கொழும்பில் கியூபாவின் 63 ஆவது தேசிய தின வைபவம்

கியூபாவின் 63 ஆவது புரட்சி தின வைபவத்தில் பேசிய இலங்கை கல்வி அமைச்சரும், இலங்கை – கியூபா நட்புறவுச் சங்கத்தின் தலைவரும், மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான தினேஸ் குணவர்த்தன, ‘கியூபா தொடர்ந்தும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்து வருகிறது’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் Andres Marcelo Gonzalez Gamido அவர்களும் கலந்து கொண்டார்.

வைபவத்தில் தொடர்ந்து பேசிய தினேஸ் குணவர்த்தன, ‘கியூபர்கள் கியூபப் புரட்சி ஈட்டிய சாதனைகளைப் பாதுகாப்பதில் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியவாதிகளினதும் காலனித்துவவாதிகளினதும் சதி முயற்சிகளை எதிர்த்து வருகிறார்கள்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கியூபாவுக்கு எதிராகத் தடைகள் விதித்த போதிலும், கியூபப் புரட்சி கியூப மக்களுக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள முழு நாடுகளுக்கும் தைரியத்தையும், ஆத்ம பலத்தையும் வழங்கி வருகிறது’ எனவும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் பேசிய கியூபாவின் இலங்கைக்கான தூதுவர், ‘கியூபா கொவிட் வைரசுக்கு எதிராக பல வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது. கியூபா ஒரு மருத்துவ படையணியையே வைத்திருக்கிறது. கியூபாவைப் பொறுத்தவரை உடல் நலத்துறை என்பது ஒரு வர்த்தக விடயமல்ல என்பது அதன் கொள்கையாக இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டாக்டர் ஜீ.வீரசிங்க, கட்சியின் மூத்த தலைவர் டியு குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, யடமினி குணவர்த்தன, ஜே.வி.பி. உறுப்பினரான வசந்த சமரசிங்க, முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த துமிந்த நகமுவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: