மனுநீதி வழியில் சனாதனப்படியான ஆட்சியா பாரதிய ஜனதாக்கட்சி அரசு?

ட்டங்களின் பெயர்களெல்லாம் சமஸ்கிருதமாக்கப்பட்டுள்ளன. திட்டங்களின் பெயர்களும் சமஸ்கிருதத்திலேயே வைக்கப்படுகின்றன. மனுநீதிக்கு மறுபடியும் புத்துயிர் தர நினைக்கிறது பாரதிய ஜனதாக்கட்சி அரசு. எனவே, எல்லாவற்றையும் சனாதனக் கண்ணாடி வழியே பார்க்க மக்களை பயிற்றுவிக்கிறது.இது குறித்த ஒரு அலசல்.

சனாதனத்தை விமர்சிப்போர் அது குறித்த சில அடிப்படைகளை அறியவே இங்கு தொகுத்து தந்துள்ளோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த  செ.தினகர ஞானகுருசாமி  அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். அறியப்படாத இந்து மதம், சனாதனம் அறிவோம், (சனாதான லீக்ஸ்) உள்ளிட்ட  நூல்களை எழுதிய இவர் மாறுபட்ட கோணத்தில்  வேதங்கள், புராணங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் பாட்டாளி படிப்பு வட்டத்தில் பேசியதாவது:

அரசியல் சாசனம் அமுலுக்கு வந்து விட்டாலும், மனுதர்ம நூல்கள் நம் சிந்தனையில் இன்றளவும் தாக்கம் செலுத்தி வருகின்றன. மனு தர்மத்தை மேற்கோள் காட்டி நீதிபதிகள் தீர்ப்பு சொல்லுகிறார்கள். மனுநீதி சோழனின் சிலையை சென்னை  உயர்நீதிமன்றத்தில் நிறுவியுள்ளனர். இங்குள்ள சாதியப் படிநிலையை பாதுகாப்பதில் சனாதனம் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்திய ஒன்றிய அரசு, தொழிலாளர் கொள்கையின்  வரைவு அறிக்கையை ஷ்ரம் சக்தி நிதி வெளியிட்டுள்ளது. ஷ்ரம் என்ற சொல்லுக்கு உழைப்பவர் என்று பொருளாம். மனுஸ்மிருதி யாக்ஞவல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி போன்ற நூல்கள் மூலம் பண்டைய இந்தியாவில் ராஜதர்மம் இருந்தது  என்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

உலகத்தில் எந்த மதமும் நிலத்தோடு தொடர்புடையது அல்ல. ஆனால் சனாதனம் அல்லது ஆரியதர்மம் அல்லது வைதீக தர்மம் அல்லது பிராமண மதம் என்பது நிலத்தோடு தொடர்பு உடையது. அது இந்த மண்ணில் பிறந்தவனையே அங்கீகரிக்கிறது.

ஆரிய வர்த்தம் என்று சொல்லப்படும் புண்ணிய பூமிக்கு வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை என நான்கு புறமும் எல்லைகள் உண்டு. இங்குதான் கிருஷ்ணாசாரம் என்று அழைக்கப்படும் மான் உள்ளது. இந்த மான் இல்லாத தேசம் மிலேச்ச தேசம்.

பெயர் வைப்பது, விவாகம் செய்வது, சந்தியாவந்தனம், பூணூல், திதி என கருவில் இருந்து இறக்கும் வரை செய்ய வேண்டிய கருமானுஷ்டானங்கள் 48 உள்ளன. இவையனைத்தையும் இந்தப் பூமியில்  செய்தால் தான் வீடுபேறு கிடைக்குமாம். இவையனைத்தும் ஆண்களுக்குத்தான்; பெண்களுக்கு வீடு பேறு இல்லை. மிலேச்ச (அன்னிய) தேசத்தில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடையாது.

சனாதனத்திற்கு அடிப்படையாக ஸ்ருதி, ஸ்மிருதி என இரண்டு வகைகளில் விதிகள் உள்ளன. ஸ்ருதி என்பது காதால் கேட்டு, மனனம் செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாகும். இவை எழுதப்படாதவை.

ஸ்மிருதி என்பது எழுதப்பட்டவையாகும். இந்த விதிகளை  பிரம்மன் (கடவுள்) கொடுத்தது என்று சொல்லுகிறார்கள். அவை வேத வாக்கு என்பதால் கேள்வி கேட்காமல் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.

ரிக், யசுர், சாம, அதர்வணம் என  நான்கு வேதங்கள் உள்ளன. இதில் ரிக் வேதம் பழமையானது. இதனை விரிவுபடுத்தி யசுர், சாம வேதங்கள் வந்தன. அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களின் தொகுப்பாகும். இது, இறுதியாக வந்த வேதமாகும். இவை நான்குமே கடைபிடிக்க வேண்டியவை. இதைத் தவிர உபநிடதங்கள், புராணங்கள் (இராமாயணம், மகாபாரதம்), உப புராணங்கள், தல புராணங்கள், ஆகம விதிகள் என ஆயிரக்கணக்கான சனாதன  நூல்கள் உள்ளன. இதைத் தவிர ஆச்சாரியார்கள் ( உ-ம். ஆதிசங்கரர், இராமானுஜர்) கூறுவதும் விதிகளே என்கிறார்கள்.

இத்தகைய நூல்கள் பிற்காலத்தில் எழுத்து வடிவம் பெற்றன. மனுதர்மம் போன்ற பல தர்ம சாஸ்திர நூல்களின் சுருக்கம் தமிழில் 1826 இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தமிழில் 1865 இல் மநுதரும சாஸ்திரம் எனும் பெயரில் இளையவல்லி இராமாநுஜாசாரியார் எழுதிய முழுமையான நூல் அச்சில் வெளிவந்தது. 1907 இல் இதே நூல் பதிப்பிக்கப்பட்டது. பிறகு வெளிவந்த இதே நூலின் 1919 ஆம் ஆண்டு பதிப்பினை திராவிடர் கழகம் நூல் வடிவில் தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு ஒரு முக்கியமான விழிப்புணர்வுப் பணியை செய்தது.

மன்னர்கள் காலத்தில் மனுதர்ம அடிப்படையில் குற்றவியல், உரிமையியல் நீதி வழங்கப்பட்டது…என்பதை நாம் அறிவோம்.

நமது நீதிமன்றங்களில் தாயாபாகம் (தந்தை இறந்த பிறகு சொத்தை பிரிப்பது) மித்தாக்ஷ்ரம் (தந்தை உயிரோடு இருக்கையில் சொத்தை பிரிப்பது) அடிப்படையில் சொத்துகள் பிரிக்கப்பட்டன. (பெண்களுக்கு சொத்துரிமை இல்லை). தமிழ் மன்னர்களும் இத்தகைய மனுதர்மத்தைத் தான் கடைபிடித்தார்கள். மனுநீதி சோழன், மனுகுல தர்மன் என்ற மெய் கீர்த்திகளை பெற்றுக் கொண்டனர். ராஜராஜன் நடத்திய வேத கலாசாலையில் 12 உபாத்தியார்களைக் கொண்டு 190 மாணவர்களுக்கு ரிக், யசுர் வேதம் சொல்லிக் கொடுத்ததாக பாஹூர்-திரிபுவனம் வரதராஜப்பெருமாள் கோயில்  கல்வெட்டு கூறுகிறது. இத் தகவலை காஞ்சி மகாபெரியவர் தெய்வத்தின் குரல் நூலில் ‘தமிழகத்தின் வேத கலாசாலைகள்’ தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னர்களின் வைத்திருந்த நீதி் வழங்கும் குழுவில் வேதம் படித்தவர்கள் இருந்தார்கள். வேதங்களை  சூத்திரனும், பஞ்சமனும் மட்டுமல்ல, எந்த சாதியில் பிறந்தாலும் பெண்களும் படிக்க முடியாது, கூடாது. மனுதர்மம் எவ்வளவு வன்மாக இருக்கிறது என்பதை அதைப் படித்தாலே உணர முடியும்.

ரிக் வேதம் பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன், இடுப்பிலிருந்து பிறந்தவன் வைசியன், காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் என்று கூறுகிறது.

இதற்கு அடுத்து வந்த யசுர் வேதம் சடங்குகள் பற்றி விரிவாகக் கூறுகிறது. கிருஷ்ண யசுர்வேதம், சுக்ல யசுர் வேதம் என இரண்டு உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்கள் பெரும்பாலும் கிருஷ்ண யசுர்வேதத்தை பின்பற்றுபவர்கள். கிருஷ்ணா என்றால் கருமை என்று பொருள். சுக்ல யசுர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள் வட இந்தியாவில் உள்ளனர். சுக்ல என்றால் வெண்மை என்று பொருள். வட இந்தியாவில்  சுக்ல யசூர் வேதிகள் அதிகம் இருப்பதை நாம் காணலாம்.

பிராம்மணர்களுக்கு அக்னி ( தீ) என்பது முழு முதல் கடவுள். அடிப்படையில் உருவ வழிபாட்டை அவர்கள் ஏற்கவில்லை. அக்னி இல்லாமல் திருமணம், இறப்பு என எந்தச் சடங்கையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அக்னிஹோத்ரி என்று பெயர் வைத்திருப்பதை நாம் காணலாம். வேதத்தை கற்பதும், கற்றுக்கொடுப்பதும் வேதம் ஓதி அக்னி காரியங்களை (வேள்வி, யாகம், ஹோமம்) அவர்களது தொழிலாகும்.

தோளில் பிறந்த சத்திரியன் வேதத்தை கேட்கலாம்; பாராயணம் பண்ணக் கூடாது (அதாவது மற்றவர்களுக்கு சொல்லித் தரக் கூடாது).

வைசியனும் வேதத்தை கேட்கலாம். ஆனால், சொல்லித் தரக் கூடாது. வாணிகம் இவனது தொழில். பசு செல்வத்தின் அடையாளம்.

பிராம்மணன் பிரம்மனின்  தலையில் தோன்றிய போது அவனுடன் அக்னியும், க்ஷத்திரியன் தோளில் பிறந்த போது இந்திரனும், வைசியன் வயிற்றில் பிறந்த போது விசுவேசு எனும் தேவனும் பிறந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரம்மனின் காலில் சூத்திரன் பிறந்த போது அவனுடன் ஒரு தேவனும் பிறக்கவில்லை. காலில் பிறந்ததாகச் சொல்லப்படும் சூத்திரன் வேதம் காதில் விழும் இடங்களுக்குச் செல்லக் கூடாது. இவர்கள் அடிமையாகவே இருக்க வேண்டும். மேல்படியில் உள்ள மற்ற மூன்று வர்ணத்தவர்களுக்கு சேவை செய்வது தான் இவனது தொழிலாகும்.

முதல் மூன்று வர்ணத்தவருக்கு அடிமைச் சேவகம் செய்ய வேண்டியதற்காகவே குதிரையுடன்  சூத்திரனும் பிறக்கிறான். முதல் மூன்று வர்ணத்தவருக்கு அடிமைச் சேவகம் செய்வதே சூத்திரனின்  தர்மம் எனபதை கிருஷ்ண யசூர் வேதமே முதலில் உறுதிப்படுத்துகிறது. சேவை, சேவகன் எனும் பதம் இங்கிருந்து தொடங்கியது எனலாம்.

தினகரன் ஞானகுருசாமி

பிரதிபலன் எதிர்பார்க்காமல் சேவை செய்ய வேண்டும். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத்கீதை சொல்லும் உபதேசமும் இந்த வகையில் தான் உள்ளது.

சனாதனம் எனப்படும் பிராமண மதம் சொல்லுவது இதைத்தான். இத்தகைய ராஜ தருமத்தை மற்றவர்கள் கடைபிடிக்கச் செய்ய வேண்டியது மன்னனின் வேலை.

இத்தகைய மனுதர்மங்கள் பிராமண, சத்திரிய, வைசிய வர்ணத்தவர்களுக்குத் தான். இத்தகைய நூல்கள் சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் இந்த வகையான நூல்கள் குறைவாக உள்ளன. ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை மனுதர்ம முறையில் வகுத்துள்ள அரசு, தற்போது தொழிலாளர் கொள்கையையும் இதே அடிப்படையில் வகுத்துள்ளது.

சனாதனம் வகுத்துள்ள விதிகள் சூத்திரனுக்கும், சாதியற்ற அவர்ணர்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தாது. எனவே அவர்களுக்கு வீடுபேறு இல்லை. இவர்கள் பல பிறவிகள் எடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட பணிகளைச் செய்தால், மேல் சாதியில் (பிராமண அல்லது சத்திரிய அல்லது வைசிய சாதியில்) பிறப்பார்கள். இருபிறப்பாளர்களாகப் பிறந்து  அதற்குரிய சேவையைச் செய்தால் தான் வீடுபேறு அடைய முடியும். மறுபிறவியில், வீடுபேறு அடைவதன் மூலம் நிலையற்ற இன்பத்தை அடைய முடியும் என்று சனாதனம் கூறுகிறது.

தனக்கு கீழேயுள்ள படிநிலையைப் பார்த்து பெருமிதம் கொள்வதால் தான், சாதிப்படிநிலை இத்தனை ஆண்டுகளாக இங்கு நிலை பெற்றுள்ளது. இதனை சரியாகப் புரிந்து கொண்டவர் அம்பேத்கர். ”இந்து மதத்தில் இருக்கும் வரை சாதாரண மக்களுக்கு விடுதலை இல்லை” என்று அறுதியிட்டு கூறினார்.

ஒட்டுமொத்தத்தில் ஆணாதிக்கக் கூறுகளை சனாதானம் கொண்டுள்ளது. அதில் பெண்களுக்கு இடமில்லை. பிறக்கும் போதே அடிமையாகப் பிறந்து சாகும் வரை தொண்டூழியம் செய்ய வேண்டியது சூத்திரன் கடமை. சூத்திரனுக்கும் அங்கு இடமில்லை. இந்த நான்கு வர்ணத்தைச் சாராத இவர்களிலும் கீழான, சாதியற்றவர்களான அவர்ணர்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். அரசாங்கத்தின் கொள்கையறிக்கை, இதில் எந்த நீதியை நிலைநாட்ட விரும்புகிறது என்று என்பது தெரியவில்லை’’ என்றார், செ.தினகரன் ஞானகுருசாமி.

பாட்டாளி படிப்பு வட்டம், ஒக்ரோபர்- 16, 2025 அன்று ஒரு இணைய வழி கருத்தரங்கை நடத்தியது. அந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டதே மேற்படி உரையாகும். இந்த நிகழ்வில் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் தலைவரான க.சந்தானம், ஏ.ஐ.டி.யு.சி(All India Trade Union Congress – AITUC)யின் தேசிய செயலாளரான தி.ம.மூர்த்தி, பாட்டாளி படிப்பு வட்டத்தைச் சார்ந்த ம.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொகுப்பு : பீட்டர் துரைராஜ்

Tags: