வடக்கிற்கு இராணுவப் பாதுகாப்பு கோருகிறார் மாவை சேனாதிராசா!
வட மாகாணத்திற்கு இராணுவம் – பொலிஸ் என்பனவற்றின் மூலம் கூடுதலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பளையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் பேசும்போதே மாவை இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் நாட்டில் எழுந்துள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டே தாம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரை முற்றுமுழதாக அரசாங்கம் நீக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்படி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.