பழம்பெரும் நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனரான கிரிஷ் கர்னாட் மரணம்

பழம்பெரும் நடிகர் கிரீஷ் கர்னாட் மரணம்

ழுத்தாளரும், நாடக மற்றும் திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81. அவரது துக்ளக் உள்ளிட்ட நாடகங்கள் பேசிய அரசியலின் நீட்சியாகவே தன் வாழ்நாள் முழுவதும் இந்துத்வ பாசிசத்துக்கு எதிராகப் போரிட்டவர். 

மகாராஷ்டிரா, மாத்தெரனில் கொங்கணி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் (1938). இவரது முழுப் பெயர் கிரீஷ் ரகுநாத் கர்னாட். 14 வயதில், கர்நாடக மாநில தார்வார்ட் என்ற இடத்துக்கு குடும் பம் குடிபெயர்ந்தது. கர்நாடகா கலைக் கல்லூரியில் கணிதம், புள்ளியியலில் 1958-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இங்கிலாந்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோர்ட் யுனிவர் சிட்டி பிரஸ்சில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். ஒரு கவிஞராக சர்வதேசப் புகழ் பெறும் ஆசையில், முதலில் ஆங்கிலக் கவிதைகள் எழுதினார். கன்னட மொழியில் நாடகங்கள் எழுதத் தொடங்கினார்.

இவர் எழுத ஆரம்பித்த காலகட்டம், ஐரோப்பிய இலக்கியங்களின் தாக்கங்களால் கன்னட இலக்கியம் மறுமலர்ச்சி அடைந்த தருணமாக இருந்தது. ராஜாஜி எழுதிய மகாபாரதம் இவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக 1961-ல் யயாதி என்ற நாடகத்தை எழுதினார்.

இது வெளிவந்த உடனேயே மகத்தான வெற்றி பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மேடைகளில் அரங்கேறியது. நாட்டின் சிறந்த நாடகாசிரியர்களில் ஒருவராக வளர்ச்சியடைந்தார். துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா உள்ளிட்ட இவரது நாடகங்கள் மிகவும் பிரபலம்.

இவரது நாடகங்கள் ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 1970-ல் சம்ஸ்காரா என்ற கன்னட படத் தில் நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமானார்.

இது கன்னடத் திரைப்படத்தின் முதல் தங்கத் தாமரை விருது பெற்றது. தொடர்ந்து, சத்யஜித் ராய், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல் உள்ளிட்ட இயக்குநர்களின் திரைப்படங்களில் நடித்தார். 1971-ல் வம்சவ்ருக்ஷ என்ற கன்னடத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் இவருக்கு பி.வி. கரந்த்துடன் இணைந்து சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

தொடர்ந்து பல கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களை இயக்கினார். 1987-88ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியராகவும் பணியாற்றினார். தனது பல நாடகங்களை இவரே மொழிபெயர்த்துள்ளார்.

இவரது பல திரைப்படங்கள், ஆவணத் திரைப்படங்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகள் கிடைத்தன. 1974-ல் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். சங்கீத் நாடக் அகாடமியின் தலைவராகவும் செயலாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நாடகங்களை இயக்கி வந்துள்ளார்.

இப்ராகிம் அல்காசி, பீ.வீ. கரந்த், சத்யதேவ் துபே உள்ளிட்ட பல புகழ்பெற்ற இயக்குநர்கள் இவரது நாடகங்களை இயக்கினார்கள். சங்கீத் நாடக் அகாடமி விருது, பத்மஸ்ரீ , பத்ம பூஷண், கன்னட சாகித்ய அகாடமி விருது, சாகித்ய அகாடமி விருது, 1998-ல் ஞானபீட விருது, பிலிம்ஃபேர் விருதுகள், உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவர் .

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என நாடக,  திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த அவர், சமீபகாலமாக உடல்நலம் குன்றி இருந்தார். பெங்களூருவில் வசித்து வந்த அவர்  இன்று அதிகாலை  காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள், கலைஞர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி:தமிழ் இந்து & ராஜலட்சுமி சிவலிங்கம்

Tags: