ரோய்ட்டேர்ஸ் செய்தியாளர் கைது செய்யப்பட்டார்!

லங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான கந்தானையில் பலவந்தமாக பாடசாலை ஒன்றுக்குள் நுழைய முயன்ற ரோய்ட்டேர்ஸ் (Reuters)  செய்திச் சேவையின் வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர் மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஈரானைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்திக் அகமட் டானிஸ் (Siddiqui Ahamed Danish) என்ற இந்தச் செய்தியாளர் இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமைகளை அறிவதற்காக இவர் ரோய்டேர்ஸ் செய்தி நிறுவனத்தால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய சென்.செபஸ்தியன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் மேற்குறிப்பிட்ட கந்தானை பாடசாலை மாணவர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார் அவர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காகவே இந்த செய்தியாளர் அந்தப் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார். இவரது நடத்தையில் சந்தேகமுற்ற மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் கந்தானை பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் விரைந்து வந்து இவரைக் கைது செய்து நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அதன்போதே இவரை மே 15 வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags: