ட்ரம்ப் நிராகரிக்கப்பட்டு வரும் நிதர்சனமே மம்தானியின் வெற்றி!
-ச.அருணாச்சலம்

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக இந்திய வம்சாவளியின் இஸ்லாமிய இளைஞன் ஜோரான் மம்தானி ஏழைகள், நடுத்தர மக்கள், தொழிலாளிகள், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் நம்பிக்கை நாயகனாக – ட்ரம்பின் வெள்ளை ஆதிக்க இனவெறியை எதிர்ப்பவனாக – நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றுள்ளார். இந்த வெற்றியை குறித்த அலசல்.
அமெரிக்காவின் நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற இந்திய வமிசாவளியை சார்ந்த ஜோரான் மம்தானி மாபெரும் வெற்றி பெற்றது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதும், ஜனநாயக கட்சி அடைந்த தோல்வியும் அமெரிக்க மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள முற்போக்கு சக்திகளுக்கு ஒரு பின்னடைவை , மனச்சோர்வை கொடுத்தது.
‘மாகா’ (MAGA – Make America Great Again), என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த ட்ரம்ப் அமெரிக்கா முதன்மையானது என்ற கொள்கையினால் வரி யுத்தத்தை தொடங்கியது, இஸ்ரேல் ஆதரவு கொள்கை, ஈரான் மீதான குண்டுவீச்சு, காசாவில் இஸ்ரேலின் மனிதப் படுகொலையை வேடிக்கை பார்ப்பது போன்றவை அமெரிக்க ஜனநாயக சக்திகளிடம் அதிருப்தியை உருவாக்கியது. அதன் விளைவாக அனைவருக்குமான ஒரு மேயரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் உழைக்கும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க பெர்னி சாண்டர்ஸ் போன்ற ஜனநாயக கட்சியில் உள்ள முற்போக்காளர்கள் முயன்ற போது, அதை கேலி செய்த ட்ரம்ப் , புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைகழகங்களின் மாணவர் தலைவர்களை கைது செய்தல் , நாடு கடத்துதல், விசா மறுத்தல் போன்ற கைங்கரியங்களை செய்து “சுதந்திரத்தை” தூக்கி பிடித்தார்.
காசாவில் இஸ்ரேல் அப்பாவி குழந்தைகளையும், மகளிரையும் குண்டுவீசி கொல்லும் காட்டுமிராண்டிதனமான குற்றங்களுக்கு உதவும் அமெரிக்க அரசை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அனுமதித்த – ஹார்வார்டு போன்ற பல புகழ்பெற்ற பல்கலைகழகங்களுக்கு அமெரிக்க அரசின் உரிமத்தையும், உரிமைத் தொகையையும் தடுத்து நிறுத்தினார் டொனால்ட் ட்ரம்ப்.
குடியேறிகளின் நாடான அமெரிக்காவில் வெள்ளை இன -கிறித்துவ- மேலாதிக்கத்தை மட்டும் தூக்கி பிடிக்கும் டொனால்ட் ட்ரம்ப், பிற இன, மதக் குடியேறிகளை உதாசீனப்படுத்துவதோடன்றி, அவர்கள் மீது , அமெரிக்க குடியுரிமை சட்டங்கள் ஒரு தலைபட்சமாக பாயவும் இப்பொழுது வழிவகை செய்துள்ளார் . ICE -அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை- மூலம் அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து, நாடு கடத்த ட்ரம்ப் அமெரிக்க காவலர்களை ( Federal Force) பயன்படுத்துவதும், ஜனநாயக கட்சி ஆளும் மாநிலங்களில் கூட அம்மாநில கவர்னர்களின் அனுமதி இன்றி ஒன்றிய காவலர் படையை ட்ரம்ப் அனுப்புவதும் அங்கு மாநில அதிகாரத்தை, சுயாட்சியை, அமெரிக்க அரசியலமைப்பை மீறிய செயல்களாக பார்க்கப்படுகிறது.
ஏறத்தாழ இந்தியாவில் மாநில அரசுகளின் சுதந்திரத்திற்கு வேட்டு வைத்து மோடி தலைமையில் நடக்கும் ஆட்சியின் அதிகார அத்துமீறல்களைப் போன்றே அமெரிக்காவிலும் ட்ரம்ப், கலிஃபோர்னியா, வர்ஜீனியா, நியூ ஜெர்சி போன்ற மகாணங்களின் ஆட்சிகளையும் ஆளுனரையும் – இவர்கள் அனைவரும் ஜனநாயக் கட்சியை சேர்ந்த காரணத்தால் – கொண்டுவரும் திட்டங்களை அமுல்படுத்த ஒன்றிய காவல் சக்திகளை-Federal Forces- அனுப்பினார் . இது மிகப்பெரிய கொந்தளிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில்தான் அமெரிக்க மாநிலங்களை ஆளும் ஆளுனர்களை, மாநகரங்களை நிருவகிக்கும் மேயரை தேர்வு செய்யும் தேர்தல்கள் – நடந்தன.
உலகப் புகழ்பெற்ற நியூயார்க் நகரம் வானளாவிய கட்டிடங்களையும், ரியல் எஸ்டேட் வளமைகளையும், ஏராளமான கேளிக்கை அரங்குகளையும், ஹோட்டல்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், இவற்றையெல்லாம் நிர்மாணித்து நிமிர்ந்து நிற்க செய்யும் தொழிலாளர்கள், உழைப்பவர்கள் வாழத் தகுதியற்ற உச்சாணி கொம்பாக மாறிய சூழலில், தெற்காசியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவராக, வெள்ளையரல்லாதவராக, ஒரு இஸ்லாமிய இளைஞனாக களத்தில் குதித்தார் ஜோரான் மம்தானி.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மீரா நாயரைத் தாயாகவும், உகாண்டா நாட்டைச் சார்ந்த மகமூத் மம்தானியைத் தந்தையாகவும் கொண்ட ஜோரான் நியூயார்க் மாநகர உழைப்பாளர்களின் வாழ்வு சிறக்க மேயர் தேர்தலில் குதித்தார் .
நியூயார்க் நகரம் உழைப்பாளர்கள் உறையும் இடமல்ல, ஊதிப்பெருத்த பணக்கார்ர்களின் வாழ்விடம் மட்டுமே என்பதை தகர்க்க அவர் களம் புகுந்தார்.
உழைப்பாளர்களுக்கான உணவு சலுகைகள்
அவர்களுக்கான துரித மற்றும் விரைவு பஸ் வசதி
அவர்களது உறைவிடங்களுக்கான வாடகை சீரமைத்தல்
குழந்தைகளுக்கான மருத்துவ வசதி
அனைவருக்குமான மருத்துவ வசதி
ஆகியவற்றை முறையாக வழங்குவேன் என்பதே அவரது தேர்தல் வாக்குறுதிகளாக அமைந்தன.

சாதாரண மக்களுக்கான மருத்துவ, சுகாதார குடியிருப்பு தேவைகளுக்கான அரசு உதவிகளை ரத்து செய்து ட்ரம்ப கொண்டு வந்த “சிக்கன நடவடிக்கைகளை” எதிர்த்து தனது அதிகாரம் செயல்படும் என மம்தானி மக்களிடம் உறுதி கூறினார்.
இவரை எதிர்த்து போட்டியிட ட்ரம்ப் கட்சியில் ஆளே இல்லை என்ற நிலையில் தான் , குடியரசு கட்சி வேட்பாளராக கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் .இவரை டிரம்ப் ஆதரிக்கவில்லை. ட்ரம்ப் ஆதரித்த வேட்பாளர் ஆண்டூரூ கோமோ ஜனநாயக கட்சியை சார்ந்தவர், ஏற்கனவே நியூயார்க் மாநகர மேயராக 2020ல் இருந்தவர், ஊழல், மற்றும் பாலியல் குற்றங்களுக்காக பதவியை துறக்க நேர்ந்தவர். இந்த முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான ஜோரான் மம்தானி நிற்பதை எதிர்த்து ஜனநாயக கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக ஆண்ட்ரூ கோமோ போட்டியிட்டார். அவரை ட்ரம்ப் ஆதரித்தார். ட்ரம்ப் மட்டுமல்ல , ப்ளூம்பெர்க் அதிபர் மைக்கேல் ப்ளூம்பெர்க், கேளிக்கை விடுதிகள் நடத்தும் பில் ஆக்மென், ஸ்டீவ் வின் ஆகியோர் கடந்த ஒருமாத காலத்தில் 19 மில்லியன் டொலர்களை ஆண்ட்ரூ கோமோவிற்காக செலவிட்டுள்ளனர். மற்ற தொழிலதிபர்களெல்லாம் இணைந்து மம்தானியை தோற்கடிப்பதற்காக ஆண்ட்ரூ கோமோ பிரச்சாரத்திற்கு 56 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளனர்.
இத்தகைய ‘பெருந் தனவந்தர்கள் – ஆட்சியாளர்களின்’ கூட்டாதிக்கத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ள ஜோரான் மம்தானி “உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க ட்ரம்ப் அரசு முன் வந்தால் அவருடன் இணைந்து, அதற்காக உழைப்பேன் என்று கூறினார் .
ஆனால், ட்ரம்ப்போ மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு அளிக்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதிகளை நிறுத்தி வைப்பேன் என்று எச்சரித்தார். இது ஏதோ நம்ம ஊர் மோடியின் உளறல் போல் உங்களுக்கு தோன்றுகிறதா? இருவரும் “அரைகுறைகள்” என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை. ஆனால் மம்தானி இன்று 50.5 விழுக்காடு வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
“அதிபர் ட்ரம்ப் என்னுடைய இந்த வெற்றி விழா பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியும். ட்ரம்ப் அவர்களே சத்தத்தை (வால்யூமை) நன்றாக கூட்டி வைத்து நான் கூறுவதை கேளுங்கள், நான் எனது அதிகாரத்தை செம்மையாக உபயோகிப்பேன்” என்றார்.

நியூயார்க் நகர உழைக்கும் மக்களை நோக்கி, ”இந்த நகரம் உங்களுடையது, இந்த ஜனநாயகமும் உங்களுடையது தான்“ என்று மம்தானி உரத்து கூறினார். “எனது அதிகாரத்தை உங்களின் வாழ்வை மேம்படுத்தவே பயன்படுத்துவேன்’’ என்பதை வலியுறுத்தினார்.
இஸ்லாமியராக நியூயார்க் நகரில் வாழும் கஷ்டத்தை கீழ்கண்டவாறு ம்ம்தானி விவரிக்கிறார், “நியூயார்க் நகரில் முஸ்லீமாக வாழ்வதென்பது கண்ணியமற்று வாழ்வதை எதிர் கொள்வது தான், நீண்டகாலமாக முஸ்லீம்களுக்கு இ்ங்கு சொல்லப்பட்டதெல்லாம் கிடைத்ததை கொண்டு திருப்திபடு என்பது தான் இனி அவ்வாறில்லை” என்று கூறுகிறார்.
ஜனநாயக கட்சியில் ஷக் சூமர் போன்ற பெருந் தலைகள் கூட இவரை ஆதரிக்காத போது, தான் ஒரு ஜனநாயக சோசலிசவாதி என உரக்க குரல் கொடுத்தே இத் தேர்தலில் வெற்றி பெற்றார் மம்தானி. இன்று ஜனநாயக கட்சி இவர் அடைந்த வெற்றியின் பிரம்மாண்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும். தனது கடந்த கால கொள்கைகளை மாற்றி அனைத்து அமெரிக்க மக்களையும் உள்ளடக்கிய தெளிவான முற்போக்கு கொள்கைகளை முன்னிறுத்தி அனைத்து தரப்பினருக்குமான நியாயமான ஏற்பாட்டை கையிலெடுக்கும் என நம்ப இந்த வெற்றி வழி வகுக்கிறது.
கடந்த 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், ட்ரம்ப்பிடம் தோற்றதற்கு முக்கியமான காரணம் இடது சாரிகள், இஸ்லாமிய அமெரிக்கர்கள் பைடன் அரசின் இஸ்ரேல் ஆதரவு கொள்கையே என்பது ஊரறிந்த இரகசியம். இத்துடன் ஜனநாயக கட்சி அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முயற்சிக்கவில்லை என்பதும் ஜனநாயக கட்சியின் வாக்குகளில் ஒட்டையை ஏற்புத்தியது.
ட்ரம்பிசத்தின் தாக்குதலில் இருந்து மீண்டும் கட்சியை காப்பாற்றவும், வருகின்ற தேர்தலில் குடியரசு கட்சியை தோற்கடிக்கவும் ம்ம்தானி முன்னெடுக்கும் கோஷங்களே உதவும் என்பது அனைவராலும் உணரப்பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லீம்களை கொன்று குவித்த குஜராத் கலவரத்தின் கதாநாயகன் மோடியை ‘போர் குற்றவாளி‘ என பகிரங்கமாக கூறிய ம்ம்தானியைநியூயார்க் வாழ் இந்துக்கள் கூட “இந்தூஸ் ஃபார் ஜோரானி” என மம்தானிக்கு ஆதரவளித்தனர். அது போன்றே அவரை பயங்கரவாதி என்றும் யூதர்களுக்கு எதிரானவர் என்றும் ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் , இஸ்ரேல் ஆதரவான கும்பலும் வசை பாடிய போதும் நியூயார்க் வாழ் யூதர்கள், ஜூஸ் ஃபார் ஜோரான் என மம்தானி பின் திரண்டனர்.
சரியான கொள்கைகளும் சரியான திட்டங்களும் மக்களை என்றும் ஈர்க்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது நியூயார்க் நகர மேயர் தேர்தலில்!
அந்த வகையில் அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் மம்தானியின் வெற்றி ஒரு திருப்புமுனை என்பதில் ஐயமில்லை!