மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்
சிறப்பு மற்றும் மாநில அஸ்தஸ்தை இழக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம், இரண்டாக பிரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், அமர்யாத் யாத்ரீகள் என வெளிநபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நம்பிக் கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலம் தொடர்பான மிகக் கடுமையான முடிவுகளை அறிவித்தார்.
மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் மாநிலம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும். லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் செயல்படும். லடாக் யூனியன் பிரதேசம், சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும்.
இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் ஒப்புதல் அளித்த அரசாணையை, மாநிலங்களவையில் அமித் ஷா வாசித்துக் காட்டினார்.
கடந்த சில வாரங்களாக காஷ்மீர் மாநிலம் ஒரு வித குழப்பமான, பதற்றமான சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அதற்கான பதில் இன்று கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி நள்ளிரவு வரை ஸ்ரீநகரில் ஊரடங்கு எனப்படும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
செல்போன், இணையதள சேவை, கேபிள் டிவி ஒளிபரப்பு என ஒட்டுமொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையோடு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டு அனைத்து சுற்றுலாப் பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
மாநிலங்களவையில் அமித் ஷாவின் அறிவிப்புக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், அதிமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவுகளை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர். இதையடுத்து, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அதிகக் கூச்சல் எழுப்பும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மத்திய அரசின் அறிவிப்பினால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி மாநில அந்தஸ்தை இழக்கிறது. அதோடு, காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. காஷ்மீர், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும். இதன் மூலம் லடாக் சட்டப்பேரவையோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ இல்லாமல் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினமணி
ஓகஸ்ட் 05, 2019