காந்தியின் அஸ்தியும் கோட்சேயின் அஸ்தியும்
மகாத்மா காந்தி படுகொலையை பின்புலமாக வைத்து கமலஹாசன் ‘ஹேராம்’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை எடுத்தார். இந்தப் படம் பலருக்கும் புரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவருடைய சித்தாந்தக் குழப்பமும் இந்தப் படத்தில் வெளிப்பட்டது.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி அரசு குறித்து கடுமையாக விமர்சிக்காமல் மையமான அணுகுமுறையையே மேற்கொண்ட கமல், அரவக்குறிச்சி சட்டபேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான். அவர் நாதுராம் கோட்சே என்று குறிப்பிட்டார்.
நாதுராம் கோட்சே ஒரு இந்துத்துவா தீவிரவாதி என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்றும் அவர் கூறியிருந்தால் அது பொருத்தமான சொற்றொடராக இருக்கும். சில தீவிரவாத குழுக்களுக்கும், இஸ்லாம் என்ற மதத்திற்கும் எப்படித் தொடர்பு இல்லையோ அதேபோல நாதுராம் கோட்சேவிற்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோட்சே முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவா தீவிரவாதி.
இதுஒருபுறமிருக்க, இப்படிப் பேசியதற்காக கமலஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டியுள்ளார். பாஜகவுடன் அதிமுக ஏற்படுத்திக் கொண்டுள்ள பாசக் கூட்டணி அவர்களை பாஜக என்ற கட்சிக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சித்தாந்தத்திற்கும், நடைமுறைக்கும் அடிமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. இவ்வாறு தான் பேசியது தவறில்லை என்றும் நாக்கை அறுப்பேன் என்று சொன்னால் உடனடியாக அறுக்கப்போவதாக பொருள் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்துக்கள் எவ்வாறு இதை எடுத்துக் கொள்வார்கள் என்பதைச் சொல்லவே இவ்வாறு கடுமையாகப் பேசியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவினரை முந்திக்கொண்டு இவர் விஷம் கக்கியிருப்பது அவர்களையே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மத உணர்வுகளை தூண்டும்படி பேசிய கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். மத உணர்வுகளை தூண்டிவிட்டதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் பிரதமர் மோடி மீதும், பாஜக தலைவர் அமித்ஷா மீதும்தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் பிரிவு போலவே செயல்படுவதால் அது சாத்தியமல்ல.
குட்டை குழப்பி சுப்பிரமணிய சுவாமி, கோட்சே தீவிரவாதி இல்லை. தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் தீவிரவாதி. கோட்சே ஒரு கொலையாளி மட்டுமே. ஐநா வரையறைப்படி கோட்சே ஒரு தீவிரவாதி அல்ல என்று கோட்சேவுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். காந்தியை கோட்சே கொன்றதுக்கு காரணம் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பகையோ, வரப்புத் தகராறோ அல்ல. இந்து மகா சபை மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மதவெறிக் கோட்பாடுகளுக்கு எதிராக காந்தி மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் முன் வைத்ததாலேயே அவரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டினர். கோட்சே ஒரு தீவிரவாதி மட்டுமல்ல. அவர் இந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் பிரிக்கமுடியாத அங்கமாவார்.
அண்மையில் இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்த சகுன் பாண்டே என்ற பெண்மணி காந்தியின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டு ரத்தம் வருவது போல ஏற்பாடு செய்து கைதட்டி மகிழ்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடியது அவர்களது வடிந்துவிடாத வன்மத்தின் வெளிப்பாடே. ரேடார், டிஜிட்டல் கேமரா, இமெயில் போன்ற வசதிகளை தன்னகத்தே பல நூற்றாண்டாக கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா சிங்கை பாஜக தனது வேட்பாளராக போபால் தொகுதியில் களமிறக்கியுள்ளது. அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசிவருகிறார். கோட்சேவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று பாஜக திரும்பத் திரும்ப கூறிவந்த போதும், வரலாறு இவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் ஆவணங்களையுமே முன்வைக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த கோட்சே பின்னர் இந்துமகா சபையில் சேர்ந்துவிட்டதாகக் கூறினார். எனினும் 2016 செப்டம்பர் 8ந்தேதி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கோட்சேவின் குடும்ப உறுப்பினர்கள் கோட்சே ஆர்எஸ்எஸ்சை விட்டு ஒரு போதும் விலகவும் இல்லை, விலக்கப்படவும் இல்லை, வெளியேற்றப்படவும் இல்லை என்றே கூறியுள்ளனர்.
காந்தியின் இறுதிக்காலத்தில் அவரது தனிச்செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய ‘மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்’ என்ற நூலில் வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள். அது மட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காந்தி படுகொலைக்கு எந்தவொரு தனி மனிதரும் பொறுப்பல்ல, அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய சதியும் அமைப்பும் உள்ளது என்று சோசலிஸ்ட் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, கமலாதேவி சட்டோபாத்யாயா ஆகியோர் பேட்டி அளித்தனர்.
காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தனது நூலில் காந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ், இந்துமகாசபை ஆகிய அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. அடுத்தநாள் காலையில் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சந்தித்ததாக படேலின் மகள் மணிப்பென் படேல் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
இன்றைக்கு பாஜக நேருவைத் தூற்றுவதற்கும், படேலுக்கு சிலை வைத்து கொண்டாடுவதற்கும் ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துமகா சபை போன்ற அமைப்புகள் மீது மென்மையான அணுகுமுறையையே படேல் மேற்கொண்டார். காந்தி படுகொலையைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் படேலுக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதத்தில், ‘சில நாட்களாகவே என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிற விசயத்தை உங்களிடம் கூற விழைகிறேன். கோட்சேவால் நடத்தப்பட்ட பாபுவின் படுகொலை குறித்த விசாரணை தில்லியிலும், பம்பாயிலும் மற்றும் பிற இடங்களிலும் நடந்து கொண்டிருந்தாலும் அதன் பின்னால் உள்ள பயங்கர சதியை கண்டுபிடிப்பதில் உண்மையான முயற்சி இல்லாததாகவே படுகிறது. பாபுவின் கொலை ஒரு தனிப்பட்ட வேலையல்ல. மாறாக, பிரதானமாக ஆர்எஸ்எஸ்-சால் செயல்படுத்தப்பட்ட விரிவான இயக்கத்தின் ஒரு பகுதியென்றே மேலும் மேலும் நான் முடிவுக்கு வந்திருக்கிறேன். தில்லியில் உள்ள போலீசாரில் பலர் ஆர்எஸ்எஸ்-சிடம் அனுதாபம் உள்ளவர்களாக இருப்பது மேலும் ஆபத்தானதாக உள்ளது. எனவே உருப்படியாக ஏதும் செய்யப்படவில்லை என்கிற எண்ணம் பிறந்திருக்கிறது. பலமான நடவடிக்கை என்றால் பெருந்திரளானவர்களை கைது செய்வது என்று பொருள் அல்ல, விபரீத வேலைகளைச் செய்யக்கூடியவர்கள் யாரோ அவர்களை குறிவைப்பது ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரே இவ்வாறு எழுதியிருந்த நிலையில், படேல் அலட்டிக்கொள்ளவில்லை. நேருக்கு அவர் எழுதிய பதில் கடிதத்தில் , ‘ குற்றவாளிகள் கொடுக்கிற வாக்குமூலங்களிலிருந்து இதில் ஆர்எஸ்எஸ் சம்பந்தப்படவேயில்லை என்பது தெளிவாகிறது. சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இந்துமகாசபையின் ஒரு தீவிரவாத பிரிவுதான் சதியை தீட்டியிருக்கிறது, நிறைவேற்றியிருக்கிறது. பலரும் நினைப்பது போல பாபுவின் கொலை பின்னணியில் பெரிய சதி எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டவர் படேல். மறுபுறத்தில் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியதும் அவரே. இதனால் தான் அவர் இப்போதும் பாஜகவின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கிறார்.கோட்சே தனது மரண சாசனத்தில் தன்னுடைய சாம்பலை பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியில் கரைக்க வேண்டும் என்று எழுதி வைத்தான். இது தாமதப்படுமானால் தன்னுடைய அஸ்தியை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று அவன் குறிப்பிட்டான். இப்போதும் கூட கோட்சேவின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோட்சே, ஆப்தே போன்றவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்னால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகப் பிரார்த்தனையில் உள்ள நான்கு வரிகளைப் படித்துள்ளனர்.
கோட்சே ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபையின் சுத்தத் தயாரிப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் இந்துக்களின் நலனை பாதுகாப்பது அல்ல. மாறாக, வர்ணாசிரமத்தை அதாவது ஜாதிய அடுக்குமுறையை அதன்மூலம் உயர்ஜாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதே ஆகும்.
கோட்சே நிகழ்த்தியது ஒரு தனிமனித படுகொலை அல்ல. ஒரு பெரும் வெறிக் கூட்டத்தின் அங்கமே கோட்சே. அவர்களது திட்டத்தைத்தான் கோட்சேவும் அவனது கூட்டாளிகளும் நிறைவேற்றினார்கள். அவர்களது சித்தாந்தம் இப்போதும் புனரமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கோட்சே ஒரு இந்துத்துவா பயங்கரவாதி என்பதும் அவனது வாரிசுகள் பல்வேறு பெயர்களில் தற்போதும் உலா வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மை. அவர்களை அடையாளம் கண்டு அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலமே காந்தியின் அஸ்தியை கவுரவப்படுத்த முடியும்.
-மதுக்கூர் ராமலிங்கம்
ஆசிரியர் தீக்கதிர்,
மே 15, 2019