மணிப்பூர் கலவரத்தின் உண்மை பின்னணி இது தான்!

-ச. அருணாசலம்

நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் காவு வாங்கப்பட்ட போதும், ஆயிரக்கணக்கில் குடியிருப்புகள் எரிக்கப்பட்ட போதும் மணிப்பூர் இந்தியாவில் இருப்பதே மோடிக்கு தெரியவில்லை. தற்போது அங்கு சென்று அவர் சாதித்தது என்ன? மோடி, அமித்ஷா, பைரோன் சிங் ஆகியோர்களால் வித்திடப்பட்ட கலவரத்தின் விளைவை பார்க்கவோ இந்த விசிட்:

கலவரம் வெடித்து 28 மாதங்கள் கடந்து மணிப்பூர் சென்றார் மோடி.

மணிப்பூர்  சென்ற மோடி அங்கு “ சில மணி நேரங்களை” செலவிட்டு ரோடு ஷோ நடத்தி விட்டு, டெல்லி திரும்பி இருக்கிறார். சூரசந்பூரில் ரோடு ஷோ நடத்திய பிறகு, மணிப்பூரில் நட்ந்த நிகழ்ச்சியில் 8,500 கோடி பெறுமான “நலத் திட்டங்களை” அறிவித்துவிட்டு தன் கடமை முடிந்ததென ஊர் திரும்பிய மோடியை என்னவென்று கூறுவது?

மே 2023-ல் வெடித்த கலவரத்தால் அங்கு வாழும் மெய்தீ இன மக்களும் குக்கி-ஜோ இனத்தை சார்ந்த மக்களும் பகையாளிகளாக மாறியுள்ளனர், ஏராளமான குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறையில் உயிரிழந்தனர், இன்றும் 65,000 பேர் அகதிகள் முகாமில் தங்கி இருக்கின்றனர். அமைதி இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

இரண்டு பிரிவு மக்களிடையே, குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்திய பிறகும் இணக்கமோ அல்லது பேச்சுவார்த்தைகள் துவக்கமோ ஏற்படவில்லை. இந்தச்சூழலில் மணிப்பூர் வந்த மோடி மெய்தீ இன மக்களையோ, அல்லது குக்கி இன மக்களையோ , பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையோ, சிவில் சமூகத்தினரையோ சந்திக்கவில்லை, கலவரத்திற்கான காரணம் எது, அமைதி திரும்ப என்ன வழி, இதுவரை மத்திய – மாநில அரசுகள் செய்யத் தவறியது என்ன, செய்தது என்ன? இனி என்ன செய்ய உத்தேசம் என்பது பற்றி பிரதமர் வாய்திறக்கவில்லை!

“இன்று நான் உங்களுடன் இருக்கிறேன், இந்திய அரசு மணிப்பூர் மக்களுடன் இருக்கிறது “ என்று கூறினாரே ஒழிய, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் , நிவாரணமும் கொடுத்தாரா? அல்லது இன்னும் தொடர்ந்து வரும் கலவரச் சூழல்களை களைய, அமைதியையும் மக்களிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்த என்ன முயற்சிகள் எடுத்தேன் என்பது பற்றியோ, அல்லது அதற்கு உங்களது ஆலோசனைகள் ஏதும் உண்டா? போன்ற உரையாடல்களையோ மோடி செய்தாரில்லை.

மணிப்பூர் மோதல்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த மோதல் நமது முன்னோர்களுக்கும் நமது எதிர்கால சந்ததியினருக்கும ஒரு பெரிய அநீதி என்றார். மேலும், மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு மக்களுக்கு இடையே ஒரு வலுவான பாலத்தை கட்ட வேண்டியது அவசியம் என்றார். இது சாத்தான் வேதம் ஓதுவது போல அந்த மக்களால் உணரப்பட்டிருக்கும்.

மணிப்பூர் பிரச்சினை இரு சமூகங்களிடையேயான மோதலா?

1949ல் இந்தியாவுடன் இணைந்த மணிப்பூர் மெய்தீ இன மக்களுக்கும் , குக்கி நாகா மற்றும் ஜோ இன மக்களுக்கும் உறைவிடமாக திகழ்ந்து வருகிறது. வீர வைணவத்தை கடைபிடிக்கும் பெரும்பான்மை மெய்தீ மக்கள் இம்பாலை சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகின்றனர். பங்கல் என்றழைக்கப்படும் இஸ்லாமிய மெய்தீகளும் இதில் அடக்கம். கல்வியிலும் வணிகத்திலும் முன்னேறிய இச் சமூகத்தினரில் மகளிர் வணிகத்தில் பெரிதும் ஈடுபட்டு சிறந்து விளங்குகின்றனர்.

குக்கி ஜோ இன மக்களோ பழங்குடிகளான ‘சின்’ இனத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றாவர் , இம்மக்கள் மலைகளில் வாழ்ந்து வருகின்றனர். எண்ணிக்கையில் இவர்கள் குறைவாக இருந்தாலும் படர்ந்து பெருகிய மலைகளே இவர்களது வாழ்விடமாக இருக்கின்றது.

இந்தியாவின் வட கிழக்கில் உள்ள மாநிலமான மணிப்பூரின் எல்லைகள் மியான்மரை (பர்மா) ஒட்டியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான எல்லை செயற்கையானது. ஒரே இன மக்கள் வாழும் பகுதிகளை பிரித்தானிய ஏகாதிபத்தியம் பர்மா என்றும் மணிப்பூர் என்றும் பிரித்ததால் எல்லைகள் ஓட்டைகள் நிறைந்த , தொடர்புகள் மிகுந்த வரையரை கொடு மட்டுமே. வேலியிடப்பட்ட எல்லை அல்ல.

மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் அதிகம் வாழும் மெய்தீ இன மக்கள் மியான்மரிலும் வசிக்கின்றனர். மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு முதலே மெய்தீ இன மக்களில் பெரும்பாலோர் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாகவும் மிகச் சொற்பமானோர் இந்தியாவுடனான இணைப்பை ஆதரிப்பவர்களாகவும் இருந்தனர் இவர்கள் மணிப்பூர் காங்கிரஸ்காரர்கள் என அறியப்பட்டனர்.

தனிநாடு கேட்போர் பிரஜா சங் , மற்றும் மணிப்பூர் கம்யூனிஸ்டு கட்சி (Communist Party of Manipur) ஆகிய கட்சிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி கொண்டனர். மணிப்பூர் விவசாயிகள் மத்தியிலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஹிஜாப் ஈராபோட், மணிப்பூர் கம்யூனிஸ்டு கட்சியை துவங்கி மணிப்பூரின் விடுதலைக்கு வித்திட்டார். 1951 -ல் ஈராபோட்டின் மறைவுக்கு பின்னர் இந்த போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. பிறகு 1960 களில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மணிப்பூர் மக்கள் படை, காங்லேபாக் புரட்சி படை மற்றும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் (PLA, PREPAK,and KCP) தோன்றி கிளர்ச்சியை முன்னெடுத்தன.

நாகா மக்களும் தனிநாடு கேட்டு ஆயுத எழுச்சியில் ஈடுபட்டனர். நாகா மக்களிடையே மட்டுமின்றி, மிசோ மற்றும் குக்கி இன மக்களிடையேயும் இன அடையாள தேசீயவாதம் பெருகி, தனிநாடு கோரிக்கைகள் வலுப்பெற்றன. பல்வேறு தேசீய இனங்கள் தங்களது கோரிக்கைகளை, இருப்பை வலுப்படுத்த தங்களுக்கென தனித்தனியான ஆயுதமேந்திய பாதுகாப்பு குழுக்களை அமைத்து போராடின. இந்திய அரசுடன் மட்டுமின்றி, இந்த குழுக்கள் பிற அமைப்புகளுடனும் சில சமயங்களில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டன..

இந்தச் சூழலில் இந்திய அரசு இக்கிளர்ச்சியை அடக்க இராணுவத்தை பயன்படுத்தியது. ஆயுதப்படை சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் (AFSPA) பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள் மணிப்பூரில் பூசி மெழுகப்பட்டன, மெய்தி இன மக்களே AFSPA க்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். ஐரோம் சானு சர்மிளா என்ற நங்கை ஆயுதப்படை சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை விலக்க சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்றதை நாமறிவோம்.

ஐரோம் ஷானு ஷர்மிளா

மெய்தீ இன போராளிகளுக்கு மியான்மரில் உள்ள மெய்தீ மக்கள் உதவினர். குக்கி -ஜோ இன மக்களுக்கும் மியான்மரில் தொப்புள் கொடி உறவுகள் இருந்தன. ஆனால் இவர்களுக்கிடையே இனப் பகையோ, இன மோதலோ பெருமளவு இல்லை என்பதே உண்மையாகும்.

மெய்தீ ஆயுதக்குழுக்களை மற்ற இனக் குழுக்களிலிருந்து தனிமைப்படுத்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆரம்ப முதலே முயன்றது. அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை மெய்தீ இன மக்களின் எதிரிகளாக மெய்தீ இன மக்களால் குறிப்பாக மெய்ரா பைபீஸ் (Meira Paibis) அமைப்பால் அன்றும், இன்றும் கருதப்படுகிறது.

இத்தகைய ஆயுதமேந்திய குழுக்கள் மிரட்டி பணம் பறிப்பது (extortion) மூலமாகவே தங்களது வருவாயை ஈட்டினர். இதற்காக இக்குழுக்கள் தேசீய நெடுஞ்சாலைகளில்

(NH-39, NH-53) 26 இடங்களுக்கும் மேலான இடங்களில் சோதனை மற்றும் வசூல் (toll)

சாவடிகளை நிறுவி பணம் வசூலித்தனர். இது தவிர போதை பொருள் கடத்தலின்  மூலமாகவும் இக்குழுக்கள் பணம் சம்பாதித்தன.

இத்த்தகைய கலாச்சாரம் மெய்தீ இனக்குழுக்கள், குக்கி–ஜோ இனக்குழுக்கள்,  நாகா மற்றும் பிற இனக்குழுக்களின் மத்தியில் திகழ்ந்தது. இதற்கு யாரும்  விதிவிலக்கல்ல.

இந்தச் சூழலில் இந்திய ராணுவம் மணிப்பூர் தீவிரவாதக் குழுக்களை வேட்டையாடி ஓரளவு வெற்றி கண்ட பின்பு, குக்கி மற்றும் நாகா குழுக்களுடன் அமைதி பேச்சு வார்த்தைகளில் இந்திய அரசு இறங்கியது.

இந்திய ராணுவம் குக்கி தீவிரவாதக் குழுக்களின் மீதான நடவடிக்கைகளை (Suspension of Operations) நிறுத்த , 2005 -ல் முயற்சி எடுத்தது. ஏப்ரல் 2008 -ல், 25 குக்கி தீவிரவாதக் குழுக்கள் மற்றும் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய மூன்று அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்த ஒப்பந்தம் (SoO) ஏற்பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதிக்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட இது வழி வகுத்தது எனலாம்.

ஒட்டு மொத்தமாக அரசுக்கும் ‘தீவிரவாதக் குழுக்களுக்கும்’ – அவை மெய்தீ குழுக்களாக இருந்தாலும் சரி, குக்கி -ஜோ குழுக்களாக இருந்தாலும் சரி- இடையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தன.

இத்தகைய சூழலில் மணிப்பூர் அரசியல் களம் பல மாறுதல்களை சந்தித்தது. அரசியல்வாதிகளின் எண்ணங்களும், அபிலாஷைகளும் மாறுதலை சந்தித்தன. பொதுவாக தீவிரவாத குழுக்களுடன் இணைந்து செயல்படாத ‘தேர்தல் அரசியல்வாதிகள்’ மத்தியில் யார் ஆட்சி பொறுப்பில் உள்ளார்களோ அவர்கள் பக்கம் சார்ந்து தங்களது அரசியல் பாதையை வகுத்து கொள்வது , வட கிழக்கு மாநில அரசியலின் ஒரு குணாதிசயமாகும்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியிலமர்ந்த சமயத்தில், அக்கட்சியில் 2004ல் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக ஆனார், பிரேந்திர சிங் . இவர் முதலில் புரட்சிகர ஜனநாயக மக்கள் கட்சி (DRPP) என்ற கட்சியை நடத்தி வந்தார். அக்கட்சியை காங்கிரசுடன் “இணைத்து” எம்.எல் ஏ. ஆனார்.

பிறகு பாஜ க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு 2016-ல் பாஜகட்சிக்கு தாவினார். பாஜகவில் ஏற்கனவே உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவரை ஏற்றுக் கொள்ளாத்தால் குக்கி ஜோ மற்றும் நாகா இனத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு 2017 தேர்தலுக்கு பிறகு மணிப்பூரின் முதல்வர் நாற்காலியை பிடித்தார்.

போதைப்பொருளான ‘பாப்பி’ பயிரிடலும், போதை மருந்து தயாரிப்பதும் மணிப்பூர் தீவிரவாதிகளுக்கு மட்டுமின்றி, அரசியல்வாதிகளுக்கும் பணம் கொட்டும் தொழிலாகும்.

அதிகாரத்தை கையில் வைத்துள்ள பிரேந்திர சிங் போதை பயிரிடல் மற்றும் உற்பத்தியை தன்ன்னுடன் கூட்டு வைத்துள்ள குக்கி இனக்குழுக்கள் மூலமாக வெற்றிகரமாக நடத்தினார்.

ஒரு பக்கம் மெய்தீ இன மக்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்ட பிரேந்திரசிங் தன் செல்வாக்கை உயர்த்தி நிலைநாட்ட குக்கி இனக் குழுக்களையே போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுத்தி பாதுகாப்பு அளித்து தாதாவாக உருப்பெற்றார். மெய்தீ இன தீவிரவாத அமைப்புகள் பத்துக்கும் மேற்பட்டு இருந்த காலம் போய் இப்பொழுது பேரினவாதமும், மதவாதமும் பேசும் ஆரம்பாய் தெங்கோல் என்ற தீவிரவாத அமைப்பு வலுப்பெற பிரேந்திர சிங் உதவினார். இம் முயற்சிக்கு ஆர்.எஸ.எஸ் மற்றும் மோடி-ஷா கும்பலின் ஆசியும், ஆதரவும் அவருக்கு இருந்தது. இதற்கு சாட்சி பிரிந்தா என்ற மணிப்பூர் உயர்காவல் அதிகாரியின் வாக்கு மூலமாகும்.

மெய்தீ இன மக்களின் பாதுகாவலனாக, பா.ஜ.கவின் அவதார புருஷனாக தன்னை நிலைநாட்ட பிரேந்திர சிங் முயற்சிக்கையில் குக்கி இன குழுக்களோடு மோதல் ஏற்பட்டு ‘பண பட்டுவாடா தகராறில் ‘பிரேந்திர சிங் குக்கி இன கூட்டுறவு முறிந்தது.

இப்பொழுது தனது பிணக்கை சரி செய்ய பிரேந்திரசிங், குக்கி -ஜோ இனம் முழுவதையுமே வந்தேறிகள் என்றும், போதை பொருளான பாப்பி பயிரிடுபவர்கள் என்றும் மணிப்பூர் மக்களின் எதிரி என்றும் புதுவிதமான சித்தரிப்பை ஏற்படுத்தினார்.

ஆரம்பாய் தெங்கோல் அமைப்பின் மூலம் சட்டபுறம்பாக குடியமர்ந்தவர்களுக்கு எதிரான (குக்கி மக்களுக்கு எதிரான) போராட்டங்களை முடுக்கிவிட்டார். கைகலப்புகள், வன்முறைகள் பெருகின. மணிப்பூர் கலாச்சாரத்திற்கே ஆபத்து என்ற முழக்கங்கள் எழுந்தன, கோகோமி (Coordinating Committee On Manipur Integrity) போன்ற மெய்தீ அமைப்புகள் இப்பிரச்சாரத்தை முன்னெடுத்தன.

இந்நிலையில் மெய்தீ மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையும் கிளப்பப்பட்டது, மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் மெய்தீக்கு ஆதரவான தீர்ப்பு, அதை எதிர்த்து குக்கி இனத்தினரின் பேரணி, அந்தப் பேரணியைக் குலைக்க வெடித்த வன்முறை என மணிப்பூரில் பிரச்சினைகள் இரு இனங்களுக்குடையிலான மோதலாக

பிரேந்திர சிங்கால் மாற்றப்பட்டன. மணிப்பூர் அரசின் இத்தகைய சித்தரிப்பை ஊடகங்கள் கேள்வி கேட்காமல் அப்படியே எதிரொலித்தன.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்த சமயத்தில் ஏற்பட்ட மணிப்பூர் கலவரங்களை பற்றி ஊடகங்கள் ஆரம்பத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. மணிப்பூர் காவல்துறையின் உதவியுடன் குக்கி இன மக்கள் வேட்டையாடப்பட்டனர், விரட்டப்பட்டனர், இம்பால் முழுவதும் குக்கி மக்கள் வேட்டையாடப்பட்டனர்!

அவர்களது வசிப்பிடங்கள், வழிபாட்டு தலங்கள் (சர்ச்சுகள்) தீக்கிரையாக்கப்பட்டன. திட்டமிட்டு இரு இன மக்களிடையே மோதலை பிரேந்திர சிங் தூண்டி வளர்த்தது, இதன் விளைவாக மலை பகுதியில் உள்ள, மெய்தீக்கள் அதிகம் வசிக்கும் சூரசந்திரபூர் குக்கி தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது, விட்டியடிக்கப்பட்ட மெய்தீ இன மக்கள் இம்பால் பள்ளதாக்கை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

2023 மார்ச் மாதத்தில் மணிப்பூர் – பிரேந்திர சிங்- அரசு குக்கி தேசீய படை (KNA) மற்றும் ஜோமி புரட்சிகர முன்னணி (Zoami Revolutionary Front) ஆகியவற்றுடனான நடவடிக்கைகளை ஒத்தி வைக்கும் (SoO) ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியது. இப்படி திட்டமிட்டு மெய்தீ மற்றும் குக்கி மக்களிடையே வெறுப்பையும், மோதலையும் பிரேந்திர சிங் அரசு திட்டமிட்டு விதைத்து வளர்த்தது.

போதை பொருள் வியாபாரத்தில் குக்கி குழுக்களுடன் பிரேந்திர சிங் கூட்டு சேர்ந்து பணியாற்றியதை அம்பலப் படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) அமீத் சிங்கை 200 ஆரம்பாய் தெங்கோல் குண்டர்கள் கடத்தி சென்று சித்திரவதை செய்தனர்.

அவர் குற்றுயிரும் குலையுயிருமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து இச்சம்பவத்தை கண்டித்து பல மணிப்பூர் காவல்துறை உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டனர். ஆனால், அதைத் தொடர்ந்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, காரணம், பிரேந்திர சிங்கின் அதிகாரம் அப்படி!

இவ்வாறு பிரேந்திர சிங்கை தட்டி கொடுத்தவர்கள், பாதுகாப்பு கொடுத்தவர்கள் மோடியும், அமீத்ஷாவும் தான் என்பதை யார் மறுக்க முடியும்?

ஜூலையில் இளம் பெண்கள் நிர்வாண கோலத்துடன் இழுத்துவரப் படும் வீடியோ ஆதாரங்கள் வந்த பிறகே இந்திய மக்கள் தங்களது சினத்தை வெளிப்படுத்தினர்.

அப்பொழுதும், அதற்கு பின்னரும் (2023 முதல் 2025 பிப்ரவரி வரை) மோடி ஷா கும்பல் பாதுகாத்து வந்தது. பிரேந்திர சிங்கை மாற்றக் கோரிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை மோடி பார்க்கவே இல்லை , சந்திக்க மறுத்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமீத் ஷா  “பிரேந்திர சிங் சட்ட  ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய அரசுடன் நன்கு ஒத்துழைக்கிறார்” என்று  கூறினார் .

பிரேந்திர சிங்கோ , “நான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும்  மோடி ஷா  ஆகியோரின் ஒப்புதல் உள்ளது, அவர்கள் ஆலோசனைக்கிணங்கவே நான்  செயல் படுகிறேன்“ என்று  கூறினார்.

இன்று உண்மையிலேயே மெய்தீ இன மக்கள் மற்றும் குக்கி இன மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையின்மை தென்படுகிறது. தனி அதிகாரமுள்ள பிரதேசம் வேண்டுமென்ற குக்கிகளின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசு காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்பதும், அஸ்ஸாம் ராணுவ அமைப்பு (Assam Rifles) குக்கி இன மக்களுக்கே பாதுகாப்பு கொடுக்கிறது என்ற கருத்தும் பரவலாக வலுப்பெற்றுள்ளது.

இவற்றை சரி செய்து, மத்திய அரசு பாரபட்சமின்றி குற்றமிழைத்தவர்களை, வன்முறையில் ஈடுபட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்தாமல், தண்டிக்காமல் அம்மாநிலத்திற்கு அமைதி திரும்பாது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினைகளை -இன மோதல்களை – வளர்த்தெடுத்த பாஜ க வினரின் மோடி-ஷா தலைமை, பிரேந்திர சிங்கை போற்றி பாதுகாத்து வருகிறது.

வன்முறையை தூண்டிவிட்டார் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளிவந்த பின்னரும் மத்திய அரசு பிரேந்திர சிங்கை நீதியின் முன் நிறுத்த முயற்சிக்கவில்லை. காரணம், பிரேந்திர சிங் “அவர்களில் ஒருவர்”. அவர் இழைத்த செயல்கள் அனைத்தும் மோடி ஷாவின் அனுமதியில் ஒப்புதலில் நடந்தது என்ற பொழுதில் பிரேந்திர சிங் மட்டுமே குற்றவாளியா?

பதவியை காப்பாற்ற குறுக்கு வழிகள் தெரியுமே தவிர, வட கிழக்கின் குறிப்பாக மணிப்பூரின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ, தீர்வு காணவோ மோடி-ஷா கும்பலுக்கு ஞானம் பத்தாது! இல்லாத ஞானத்தை இருப்பதாக பறைசாற்ற பல மாதங்கள் கழித்து மணிப்பூர் சென்று வந்த மோடி சாதித்ததென்ன?

உங்களுடன் தான் இருக்கிறேன், மத்திய அரசு இருக்கிறது என்று மணிப்பூரில் மோடி கூறுவது நமக்கு ஒரு திருக்குறளை ஞாபகப்படுத்துகிறது. அந்தக் குறள் இது தான்:

“ பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து”.

Tags: