இந்திய படை இலங்கை வரத்தேவையில்லை! எதிர்க்கட்சித் தலைவர் திட்டவட்டம்

லங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொண்டு சில அந்நிய நாடுகள் இலங்கையில் தலையீடு செய்ய முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுத்துறை (FBI)  இலங்கை அதிகாரிகளுக்கு உதவுவது என்ற சாக்கில் இலங்கை வந்துள்ளது. இப்பொழுது இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியாவின் “கறுப்புப் பூனைகள்” என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இந்திய அதிகாரியொருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியா இலங்கைக்கு இக்கட்டான நேரத்தில் செய்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஆனால் அதேநேரத்தில் இந்தியப்படையினரோ அல்லது வேறு எந்த நாட்டுப்படையினரோ இலங்கையில் காலூன்றுவதைத் தாம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்களைக் கையாளக்கூடிய ஆற்றல் இலங்கையின் பாதுகாப்புத்துறையினருக்கு உண்டென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இருப்பதாக இலங்கை மக்களில் ஒரு பகுதியினருக்கு சந்தேகங்கள் இருக்கும் சூழ்நிலையில், இந்த இரு நாடுகளினதும் பாதுகாப்புப் பிரிவினர் இலங்கை விவகாரங்களில் தலையிடுவது வேண்டாத விபரீதங்களையே ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது.

Tags: