மோடி விமர்சிக்கும் ‘மெக்காலே மனப்பான்மை’: வரலாறு கூறுவது என்ன?

எஸ்.என். சாஹு (S N Sahu)

Thomas Babington Macaulay

ந்தியா தொடர்பாக மெக்காலேயின் பங்கு பற்றி மோடி முன்வைக்கும் பார்வை தவறானது, போலித்தனமானது.

நவம்பர் 18 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய ராம்நாத் கோயங்கா உரையில் மெக்காலே மனப்பான்மை குறித்துக் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தார். அடுத்த பத்தாண்டுகளில் மெக்காலே மனப்பான்மையை வேரறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் நாடாளுமன்றவாதியான தோமஸ் பாபிங்டன் மெக்காலே (Thomas Babington Macaulay) 1835 இல் கல்வி குறித்து எழுதிய குறிப்புகளில் (minutes on education) ஆங்கிலத்தை கல்விக்கான ஊடகமாகப் பரிந்துரைத்ததன் மூலம் இந்தியாவை அதன் வேர்களிலிருந்து பிடுங்கி, தோற்றத்தில் இந்தியர்களாகவும் ஆனால் பிரிட்டிஷாரைப் போலச் சிந்திப்பவர்களாகவும் இருக்கும் ஒரு குழுவினரை உருவாக்கியது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் பாரம்பரியக் கல்வி முறை, நம் கலாச்சாரத்தில் பெருமை கொள்ளக் கற்றுக்கொடுத்தது, கற்றலுடன் சேர்த்து திறமையையும் வழங்கியது என்றும், மெக்காலே அந்தக் கல்வி அமைப்பை வெற்றிகரமாக உடைத்துவிட்டதாகவும், இந்தியா இதற்கான விலையைக் கொடுத்திருப்பதாகவும் மோடி கூறினார்.

ஆட்சிமுறைக்காகவும் புதுமைகளுக்கான மாதிரிகளைப் பெறுவதற்காகவும் நாம் மேற்கத்திய உலகைச் சார்ந்திருப்பதுதான் மகாத்மா காந்தியின் ‘சுதேசி தத்துவத்தை’ நிராகரித்ததற்குக் காரணம் என்றும், இந்தத் தத்துவம்தான் சுதந்திரப் போராட்டத்தின் அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மெக்காலே மனப்பான்மை இறக்குமதி செய்யப்பட்ட யோசனைகள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட சேவைகள் அனைத்தும் உயர்ந்ததாகக் கருதப்படும் ஒரு போக்கிற்கு வழிவகுத்தது” என்று மோடி குறிப்பிட்டார். 

மோடியின் இந்தக் கருத்துக்கள், மெக்காலே இந்தியா குறித்து எழுதியது பற்றியும், அவர் ஆங்கிலக் கல்வியையும் இந்தியத் தண்டனைச் சட்டத்தையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் என்ன செய்தார் என்பது பற்றியும் நுணுக்கமான புரிதல் இல்லாத, முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்ட வெளிப்பாடு.

இந்தியா தொடர்பாக மெக்காலேயின் பங்கு பற்றி மோடி கொண்டுள்ள முற்றிலும் தவறான, போலித்தனமான புரிதலை, ஜவஹர்லால் நேருவும் பி.ஆர். அம்பேத்கரும் மெக்காலே பற்றி எழுதியவற்றை மீண்டும் ஆய்வு செய்வதன் மூலம் முழுமையாக அம்பலப்படுத்த முடியும்.

ஆங்கிலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து நேரு

நேரு தனது “கண்டுணர்ந்த இந்தியா” (Discovery of India) என்ற புத்தகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் “ராம் மோகன் ராயும் பிறரும் தனியாக ஆங்கிலம் கற்றனர். கல்கத்தாவுக்கு வெளியே ஆங்கிலப் பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை. இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்கு எதிராகவே அரசாங்கத்தின் கொள்கை இருந்தது” என்று எழுதினார். இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதை ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்த்ததாகவும், ஒரு சில மிஷனரிப் பள்ளிகள்தான் ஆங்கிலத்தில் கற்பிக்கத் தொடங்கின என்றும் நேரு எழுதினார்.

“…ஆங்கிலம் கற்பிக்கும் முறை 1835 பெப்ரவரியில் மெக்காலேயின் கல்வி பற்றிய குறிப்பில் இருந்தது” என்று நேரு குறிப்பிட்டார். “இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் தயங்கியதைப் போலவே, பிராமணப் பண்டிதர்கள் ஆங்கிலேயர்களுக்குச் சமஸ்கிருதம் கற்பிக்க அதைவிட அதிகமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்” என்று கூறுகிறார்.

“ஏற்கனவே மொழியியலாளராகவும் அறிஞராகவும் இருந்த சேர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones), உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியா வந்தபோது, ​​சமஸ்கிருதம் கற்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கணிசமான சன்மானம் தருவதாகச் சொன்னபோதிலும், அந்நியருக்கும் ஊடுருவியவருக்கும் புனித மொழியைக் கற்பிக்க எந்தப் பிராமணரும் முன்வரவில்லை,” என்று நேரு வேதனையுடன் எழுதினார்.

அவர் மேலும் கூறுகையில், “ஜோன்ஸ் பிராமணர் அல்லாத வைத்தியர் ஒருவரை அணுகினார். அவர் கற்பிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் விசித்திரமான, கடுமையான நிபந்தனைகளுடன். இந்தியாவின் பழங்கால மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேரார்வத்தால் ஜோன்ஸ் ஒவ்வொரு நிபந்தனைக்கும் ஒப்புக்கொண்டார்.  சமஸ்கிருதம் அவரை வசீகரித்தது, குறிப்பாகப் பழங்கால இந்திய நாடகங்கள் அவரை ஆச்சரியப்படுத்தின. அவரது எழுத்துக்கள், மொழிபெயர்ப்புகள் மூலமாகத்தான் மேற்கத்திய உலகம் சமஸ்கிருத இலக்கியத்தின் பொக்கிஷங்களில் சிலவற்றைப் பற்றி முதன்முதலில் ஒரு பார்வையைப் பெற்றது.”

பிராமணர் அல்லாத ஒருவரின் காரணமாக அவர் சமஸ்கிருதம் கற்றதால்தான், சமஸ்கிருதத்தின் பொக்கிஷம் மேற்கத்திய உலகிற்குத் திறக்கப்பட்டது. “இந்தியா தனது கடந்த கால இலக்கியத்தை மீட்டெடுத்ததற்காக ஜோன்ஸுக்கும் பிற ஐரோப்பிய அறிஞர்களுக்கும் ஆழ்ந்த நன்றிக்கடன் பட்டுள்ளது” என்று நேரு குறிப்பிட்டார்.

இந்தியாவில் சமஸ்கிருதம் கற்றதால் ஒரு பிரிட்டிஷ் அறிஞர் இந்தியாவின் பரந்த சமஸ்கிருத இலக்கியக் களத்தைக் கண்டுபிடித்ததைப் போலவே, இந்தியர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதால் ஆங்கில இலக்கியம், தாராளவாதக் கருத்துக்கள் குறித்த எழுத்துக்களைப் படிக்க முடிந்தது. இதுவே அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடவும் உதவியது. எனவே, ஆங்கிலமும் அதன் மூலம் பெறப்பட்ட தாராளமயம், ஜனநாயகம் குறித்த கருத்துக்கள் பற்றிய மோடியின் புரிதல் மிகவும் பாரபட்சமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தோன்றுகிறது.

பகவத்கீதையின் ஆன்மிகச் செய்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மகாத்மா காந்தி, அதன் அசல் சமஸ்கிருதப் பதிப்பை ஒருபோதும் படிக்கவில்லை. எட்வின் அர்னால்ட் வழங்கிய அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான “சாங் செலஸ்டியல்” (Song Celestial) படித்தார். காந்தி ஆங்கில வழியில் கல்வி பயின்றார். ஆனால் நமது சுதந்திரத்திற்காகப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முன்னணிப் போராளியாக உருவெடுத்தார். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர் தனது தாய்மொழியான குஜராத்தியில் சிறந்தவராக இருந்தார். தனது முக்கியமான கட்டுரைகள் புத்தகங்களை குஜராத்தி மொழியிலேயே எழுதினார். அவை பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதால் கிடைத்த மகத்தான பலன்களைக் கணக்கில் கொள்ளாமல் மெக்காலே மனப்பான்மையைத் தகர்க்க மோடி முயல்வது, நகத்தோடு சேர்த்துச் சதையையும் சீவி எறிவதற்கு ஒப்பாகும்.

ஆங்கிலக் கல்வி காரணமாக இந்தியாவின் இளைஞர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டனின் சமகால வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது என்று நேரு ‘கண்டுணர்ந்த இந்தியா’ நூலில் எழுதினார். 

மெக்காலே குறித்து அம்பேத்கர்

பி.ஆர். அம்பேத்கர், 1946 இல் தனது “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” (Pakistan or Partition of India) என்ற புத்தகத்தில் மெக்காலேயை ஒரு மாறுபட்ட விதத்தில் முன்வைத்தார். “மெக்காலேயின் தண்டனைச் சட்டத்தை (Penal Code) பிரிட்டிஷார் அமுல்படுத்தியதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டத்தைப் படிப்படியாக நடைமுறையிலிருந்து நீக்கினார்கள்” என்று எழுதினார்.

பொதுச் சிவில் சட்டம் பற்றித் தொடர்ந்து பேசும் பா.ஜ.கவும் மோடியும் இந்தியாவில் நிலவிவந்த முஸ்லிம் குற்றவியல் சட்டம் கைவிடப்பட்டது என்றும், அதற்குப் பதிலாக மெக்காலே ஒரு சீரான குற்றவியல் சட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்றும் அம்பேத்கர் கூறிய அவதானிப்புகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மெக்காலேவின் குற்றவியல் சட்டம், அனைத்து இந்தியர்களும் பொதுவான மதச்சார்பற்ற சட்டங்களால் ஆளப்படுவதை உறுதிசெய்தது. 

பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த அம்பேத்கர் அந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தை பம்பாயில் 1955 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 அன்று கூட்டினார். அந்த கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானம் மூலம், கோவாவின் விடுதலைக்கான சத்தியாகிரக முறை பலனளிக்காது என்று அம்பேத்கர் கூறினார். ஏனெனில் அங்குள்ள போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் சத்தியாகிரகிகளை அடக்க மிகவும் கொடூரமான முறைகளைப் பயன்படுத்தினர்.

பிரிட்டிஷ் தலைவர்கள் சிலர் இந்தியர்களுக்குச் சுயராஜ்யம் பெறுவதற்கான உரிமையை ஒப்புக்கொண்டதையும் அந்தச் சூழ்நிலையில் அம்பேத்கர் எழுதினார். மேற்கண்ட தீர்மானத்தில் அவர், “…சுயராஜ்யத்தின் கொள்கை 1833ஆம் ஆண்டிலேயே மெக்காலேயால் வகுக்கப்பட்டது” என்று கூறினார். “இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. இந்தியர்களுக்குத் தங்களுக்கென்று தனித்துவமான நாகரிகமும் கலாச்சாரமும் உள்ளன. எனவே, அவர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்” என்னும் மெக்காலேயின் வார்த்தைகளை அம்பேத்கர் மேற்கோள் காட்டினார். 

மோடியைப் போல மெக்காலேயின் பணியை முழுமையாகக் குறை கூறாமல், அவரை விமர்சனரீதியாக மதிப்பிடுவதற்கு நேரு, அம்பேத்கர் ஆகியோரின் நுணுக்கமான புரிதல் மிகவும் அவசியமானது. 

எஸ்.என். சாஹு இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த  கே.ஆர். நாராயணனுக்குச்  சிறப்புப் பணி அதிகாரியாகப் பணியாற்றியவர்.

மூலம்: How Ambedkar and Nehru’s Words Debunk Modi’s Prejudiced Understanding of the ‘Macaulay Mindset’

Tags: