சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப் போராளி வ.உ.சி!
-ரெங்கையா முருகன்

இந்திய விடுதலைப் போராட்டத்தின் குறியீடு வ.உ.சிதம்பரனார். வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக தனித்துவமாக நிலைத்து நிற்பவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டவர். பல முற்போக்கு கருத்துக்களின் முன்னோடி செயல்பாட்டாளர். நினைத்துப் பார்க்கையில் நெஞ்சுருக வைக்கும் வ.உசி குறித்த நினைவலைகள்:
மலையளவு பங்காற்றிய சிதம்பரனாரின் தியாகத்துக்கு கிடைத்த புகழ் வெளிச்சமோ திணையளவே.
தொழிலாளர் வகுப்பினர் அரசியல் மையப்படுத்தப்படுவதை இவருக்கு பின்னால் வந்த அன்னிபெசண்டும், காந்தியும், காங்கிரசில் உள்ள மிதவாதிகளும் விரும்பாத நிலையில் வ.உ.சியின் மகத்தான தொழிற்சங்க முன்னெடுப்புகள் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டன.
காந்திய எழுச்சிக்கு பிறகு திலகரை பின்பற்றியோர் காந்தியப் பாதைக்கும், இந்து மகாசபை பாதைக்கும் திசை மாறினர். ஆனால், வ.உ.சிதம்பரனாரோ தனக்கென இந்த மண்ணின் மரபியல் சார்ந்த அறப் பார்வையுடன் எழுதியும், இயங்கியும் தனித்துவமான அரசியல் அடையாளம் கொண்டார். அவரது அரசியல் தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணும் அரசியலாக இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்று தன்னாட்சி நிலையை அடைய வேண்டுமெனில், தொழிற்சங்கங்கள் வலுப்பெற, அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்து போராடினால் தான் தீர்வென்றார், வ.உ.சி! கோரல்மில் தொழிலாளர் உரிமைக்காகப் போராடியது தொடங்கி பி.அண்ட்.சி.மில் போராட்டங்கள் வரை தன்னாட்சி விடுதலை அரசியலை வரலாற்றோடிணைத்த தலைமைப் பெருமகனார்.
வ.உ.சி. என்றாலே கப்பலோட்டியவர், செக்கிழுத்தவர் என்ற இரு அடையாளங்களுக்குள் சுருக்கப்பட்ட இந்த பெருமகனாரின் பேராளுமை கொண்ட பன்முகங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை.
வ.உ.சி. மிகச் சிறந்த கவிராயர். வ.உ.சிதம்பரனார் ஆத்திசூடி வடிவில் மெய்யறம் எழுதி வெளியிட்டு நூறாண்டுகள் ஆகிறது. மெய்யறத்தை பாடநூல்களில் பாடமாக வைத்து, மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று ஞானபானு இதழில் வெளிப்படுத்தினார் வீரமுரசு சுப்பிரமணிய சிவா!
மனம் போனபடி வாழ்க்கை நடத்துவோரை மனம் திருத்தி நல்வாழ்வு வாழத் துணை புரிவது திருக்குறளே என்பது வ.உ.சி.யின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக குறளின் அடிப்படையில் மெய்யறம் நூலினை எழுதியவர். இந்த நூலில் அடிப்படையானது, ‘மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மாணவர், இல்வாழ்வு, அரசியல், அந்தணர் எனப் படிப்படியாய் வாழ்க்கையில் உயர்ந்து மெய்நிலையை அடையலாம்’ என்பது வ.உ.சி.யின் நம்பிக்கை.
வ.உ.சிதம்பரனார் அடிப்படையில் சொல்லும் செயலும் மாறாமல் வாழ்வதற்கென தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரே தலைவராவார்.
‘’எனது தலை சிலருடைய திருவடிகளில் மட்டுமே தாழும். பிள்ளை அவர்களது திருவடிகளும் அதில் சேர்ந்தது’’ என்கிறார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
’’பிள்ளையவர்கள் எளிதில் கொள்கையை மாற்றிக் கொள்பவரல்லர். காற்று எப்படி வீசுகிறதோ, அப்படித் திரும்பும் நீர்மை பிள்ளையவர்களின் பிறவியில் கிடையாது’’ என்கிறார்திரு.வி.க. மேலும், ’’வ.உ.சியின் தொண்டினைப் பேசினால் தமிழ்நாட்டில் தன்னம்பிக்கை உண்டாகும். நேருயிசம், படேலிசம் தேவையில்லை’’ என்று பேசியவர் திரு.வி.க.
வரகவி பாரதி பெரம்பூரில் பச்சையப்ப கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசராய முதலியார் அவர்களைச் சந்தித்த வேளையில் முதலியார் வரகவிபாரதியிடம் “பரிசுத்தமான தேசபக்தர் சிதம்பரம் பிள்ளையை பரிதவிக்க விட்ட இந்த நாடு எப்படி அய்யா ஈடேறும்’’ என்று தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினாராம்.
சொந்தக் கட்சி உரிய அளவில் மதிக்கவில்லை. காந்தியின் தலைமை அறிவித்த சில கட்டளைகள் வ.உ.சி.யின் கொள்கைக்கு முரணாக இருந்ததால், காங்கிரசை விட்டு வெளியேறவும் தயங்கவில்லை. வ.உ.சி.யின் அரசியல் குரு திலகர் அன்னிபெசண்டை ஏற்றுக் கொண்ட போதிலும், தன் மனச்சான்று ஏற்றுக் கொள்ளாத நிலையில், அன்னிபெசண்ட்க்கு எதிராக முழக்கம் செய்வதில் முன்னனியில் நின்றார். அகிம்சை வழிப் போராட்டத்தில் அவருக்கு உடன்பாடில்லை. நேதாஜி போல படை திரட்டி அந்நியருடன் மோதும் வாய்ப்பும் அவருக்கு வாய்க்கவில்லை. பகத்சிங் அரசியல் களத்திற்கு வரும் முன்பு வ.உ.சி.யின் விடுதலை இயக்கச் சூறாவளி ஓய்ந்து விட்டது.
இதற்கிடையே பிராமணர் – பிராமாணரல்லாதோர் இயக்கம் அரசியலைப் பிளவுபடுத்திய நேரத்தில் இரு தரப்புமே வ.உ.சியை வசை பாடியது.
நீதிக்கட்சி வ.உ.சியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போதிலும் பிரிட்டிஷ் ஆட்சியுடன் அது ஒத்துழைத்துக் கொண்டிருந்ததால் நீதிக் கட்சியில் சேர மறுத்து விட்டார், பெரியவர். அதே வேளையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வேண்டி பெரியாருடன் சேர்ந்து கைகோர்த்து பிற்படுத்தப்பட்டவர்களின் மீட்சிக்காக நின்றார். அதனால் தமிழக காங்கிரசில் உள்ள மேல்தட்டு பெருந்தலைவர்கள் சிலர் வ.உ.சி.யை வெறுத்து ஒதுக்கினர்.

பாரதியாரும், பெரியாரும் பெண் விடுதலை, பெண்ணுரிமையை பேசுவதற்கு முன்பே மகளிர் விடுதலைக்கான புரட்சிக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் வ.உ.சியார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதவை மறுமணம், பால் சமத்துவம் போன்ற வைதீக மரபிற்கு மாறுபட்ட கருத்துக்களை மெய்யறத்தில் எழுதியுள்ளார். 1911 ஆம் ஆண்டே கண்ணனூர் சிறைக் கைதிகளை சீர்திருத்தும் வகையில் தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டியவர் செம்மல் சிதம்பரனார்.
உடன்கட்டை ஏறுதல், குழந்தை மணம் ஆகிய கருத்துக்கள் பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அக்காலக் கட்டத்தில் மெய்யறம் நூலின் ‘உயிர்த் துணை கொள்ளல்’ அதிகாரத்தில்,
‘’துணையிழந்தாரை மணப்பது புண்ணியம்’’
‘’விரும்பாதவரை விரும்புதல் பாவம்’’
என்று சீர்திருத்தக் கருத்தினை வெளியிட்டு அதற்கான எதிர்ப்புகளை பெற்றவர்.
மேலும், உயிர்த் துணையாளுதல் அதிகாரத்தில் பால் சமத்துவத்தினை வெளிப்படுத்தும் கருத்தாக
‘”இருவருளறிவிற் பெரியவராள்க”
’”ஆண்பாலுயர்வெனல் வீண்பேச்சென்க’’
‘”துணை நன்காள்பவர் தொல்லுல காள்வர்’’
‘நம் நாட்டில் பெண்களைச் சமைக்கும் இயந்திரமாக செய்து விட்டனர். அவர்களை பிள்ளை பெறுகின்ற எந்திரமாக அனைவரும் செய்து விட்டோம். நம்மைப் போல பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும். அதற்கு கல்வி கற்பிக்க வேண்டியது மிக அவசியம்’ என்று 1928 இல் பரிந்துரைத்தார்.
கணவன் உண்ட எச்சில் இலையில், மனைவி உண்ணும் வழக்கத்தை கண்டித்தார். தான் சாப்பிட்ட எச்சில் இலையில், தனது மனைவி சாப்பிடக் கூடாது எனச் சொல்லி பெண் சமத்துவத்தை தனது செயல் மூலம் நிலைநாட்டினார். வீட்டு முக்கிய காரியங்கள் எதுவாக இருந்த போதிலும் தனது மனைவியிடம் முறைப்படி ஜனநாயக முறையில் பேசி மனைவியின் பூரண சம்மதத்துடன் வழி நடத்தியவர். அதற்கு நல்ல உதாரணம் தனது வீட்டில் பட்டியல் இனத்தவரான ராமையா பரதேசியை தங்க வைக்க வள்ளியம்மையிடம் இசைவு பெற்றமையாகும்!
சைவப் பாரம்பரியத்தில் பிறந்திருந்தாலும் பிற்போக்குள்ள மரபார்ந்த சைவர்களோடு கருத்துப் போர் செய்தவர். வடநாட்டு சைவத்தைப் பின்பற்றுகின்ற திருவாவடுதுறை, திருப்பாதிரிப்புலியூர் மடத்தாருக்கு மாற்றானவர்.
வ.உ.சி சாதி சமய சழக்குகள் அறுத்த சைவர். எவ்வுயிரிடத்தும் அன்பாயிரு. எல்லோரும் ஓர் குலம் என்பதே வ.உ.சி.யின் கொள்கை. சிவஞான போதத்திற்கு வேதாந்த பாணியில் உரை எழுதிய மிகச் சிலரில் இவரும் ஒருவர். அதனால் பழமைவாத சைவர்களிடையே பெரும் கருத்து முரண் ஏற்பட்டு சமயச் சிந்தனையிலும் எதிர் நீச்சல் அடித்தவர்.

போலி கபட வேடதாரிகளை கண்டால் எளிதில் கண்டுபிடித்து விடுவார், வ.உ.சிதம்பரனார். மகாகவி பாரதி ஒரு சாமியாரை தன் வீட்டுக்கு அழைத்து வந்த வேளையில், ’அறிவு மிகுந்த என் மாமா (பாரதி) இந்த மக்குச் சாமியாரை நம்பி மோசம் போகிறாரே” என்று வருத்தமடைந்தார்.
மெய்யறம் அந்தணரியல் பகுதியில் 113 ஆவது கூடாவெழுக்கம் அதிகாரத்தில் போலிச் சாமியார்களைச் சாடுகிறார்.
‘சாமிகளுட் பலர் காமிகளாயினர்
‘தேசியருட்பல ராசின ராயினர்’
‘மகந்துகளுட்பல ரிகந்தன ரொழுக்கம்’
‘தம்பிரான் மறமெலா மெம்பிரானறிவர்’
‘போலியந் தணர்பலர் புரியா மறமிலை.
1900 களில் சாதி உணர்வு மிகுந்த காலச் சூழலில் தனது வீட்டில் பட்டியல் சமூகத்தவரான கண் இழந்த ராமையா பரதேசியை குடும்ப உறுப்பினராக்கிக் கொண்டார், வ.உ.சி. ராமையாவிற்கு கண் ஊனம் என்பதால் வள்ளியம்மை தட்டில் சோறிட்டு ஊட்டி விட்டுள்ளார் என்பது சுயசரிதை வாயிலாக அறிய முடிகிறது.
வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் வேதாந்த சிரவணம் செய்து கொண்டிருந்த சகஜானந்த சுவாமிகளை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு திருக்குறள் பயிற்சி அளித்தார், வ.உ.சி. இந்த சகஜானந்தர் பின்னாளில் சிதம்பரம் நந்தானர் பெயரிலான கழகத்தை ஆரம்பித்த போது தனது குரு வ.உ.சி.யைக் கொண்டு திறப்பு விழா செய்தார். சகஜானந்தரை நோக்கி யாராவது சாதி எதுவெனக் கேட்டால், ”துறவிக்கு சாதி கிடையாது” என்று சொல்ல சொன்னார் வ.உ.சி.
சாஸ்த்திரங்கள், சடங்குகளில் நம்பிக்கை வேண்டாம் என்றார்,வ.உ.சி. சிரார்த்தம் என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்படும் அரிசி, காய்கறி முதலியன பிதுர்களுக்கு போய்ச் சேரும் என்று கூறுவது பொய். பிதுர்கள் தங்கள் பிள்ளைகள் மூலம் வாங்கப் பிரியப்படுவார்களேயன்றி, பிறர் மூலம் வாங்க மாட்டார்கள். தென்புலத்தார் கடன் ஆற்ற வேண்டும் என்றால், முன்னோர்கள் விட்டுப் போன வேலையை முடிக்க வேண்டும் எனப் புதிய விளக்கம் தருகிறார் வ.உ.சி.
கோவில்பட்டி வாழ்வில் அவரது சட்டப் போராட்டங்கள் சிலவற்றை அரிய நேரிடுகையில் சாமானியர்களுக்காக பெரிய தனவந்தர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்று எளியோர்களை காப்பாற்றி இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. வ.உ.சியார் எப்போதும் அதிகார மிக்க தனவந்தர்களுக்கு சிம்மச் சொப்பனமாகவே இருந்திருக்கிறார்.
சிறை வாழ்விற்குப் பிறகு 24 வருடங்கள் அலைகழிக்கப்பட்ட பெருந்துயர வாழ்க்கையில், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்ட தியாக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.
வ.உ.சியவர்கள் உரிய முறையில் இந்தியவெங்கும் கொண்டாடப்பட வேண்டிய மாபெரும் மக்கள் தலைவராவார். அவர் வாழ்ந்த, நடமாடிய இடங்களை நினைவுச் சின்னமாக்கி பாதுகாத்து அந்த தியாகத் திருவுருவத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்.

சென்னையில் மயிலாப்பூர் பரிபூரண விநாயகர் கோவில் தெரு, சிந்தாதரிப்பேட்டை அருணாசல நாயக்கன் வீதி, பெரம்பூர் கந்தன் வீதி என அவர் வாழ்ந்த- அவரது காலடித் தடம்பட்ட – இந்த தெருக்களுக்கு வ.உ.சியின்பெயரைச் சூட்டி நினைவுகூறலாம்.
திருநெல்வேலி எழுச்சியில் மாண்டு போன தியாகிகள் நினைவாக நினைவுத் தூண் எழுப்பியிருக்கலாம். கோவில்பட்டியில் மட்டுமே பல வீடுகள் மாறியிருக்கிறார். தூத்துக்குடியில் கடைசியில் இயற்கை எய்தியிருக்கிறார். ஆக, அவர் வாழ்ந்து மறைந்த ஊர்களின் பேருந்து நிலையங்களுக்கு கூட வ.உ.சி. பெயர் சூட்டலாம். வ.உ.சி. வாழ்ந்த எந்த ஊரிலும் பேருந்து நிலையங்களுக்குப் பெயர் சூட்டப்படவில்லை. பல்கலைக் கழகங்கள் திருநெல்வேலி, கோயமுத்தூரில் சூட்டியிருக்கலாம். சுதேசி கப்பலை விட்டதற்காகவாவது டெல்லி பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி,க்கள் ஒட்டு மொத்தமாக வ.உ.சி. பெயரில் உத்தண்டி கடல்சார் பல்கலை கழகத்திற்கு பெயர் வைக்க குரல் கொடுக்கலாம்.
தியாகத்தை மதிக்கும் நாடு தான் மானுட விழுமியங்களில் சிறந்தோங்க முடியும்!
நவம்பர் 18: வ.உ.சிதம்பரனாரின் 89 வது நினைவு நாள்.