முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த 6 பேரும் விடுதலை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதையடுத்து, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும், இந்த வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளும் வகையில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறியிருந்தனா்.

இதைத்தொடா்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த இரு தனித்தனி பிரமாணப் பத்திரத்தில், ‘ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா்.

அந்தப் பரிந்துரை இறுதியாக ஜனவரி 27, 2021-இல்தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஓரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்களாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் தொடா்புடைய ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுடன் தங்களை இடையீட்டு மனுதாரா்களாக சோ்க்கக் கோரியும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனா். இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறு பேருக்கும், பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்பு பொருந்தும் என்பதால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.

“முற்றிலும் தவறானது.” – 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ஜெய்ராம் ரமேஷ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முற்றிலும் தவறானது, சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கு பின்னணி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: