தமிழரசுக் கட்சி தனது பாரம்பரிய விளையாட்டை ஆரம்பித்துள்ளது!

பிரதீபன்

மிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் மாநாடுகள் என்பது பாரதூரமான விடயங்கள் குறித்து விவாதங்களைச் செய்து முடிவுகளை எடுக்கும் மாநாடாக ஒருபோதும் நடந்ததில்லை. அது எப்பொழுதுமே ஒரு கதம்பக் கூட்டமாகத்தான் நடைபெறுவது வழமை. இம்முறையும் அவ்வாறுதான் நடந்துள்ளது.

கட்சியின் உத்தியோகத்தர் தெரிவும் ஜனநாயக முறைப்படி மாநாட்டுப் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்படுவதில்லை. ஏற்கெனவே இருக்கும் தலைமை முடிவு செய்யும் நபர்களை மாநாடு சம்பிரதாயபூர்வமாக ஏற்றுக் கொள்ளும். அந்த வகையில் திரு.மாவை சேனாதிராசா மீண்டும் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாநாட்டின் இறுதியில் பேசிய மாவை சேனாதிராசா, அரசாங்கம் மூன்று மாதங்களுக்குள் ஆக்கபூர்வமாகச் செயல்படாவிட்டால் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களைத் திரட்டிப் போராடத்தயங்காது என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவையின் பேச்சு இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக இருப்பதால் மக்களால் வாய்விட்டுச் சிரிக்கத்தான் முடிந்தது.

ஏனெனில், 2015 ஜனவரி 8ஆம் திகதி முதல் தமிழரசுக் கட்சி ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்து வருகின்றது. நான்கரை ஆண்டுகளாக அரசை முழுமையாக ஆதரித்து அதன் மூலம் அரசிடமிருந்து பல சலுகைகளைப் பெற்று வந்த தமிழரசுக் கட்சி, இப்பொழுது அரசுக்கு மூன்றுமாத காலக்கெடு விதித்து நிபந்தனை போடுவதொன்றால் அது வேடிக்கையே தவிர வேறு ஒன்றுமல்ல.

தமிழரசுக் கட்சி இப்பொழுது திடீரென அரசுக்கு நிபந்தனை விதிப்பதும், போராட்ட முஸ்தீபு காட்டுவதும் ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பது போல விடயத்தோடுதான்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல், மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவிருக்கின்றன. தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் போட்டியிடாது. ஏனெனில் அப்படிப் போட்டியிட்டால் அதன் மூலம் ஐ.தே.கவுக்கு விழவேண்டிய வாக்குகள் சிதறிப்போய்விடும் என அதற்குப் பயம். ஆனால், மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி நிச்சயமாகப் போட்டியிடும். அப்பொழுது தனக்கு விழவேண்டிய வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவே இப்பொழுது தமிழரசுக் கட்சித் தலைமை அரசுக்கு நிபந்தனையும் விதித்து போராட்ட அறைகூவலும் விடுத்துள்ளது.

ஏனெனில், கட்சியின் கண்மூடித்தனமான அரச ஆதரவுப்போக்கால் மக்களிடம் அதன் ஆதரவு மோசமாகச் சரிந்துபோய் உள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் அது தெளிவாக வெளிப்பட்டது. அதனால் பயந்துபோன தமிழரசுக் கட்சித் தலைமை அதை ஈடுபட்டுவதற்காக இப்பொழுது போராட்ட வேசம் கட்ட முனைந்துள்ளது. தமிழரசுக் கட்சி இவ்வாறு நடந்து கொள்வது இதுதான் முதல்தடவையல்ல.

1965 பொதுத்தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசில் ஏனைய ஐந்து கட்சிகளுடன் சேர்ந்து இணைந்துகொண்டன.

அன்றைய ஐ.தே.க. அரசு மாவட்ட சபைகள் அமைத்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தமக்கு வாக்குறுதி அளித்ததால்தான் தாம் அரசுடன் இணைந்து கொண்டதாக அப்பொழுது தமிழரசுக் கட்சி நியாயம் பேசியது. ஆனால் இப்போதைய ஐ.தே.க. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக கடந்த நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றியது போல, அப்போதைய ஐ.தே.க. அரசும் மாவட்ட சபைகளைக் கொண்டுவராமல் நான்கரை ஆண்டுகள் தமிழரசுக் கட்சியை ஏமாற்றியது.

அதனால் ஏமாந்து தமிழ் மக்களிடம் மொக்கையீனப்பட்ட தமிழரசுக் கட்சி, 1965 முதல் 1969 நடுப்பகுதி வரை அரசின் பங்காளியாக இருந்துவிட்டு, 1970 பொதுத்தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து ஐ.தே.க. அரசிலிருந்து வெளியேறியது. வெளியேறும் பொழுது அதற்குச் சொன்ன காரணமும் வேடிக்கையானது.

திரிகோணமலை நகரைத் தாம் புனித நகராகப் பிரகடனம் செய்யும்படி டட்லி அரசிடம் கேட்டதாகவும், அரசு அதற்கு மறுத்ததால் தாம் அரசிலிருந்து வெளியேறியதாகவும் தமிழரசுக் கட்சி காரணம் சொன்னது. ஆனால் அந்தக் காரணம் போலியானது என்பதும், அடுத்த தேர்தலை மனதில் கொண்டு தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவே தமிழரசுக் கட்சி நாடகம் ஆடுகிறது என்றும் தமிழ் மக்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் அந்தத் தெளிவு 1970 பொதுத்தேர்தலில் மிகவும் துலாம்பரமாக வெளிப்பட்டது.

1970 பொதுத்தேர்தலில் ஐ.தே.க. தெற்கில் படுதோல்வியடைந்தது. சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டு இடங்களில் வெற்றிபெற்று ஆட்சிபீடமேறியது.

வடக்கைப் பொறுத்தவரை ஐ.தே.க. அரசுடன் ஒட்டியிருந்த தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைமைகளுக்கு தமிழ்மக்கள் தக்க பாடம் புகட்டினர். அதன்படி, ‘முடிசூடாமன்னன்’ தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் ‘தளபதி’ அ.அமிர்தலிங்கம் தனது வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வியுற்றார். தமிழ் காங்கிரஸ் கட்சியின் ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ கட்சியின் பொதுச்செயலாளர் மு.சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியில் மண்கவ்வினார். தமிழரசுக் கட்சியின் ‘இரும்பு மனிதன்’ டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் தனது நல்லூர் தொகுதியைப் பறிகொடுத்தார். தமிழரசுக் கட்சியின் ‘அடலேறு’ மு.ஆலாலசுந்தரம் கிளிநொச்சித் தொகுதியில் தோல்வியால் துவண்டு விழுந்தார்.

இவ்வாறாக அன்றைய ஐ.தே.க. அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைகளையெல்லாம் அத்தேர்தலில் தமிழ்மக்கள் தோல்வியுற வைத்தனர். நான்கரை ஆண்டுகள் ஐ.தே.க. அரசுடன் ஒட்டியிருந்துவிட்டு, தேர்தலுக்காக நாடகமாடி அரசிலிருந்து வெளியேறிய அவர்களது நாடகத்தை தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதை அத்தேர்தலில் மக்கள் நிரூபித்துக் காட்டினார்.

இன்றும் ரணிலின் ஐ.தே.க. அரசுக்கு நான்கரை ஆண்டுகள் முண்டுகொடுத்துவிட்டு, தேர்தலை மனதில் வைத்து அரசுக்கு போலி எச்சரிக்கை கொடுத்து நாடகம் ஆடும் தமிழரசுக்கட்சித் தலைமைக்கு அடுத்து வரும் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் தக்கபாடம் புகட்டுவர் என நம்பலாம்.

அதேபோல, நாட்டை சகல வழிகளிலும் நாசம் செய்துவரும் ஐ.தே.க. தலைமைக்கும் சிங்கள மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்றும் நம்பலாம்.

Tags: