ஊடகங்களினால் தீவிரவாதியான, கட்டுவாபிட்டிய சிகப்பு சட்டைக்காரர் அரோஷன் ஜூட்

This CCTV footage shows a man in a red t-shirt acting suspiciously moments before the suicide bomber detonates his bomb during an Easter church service in Colombo, Sri Lanka

எனக்கு பிரான்ஸ் எழுத்தாளர் மோபசானின் நூல் துண்டு என்ற சிறு கதை நினைவுக்கு வருகின்றது. அதில் வரும் அப்பாவி கிராமத்தவர் வீதியில் கிடந்த நூல் துண்டொன்றை எடுக்கின்றார். அவர் நகரபிதாவின் பெறுமதிமிக்க ஏதோ ஒன்றை எடுத்த ஒருவராகவே அனைவரும் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அனைவரும் அவரை ஒரு பெரும் திருடன் என்றே சுட்டிக் காட்டினார்கள். தான் ஒரு நிரபராதி எனக் கூறுவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போகின்றது. அவர் குற்றமற்றவர் எனக் கூறுவதற்கு அவரிடமிருந்தது அவரது மனச்சாட்சி மாத்திரமேயாகும். அவரது தலையணையின் கீழ் இருந்தது அழுக்கான நூல் துண்டொன்றாகும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு முடியாமல் துன்பங்களை அனுபவித்து வந்தார்.

மோபசான் அந்த கதையை எழுதியது ஆயிரத்தி எண்ணூறாம் ஆண்டு காலப்பகுதியிலாகும். மனிதர்களின் வாய்களிலிருந்து வெளியே வரும் செய்திகள் மற்றொருவரைத் துயரத்திற்குள்ளாக்குவது இவ்வாறாகும். மோசபானின் அப்பாவி கிராமத்தவர் போன்றவர்கள் இன்றும் காணப்படுகின்றனர். அந்த நிலை ஊடகங்களினால் உருவாக்கப்படுவதாகும்.

இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றது உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பேரழிவுடனாகும். நாட்டின் ஊடகங்களுக்கு பொறுப்புக்கள் உள்ளன. உண்மையான தகவல்களை நாட்டுக்கு தெரிவிக்கும் பொறுப்பே அது. நாம் ஒரு தகவலை வெளிப்படுத்துவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையினை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த மாதிரி குற்றமற்றவர்களை சந்தேக நபர்களாக ஊடகங்களில் காட்டும்போது மிக மோசமான பாதிப்புக்களே உருவாகும்.

“எனது இந்த துயரத்தை யாரிடம் போய்க் கூறுவது? என்னால் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனது இரு பிள்ளைகள், மனைவி ஆகியோரைப் பற்றி எனக்குப் பயமாக உள்ளது. நான் இப்போது மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றேன். இந்தச் சம்பவத்தினால் எனது உறவினர்கள் பெரும் வெட்கமடைந்துள்ளார்கள்” இவ்வாறு அவர் எம்மிடம் மிகுந்த மனவேதனையுடன் கூறினார்.

யார் அவர்?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுதாரி கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்குச் செல்லும் வீதியில் மதில் ஒன்றுக்கு அருகில் கைப்பேசியைக் காதில் வைத்துக் கொண்டு நின்ற சிகப்பு சட்டைக்காரரே அவர். அருகிலிருந்து சீசீடிவி கெமராவில் பதிவாகியிருந்த அந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட போது, அதனைப் பார்த்த அனைவரும் தற்கொலை குண்டுதாரியான பயங்கரவாதியைப் போன்று அந்த சிகப்பு சட்டை அணிந்திருந்தவர் மீதும் குரோதம் கொண்டனர். தொலைக்காட்சி செய்திகளிலும் அவர் நின்றிருந்த காட்சிகள் சிகப்பு கோடிட்டு காட்டப்பட்டதுடன் அனைவரும் அந்நபரைப் பற்றி அவதானத்துடன் இருந்தனர்.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த சிகப்பு சட்டைக்காரர் தனது வீட்டுக்கு அண்மையில் வசிக்கும் அப்பாவியான ஒருவர் என எனது நண்பர் ஒருவர் கூறினார். அதனை அறிந்து கொண்டதும் மனதில் கவலை ஏற்பட்டது. அன்றைய தினம் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒருநாளில் அந்த சிகப்பு டீ சேர்ட்காரரைத் தேடி நாம் கட்டுவாபிட்டி ஊருக்குச் சென்றோம்.

சிகப்பு சட்டைக்காரர் வீட்டில் இருக்கவில்லை. வீட்டில் இருந்தது அவரது மனைவியான குசும் ஸ்ரீயாணிகா மற்றும் இரண்டு மகன்களும், ஒரு சகோதரியுமாகும்.

“எனது கணவரின் பெயர் அரோஷன் ஜூட். அவர் வேலைக்குப் போயிருக்கின்றார். ஐயோ இந்த சம்பவத்தினால் நாம் அடைந்த துயரத்தைக் கூற முடியாது. நாம் இன்னமும் அச்சத்துடனேயே வாழ்கின்றோம். 21ம் திகதி காலையில் நாம் நால்வரும் காலை ஆராதனைக்காக தேவாலயத்திற்குச் சென்றோம். நாம் அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். எனது கணவருக்கு பாதர்  நெவிலிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவர் வெளியே சென்றார். அதற்கு பின்னரே குண்டு வெடித்தது. நான் மேலே தூக்கி வீசப்பட்டதைப் போல் உணர்ந்தேன். மகன் என்னை அணைத்துக் கொண்டார். எனது காலில் காயம் ஏற்பட்டது. நான் மூத்த மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தேன். நாம் நவலோக வைத்தியசாலைக்குச் சென்றோம். நீண்ட நேரம் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியோ சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

திங்கட்கிழமை எமது வீட்டுக்கு பொலிஸார் வந்தனர். எனது கணவர் சீசீடிவி கெமரா காட்சிகளில் இருப்பதாகச் சொன்னார்கள். எமது தொலைபேசி இலக்கத்தை எடுத்துக் கொண்டு சென்றார்கள். அதன் பின்னர்தான் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். அதனைப் பார்த்து மிகுந்த அச்சமடைந்தோம். பின்னர் நாம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்றோம். அங்கிருந்த அதிகாரி எமது விபரங்களை பெற்றுக் கொண்டு எம்மை வீட்டுக்குச் செல்லுமாறு கூறினார். பாதுகாப்பு தேவையா என்றும் எம்மிடம் கேட்டார்கள். எனது கணவர் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டார். அவர் தூர இடத்தில் வேலை செய்கின்றார். நாம் இந்த பிரதேசத்தில் அனைத்து மரண வீடுகளுக்கும் சென்றேன். அங்கிருந்த மக்கள் திட்டினார்கள். “அவனைக் கொல்ல வேண்டும். வாகனங்களில் போவதைப் பார்த்திருக்கின்றோம்” என்றெல்லாம் கூறி திட்டினார்கள். என்னால் கூற முடிந்த இடங்களில் எல்லாம் எனது கணவர் குற்றமற்றவர் எனக் கூறி தெளிவுபடுத்தினேன்.

நான் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தேன். சிலர் எம்மைப் பற்றித் தேடிப் பார்த்தார்கள். முன்னர் எமது வீட்டுக்கு வரும் சிலர் இதன் பின்னர் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். நாம் மிகுந்த அசெளகரியங்களுக்கு உள்ளானோம். நான் எமது பிள்ளைகள் விடயத்தில் அச்சத்துடன் இருந்தேன். இரவு நேரங்களில் எமது வீட்டின் முன்னால் நாய்கள் குரைக்கும். மக்கள் அங்கும் இங்கும் செல்வதைப் போல இருக்கும். எனினும் வெளியே சென்று பார்க்க பயமாக இருக்கும். எனது கணவரை தொலைக்காட்சியில் பார்த்த உறவினர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்கள். எனினும் அவர்கள் பயத்தில் இதனை எவரிடத்திலும் கூறவில்லை.

எமது உறவு முறை மகள் ஒருவர் இத்தாலியில் வசிக்கின்றாள். அந்தக் காட்சியில் இருப்பது மாமா என அவர் கூறியுள்ளார். எல்லோருமே எனது கணவரை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். இந்தச் சம்பவத்தினால் நாம் நினைத்தும் பார்க்க முடியாத துயரங்களுக்கு முகங்கொடுத்தோம். எனது கணவர் கொடூரமான பயங்கரவாதியைப் போன்றே ஊடகங்களில் காட்டப்பட்டார். அன்று எங்கு இருந்தார், என்ன நடந்தது என எனது கணவரிடத்திலேயே கேட்டுக் கொள்ள முடியும்”

இரு கண்களிலும் நிரம்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஸ்ரீயாணிகா தனது கணவரோடு தொலைபேசி அழைப்பை எடுத்து எம்மோடு பேசச் செய்தார். இன்னமும் பாடசாலை செல்லும் இரண்டு மகன்களும் அச்சத்துடனேயே இருக்கின்றனர்.

“நாம் தேவாலயம் சென்று எப்போதும் இருக்கும் இடத்தில்தான் அன்றும் இருந்தோம். ஆராதனைகள் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்த போதுதான் எனக்கு போதகரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. எனவே பேசுவதற்காக நான் வெளியே வந்தேன். வெளியே வந்து நின்றேன். அவ்விடத்திற்கு போதகரும் வந்தார். (அந்த சீசீடிவி காட்சியில் போதகர் வருவது ஓரளவுக்குத் தெரிந்தது) நான் அந்நேரம் பை ஒன்றை முதுகில் போட்டுக் கொண்ட இளைஞன் ஒருவன் தேவாலயத்திற்குள் செல்வதைக் கண்டேன். அவ்விளைஞன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். சற்று நேரத்தில் பாரிய சத்தம் கேட்டது. தேவாலயத்தில் குண்டு வெடித்துவிட்டது என நான் நினைக்கவில்லை. தேவாலயத்திலிருந்து டியுப் லைட் ஏதாவது வெடித்திருக்கலாம் என்றே நினைத்தேன். அந்த சத்தத்துடன் நான் தேவாலயத்திற்குள் ஓடினேன். அங்கு குண்டு வெடித்துவிட்டதாக மக்கள் கூறினார்கள். இளைஞன் ஒருவன் பைஒன்றை சுமந்து கொண்டு வந்ததாக நான் கூறினேன். அவ்வாறு வந்த இளைஞர் போதை பாவிப்பவர் போன்று தோற்றம் அளிக்கவில்லை. யோக்கியமானவனைப் போன்றே இருந்தான். எனவே அவ்விளைஞன் மீது சந்தேகம் ஏற்படவில்லை.

பின்னர்தான் தெரிய வந்தது குண்டுதாரியின் காட்சிகளோடு என்னையும் சிகப்பு கோட்டினால் வட்டமிட்டுக் காட்டி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்தி. தொலைக்காட்சியின் அந்த செய்தியினைப் பார்த்து கடவுளே இப்போது என்ன செய்வது என அதிர்ந்து போனேன். நான் பொலிஸாரிடம் அவ்விடத்தில் நின்ற சிகப்பு சட்டைக்காரர் நான்தான் எனக் கூறினேன். ஒரு பிரச்சினையும் இல்லை என பொலிஸார் கூறினர். எனினும் எனது மனைவி அச்சத்துடன் உள்ளார் என நான் கூறினேன். அனைவரும் எம்மை சந்தேகத்துடன் நோக்கினார்கள்.

நாம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு புலனாய்வு அதிகாரி ஒருவரைச் சந்தித்து அனைத்து விபரங்களையும் கூறினோம். வாக்குமூலமும் வழங்கிவிட்டு வந்தோம்.

நான் அந்த தொலைக்காட்சி நிலையத்துடன் தொலைபேசியில் பேசினேன். நான் குற்றமற்றவர் என்பதைத் தெளிவுபடுத்த அவர்கள் ஒரு நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தையே எனக்கு வழங்கினார்கள். எனினும் அவர்கள் தமது செய்தியை திருத்திக் கொள்ளவில்லை. ஏனைய தொலைக்காட்சிகளிலும் அவ்வாறே காண்பித்தார்கள். எனது ஊர் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். எனினும் இந்நேரத்தில் அனைவரும் என்னை சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். நான் வெளிநாட்டிலிருந்து வந்து நான்கு மாதங்களே ஆகின்றன. நான் வெளிநாட்டிற்கு ஆயுதப் பயிற்சிக்காகச் சென்று வந்திருப்பதாகவும் சிலர் கூறினார்கள். எனக்கு எனது பிள்ளைகளைப் பற்றியே பயமாக உள்ளது. எனது மனைவியைப் பற்றியும் பயமாக உள்ளது. நல்லவனாக இருந்த என்னை ஒரு சில வினாடிகளில் நாட்டிற்கே ஒரு பயங்கரவாதியாகக் காட்டிவிட்டார்கள்.

நான் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றுகின்றேன். நான் குற்றமற்றவன் என்பது எனக்குத் தெரியும். எனது வீட்டாருக்கும் தெரியும். தேவாலயத்தின் போதகர்மாருக்கும் தெரியும். எனினும் எனக்கு அவப்பெயர் இதனால் ஏற்பட்டுள்ளது. என்னால் சமூகத்திற்கு முகம் கொடுக்க வெட்கமாக உள்ளது.

இந்தச் சம்பவத்தினால் எனது பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பின்னர் நான் உயிர்வாழ்ந்து என்ன பயன்?” அரோஷன் மிகுந்த மனவேதனையோடு கூறினார்.

முப்பது வருட யுத்தத்தினால் துயரங்களுக்கு உள்ளான நாம் தற்போது அதனைவிடவும் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். இப்போது இந்த நிமிடம் நாட்டில் என்ன நடக்கும் என்பது உறுதியற்றதாகவே உள்ளது. மனிதர்களை சந்தேகமாக அன்றி அவதானத்துடன் பார்க்க வேண்டிய காலம் இது. விஷேடமாக நாட்டின் ஊடக நிறுவனங்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கள் உள்ளன. உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவதே அந்தப் பொறுப்பாகும். ஊடக தர்மங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அரோஷனுக்கு நேர்ந்த கதி மற்றொருவருக்கு நிகழ்வதற்கு இடமளிக்கக் கூடாது.

தமது ஊடகங்கள் மூலம் தகவல்களை வழங்கும் போது அது நடக்க வேண்டியது கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மைகளை கண்டறியாது வெளிப்படுத்தாமல் உண்மையான தகவல்களை நாட்டுக்கு வழங்குவதேயாகும்.

இனோகா சமரவிக்ரம

தமிழில்: எம்.எஸ். முஸப்பிர்

jaffnamuslim.com