மூன்றாவது யுத்தமா வர்த்தக போர்?

– எம்.ரமேஷ்

Image result for china America trade war

ங்கள் இருக்கையின் பெல்ட்களை கட்டிக் கொள்ளுங்கள், மூச்சை நிதானமாக விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். இனிவரும் போர் நீங்கள் முற்றிலும் எதிர்பாராதது’’-  இந்த வாசகத்தைப் படித்தவுடன் போர் விமானத்தில் ராணுவ வீரர்களுக்கு கமாண்டர் கூறுகின்ற வாசகம் என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு.

பாங்க் ஆஃப் அமெரிக்கா தனது முன்னணி முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில்தான் இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆம், அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரின் விளைவுகள் எதிர்பாராத வகையில் இருக்கும் என்பதையே இவ்விதம் சுட்டிக் காட்டியுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தப் போவதாக ட்விட்டர் பதிவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், உடனே உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் இது தொடர்பான அதிர்வலைகள் வெளிப்பட்டன.

அறிவிப்பு வெளியான அன்றைய தினம் சீன பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்தது. இந்தியா உட்பட அனைத்து ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டியன் லகார்டே தெரிவித்தார்.

இந்த இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போர் கடந்த ஆண்டு பிற்பாதியில் தொடங்கியது. ஏறக்குறைய 10 மாதங்களாக நீடித்து வரும் வர்த்தகப் போரின் விளைவாக சர்வதேச பொருளாதாரம் மந்த கதியை எட்டியுள்ளது.

ஏன் இந்த முடிவு?

ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 1985-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. முந்தைய அதிபர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை 41,900 கோடி டாலராகும். ‘அமெரிக்காவைக் காப்போம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள ட்ரம்ப் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் முனைப்பில் இருக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையே மூண்டுள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர சீன தரப்பில் துணை அதிபர் லியு ஹி தலைமையிலான குழுவும், அமெரிக்க தரப்பில் ராபர்ட் லைட்ஹைஸர் தலைமையிலான குழுவும் ஈடுபட்டன.

இப்பேச்சுவார்த்தைக்கு சுமுக தீர்வு எட்டப்படும் என்றே கடந்த வியாழக்கிழமை வரை நம்பிக்கை இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை வரி உயர்வு அமலுக்கு வருவதாக அதிபர் அறிவித்தது, பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான மொத்த வர்த்தகம் (2017 நிலவரப்படி) 63,540 கோடி டாலர்.அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு 12,900 கோடி டாலர். சீனாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 50,550 கோடி டாலர்.

இப்போது 20,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 சதவீத வரி (அதாவது 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது) விதிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 5,700 பொருட்கள் சீன துறைமுகத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவது இதனால் பாதிப்புக் குள்ளாகியுள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் இன்டர்நெட் மோடம், ரவுட்டர் மற்றும் டிரான்ஸ்மிஷன் கருவிகள் 2,000 கோடி டாலர் அளவுக்கு பாதிக்கப்படும்.

அதேபோல 1,200 கோடி டாலர் மதிப்பிலான பிரின்டட் சர்கியூட் போர்டு உள்ளிட்டவையும் பாதிப்புக்குள்ளாகும். பர்னிச்சர், லைட்டிங் தயாரிப்புகள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், வாக்குவம் கிளீனர் மற்றும் கட்டுமானப் பொருட்கள் ஆகியவையும் அதிக வரி விதிப்புக்குள்ளான பொருட்கள் பட்டியலில் சேர்ந்துள்ளன.

வாழ்வா சாவா?

இந்த வரி விதிப்பால் வெகுவாக பாதிக்கப்படப் போவது அமெரிக்கர்கள்தான் என்று அங்குள்ள பொருளாதார நிபுணர்களே கூறுகின்றனர். சீன பொருட்களை அடிப்படையாகக் கொண்டு 1.8 கோடி அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இதனால்  பாதிக்கப்படுவர் என்று அமெரிக்க நிறுவனங்களே சுட்டிக் காட்டியுள்ளன. இந்த வரி உயர்வானது அமெரிக்காவில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்த வர்த்தகப் போர் நீடிப்பதால் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.6 சதவீத அளவுக்கு சரிவு இருக்கும் என்று தெரிகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமான சீன ஏற்றுமதி அந்நாட்டின் பொருளாதாரத்தில் 4 சதவீத அளவுக்கு உள்ளது.

இதனால் பாதிப்பு அமெரிக்காவை விட 7 மடங்கு சீனாவுக்கு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல அமெரிக்காவின் பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியை எட்டிய நிலையில் அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இப்படி இந்த இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போர் இரு நாட்டு பொருளாதாரத்தையும் குலைப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றன. ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சீனா மீது மட்டுமல்ல, பல நாடுகள் மீது வர்த்தக போர் தொடுக்கப்

பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக மெக்ஸிகோ, கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ட்ரம்ப் வரி விதித்தார். இந்த நாடுகளும் பதிலுக்கு வரியை உயர்த்தின.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு 280 கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தது. உருக்கு, அலுமினியம் மீதான பொருட்களுக்கு வரியை உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து துருக்கியும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 3 மடங்கு அதிகரித்தது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, பன்றி இறைச்சி, சீஸ், ஆப்பிள், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் மீது 25 சதவீதம் வரி விதித்தது.

சீனா மீது கடும் கோபம்

ஆனாலும் அதிபர் ட்ரம்ப், சீனா மீது மட்டும் கடுமையான கோபத்தில் இருப்பது தெளிவு. மேற்கத்திய நாடுகளின் அரசில் சீனாவின் தலையீடு மற்றும் அதன் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகளை அவர் எடுப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பேச்சுவார்த்தை நடந்து வரும்போதே வரி விதிப்பு அமலுக்கு வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது அவரது நோக்கம் என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

கடந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீன தயாரிப்புகளுக்கு வரியை விதித்தது அமெரிக்கா. அதற்கு பதிலடியாக 11,000 கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரியை விதித்தது சீனா. ஆனால், இந்த முறை ட்ரம்ப்பின் வரி உயர்வுக்குப் பதிலடியாக அமெரிக்க பொருள் மீது வரியை உயர்த்தும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையை சீனா எடுக்காது.

அதற்குப் பதிலாக சீனா வசம் உள்ள அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் முடிவை எடுக்கும். அதன் மூலம் டாலரின் மதிப்பை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடையச் செய்து அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என்று  நிபுணர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச வர்த்தகத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒரு குடையின்கீழ் வரும் சூழலில், இதுபோன்ற எதேச்சாதிகார போக்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்கையே காட்டுகிறது.

கம்யூனிசம் வலுவாக உள்ள சீனாவும், தனது நிலைப்பாட்டில் சற்று நீக்குபோக்குடன் நடந்து கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இல்லையெனில் இந்த வர்த்தக யுத்தம் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்றே தோன்றவில்லை.

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. இரு நாடுகளிடையிலான இந்தப் பனிப் போரால் உலக நாடுகளும் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதுதான் நிதர்சனம்.

காரணம் அமெரிக்கா உலக நாடுகள் அனைத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தும் ஆகப்பெரிய வல்லரசு நாடு சீனா, உலகின் ஆகப்பெரிய வர்த்தகச் சந்தை. இரண்டும் இப்படியே மோதிக்கொண்டிருந்தால் அதுவே மூன்றாம் உலக யுத்தத்துக்குக் காரணமாகிவிடலாம்.

-தமிழ் இந்து, 13.05.2019

Tags: