நேபாளத்தில் கைகோர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

– ‘முன்னோடி’ பாஸ்கர்

நேபாளத்தில் ஊழல்மிக்க ஆட்சியை இளைஞர்கள் அறச் சீற்றத்துடன் தூக்கி எறிந்த நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு தற்காலிகமாக ஒரு அரசு நிறுவப்பட்டது. தற்போது தேர்தலுக்கு தயாராகிறது நேபாளம். நேபாளத்தில் பத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரே சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க தயாராகி வருவது குறித்த ஒரு அலசல்;

நேபாளத்தில் மன்னராட்சி அகற்றப்பட்டு அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டுள்ளது. ‘இந்தக் குடியரசைப் பாதுகாப்பது, தேர்தலை ஒன்றாகச் சந்திப்பது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இணைந்து செயல்படுவது’ என கம்யூனிஸ்ட் கட்சிகள்  முடிவடுத்துள்ளன.

‘இதற்கு பிரசந்தா ஒருங்கிணைப்பாளராகவும், மாதவ் குமார் நேபால் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து செயல்படுவது’ என தீர்மானம் செய்துள்ளனர். ஒரே கட்சியாக பதிவு செய்யவும் உள்ளனர்.  ஆறு மாதத்திற்குள் ‘ஒற்றுமை மாநாடு’ நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளனர். இது நேபாள அரசியலில் முக்கியமான நகர்வாகும்.

மன்னராட்சி மீண்டும் வர வேண்டும் என்று கடந்த மார்ச் முதல் மே மாதங்களில் போராட்டம் நடைபெற்றது. அதற்கு மக்கள் ஆதரவு இல்லை. அதன் பின்பு செப்டம்பரில் நடைபெற்ற ஜென்  Z எழுச்சியின் விளைவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தைக் கலைத்தது, நேபாள நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒருவர் பிரதமராக இருக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். இப்பொழுது இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி  நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் பாராளுமன்றத்தை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை விசாரணையில் உள்ளது. வழக்கு தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தலை ஒன்றாகச் சந்திப்பது என்ற முடிவை பத்து கம்யூனிஸ்டு கட்சிகள் எடுத்துள்ளன. கட்சியின் சின்னம் ஐந்து நட்சத்திரம் கொண்டதாக இருக்கும்.  மாவோயிஸ்ட் செண்டர், CPN (ஐக்கிய சோசலிஸ்ட்), நேபாள சமாஜ்வாதி கட்சி, CPN (சோசலிஸ்ட்), ஜனசமாஜ்வாதி கட்சி, CPN  (மாவோயிஸ்ட் – சோசலிஸ்ட்),  CPN (சம்யபாதி), மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (நேபாள்), CPN (கம்யூனிசம்)  தேசபகத்தா சமாஜ்வாதி மோர்ச்சா, ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளன ( நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கடந்த புதன்று (05/11/25) ஒன்றாகியுள்ளனர். இவைகளைத் தவிர, ஓரிரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேபாளத்தில் உள்ளன. நேபாளத்தில் 1960 களில் மைய நீரோட்ட முதலாளியக் கட்சிகளும் நாடாளுமன்றம்-சார் 1970 களில் மார்க்சிய- லெனினியக் கட்சிகளும் உருவாயின.

2008 வரை நேபாளத்தில் மன்னராட்சி நடைபெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் எழுச்சியின் விளைவாக அங்கு ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாகியிருக்கிறது. நேபாள நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை விட முற்போக்கானது. அங்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை உள்ளது. வட்டார/பிராந்திய பிரதிநிதித்துவம் உள்ளது. எனவே, இதுவரை அடைந்துள்ள பலன்களை பாதுகாப்பது, நேபாளக் குடியரசை பாதுகாப்பது என்ற அம்சத்தில் கம்யூனிஸ்டுகள் தெளிவாக உள்ளனர்.

ஆனால், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஆளும் கட்சிகளின் ஊழல் போன்றவை ஜென் – Z எழுச்சிக்கு காரணமாக அமைந்தன. இதனை கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இந்தப் போராட்டத்தில் இறந்தவர்களை தியாகிகளாக ஏற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புரட்சி என்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்திய சதி, அமெரிக்கா சதி என்று அவர்கள் கூறுவதில்லை.

நேபாளத்தில்  இந்தியாவின் தலையீடு எப்போதும் இருந்து வருகிறது. 2015 இல் நேபாளத்திற்கு இந்தியா பொருளாதாரத் தடை விதித்தது. எனவே, சீனாவிடம் இருந்து, அப்போதைய நேபாள பிரதமர் கே. பி. சர்மா ஓலி பொருளாதார உதவிகளைப் பெற்றார். நேபாள இராணுவத்தில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளது. ஜென் Z போராட்டத்தில் உச்சநீதிமன்றம் தாக்குதலுக்கு ஆளானது. பாராளுமன்றம் தாக்குதலுக்கு ஆளானது.  ஆனால் இராணுவத்திற்கும் அதன் சொத்துக்களுக்கும் எந்தப் பாதிப்பும் வரவில்லை. புரட்சிக்காரர்கள் மற்றும் ஜனாதிபதி இடையே இடைக்கால அரசாங்கம் அமையும் வகையில் மத்தியஸ்தம் செய்து அமைதியை நிலைநாட்டியது இராணுவம் தான்.

ஊழலற்ற ஆட்சி, தூய ஆட்சி என்று பரப்புரை செய்து மூன்று உள்ளாட்சி அமைப்புகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். காட்மாண்டு அதன் தலை நகரம். அங்கு வெற்றி பெற்றது ஒரு சுயேச்சை வேட்பாளர் தான். அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஆளும்கட்சி குடும்ப சொகுசு வாழ்க்கையை படமெடுத்துப் போடுகையில் மக்களின் கோபம் கொப்பளித்தது. இதனை தடுக்க சமூக வலைத்தளங்களை தடைசெய்தார்கள். வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த தங்கள் குடும்பத்தினரோடு தொடர்பு கொள்ள இருந்த ஊடகத் தொடர்பு மறுக்கப்படுகையில் மக்களின் கோபம் பீறிட்டது. தூய ஆட்சி என்று சொல்லி, இங்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இயக்கம் நடத்திய  போல நேபாளத்தில் அரசியலற்ற அரசியல் (depoliticised Politics) மேலோங்கியது. இவை ஜனநாயகத்திற்கான நெருக்கடிகளாகும்.

17 ஆண்டுகளில் 14 முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஏறக்குறைய எக்கட்சியும் பெரும்பான்மையை எப்போதும் பெறவில்லை. வேலையின்மை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்கிறது. செப்டம்பர் மாதத்தில் ஜென் Z எழுச்சி நடைபெற்றுள்ளது என்பது  தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டமாகும். தூய அரசியல் என்ற அரசியலற்ற அரசியலுக்கு நடுத்தர மக்களும் ஆதரவளித்துள்ளனர். ஜென் Z ,ல் பல குழுக்கள் உள்ளன. தலித், இசுலாமிய குழுக்களும் இதில் உள்ளன. அவை மன்னராட்சி்க்கு எதிராக உள்ளன.

இப்போதைய இடைக்கால பிரதமர் தொடர்ந்து ஜென் Z குழுவைச் சந்திக்கிறார். ஆனால் அரசியல் கட்சிகளைச் சந்திக்கும் போது, அலுவல் ரீதியாக சந்திப்பது போல தெரிகிறது. மார்ச் 5 ஆம் நாள் தேர்தலுக்கு   நாள் குறித்துள்ளனர். தேர்தலுக்குத் தேவையான கட்டமைப்பு நேபாள அரசிடம் இல்லை. எனவே உதவிகளை இந்தியாவிடமும் கேட்டுள்ளது; சீனாவிடமும் கேட்டுள்ளது. இடைக்கால அரசு,  முந்தைய அரசாங்கம் நியமித்த எல்லா நாட்டு தூதர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால்  இந்தியாவின் தூதரை திரும்பி அழைக்கவில்லை. உச்சநீதிமன்றம் மன்றம் பழையபடியே தூதர்களைத் தொடர உத்தரவிட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம், இடைக்கால அரசின் முரண்பாடு வெளியில் தெரிகிறது.

நேபாள நாட்டு சூழலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அங்கு பன்முகத்தன்மை அதிகம். எல்லையோரங்களில் உள்ள இந்திய வம்சாவளியினரான மாதேசி இனம் போன்றவர்களின் விருப்பங்கள் வேறானவை.

வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அரண்மனையில் சுட்டுக் கொல்லப்பட்ட மன்னரும், அவரது மகனும் இந்தியாவிற்கு எதிரான நிலை எடுத்தனர். அவரது தம்பியான ஞானேந்திரா பிறகு மன்னரானார். அவர் இப்போதும் இருக்கிறார். அவர் இந்தியாவிற்கு ஆதரவானவர். ஆனால் மக்களுக்கு எதிரானவர்.  காஷ்மீர் மாநிலத்திற்கு உரிய 370 வது பிரிவை நீக்கிய பிறகு நேபாள நாட்டின் சில பகுதிகளையும் சேர்த்து இந்தியா வரைபடத்தை வெளியிட்டது. இதனை எதிர்த்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, புதிய வரைபடத்தை ஐநாவிற்கு, பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஓலி அனுப்பினார். இதனை இந்தியா விரும்பவில்லை.

பா.ஜ.கவின் கொள்கையாக அகண்ட பாரதம் உள்ளது. அதில் நேபாளமும் அடங்கியுள்ளது. எனவே தான் மன்னராட்சிக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத் வரவேற்றார். உத்தராகாண்டில் இருந்து 270 கிமீ நீளத்திற்கு நேபாள எல்லை வரை சாலை போட்டார்கள். இந்தியாவின் இராணுவத்தில்,  நேபாளிகளைக் கொண்ட கூர்கா ரெஜிமண்ட் பிரிவை அவர்கள் கலைக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முன்பு கோரினர். இது போல பல்வேறு சிக்கல்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.

ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட UML (CPN) தேர்தலில் போட்டியிடுமா? என்று தெரியவில்லை. அதிகார அத்துமீறல் நடந்தற்கு பொறுப்பேற்று ஒரு சில தலைவர்கள் பொறுப்பில் இருந்து விலக முன் வந்துள்ளதோடு சிலர் விலகவும் செய்துள்ளனர். பத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு ஒரு நல்ல அம்சம். தேர்தல் சொன்னபடி நடக்குமா? என்பது போகப் போகத் தெரியும். எப்படி இருந்தாலும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி அதிக அளவில் இடங்களைப் பெறும். அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும். இது வரை பெற்றுள்ள உரிமைகளைப் பாதுகாப்பது என்பதில் அவர்கள் ஒருமித்து இருக்கின்றனர்.

தொகுப்பு ; பீட்டர் துரைராஜ்

(கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய இணைய வழி கூட்டத்தில் நேபாளத்தின் அரசியல் நிகழ்வுகள் குறித்து, ‘புதிய போராளி’ இதழின் நிர்வாக ஆசிரியர் ‘முன்னோடி’ பாஸ்கர்  செவ்வாய் அன்று பேசியது. )

Tags: