ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய விவசாயியின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம்
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வாழ்க்கை போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாரி கர்வால் பிராந்தியத்தில் வசிக்கும் 83 வயதுடைய விவசாயி வித்யாதுத்தின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் ‘மோடி பக்’. இந்த ஆவணப்படத்தை நிர்மல் சந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில், வேலை தேடி கிராமங்களை விட்டு வெளியேறும் மக்களால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகி வருகிறதையும், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்தும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் நிர்மல் சந்தருக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கடந்த செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார். மேலும் விவசாயியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘மோடி பக்’ படம், இளைஞர்களை தங்கள் கிராமங்களில் தங்கவும், அவர்களின் சமூகங்களுக்காக பணியாற்றவும் ஊக்குவிக்கும் என்று ராவத் கூறினார்.
இந்த திரைப்படம் இளைஞர்களை தங்கள் சொந்த கிராமத்திலேயே தங்கி, சமூகங்களுக்காக பணியாற்ற ஊக்குவிக்கும். குக்கிராமங்களில் இருந்து பலரும் இடம்பெயர்வதை நிறுத்தவும் இந்த திரைப்படம் உதவும். இடம்பெயர்வதற்கு எதிராக இளம் விவசாயிகள் பங்காற்ற வேண்டும். மாநில அரசின் சிறப்பு திட்டங்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.