும் இந்தியாவும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு: மோடி முன்னிலையில் ஜி ஜின்பிங் உரை
-வெற்றி மயிலோன்

சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு” என்று கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation – SCO) மாநாட்டில் பங்கேற்க சீனாவின் தியான்ஜின் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எஸ்.சி.ஓ (SCO) அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் ஓகஸ்ட் 31, செப்ரெம்பர் 1ந் திகதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், “சீனாவும் இந்தியாவும் கிழக்கில் உள்ள இரண்டு பண்டைய நாகரிகங்கள் ஆகும். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் மற்றும் உலகளாவிய தெற்கின் முக்கிய உறுப்பினர்கள் ஆவோம்.
நமது இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை, புத்துணர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மனித சமூகத்தின் முன்னேற்றத்தை உருவாக்குதல் ஆகிய வரலாற்றுப் பொறுப்பை நாம் இருவரும் பகிர்ந்து கொள்கிறோம். நல்ல அண்டை மற்றும் நட்பு உறவுகளைக் கொண்ட நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளர்களாகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வாகும்.
இந்தியாவும் சீனாவும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான தங்கள் பொறுப்பை வலுப்படுத்த வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட உலகத்தையும், சர்வதேச உறவுகளில் சிறந்த ஜனநாயகத்தையும் கொண்டு வர ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் செழிப்புக்கு நாம் பங்களிக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு சீன-இந்திய ராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. நிலையான, உறுதியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இருதரப்பு உறவுகளை நீண்ட கால கண்ணோட்டத்தில் அணுகி கையாள வேண்டியது அவசியம்” என்று ஜி ஜின்பிங் கூறினார்.
இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம், இதன் மூலம் நமது உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் உருவாக்கப்பட்டது.
எல்லை மேலாண்மை விஷயத்தில் நமது சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.
நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது மனிதகுலத்திற்குத் தேவை. ஷாங்காய் உச்சி மாநாட்டில் சீனாவின் வெற்றிகரமான தலைமைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்ததற்கும் இன்று எங்கள் சந்திப்புக்கும் நன்றி” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சமீபத்தில், இந்தியாவும் சீனாவும் தங்கள் இருதரப்பு உறவை சீராக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த பிறகு எஸ்.சி.ஓ உச்சிமாநாடு நடப்பதால், இந்த உச்சிமாநாடு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது.
இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல!- பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் உறுதி

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல’’ என்று இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் ஓகஸ்ட் 31 அன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி: ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். அதன்பிறகு, இரு நாடுகளின் உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. எல்லை பகுதிகளில் இருந்து பரஸ்பரம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படையில் இரு நாட்டு உறவை முன்னெடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல. நம்மிடையே நெருங்கிய ஒத்துழைப்பு நீடித்தால், இரு நாடுகளை சேர்ந்த 280 கோடி மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனித குலமும் பயனடையும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்: இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள், நட்பு நாடுகள். இரு நாடுகளிலும் 280 கோடி மக்கள் வசிக்கின்றனர். நாம் கூட்டாளிகள்தான். எதிரிகள் கிடையாது. டிராகனும் (சீனா), யானையும் (இந்தியா) ஒன்றிணைந்துள்ளன. இது மிகச் சரியான முடிவு. வளர்ச்சிப் பாதையில் ஒன்றிணைந்து முன்னேற பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும். எல்லை பிரச்சினையால் இருதரப்பு உறவு ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு, ஜி ஜின்பிங்குக்கு மோடி அழைப்பு விடுத்தார். இதை ஜின்பிங்கும் ஏற்றுக்கொண்டார். அவர்களது பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சீனாவில் இருந்து அதிக அளவிலான பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், சீனாவுக்கான இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட சீன தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, தீவிரவாத பிரச்சினையையும் மோடி எழுப்பினார். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சீனா கைகோக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையும் சீன தரப்பு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஒபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்தும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற அந்த போரின்போது, பாகிஸ்தானுக்கு இராணுவரீதியாக சீனா பல்வேறு உதவிகளை செய்தது. இனிமேல், அதுபோன்ற நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடாது என்று இந்திய தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதற்கும் சீன தரப்பில் ஆக்கப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தனது காரை மோடிக்கு வழங்கிய ஜின்பிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘ஹாங்கி எல்-5’ என்ற அதிநவீன சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா வந்துள்ள பிரதமர் மோடியின் பயணத்துக்கு சீன அதிபர் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் உட்பட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.