தி கிரேட் கிரேட்டா- உலகை உலுக்கும் ஒற்றைக் குரல்!
–சந்தனார்
கடந்த வாரம் அமெரிக்காவையே அதிரவைத்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியையும் தாண்டி, உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்வீடன் சிறுமி கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg).
நியூயார்க்கில் நடந்த ஐநா பருவநிலை உச்சி மாநாட்டில் மிக முக்கியமான அம்சம் கிரேட்டாவின் உரைதான். செப்டம்பர் 23-ல், நடந்த ஐநா அமர்வில் பேசிய கிரேட்டா, இயற்கையைக் காக்க எழுந்த ஒற்றைக் குரலாக ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
“உங்கள் வெற்று வார்த்தைகளால், எனது கனவுகளையும் குழந்தைப் பருவத்தையும் களவாடிக்கொண்டீர்கள். எனினும், நான் அதிர்ஷ்டசாலிகளில் ஒருத்திதான். மக்கள் அங்கே துன்புற்றுக்கொண்டிருக்கிறார்கள். மடிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று நடுங்கும் குரலில் கிரேட்டா ஆற்றிய உரை, உலகத்தையே உலுக்கியிருக்கிறது. “எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு?” என்று தன் உரையில் நான்கு முறை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்ட கிரேட்டா, பருவநிலை மாற்றம் குறித்த அக்கறை இல்லாத உலகத் தலைவர்களைப் பந்தாடியிருக்கிறார்.
யார் இந்த கிரேட்டா?
2003-ல், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்தவர். தந்தை ஸ்வான்டே தன்பர்க் ஒரு நடிகர். தாய் மலீனா எர்ன்மேன் ஒரு ஓபரா பாடகி. பிறர் பேசுவதைப் புரிந்துகொள்வதிலும், உரையாடுவதிலும் சிரமத்தைக் கொடுக்கும் ‘அஸ்பெர்கர்’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் கிரேட்டா. 9 வயதுச் சிறுமியாக இருந்தபோது, பருவநிலை மாற்றம் குறித்துத் தெரிந்துகொண்ட கிரேட்டா, கடும் மன உளைச்சலுடன் ஒரு வருடம் பள்ளிக்கே செல்லாமல் வீட்டில் இருந்தார் என்று தந்தை ஸ்வான்டே தன்பர்க் குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையில், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை வீட்டிலிருந்தே தொடங்கியவர் கிரேட்டா. விமானப் பயணங்கள் கரியமில வாயு உமிழ்தலுக்கு முக்கியக் காரணியாக இருக்கின்றன என்பதால், தன் பெற்றோரை முதலில் விமானப் பயணத்தைத் தவிர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தவர். ஆரம்பத்தில் கிரேட்டாவின் யோசனைகளுக்குப் பிடிகொடுக்காத இவரது குடும்பத்தினர், பின்னர் உண்மையை உணர்ந்து இவருக்குத் துணைநிற்கிறார்கள். தனது அம்மா, அப்பா, தங்கையுடன் இணைந்து கிரேட்டா எழுதிய ‘சீன்ஸ்ஃப்ரம் தி ஹார்ட்’ புத்தகம் இவரது போராட்டத்தின் பின்னணியைப் பதிவுசெய்திருக்கிறது.
முதல் போர்
2018 மே மாதம், ‘ஸ்வேன்ஸ்கா டாக்ப்ளாடெட்’ எனும் ஸ்வீடன் நாளிதழ் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைப் போட்டியை நடத்தியது. அதில், வெற்றிபெற்ற கட்டுரையாளர்களில் கிரேட்டாவும் ஒருவர். இதையடுத்து, ‘ஃபாஸில் ஃப்ரீ டாஸ்லாண்ட்’ எனும் அமைப்பைச் சேர்ந்தபோ தோரேன், கிரேட்டாவைத் தொடர்புகொண்டார். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் குறித்த கவனத்தை ஈர்க்கும்வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த கிரேட்டாவுக்கு, பள்ளியைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தலாம் எனும் யோசனையைச் சொன்னவர் இந்த போ தோரேன்தான்.
2018 பிப்ரவரி 14-ல், அமெரிக்காவின் பார்க்லேண்ட் நகரப் பள்ளியில் நடந்ததுப்பாக்கிச் சூட்டில், 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டமும் தனக்குத் தூண்டுதலாக இருந்ததாக கிரேட்டா குறிப்பிடுகிறார். பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில், ஸ்வீடனும் சேர வேண்டும் என்று வலியுறுத்தி, 2018 ஆகஸ்ட் 20-ல், பள்ளியைப் புறக்கணிக்கும் போராட்டத்தைத் தொடங்கினார் கிரேட்டா. ஒவ்வொரு நாளும் ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே ‘நமது வீடு பற்றியெரிகிறது’ எனும் முழக்கத்துடன் போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்தார்.
2019 மார்ச் 15-ல், பள்ளிகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்துவோம் என்று கிரேட்டா விடுத்த அழைப்பை ஏற்று, 112 நாடுகளைச் சேர்ந்த சுமார் 14 லட்சம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அடுத்து 2019 மே 24-ல், 125 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கிரேட்டாவின் இந்தக் கிளர்ச்சி பல தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. “கிரேட்டாவும், பருவநிலைச் செயற்பாட்டாளர்களும் புதைபடிவ எரிபொருள் துறைக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஓபெக்’கின் பொதுச் செயலாளர் முகமது பார்கிண்டோ கதறினார். அந்த அளவுக்குக் கடுமையாக அமைந்தது கிரேட்டாவின் போராட்டம்.
உலக அரங்கில்…
மறுபுறம், கிரேட்டாவின் போராட்ட குணத்துக்குப் பல்வேறு திசைகளிலிருந்து பாராட்டுகள் குவியத் தொடங்கின. 2019 மார்ச் மாதம் இவர் அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 2019 மே மாதம், ‘டைம்’ இதழின் அட்டையில் இடம்பிடித்தார்.
2019 ஏப்ரல் மாதம், பிரான்ஸின்
ஸ்ட்ராஸ்பர்க் நகரில்உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கிரேட்டா, “சும்மா பிரெக்ஸிட்டையே
கட்டிக் கொண்டு அழாதீர்கள். இதுவரை பிரெக்ஸிட்டுக்காக மூன்று அவசரக் கூட்டங்கள்
நடத்தியிருக்கிறீர்கள். ஆனால், பருவநிலை மாற்றம் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து
ஒரு முறைகூட கூட்டம் நடத்த வில்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அமேசான் காடுகள் பற்றியெரிந்தபோது, “இயற்கையை அழிக்கும் வேலையை நாம் நிறுத்த வேண்டியதன் தெளிவான சமிக்ஞை இது” என்று எச்சரித்தார் கிரேட்டா.
இதன் தொடர்ச்சியாகத்தான், ஐநா பருவநிலை உச்சி மாநாட்டில் உக்கிரமான உரையை நிகழ்த்தியிருக்கிறார் கிரேட்டா. விமானப் பயணங்களுக்கு முற்றிலும் எதிரானகிரேட்டா, 18 மீட்டர் நீளம் கொண்ட படகில் பயணித்துத்தான் அமெரிக்காவுக்குச் சென்றார். சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட, அந்தப் படகில் நீண்ட பயணத்துக்கான போதிய வசதிகள் இல்லை. எனினும், தைரியமாக அந்தப் படகில் பயணித்திருக்கிறார் கிரேட்டா.
இதற்கிடையே, ஐநா பருவநிலை மாநாட்டுக்கு வந்திருந்த ட்ரம்ப், பத்தே நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறியதும், தன்னைக் கடந்து செல்லும் ட்ரம்பை கிரேட்டா முறைத்துப் பார்க்கும் காட்சியும் கடந்த வாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. போதாதகுறைக்கு, “கிரேட்டா, பிரகாசமான, அற்புதமான எதிர்காலத்தை எதிர்நோக்கும் மகிழ்ச்சியான இளம் பெண்ணாகத் தெரிகிறார்” என்று ட்ரம்ப் ட்வீட் போட, அதிபர் என்றும் பாராமல் மொத்த அமெரிக்காவும் அவரைக் கும்மியெடுத்துவிட்டது.
அலட்சியத் தலைவர்கள்
அதிபராவதற்கு முன்பிருந்தே, “புவிவெப்பமயமாதல் பற்றிய கருத்தாக்கம் ஒரு பொய்” என்று பேசிவந்தவர் ட்ரம்ப். “தவறான அறிவியல் மற்றும் திரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கருத்தாக்கம் இது. அமெரிக்காவின் உற்பத்தித் துறைக்கு உலை வைக்க சிலர் செய்யும் சதித் திட்டம். சொல்லப்போனால் இது சீனா கிளப்பிவிட்ட புரளி” என்கிற ரீதியில் சொல்லி வந்தார் அவர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்றபோது,“இவர் அமெரிக்க அதிபராவது இந்த பூமிக்கே ஆபத்தான விஷயம்” என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் எச்சரித்தனர். எதிர்பார்த்தது போலவே, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் விலகிக்கொண்டார்.
மறுபுறம், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் பங்கெடுத்த பல வளர்ந்த நாடுகளும், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பருவநிலை மாற்றத்துக்கான பொறுப்பை, வளரும் நாடுகளின் தலையில் கட்டுவதிலேயே குறியாக இருக்கின்றன.
இந்தச் சூழலில்தான் உலகத் தலைவர்களின் அலட்சியத்தை, பாசாங்கற்ற மொழியில் பட்டவர்த்தனமாக விமர்சித்திருக்கிறார் கிரேட்டா. “நான் இன்றைக்கு இங்கு இருக்க வேண்டியதே இல்லை. பெருங்கடலின் மறுமுனையில், பள்ளியில் இருந்திருக்க வேண்டியவள் நான். ஒரு ஒட்டுமொத்த அழிவுக்கான தொடக்கத்தில் இருக்கிறோம். நீங்களோ, எப்போது பார்த்தாலும் பணத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று விளாசியிருக்கிறார் கிரேட்டா. அதுமட்டுமல்ல, பருவநிலை நெருக்கடியை அலட்சியம் செய்ததாக ஜெர்மனி, பிரான்ஸ்உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது, 15 குழந்தைகளுடன் சேர்ந்து ஐநாவிடமே புகார் பதிவுசெய்திருக்கிறார்.
அவதூறுகளைக் கடந்து…
எதிர்கால உலகுக்காக இத்தனை தூரம் போராடிக்கொண்டிருக்கும் கிரேட்டா மீதான அவதூறுகளுக்கும் குறைச்சல் இல்லை. பணத்துக்காக யாரோ சொல்வதைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செயல்படுகிறார் எனும் வழக்கமான குற்றச்சாட்டுகளைத் தாண்டி, ‘கிரேட்டா ஒரு சிறுமியே அல்ல. ஆஸ்திரேலிய நடிகை’ எனும் புரளி வரை எக்கச்சமான பழிச்சொற்கள். ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு புயல் போலச் செயலாற்றிவருகிறார் கிரேட்டா.
“நான் யாருடைய கைப்பாவையும் அல்ல. அறிவியலாளர்களுடனும் சுற்றுச்சூழல் அறிஞர்களுடனும் உரையாடித் தகவல்களைப் பெற்றுத்தான் உலகை எச்சரிக்கிறேன். அறிவியலைப் பரப்பும் என்னைப் போன்ற சிறுமிகளைப் பற்றி அவதூறு செய்வதை விட்டுவிட்டு, ஏதேனும் நன்மைகளைச் செய்யலாம். உண்மையில், அவர்கள் என்னைப் போன்றவர்களால் அச்சமடைந்திருக்கிறார்கள். ஆனால், உலகம் விழித்துக்கொண்டுவிட்டது” எனும் வார்த்தைகளுடன் அடுத்தடுத்த போராட்டங்களுக்குத் தயாராகிவருகிறார், இந்த ‘கிரேட்’ கிரேட்டா!
-தமிழ் இந்து (காமதேனு)
செப்டம்பர் 28, 2019