அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் முறியடிப்பு: ரஷ்யாவிற்கு செர்பிய பிரதமர் நன்றி

செர்பியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ திட்டமிட்டதை ரஷ்யா உரிய நேரத்தில் எச்சரித்ததற்காக செர்பிய பிரதமர் அனா ப்ர்னாபிக் (Ana Brnabić), ரஷ்யாவின் பாதுகாப்பு துறையின் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் திட்டத்தை எதிர் கொள்ளவும், வீழ்த்தவும், செர்பிய அரசுக்கு ரஷ்யா தொடர்ந்து உளவுத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் உதவி வருகிறது. இதனை அங்கீகரித்து பாராட்டும் வகையில் சமீபத்தில் இந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிப்பு குறித்து பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கும், சுரண்டலுக்கும் எதிராக இருக்கும் கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமல்லாது, பிற முதலாளித்துவ நாடுகளிலும் தனக்கு சாதகமாக இல்லாத ஆட்சியாளர்களின் ஆட்சியை அமெரிக்காவின் சி.ஐ.ஏ பல வகைகளில் கவிழ்த்து வருகிறது.

இந்த வகையில் ரஷ்யாவுடன் இணக்கமான ராஜ்ய உறவுகளை கடைப்பிடித்து வரும் செர்பிய அரசை கவிழ்க்க கலர் ரெவல்யூஷன் (Colour Revolution) என்ற முறையை கையாண்டது. ஒரு நாட்டில் உள்ள அமெரிக்க ஆதரவு குழுக்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம் “அமைதி” போராட்டங்களை முன்னெடுத்து வாக்கு வங்கியை மாற்றி அல்லது சிதைத்து அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான அல்லது ஒத்துழைக்காத அரசை தோற்கடித்து, அமெரிக்க ஆதரவு நபரை ஆட்சியில் அமர வைப்பதே இந்த சதி திட்ட நடவடிக்கையாகும்.

இராணுவ நடவடிக்கைக்கு மாற்றாக இந்த முறையை அமெரிக்கா சி.ஐ.ஏ மூலம் பல ஆண்டு காலமாக பின்பற்றி வருகிறது.

செர்பியாவில் டிசம்பர் 17 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக அங்குள்ள எதிர்க்கட்சி, ஆளும் செர்பிய முற்போக்குக் கட்சி (SNS) மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை சுமத்தியது. இந்தக் குற்றச்சாட்டு செர்பியா முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியது.

Aleksandar Vučić

இந்த போராட்டங்களுக்கு மத்தியில் ரஷ்யாவின் உளவுத்துறை தகவல் உதவியுடன் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vučić) தலைமையிலான கட்சி ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கூட்டணிக்கு எதிராக கடுமையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது.

அலெக்சாண்டர், தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். மேலும் ரஷ்யாவுடனான ஆரோக்கியமான ராஜ்ய உறவுகளை தொடர்வதன் காரணமாக அவரை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்கத்துடன் மேற்கத்திய நாடுகள் இந்த போராட்டங்களைத் திட்டமிடுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தற்போதைய செர்பிய அரசு தொடர்ந்து அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டணிக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: