பெகாசஸ் – ‘அமித்ஷா பதவி விலக வேண்டும்’: எம்.பி.க்கள் போராட்டம்!

பிரியா

பெகாசஸ் உளவு மென்பொருள் (Pegasus Spyware) விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. பெகாசஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த 4 நாட்களாக உலக அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கும் செய்தி பெகாசஸ். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தின் நவீன உளவு மென்பொருளான பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதுமுள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா என 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களின் எண்கள் உளவு பார்க்கப்பட்ட லிஸ்ட்டில் இருப்பதாகக் கடந்த ஜூலை 18ஆம் தேதி செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.

இதுகுறித்து, மாநிலங்களவையில் நேற்று அறிக்கை தாக்கல் செய்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மிகவும் பரபரப்பான செய்தி ஒன்று இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் வைக்கப்பட்டிருந்தன.

அந்த செய்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது,

“தரவிலிருந்த எண்ணுக்கான தொலைபேசி, பெகாசஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா என்று தெரிவிக்கப்படவில்லை.

ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா அல்லது வேவு பார்க்கப்பட்டதா என்பதை தொலைபேசியை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் கூறமுடியாது.

எனவே, தரவில் எண் இருக்கும் காரணத்தாலேயே வேவு பார்க்கப்பட்டதாக பொருள் கிடையாது என்று அந்த செய்தியே கூறுகிறது.

தேசியப் பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, ஒன்றிய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாகக் கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது. இந்தியத் தந்தி சட்டம், 1885-ன் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2020-ன் 69-ம் பிரிவின் கீழ் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கான வேண்டுகோள்கள் வைக்கப்பட வேண்டும்.

பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார். வேவு பார்க்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன. இந்த விஷயத்தைத் தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்புக்கு ஆதாரம் இல்லை என்பது நன்கு புலப்படும்” என்று மறுப்புத் தெரிவித்திருந்தார்.

எனினும் பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று (ஜூலை 23) போராட்டத்தில் ஈடுபட்டன.

தமிழகத்திலிருந்து எம்.பிக்கள், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி கனிமொழி உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி,சசி தரூர் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். பெகசாஸ் மென்பொருளை இந்தியா வாங்கி உளவு பார்த்ததா என விளக்கமளிக்க வேண்டும் என்றும் பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதுபோன்று போராட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பெகாசஸை இஸ்ரேல் ஆயுதம் என்று சொல்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இந்த ஆயுதத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நமது நாட்டின் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனைத் தேசத் துரோகம் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை. ரஃபேல் ஒப்பந்தத்தின் விசாரணையைத் தடுக்கவும் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு பிரதமரே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

23/07/2021

Tags: