இந்தியாவில் மீண்டும் மோடியின் ஆட்சி

ந்திய மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 345 இடங்கள் முன்னிலையுடன் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியுடன்  அசுரபலத்துடன் பாஜக 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. இறுதியான முடிவுகள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படக்கூடும். இந்த சூழலில் பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.   நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கிய போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தன.

இந்நிலையில், மக்களவையின் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து மற்ற தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திராவில்  பாஜகவுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கவில்லை. ஆனால், வட மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 

நீண்டகாலம் இடதுசாரிக் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களுடன் முன்னிலை வகிக்கின்றது.

Tags: